• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 13 ஜனவரி, 2018

  தை தாங்கிவரும் தைப்பொங்கல்

                             

                             வாழ்க்கை பொங்க வசந்தம் பெருக உள்ளமெல்லாம் பொங்கித் ததும்ப நன்றியை மனமுவந்து, நாம் வாழ்வதற்கு ஆதாரமான ஆண்டவன் சூரியபகவானுக்கு நன்றி செலுத்துகின்ற நாளே இப் பொங்கல் பண்டிகை என்பது யாவரும் அறிந்ததே. பகலவன் இன்றி உயிர்கள் ஏதுஉலகுதான் ஏது? பாரபட்சம் பார்த்து பகலவன் தன் கதிர்களைப் பூமிக்குத்  தருவதில்லை. அதனால் நன்றி சொல்லும் மகத்தான பண்புக்கு அடையாளமே இப்பொங்கலின் திருநாளாகும். இதனையே ஜேர்மனியர் Erntedankfest என்று தோட்டங்களில் விளையும் உருளைக்கிழங்கு, பூசணி போன்ற மரக்கறி வகைகளை படைத்துக் கொண்டாடுகின்றார்கள்.
                 
                           நாம் இன்றைய தினம் மாத்திரமே சூரியனுக்கு படையல்கள் படைத்துக் கொண்டாடிவிட்டு வருடம் முழுவதும் சூரியனின் கதிர்கள் எம்மீது விழவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால், பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான அஸிரிய, அகேடிய, பாபிலோனிய நகரங்களின் முக்கிய வழிபாட்டுக் கடவுளே சூரியன்.  இவர்கள் சூரியனை ஷாமேஷ் என்று அழைக்கின்றார்கள்.
                  
                               புத்தி, ஆரோக்கியத்தை அளிக்கும் கடவுளாகக் கருதி எகிப்திய மக்கள் அமான் என்றும் கிராஸ் என்றும் சூரியனையே வழிபடுகின்றனர். வீரம் தரும் கடவுளாக பெரு, மெக்சிக்கோ நாட்டவர்கள் சூரியனை வழிபடுகின்றனர். பெருநாட்டிலுள்ள இன்கா என்னும் பழங்குடியினர் தாங்கள் சூரியனிலிருந்தே வந்தவர்கள் என்று கூறுகின்றனர். ஜப்பானிலும், சீனாவிலும் சூரியன் பெண்கடவுளாக வணங்கப்படுகின்றது.
              
                 தைமாதம் பிறக்கும்போது சூரியன் மகரராசியில் பிரவேசிக்கின்றார். இக்காலப்பகுதியில் தட்பமும் வெப்பமும் மிதமாக இருக்கும். இதனால் பயிர்கள் நன்றாக விளைந்து நற்பலனைத் தருகின்றன. அதனால் அப்பலனைத் தரும் சூரியனுக்குப் பொங்கல் படைத்து பொங்கலோ பொங்கல் என்று தமிழரும், ஹங்கரோ, ஹங்கர் என்று ஜப்பானியரும் பொங்கல் விழாக் கொண்டாடுகின்றனர். ஜப்பானியரும் சீனநாட்டவர்களும் சூரியனைப் பெண்தெய்வமாகவே வழிபடுகின்றனர். எமக்கு மாட்டுப் பொங்கல் போல் ஜப்பானியர்களுக்கு குதிரைப்பொங்கல் அமைகின்றது.  குதிரைகளை நன்றாகக் கழுவி அலங்கரித்து மாலை போட்டு இனிப்புவகை கொடுத்துக் கொண்டாடுவார்கள். இதேபோல் பர்மாவிலும் இந்நாளில் புத்தாடை அணிந்து கால்நடைகளுக்குப் பூஜை செய்வது வழக்கத்தில் இருக்கின்றது. 
                
                                  காலைச் சூரிய வழிபாடு மனிதனுக்குச் சாலச்சிறந்தது என்பது யோகக் கலையில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இது இன்று நேற்றல்ல ஆதி மனிதன் கூட சூரியனை வழிபட்டுத் தன் நன்றியைத் தெரிவித்திருக்கின்றான். காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டப், பிரஹதி, பங்கதீ, திருஷ்டுப், ஜகதி என்ற பெயர்களையுடைய குதிரைகள் சூரியபகவானை இழுத்து வருவதாக நம்பப்படுகின்றது. சூரியனுக்குரியவையாக தாமிர உலோகம், கோதுமைப்பண்டம், செந்தாமரை, செம்பட்டு, கபிலைப்பசு, மாணிக்கம், எருக்கங்குச்சி, காரப்பொருள்கள் போன்றவை கொள்ளப்படுகின்றன. மகரசங்கராந்தி நாளன்று இத்தைப்பொங்கல் கொண்டாடப்படுவதனால், மேற்கு வங்காளத்திலுள்ள சாகர்தீவு ஸ்நான கட்டடத்தில் புனிதநீராடி பிதிர்க்கடன் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது.
             
                                           
                 அறுவடை காலத்தில் அறுவடை சிறப்பாக அமைய சங்ககாலத்திலே பெண்கள் விரதம் இருந்து தைமாதம் முதல் நாளில் விரதத்தை முடித்து பயிர் சிறக்க உதவிய பூமி, கால்நடைகள், சூரியன் போன்றவைக்கு பொங்கல் படைத்து வழிபட்டார்கள். இலக்கிய காலத்திலேயே இந்திர விழா என்ற பெயரில் காவிரிப்பூம்பட்டினத்தில் கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலில் உழவுக்கு  உதவிய மாட்டுக்கு பொங்கல் படைத்து ``பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல், பொங்கல் படி பெருக, பானை போங்க, நோவும் பிணியும் தெருவோடு போக” என்று கூறி மாடு தின்ற எச்சில் தண்ணீரை மாட்டுத்தொழுவத்திலே தெளிப்பார்கள்.
                பொங்கல் கொண்டாட்டம் போகிப்பொங்கல், பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றன. போகிப்பொங்கல் என்பது தாம் பயன்படுத்திய, வீட்டிலே பாவனையற்று தேங்கிக் கிடக்கும் பழைய பொருட்களை அகற்றும் தினமாகக் கருதப்பட்டது. இத்தினம் மனங்களில் தேக்கி வைத்திருக்கும் குப்பைகளையும் தெரிந்தெடுத்து அகற்றும் தினமாகும். இது மார்கழி மாதக் கடைசி தினத்தில் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் தினத்திலே உழவுத்தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும், மாட்டுப்பொங்கலிலே  உழவுத்தொழிலுக்கு உதவிய கால்நடைகளுக்கும், நான்காம் நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கலில் தொழிலில் முழுமூச்சாக ஈடுபட்டு அறுவடை முடித்தவர்கள். இன்றைய நாளில் தங்களுடைய உறவினர்கள் நண்பர்களைச் சந்தித்து பொங்கலை வழங்கி அன்பைப் பகிர்ந்து கொள்வார்கள்.  
            
                    பொதுவாக காதரிசி எனப்படும் வெல்லம் கலந்த பச்சரிசியை ஊறவைத்து அதில் சீனி, ஏலக்காய், பிசைந்த வாழைப்பழம் ஆகியவற்றைக் கலந்து செய்வதுதான் இக்காதரிசி. முதன்முதலாகக் காது குத்தும் பிள்ளைகளுக்குக் கொடுப்பதனால் இப்பெயர் வழங்கப்பட்டது. இதனைப் பொங்கல் அன்று படைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்பொழுது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். குளிர் கூடிய ஐரோப்பியநாடுகளில் மின்னடுப்பில் பானை வைத்து வசதிக்கேற்ப சூரியன் வெளிவரும் நேரம் பார்த்து பொங்கல் படைத்து வழிபடுவர். சிலவேளைகளில் அன்றைய பொழுது சூரியன் மேகக்கூட்டங்களுக்குள் மறைந்தே இருப்பார். ஆயினும் காணாத போதும் கண்டதாகக் கருத்தில் கொண்டு பொங்கல் படைத்துத் தம் கலாச்சாரத்தைப் பேணுகின்றனர். 
                                     சூரியன் பற்றிய அற்புத நிகழ்வு ஒன்று கர்நாடக மாநிலத்திலுள்ள வித்யாசங்கர் கோவிலில் நிகழ்கின்றது. இக்கோவிலிலே கிழக்குப் பார்த்த மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபமானது 12 தூண்களினால் தாங்கி நிற்கின்றது. இந்தத் தூண்களின் காலடியில் காலைச்சூரியனின் கதிர்கள் விழுகின்றன. ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு தூணாக ஒவ்வொரு தூணின் காலடியில் சூரியக்கதிர்கள் விழுவதுபோல் தூண்களை அக்கால கட்டக்கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். வானியல் தெரிந்த இவ்வல்லுனர்கள் பூமி சுழற்சியின் தன்மையை அழகாக இக்கட்டிடக்கலையின் மூலம் கொண்டு வந்திருக்கின்றனர். 
          
                                               இயற்கையின் வனப்பிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் இயற்கைக்கு நன்றி சொல்லத் தயங்கினால் நன்றிகெட்ட மனிதர்களாவோம். அதனால், இது தமிழருக்கு மட்டுமே உரித்தான நாள் என்று கருதாது ஒவ்வொரு மனிதர்களும் கொண்டாடவேண்டிய திருநாள் என்பதை மனம் பதிக்கவென இக்கட்டுரை  தந்துள்ளேன்.


  அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
  இக்கட்டுரை தை மாத வெற்றிமணி பத்திரிகைக்காக எழுதினேன்.

  சனி, 30 டிசம்பர், 2017

  இவ்வருடத் திட்டங்களைத் தீட்டுவோம் திடமாக்குவோம்.    
   நாளைய உலகம் நமக்கே விடிவதை 
   நம்பிக்கை கொண்டே வரவேற்போம் - உயர் 
   நோக்குடன் மனதை ஒருநிலைப் படுத்தி 
   முழு மூச்சுடன் முயற்சியில் வெற்றி காண்போம்

  உலகை ஆட்டிப்படைப்பது இயற்கை. அதன் கையில் நாமும் தான் வாழ்கின்றோம். பெற்றோர் கையில் வளர்ந்து, ஏட்டைப்பிடித்து உயர்ந்து, ஏற்றம் பெற்று மகிழ்ந்து, எம்மால் தோற்றம் பெற்ற மக்கள் உயரம் காண உழைத்தோம். இயற்கை தொடரும் வேளையிலே இடத்தைப் பிடிக்கிறது 2018. சென்ற வருடத்திற்கு சமாதி கட்டிவிட்டோமா! இல்லை சாட்சியாகக் கொண்டோமா! இல்லை அடித்தளம் இட்டோமா! இதுதான் எமது இவ்வருடத் திட்டத்திற்கான கேள்வி.

                    சூரியச் சுழற்சியைப் பொறுத்தே நாள்கள் நகருகின்றன. பூமி சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும் மாதங்களும் உருவாகின்றன. இதேபோல் இப்பூமியில் நடைபெறுகின்ற அனைத்துக் காரண காரியங்களுக்கும் அடிப்படை சக்தி சூரியசக்தியே ஆகும். அதனாலேயே தை மாதம் சூரியசக்தியைக் கொண்டாட சூரியவழிபாடாக தைப்பொங்கலை வைத்திருக்கின்றோம். முதல் மாதத்தில் நாம் கொண்டாடும் முதல் நிகழ்வு தைப்பொங்கல். இத்தைப்பொங்கல் நாள் தை முதலாம் திகதியாகக் கொள்ளப்படுகிறது. ஆயினும் எமது வருட முதல்நாளாகக் கருதப்படுவது சித்திரை நடுப்பகுதி என்பது யாவரும் அறிந்ததே. இதுபோல் வெவ்வேறு நாடுகள் தமது வருடப்பிறப்புக்களை வெவ்வேறு நாட்களில் பிரகனப்படுத்தி கொண்டாடுகின்றன. 15 நாட்கள் கொண்டாட்டமாக யப்பான், சீனா போன்ற நாடுகள் தை, மாசி மாதங்களுக்கு இடையில் வரும் வருடாவருடம் வெவ்வேறு நாட்களில் மிக சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள். தாய்லாந்து சித்திரை மாதத்திலும், இஸ்லாமியர்கள் ஹிஜ்ரி வருடப்பிறப்பு நாளையும் வருடப்பிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.  இவ்வாறு பிறக்கப்போகும் வருடத்தை மகிழ்வாக வரவேற்பது அனைத்து இன மக்களுக்கும் இயல்பாக இருக்கின்றது.

                     காலை எழுந்தவுடன் ஒரு மூச்சுப் பயிற்சி, சிறிது நேர உடற்பயிற்சி, சிறிது நேரத்தியானம், அன்றைய நாளின் அவதானிப்பு. இதுவே நாள்தோறும் எமது வழமை என்று இருந்த நிலமை போலவே இன்றைய வருட திட்டம் என்று மனக்கண்ணில் போடவேண்டிய காலக்கட்டாயம் வந்துவிட்டது.

                     ஒரு கடையிலே நாள் முடிவிலும் வருட முடிவிலும் கடையின் வரவு செலவு பார்த்து இருப்புச்சரக்கு கணக்கெடுப்பது யாவரும் அறிந்ததே. அதேபோல் பொருட்களுக்கு கொடுக்கும் அவதானம் எமது உடலுக்கும் வாழ்வுக்கும் கொடுக்க வேண்டாமா! அதனால், இவ்வருடம் நடந்தவை அவற்றிலுள்ள சாதக பாதங்களை ஒரு அரை மணி நேரம் இருந்து அவதானிக்கும் போது மகிழ்ச்சியான நிமிடத்துளிகளையும் துயரமான நிமிடத் துளிகளையும் குறிப்பெடுத்துக் கொண்டு சென்றோமானால்,  நாம் இவ்வருடம் ஆற்ற வேண்டிய கடமையை அறிந்து கொள்வோம். ஆசைகளை அளந்து கொள்வோம், தேவைகளைப் புரிந்து கொள்வோம். தனியே இருந்து செய்வது கடினமாக இருந்தால் குடும்பமாக இருந்து சிந்திக்கலாம். ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசாபாசங்கள் வேறுபடும். சாதனைகள், வேதனைகள் மாறுபடும். அதனால், உங்கள் சிந்திப்பின் கணக்கெடுப்பு உங்கள் உயர்வுக்கும் உங்களைச் சார்ந்தவர்களின் உயர்வுக்கும் ஏணியாகவும் மனதுக்கு ஏற்றமாகவும் இருந்தால் உங்களுடன் இணைந்தே உலகமும் உயர்வடையும்.

                    ஆண்டவனுக்கு முன்னே நின்று வேண்டுதல் செய்கின்றோம். ஆண்டவன் நிறைவேற்றுவார் என்பது மூடத்தனம். வேண்டுதல்களை மனம் ஏற்கின்றது. ஓமோன்கள் செயற்படத் தூண்டுகின்றன. மூளை திட்டமிட முடிவெடுக்கின்றது. தேவைகளை நாமே நிறைவேற்றுகின்றோம். இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் எமது எண்ணங்களே. எண்ணங்கள் மேல்நோக்கிச் செல்லும்போது அதை செய்து முடிப்பதற்கான முழுமூச்சான வேகம் அதிகரிக்கின்றது. அதற்காக நீரோட்டம் உடலினுள் இருக்கும்போது அதற்கான போதியளவு பிராணவாயுவின் ஓட்டமும் அதிகரிக்கும். செயற்படுத்தலும் ஏற்படும். எனவே இவ்வருடம் நாமே நாம் எடுக்கின்ற தீர்மானங்களுக்கு அடித்தளமிட வேண்டியவர்கள்  ஆகின்றோம்.

                     நாம் எடுக்கும் இவ்வருட முயற்சி எமது வளர்ச்சிக்காக இருக்கும் போது நாம் பிறந்து வளர்ந்த பூமியில் கொண்டிருக்கும் பற்றும் பாசமும் போல் எம்மைத் தத்தெடுத்த நாட்டிலும் சிறிது பாசம் வைத்தோமென்றால் சிறப்பாக இருக்கும். எமது இனத்தின் மேல் வைக்கின்ற பாசம் போல் அனைத்து இனத்தின்மேல் வைக்கின்ற பாசமும் மேலோங்கினால் சிறப்பாக இருக்கும். 'நாடென்ன செய்தது எனக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு‘‘   இது எல்லோரும் அறிந்த பாடலே. இதனை இவ்வருடம் எண்ணிப் பார்க்கின்றேன். உயிர்வாழ இடம்தேடி உறைந்த இடமே இந்நாடு. இன்று தரம் உயர்ந்து வளம் பெருக்கிதரித்து நிலையூன்றி, சுகதேகியாய் நிற்கின்றோம் என்றால், எம் தரம் பார்த்து, இனம் பார்த்து ஏற்றுக்கொள்ளாது மனிதம் பார்த்து எம்மை வாரி அணைத்த நாடே  நாம் வாழுகின்ற நாடு. இந்த நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்? என்ன செய்யப் போகின்றோம். இதுவே இன்றைய கேள்வி.

                 நாம் பெரிதாக எதுவுமே செய்யத் தேவையில்லை. எமது தொழிலை நேர்மையாகச் செய்தாலே போதுமானது. அவர்களிடம் இருந்து நாம் பெறும் வசதி வாய்ப்புக்களுக்கேற்ப நாமும் அவர்களுக்குக் கொடுத்தாலே போதுமானது. அதைவிட எமது பிள்ளைகளின் பழக்கவழக்கங்களில் நோட்டமிட வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோரிடம் இருக்கிறது. அரசாங்கச் சொத்துகளை சீரழிக்கும் எத்தனையோ பிள்ளைகளைக் கண்ணுற்றிருக்கின்றேன். பேரூந்துப் பயணத்திலே பாதணிகளை முன்னிருக்கையில் வைத்துக் கொண்டிருத்தல், பயணம் செய்கின்ற பொது வாகனங்களில் கீறுதல், பொது இடங்களில் குப்பை போடுதல், மண்டபங்களை அழுக்காக்குதல், போதைப் பொருளுக்கு அடிமையாகுதல், அரசாங்க சட்டதிட்டங்களை மீறுதல், சுதந்திரம் என்னும் சொல் கொண்டு பிறர் சுதந்திரத்தை பாதித்தல், இவ்வாறான தகாத நடவடிக்கைகள் நாட்டிற்கும் எமது இனத்திற்கும் கேடாக முடிகின்றது. நாம் மட்டுமல்லை நாம் வாழுகின்ற நாட்டு பிள்ளைகளும் இப்படித்தான் இருக்கின்றார்கள் என்னும் விதாண்டாவாதங்களை விட்டுவிட்டு எம்மைத் திருத்துவோம். உலகம் திருந்தும் என்று நினைப்போம். இதுவும் இவ்வருடத் திட்டமாக கொண்டு எம்மால் இயன்றவரை நாம் வாழுகின்ற நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்? செய்ய வேண்டும்  என்று நினைத்துப் பார்க்கும் இவ்வருடத் திட்டத்தையும் திடமாக்குவோம்.


  சனி, 23 டிசம்பர், 2017

  நத்தார் வாழ்த்து 2017  விண்வீழ் வெண்பனிபோல் மண்மேல் அவதரித்த
  தண்ணொளி மைந்தனை தரணியில் போற்றுவோம்
  இன்னல்கள் தாங்கியே இறையருள் தந்திட்ட
  இறைவனை நேசிப்போம் அவர்புகழ் பாடுவோம்

  மாட்டுத் தொழுவத்தில் மார்கழி குளிரினில்
  மானிடம் காக்கத் தரணியில் தோன்றிய
  மரியன்னை மைந்தனை பரிசுத்த இயேசுவை
  மனங்களில் ஏற்றுவோம் இறைமைந்தனைப் போற்றுவோம்

  அன்பெனும் மழையில் அகிலமே நனைய
  ஆண்டவன் தோன்றினார், அவனியைத் தாங்கினார்
  செந்தணல் குருதி வெண்ணுடல் தாங்கியே
  எம்துயர் காத்த மைந்தனைப் போற்றுவோம்

  கல்வாரி மலையிலே கல்லடி தாங்கியே
  சிலுவையை ஏந்தினார் முள்கிரீடித்தைத் தாங்கினார் – எம்
  பாவங்கள் நீக்கிய பரிசுத்த ஆண்டவரை
  நாளெல்லாம் போற்றுவோம் இந்நாளிலே கொண்டாடுவோம்   அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள் 

  வியாழன், 14 டிசம்பர், 2017

  இளையோரின் எழுத்துக்களுக்காக ஏங்கி நிற்கும் பெரியோர்.

  நூலகங்களும் நூல்களும் வாசகர்களும் குறைந்து விட்டார்கள் என்று சொன்னால், அதை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது. வாசிப்பவர்கள் வாசித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். எழுதுபவர்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். முற்காலத்தை விட இக்காலத்தில் நூல்கள் அச்சடிக்கும் தொகை அதிகரித்துள்ளது என அச்சகத்தினர் கூறுகின்றார்கள், ஆனால், இளையோர் வாசிப்பு ஆர்வமும் எழுதும் ஆர்வமும் அதிகரித்துள்ளதா என்றால், அது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. 'ஹரி பொட்டர்' என்னும் நூல் வாங்குவதற்காக முதல் நாளே வரிசையில் நின்ற இளையோரும் இக்காலப்பகுதியில் தான் வாழுகின்றார்கள். வீட்டில் இருந்தபடி இணையம் மூலம் புத்தகம் வாங்கி வாசிக்கின்ற இளையவர்களும் எம்மத்தியில் இன்னும்தான் வாழ்கின்றார்கள். நகரங்கள் தோறும், புகையிரத நிலையங்கள் தோறும் புத்தகக் கடைகள் நிரம்பிக் காணப்படுகின்றன. புகையிரதம், பேரூந்து பயணங்களில் புத்தகங்களையும், E-Books களையும் திறந்து வாசித்துக் கொண்டு பயணம் செய்வோர் இன்னும் எம் கண்களில் தென்படுகின்றனர். வாசிப்புக்கேற்ப புத்தகங்களின் வரவும் இருக்கவே செய்கின்றன. எனவே வாசிப்பும் எழுத்தும் மனிதன் வாழும் வரை வாழும். அதுவே மனிதப் பண்பாட்டின் அடிப்படை அம்சமாகவும் காணப்படுகின்றது. ஏனென்றால். இவ்விரண்டின் உதவியும் இல்லாமல் மற்றையவற்றை எம்மால் பெறமுடியாது.  எழுதுவது என்பது ஒரு மனஒருமைப்பாட்டுக்காரணி. இது மனிதமனங்களைக் கட்டிப்போடுகின்றது. ஒரு விடயத்தை எழுதுவதற்கு ஆரம்பிக்கும் போது எமது எண்ணங்கள் அவ்விடயத்தில் ஒன்றிவிடுகின்றன. கைத்தொலைபேசி போன்ற ஏனைய காரணிகள் அச்சமயங்களில் உறங்கிவிடுகின்றன.

              
  சுப்பிரமணிய பாரதியார் 38 வருடங்களே வாழ்ந்தார், சுவாமி விவோனந்தர் 39 வருடங்களே வாழ்ந்தார், சுவாமி விபுலானந்த அடிகளார் 55 வருடங்கள் வாழ்ந்தார். இளமையில் எழுதிப் புகழ் பெற்றோர்களே இவர்கள். மனிதன் வாழ்க்கை குறுகிய காலங்களேயானாலும் படைப்பே மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. இவ்வாறு காலங்கள் படைப்புக்கு அளவுகோல் அல்ல. அவை இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இறவாப் புகழை மனிதனுக்குக் கொடுக்கக் கூடியது. இவ்வாறான பெரியோர் தமக்குப் புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக எழுதியவர்களுமல்ல. வாழ்ந்தவர்களும் அல்ல. ஆனால், இறவாப்புகழ் பெற்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே உலகத்திற்கு எது தேவையோ அதனை சரியான முறையில் எதிர்பார்ப்பு இன்றிக் கொடுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் இறவாப் புகழ்  கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


                   இளையோர்களை அறிவுலகத்தின் திறவுகோல்கள் என்று கூறலாம். இன்றைய தொழில்நுட்ப உலகத்திற்கு இன்றைய இளைஞர்களே வழிகாட்டிகள். எமது கை பிடித்து நடைபயின்ற இளையோர்கள் இன்று கைகாட்டி வழிகாட்ட நாம் தொடருகின்ற காலமே இத்தொழில்நுட்ப யுகம். இக்காலத்தை சந்தோசமாகக் கடக்க வேண்டுமென்றால், அதனை சரியான முறையில் சந்தோசமாக அனுபவிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு வழிகாட்டிகளாக இளையோர் படைப்புக்கள் வெளிவருவது அவசியமாகின்றது. செம்மொழி என்று கருதப்படும் தமிழ்மொழிக்கு வரிவடிவம், பழைமை போன்றவையே போற்றுதற்குரியன. அதனை இளையோர்  தொடரும் பட்சத்தில்தான் மொழியும் வாழும்.

  இளையோரிடம் இருந்து எதிர்பார்க்கும் படைப்புக்கள்:

  அனுபவங்கள் தான் சிறந்த ஆசான்கள். எமது காலப்பகுதியில் எமக்குக் கிடைத்த அனுபவங்கள் எமது பிள்ளகளுக்குக் கிடைக்கவில்லை. அதேபோல் எமது பிள்ளைகளுக்குக்  கிடைக்கின்ற அனுபவங்கள் எமக்குக் கிடைக்காது என்பதுதான் உண்மை. அந்த அனுபவங்கள் எமது வாழ்க்கையை மாற்றிப்போடும். எதிர்காலத்தில் நாம் வாழவேண்டிய வழிமுறைகளைக் காட்டும். புலம்பெயர்ந்த தேசங்களில் மொழியாலும் கலாசாரத்தாலும் கலந்துபட்ட சூழ்நிலையில் பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்புகின்றோம். அவர்கள் கொண்டுவருகின்ற அனுபவப் புதையல்களை, அவர்கள் இந்நாட்டில் பதியமிட எழுத்துக்கள் துணையாகின்றன. காலம் காட்டுகின்ற ஆவணங்களாகின்றன.  இளையோர்களிடையே நண்பர்களுடன் தொடர்பாடல், நண்பர்களிடையே ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகளும் கருத்து ஒருமித்தலும், எதிர்கால வாழ்க்கைக்கு விட்டுக்கொடுத்தலின் அவசியமும்எவ்வாறான சந்தர்ப்பங்களில் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது என்பவை பற்றி  விளக்கமாக தெரியப்படுத்த வேண்டிய கடமை இளையோருக்கு இருக்கின்றது.

  உற்பத்திகளும், சந்தைப்படுத்தலும், தேடலும், இளையவர்களிடமே அதிகம் உள்ளது. அதற்கு அத்துறையிலும் அவ்வயதுப்பிரிவிலும் உள்ள இளையவர்கள் எழுதும் கலையே  அவர்களை  மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. எழுத்தின் மூலம் உங்கள் துறை பெரியவர்களிடம் அடையாளப்படுத்தப்படும். இவ்வாறு வாழ்க்கைக்குத் தேவையான, வாழ்க்கைக்கு உகந்த விடயங்களைப் பகிர்ந்து கொள்வது எதிர்காலத்தை வளப்படுத்த அவசியமாகின்றது.  இளையவர்களே! உங்கள் சிக்கல்கள், வளர்ந்தோர் தருகின்ற குழப்பங்கள், கட்டாயப்படுத்தல்கள் பற்றிய உங்கள் ஆதங்கங்களை நீங்கள் வெளிப்படுத்தும் போதுதான் அதற்கான தீர்வை நீங்கள் பெறமுடியும், எம்மால் பெற்றுத்தர முடியும். எவ்வாறான சிக்கல்களை இளந்தலைமுறையினர் எதிர்நோக்குகின்றார்கள் என்னும் அறிவை பெரியவர்கள் உணர்ந்து கொள்ளமுடியும்.

  காலமாற்றங்கள் சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வருவது இயற்கை. இளையோரிடம் உள்ள சிந்தனைகள் பெரியோர்களைச் சென்றடையவேண்டுமென்றால் வாய்மொழி மூலம் வெளிப்படுத்தல் காற்றில் கரைந்துவிட எழுதி வைக்கும் எழுத்துக்களே சிந்தனைகளின் அத்தாட்சிகளாகின்றன. அவை நாளேடு, கடிதம் போன்ற வடிவங்களின் இலக்கியங்களாகின்றன என்பதைப் பெற்றோர் பிள்ளைகளிடம் புரியவைக்க முயலுங்கள்.  இளையவர்கள் எமது எழுத்துக்கு அங்கீகாரம் கிடைக்குமா? என்னும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நம்பிக்கை இளையோருக்கு அங்கீகாரம் வழங்கும். சங்கம் தொட்டு நம்பிக்கை கொண்டு வாழ்ந்த இனமே தமிழ் இனம். காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்று நம்பி வாழ்ந்த இனம் தமிழ் இனம், 'வெள்ளி தென்புலத் துறைய விளைவயல் பள்ளம் வாடிய பயனில் காலை' என்னும் புறநானூற்றுப் பாடலிலே கூறியபடி, வெள்ளி என்னும் கோள் தெற்குத் திசைக்கு வந்தால் மழை பெய்யாது என்று நம்பி வாழ்ந்தார்கள் எம் முன்னோர். எனவே தேவையானவற்றை தெளிவோடு எழுதினால் அழிவில்லை என்று நம்பிக்கை கொண்டு கணனியைத் திறவுங்கள். இளையோரே! எழுதுவதற்கு தமிழ் இலக்கியம், இலக்கணம் கற்றிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. யாருக்கு எது தேவையோ அந்த அறிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போது எதிர்காலத்திலும் எமது தமிழ்மொழி கண்டம் கடந்து ஆட்சி மொழியாகும். தமிழர்களும் உலகம் அறியும் இனமாக இனங்காணப்படுவர் என்பது உறுதி.

  மார்கழிமாத வெற்றிமணி பத்திரிகைக்காக எழுதியது

  தை தாங்கிவரும் தைப்பொங்கல்

                                                         வாழ்க்கை பொங்க வசந்தம் பெருக உள்ளமெல்லாம் பொங்கித் ததும்ப நன்றியை மனமுவந்து , ...