• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 5 அக்டோபர், 2010

  மதிப்பெண்

                                                         மதிப்பெண்        

  அந்த அடுக்குமாடிக் கட்டிடமே அமைதியில் ஓய்ந்திருந்தது. மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன. ஆள் அரவம் அடங்கியிருந்து. இரவுப்பொழுது வழமைபோல் சிறுவர்கள் தங்கள் உறக்கத்தைத் தழுவியபடி இருக்கும் நேரம் பத்து மணியைச் சுவர்க்கடிகாரம் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.   அந்த நகர்ப்புறச் சூழலில்இ கார்த்திக் குடும்பமும் குடியிருந்தது. வீடும் வேலையும் என்றிருக்கும் கார்த்திக்கிற்கு 2 பிள்ளைகள். மூத்தவள் சுதா நான்காம் வகுப்பில் படிக்கின்றாள். கலை விளையாட்டுக்களில் ஈடுபாடுடையவள். இரண்டாவது மகன் சுகி. 2ம் வகுப்பில் கல்வி கற்கின்றான்.  
               அன்று வழமைபோல் கார்த்திக் தன் சுய தொழில் முடித்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான். வேலைக் களைப்பு உடலை வாட்ட நிம்மதியான இரவுப்படுக்கையை நாடி மாடிப்படிக்கட்டுகளில் கால் வைத்தான். '' ஓ....... என்று ஒரு சிறுமியின் அழுகுரல் அவனைத் திடுக்கிட வைத்தது. இந்த இரவுப் பொழுதில் இப்படியொரு சத்தமா! ''சுதாவின் குரல் போல் இருக்கின்றதே! பதட்டத்துடன் வழமைக்குமாறாகப் படிகளில் படபடவென்று ஏறினான். வேகமாகக் கதவைத் திறந்து உள்ளே வந்த போதுஇ அழுகுரல் ஓங்கி ஒலித்தது. ஓடி வந்து கட்டியணைத்து அழத் தொடங்கினாள்இ சுதா. கீழே குனிந்து கைகள் இரண்டினாலும் அச்சின்னவள் முகத்தை நிமிர்த்தினான். திடுக்கிட்டு விட்டான். அவள் கன்னம் இரண்டும் செக்கச்செவேலென்று  சிவந்திருந்தன. ''என்ன நடந்தது? ஏக்கத்துடன் வினவினான். ''அம்மா அடிச்சுப்போட்டா விம்மினாள்இ மகள். ''சாந்தி....நீ என்ன காட்டுமிராண்டியா? பிள்ளையைப் போட்டு இப்படி அடிச்சிருக்கிறாய். மீண்டும் அதட்டலாய்க் கத்தினான். ''ஏன் கத்திறீங்கள். உங்களின்ர மகளின்ர கெட்டித்தனத்தைப் பார்த்திட்டு கத்துங்கோ. எனக்கென்று வந்து பிறந்ததே. என்று சினந்தபடி மதிப்பீட்டறிக்கையை நீட்டினாள். அதை வாங்கியபடி மகளை அணைத்துக் கொண்டு போய் மதிப்பீட்டறிக்கையைப் பார்ப்பதற்காக கதிரையில் அமர்ந்தான் கார்த்திக். 5 பாடங்களில் 2ம் மற்றைய பாடங்களில் 3ம் 4ம் எடுத்திருந்தாள். ''என்னம்மா இப்படி எடுத்திருக்கின்றாய். அம்மாக்குக் கவலையாகத்தானே இருக்கும்.  சுதா எதுவும் பேசவில்லை. விம்மிக்கொண்டே இருந்தாள். திரும்பவும் தொடங்கினாள்இ சாந்தி '' நான் பட்டபாடெல்லாம் வீணாய்ப் போய்விட்டது. இந்தக் கணக்கெல்லாம் செய்து முடிததுவிட்டுத் தான் படுக்கப் போகவேண்டும். போ...போய் செய். Gymnasium எடுபடாமல் இருக்கட்டும். நான் தூக்குப் போட்டுத்தான் சாவேன். மகளைப் பரபரவென்று இழுத்துக் கொண்ட போய்க் கதிரையில் இருத்தினாள். '' நீ பேசாமல் இரு. எனக்குத் தெரியும் என்ன செய்வதென்று. என்று அதட்டியபடிக் கதிரையில் அமர்ந்திருந்த சுதாவைக் கட்டிலுக்கு அழைத்துச் சென்றான் கார்த்திக். ''நான் முடியுமானவரைப் படிச்சனான்தானே அப்பா. அடுத்தமுறை நல்ல Zeugnis ( மதிப்பெண் ) எடுப்பன் அப்பா. அம்மா சரியாக ஏசுறா அப்பா....சிணுங்கிய மகளின் கன்னத்தில் வடிந்த கண்ணீரைத் துடைத்தபடி ''இனிமேல் நல்லாப் படிக்கவேணும். என்று ஆறுதல் சொல்லிப் படுக்கவிட்டான். 
                சாப்பிடுவதற்காக மேசைக்கு வரத் திரும்பவும் சாந்தி  தொடங்கினாள் ''இந்த ராதாவோட மகளைப் பாருங்கள். 8 பாடங்களில் 1 எடுத்திருக்கிறாள். சுதாடதைக் கேட்டாள். எனக்கு எப்படி வெட்கமாக இருந்தது தெரியுமே. அவள் தொடர்வதற்கு முன் ஆத்திரத்துடன் தொலைபேசித் தொடர்பை அறுத்தெறிந்தான். பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கிறதல்லவா. ''இந்தத் தெலைபேசியால்த்தானே இவ்வளவும். தன்னுடைய மகளின்ர புராணம் பாடுவதென்றால் பாடிட்டு விடல் வேண்டும் அடுத்தவர்களுடையதை ஏன் துளைத்தெடுக்க வேண்டும். இந்த நாகரீகம்கூடத் தெரியாததுகளோட அலட்டத்தான் உமக்கு இலவசத் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தித் தந்தேனா?. எரிச்சலுடன் சாப்பிடாமல் உடுப்பை மாற்றிவிட்டுப் படுக்கப் போய்விட்டான். ஆதங்கத்தை மனதில் அடக்கி மனம்வெந்தபடி சாந்தியும் கட்டிலுக்கு வந்து அழுதபடி அமர்ந்தாள். சிறிது நேர மயான அமைதியின் பின்இ கோபம் தனிந்த கார்த்திக்இ மனைவியின் கரங்களை ஆதரவாகப் பற்றினான். ''உன்னுடைய ஏக்கம் எனக்குப் புரிகிறது சாந்தி! எல்லோரையும் ஒரு மாதிரியாக எடைபோட முடியுமா? நீ படிச்ச காலத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை 3 தரம் எடுத்தியே. உன்னால முடியாமல்த்தானே என்னைக் கட்டிற்று இஞ்ச வந்த நீ. அப்போ உன்ர அம்மா இப்பிடித்தானா கத்தினவ. பிள்ளையைத் தண்டிக்க ஒரு வரன்முறை இருக்கிறது சாந்தி அவள் முடிந்த அளவு படிக்கிறாள். முடிhயாதென்றால் அதற்குரிய முறையைத்தான் நாங்கள் கையாள வேண்டும். அதைவிட்டுப் போட்டு அடிச்சு கண்டபடி திட்டி அவளின்ர மனதை நோகடிக்கும்போது அவளின் மனநிலை பாதித்தால் பிறகு என்ன செய்வது. அதுவே உனக்கொரு தண்டனையாகப் போய்விடும். அடுத்தவர் பிள்ளைகள் போல நம்முடைய பிள்ளையும் இருக்க வேண்டுமென்று ஏன் நினைக்கிறாய்? அவளுக்கென்றும் ஒரு திறமை இருக்கும் அதைக் காலப்போக்கில் கண்டுபிடித்து அதை வளாக்க முயற்சி செய்வோமே. எதற்கும் ஒரு வழிமுறை இருக்கிறது மதிப்பெண் மட்டும் மனிதன் வளர்ச்சியைத் தீர்மானிப்பதில்லை. என்று சாந்திக்கு அறிவுரை கூறினான். அவன் கூறியது அனைத்தும் சரியெனப்பட்டதால்இ மெல்ல எழுந்து மகளின் அறையினுள் சென்று அவளுக்கு முத்தம் கொடுக்கக் குனிந்தாள்இ சாந்தி. கன்னம் நெருப்பாய்க் கொதித்தது. அனைத்தையும் மறந்தாள். தாய்மை மேலோங்கியது. எதுவுமே அவளுக்கு மேலாய்ப்படவில்லை. தன் பிள்ளையினுடைய உடல்நலம் மட்டுமே இப்போது அவளுக்கு முக்கியமாகப்பட்டது. பதட்டத்துடன் இயந்திரமானாள். கணவனை எழுப்பி மருத்துவமனைக்குப் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு ஓடினாள். 
         ஆழ்மனதில் பாசத்தைப் பூட்டி வைத்து அடுத்தவர் போலெல்லாம் ஆகவேண்டுமென்ற வெளிமன ஆசையினால் தன் பிள்ளையைத் தண்டித்தமையை எண்ணிஎண்ணிக் கலங்கினாள் சாந்தி.
           

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...