• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 25 அக்டோபர், 2010

  புலம்பெயர்வில் பெற்றோர் தமது பிள்ளைகளின் திருமணத்தின் பின் அவர்களுடன் இணைந்து வாழ்தல் சிறப்பைத் தருமா? பின்

             புலம்பெயர் வாழ்வில் பெற்றோர் பிள்ளைகளின் திருமணத்தின் பின் அவர்களுடன் சேர்ந்து வாழ்தல் சிறப்பைத் தருமா சிரமங்களைத் தருமா இந்த கேள்விக்குரிய முக்கிய கதாபாத்திரங்கள் பெற்றோர்களே. பெற்றோர்கள் ஒவ்வொருவருடைய அநுபவங்களுமே, பிள்ளைகள் எடுக்கும் தீர்மானங்களிற்கு வழிகாட்டியாக அமைகின்றன. 
          ஒரு உயிர் உலகத்தில் பிறப்பெடுக்கும் முன் ஒரு வீட்டில் வாடகை செலுத்தாமல் குடியிருந்ததே. அந்த வீடு பூமியைத் தாங்கும் ஓஸோன் படைபோல் தன்குழந்தையைத் தாங்கிக் கொண்டு பத்தியம் காத்துப் பகல் இரவாய்க் கண்விழித்து பிள்ளையைப் பெற்றெடுத்ததே அந்தத் தாயுடன் சேர்ந்து வாழ்தல் சிறப்பைத் தருமா சிரமத்தைத் தருமா? 
            ''பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
            எல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ 
            ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை 
            இறைவனை நம்பி வந்தாயோ|'' என்று கண்ணதாசன் பாடிவைத்தார். அந்தத் தந்தையைத் தான் தெரிந்தோ தெரியாமலோ நம்பி ஒருவன் இந்த பூமிக்கு வந்து பிறக்கின்றான். திருமணவயது வரை ஒரு பிள்ளையை உருவாக்கப் பெற்றோர் செலவழிக்கும் நேரம், பணம், செலவு, பிரயாணம் போன்றவைக்கு எத்தனை கோடி அள்ளிக் கொடுத்தாலும் மீளச் செலுத்த முடியாது. இந்தப் பெற்றோர் பிள்ளைகளுக்குச் சிரமமாக இருப்பார்கள் என்று பிள்ளைகள் நினைப்பது எந்தவகையில் சரியாகும். 
          நவீன உலகிலே மேலைநாட்டு வாழ்விலே ஒரு வருடத்தில் மூன்றில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகிறது. இந்தத் திருமண முறிவுக்கு அடிப்படைக் காரணம் தனிக் குடித்தனமாகவே இருக்கின்றது. உலகரீதியாக கூட்டுக்குடும்ப வாழ்க்கை அருகியதுதான் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். பெற்றோர் ஒன்றாய் வீட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு அறிவுரைகள் புத்திகள் கூறி அவர்களை நல்ல வழியில் ஒற்றுமைப்படுத்தி விடுவார்கள். அநுபவம் என்பது தலைசிறந்த ஆசான். தாம் பெற்ற அநுபவங்கள், தமது பிள்ளைகளை நல்வழிப்படுத்த பெற்றோருக்கு உதவுகின்றது. அவசரத்தில் எடுக்கின்ற முடிவுகளை ஆறுதலாக எடுத்துக் கூறும் போது எடுத்த முடிவு பைத்தியக்காரத்தனம் போல் தோன்றும். அவசர உலகில் நின்று நிதானமாகச் சிந்திக்க இளந்தலைமுறை விரும்புவதில்லை.
                               இரு நண்பர்கள் சந்தித்தார்கள். ஒருவர் மற்றவரிடம் கூறினார், 'எனக்கும் என்னுடைய மனைவிக்கும் ஒரேஒரு முறைதான் சண்டை வந்தது'' என்றார். ''ஏன் அதற்குப் பின் நீங்கள் இருவரும் சண்டையே பிடிக்கவில்லையா'' என்று கேட்டாராம் மற்றையவர். அதற்கு அவர் சொன்னார் ''ஒரு தரம் பிடித்த சண்டையே இன்னும் முடியவில்லை இன்னும் என்றால் தாங்குமா இந்தமனம்'' என்றாராம். இதற்குக் காரணம் என்ன சண்டையானது வளர்ந்து வர பெற்றோர் இடந்தருவார்களா? குடும்பவாழ்வின் சக்தி, வலிமை பற்றி இளையவர்களுக்குத் தெரியாது. அன்பை அறியாது பணத்தை மட்டம் குறியாகக் கொண்டு வாழ்கின்றார்கள். இவர்களுக்குக் குடும்பத்தைப் பாதுகாக்கும் பெற்றோர் சேர்ந்து வாழ்ந்தால், சுகமாக இருக்கும் சுமையாக இருக்கு மாட்டாது. ஒரு நாட்டின் அரசியலுக்கு ஆலோசகர் தேவை. அதே போல் ஒரு வீட்டின் அரசியலுக்கும் ஆலோசகர் தேவை அல்லவா? அது ஏன் உரிமையும் பாசமும் உள்ள பெற்றோர்களாக இருக்குக் கூடாது. உவ்வொரு குடும்பமும்தான் ஒரு நாடு. அந்த நாடு சீரழிய அந்த நாட்டிலுள்ள குடும்பங்கள் காரணமாக இருக்கக் கூடாது. நான் சிறுமியாக இருந்தேன் எனக்கு விளையாட்டு பொம்மைகளில் அநுபவம் ஏற்பட்டது. நான் பெண்ணாக வளர்ந்தேன். பெண்மையில் அநுபவம் ஏற்பட்டது. நான் தாயானேன். தாய்மையில் அநுபவம் ஏற்பட்டது. நான் பாட்டியானேன் எனக்கு உலக அநுபவம் அனைத்தும்  வந்தது. அநுபவம் தருகின்ற புத்தியை அறிவு தருவதில்லை. 
      ஒரு பாட்டி தான் பெற்ற அநுபவப் பாடத்தைத் தன் பிள்ளைக்குப் போதிப்பாள். பிள்ளையின் பிள்ளைக்கும் போதிப்பாள். இதனால், அப்பாட்டி தலைசிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவாள்.  எனவே சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கவும் அநுபவப்பாடம் கற்ற பெற்றோர் சேர்ந்திருப்பது சிறப்பைத் தரும். இதனையே ஒரு முதியவர் இறந்தால் ஒரு பெரிய நூலகமே எரிகிறது. என்று ஒரு ஆபிரிக்கநாட்டு முதுமொழி கூறுகின்றது. 
                இத்துடன் 120க்கும் அதிகமான நாடுகள் கலந்து கொண்ட ஐக்கியநாடுகள் வயோதிபப்பேரவை முதியவரை சுதந்திரமான இயல்பான குடும்ப சூழலில் வாழவிடுதல் சமூகநீதி எனத்தீர்மானித்தார்கள். ஒருமனிதன் தனித்தீவல்ல அவன் சமுதாயத்துடனே இணைந்து வாழ வேண்டும். ஒரு சமுதாயத்துடன் இணைந்து வாழாத மனிதன் ஒரு மனநோயாளி போலாவான். அவன் சமூகத்துடன் இணைந்து வாழவேண்டுமானால், குடும்பத்துடன் சேர்ந்து வாழவேண்டும். சமூகநெறி விழுமியங்களைச் சொல்லிக் கொடுக்கும்போதே சமூகத்தடன் சேர்ந்து வாழப் சிறியவர்களும் பழகுகின்றார்கள்
          இதைவிட பெற்றோர் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழும் போது அவர்கள் பிள்ளைகளின் பொருளாதாரப் பெருக்கம், பிள்ளை வளர்ப்பு போன்றவற்றிற்கு ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளுக்கு நோய் ஏற்படும் போது பெற்றோர் வீட்டுக்கடமைகளைச் செய்வார்கள். சென்ற வாரம் எனக்கேற்பட்ட அநுபவத்தைக் கூறுகின்றேன். விழுந்தேன் நோயில் எழுந்திருக்கமுடியாத நோய். ஆனால், படுத்திருக்கவில்லை. ஒரு கிழமையில் சுகம் வர வேண்டிய நோயானது, சுகம் வருவதற்கு 3 கிழமைகள் எடுத்தது.. டொக்டர் படுக்கையில் இருக்க வேண்டுமென்று சொன்னார். எப்படி முடியும? உதவிக்கு யாருமில்லாத காரணத்தினால், நானேதானே எல்லாம் செய்ய வேண்டும். நோய் சுகமானதுதான். ஆனால், என் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு மனத்தாங்கல். இவையெல்லாம் ஏன்? இந்த அநுபவம் எல்லோருக்கும்; ஏற்பட்டிருக்கும். எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் அம்மா பிள்ளையைத் தொட்டிலில் போட்டுவிட்டு தொலைகாட்சியையும் போட்டுவிட்டுக் கார் பழகப் போவார். பிள்ளைகளோ தொலைக்காட்சியுடன் வளரும். இதைவிட கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும் குடும்பத்தில், பிள்ளை. அப்பா வேலைக்குப் போகும்போது அம்மாவிடம் பிள்ளை எறியப்படும். அம்மா வேலைக்குப் போகும்போது பிள்ளை அப்பாவிடம் எறியப்படும். இப்போது பந்தாகப் பிள்ளை ஒவ்வொருவரிடமும் எறியப்படுகின்றது. மனைவி வீட்டுக்கு வருகின்றாள். பிள்ளை வீறிட்டுக் கத்துகின்றது. ''பிள்ளை அழுகிறதே ஏதாவது ஒரு தாலாட்டுப் பாடலாமே என்று கணவனிடம் கேட்கின்றாள்'' அதற்கு கணவனோ, ''நீ ஒரு பக்கம் நான் பாடத் தொடங்கத் தான் சும்மா இருந்த பிள்ளை வீறிட்டுக் கத்துகின்றது'' என்கிறார். இதேவேளை அம்மம்மா இருந்தால், மடியில் போட்டுத் தாலாட்டுப் பாடித் தூங்கவைக்க மாட்டாளா?  அன்புடனும் ஆதரவுடனும் அரவணைப்புடனும் வளரும் பிள்ளையே எதிர்காலத்தில் ஆளுமையுள்ள பிள்ளையாக வருகின்றது. ரேப்ரெகோடரில் தாலாட்டுப் பாட்டுக் கேட்டு வளரும் பிள்ளைக்கும் இதற்குமிடையே பாரிய வேறுபாடு இருக்கின்றது. 
                  புரட்டஸ்தாந்து கத்தோலிக்க மதத்தவரிடையே ஆராய்ச்சி நடாத்திய எமில்தூக்கேம் என்பவர் குடும்ப ஆதரவு குறைவாகவுள்ள புரட்டஸ்தாந்து மதத்தவரிடம் தற்கொலை அதிகமாகவும் குடும்ப ஆதரவு மிகுதியாகவுள்ள கத்தோலிக்க மதத்தவரிடையே தற்கொலை குறைவாகவும் உள்ளதாகக் கண்டறிந்து சமூகஒருமைப்பாடு என்னும் ஒரு கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். எனவே குடும்ப அமைப்புச் சரியான முறையில் செயற்படாமல் விட்டால் மனிதநாகரிகத்தின் பிழைப்பே கேள்விக்குறியாகிவிடும். 
               மேற்குலக நாடுகளில் இளங்குற்றவாளிகளின் புள்ளிவிபரங்களைக் கணிப்பிட்ட போது 70 வீத அமெரிக்கக் குற்றவாளிகள் பெற்றோரின் சரியான பராமரிப்பும் ஆலோசனையும் இல்லாமல் வளர்க்கப்பட்டவர்கள் எனவும் 75 வீத ஜேர்மனிய இளங்குற்றவாளிகள் தாய் ஒன்று தகப்பன் இரண்டு எனவும் தாய் இரண்டு தகப்பன் ஒன்று எனவும்; வளர்ந்த பிள்ளைகளே எனக் கண்டறிந்தார்கள். இந்தத் திருமண முறிவெல்லாம் ஏன் ஏற்படுகின்றது. சரியான அறிவுரைகள் பெற்றோர்கள் அருகேயிருந்து வழங்காதமையே தானே. எனவே இளங்குற்றவாளிகளைத் தவிர்ப்பதற்கும்  பெற்றோர் சேர்ந்து வாழ்தல் அவசியமாகப்படுகிறது.
                உழைப்பால் மனிதன் உயரவேண்டுமானால் உதவிக்கு ஆள் வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டு இந்த ஐரோப்பிய ஒன்றியம். எனவே உழைப்பால் உயர பெற்றோரைக்கூடவே வைத்திருங்கள். உலகத்திலேயே ஒருவனின் வளர்ச்சி கண்டு பொறாமைப்படாது பெருமைப்படுபவர் பெற்றோர் மட்டுமே. எனவேதான் ''ஈன்ற பொழுதில் பெருதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டதாய்'' என்று வள்ளுவப் பெருந்தகை கூறினார் 
              இரண்டு வாயுக்கள் ஒன்றிணைந்தால்த்தான் தண்ணீர் கிடைக்கும் நமது உடம்பில் பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும்; சரியான சதவீதத்தில் இணைந்து போனால்த்தான்; உடல்நிலை சரியாகும். எனவே மழலை தொட்டு முதியவர்வரை இன்பம் அநுபவிக்க ஒருவீட்டில் கண்டு கேட்டு உண்டு உற்றறியும் உறவு கடவுள் நமக்குக் கொடுத்த பரிசு. அதை ஏற்றுக்கொள்வோம். 
                சேர்ந்து வாழ்வதா இல்லையா என்று தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் இளைய தலைமுறை. ஆனால், பெற்றோர் பெறுமதிமிக்கவர்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ்தல் சிறப்பைத்தரும். என்பதை எவரும் எதிர்க்க முடியாது. 

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...