• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 15 நவம்பர், 2010

  நன்றி கூறல்

  thanks
          
                                                              நன்றி கூறல்
  கொதித்துக் கொண்டிருக்கும் சூரியனால் வீசியெறியப்பட்ட பூமிக்கல், தணிந்தது, குளிர்ந்தது. பூமி என்னும் பெயர் கொண்டு அற்புதமான உலகை வான்வெளியில் உருவாக்கியது. சுழன்று கொண்டிருக்கும் பூமிக்குச் சூரியனின் கொதிப்புச் சாதகமாகியது. என்னைத் தூக்கி எறிந்தாலும் நான் உன் சொத்து. என்னாலும் தனித்து வாழமுடியும் எனக்கென்று உறவுகளை உருவாக்க முடியும். எறிந்துவிட்டும் என் மேல் உன் பார்வையை வீசிக் கொண்டு இருக்கின்றாயே. உன்னை நான் தூற்றுவதா? நன்றி கூறி வாழ்த்துவதா? என்று பூமிப்பந்து சூரியப் பிழம்பைப்; பார்த்துக் கேட்டது. இவ்வாறு இப்பூமி நன்றி உணர்வைக் காட்டி நிற்க, எம்மைத் தாங்கி நிற்கின்ற இப்பூமியை நினைத்துப் பார்க்கும் போது அனைத்துக்கும் காரணகர்த்தா யாரென்று புரிந்து கொண்டு கடவுள் என்று ஒருவரைக் கற்பனை செய்து மனம் அனைத்தும் அவர்தான் ஆதாரம் என்று அடையாளப்படுத்துகின்றது. நெருப்புப் பிழம்பை உள்ளடக்கி வெளிக்கோதை மட்டும் குளிர்மையாக்கி உயிரினங்களெல்லாம் தாங்கியபடி சுழன்று கொண்டிருக்கும் அந்த அன்னையைப் பூமித்தாயை நினைத்த போது பெண்ணாகப் பூமியை உருவகித்த உண்மைத் தன்மை புரிகின்றது. 

                  ஒரு பெண்ணை நன்றி சொல்தலுக்கு உருவாக்கி என் பார்வைக்குக் கொண்டுவரும் போது, ஒரு குடும்பத்தின் தலைவன் என்று அவன் பெருமிதம் கொண்டதனால், அவன் மனைவியாகிய அப்பெண், அவனால் தூக்கி எறியப்பட்டாள். தனித்து விடப்பட்டாள். தான் என்ற அவன் மமதை அப்பெண் தனித்துவம் புலப்படச் சாதகமாகியது. வெளியேறி விட்டாள். வீழ்ந்து விடுவாள் என்று வீறாப்புப் பேசியவன், இன்று அவள் திறமை கண்டு வாயடைத்து, தூர நின்று துணைக்கரம் தரத் துடிக்கின்றான்.  அந்தக் கதிரவன் எறிந்த பூமி மனிதக் கரம் பட்டுத் தனித்தன்மை பெற்றது போல்த் தனியே வாழ்ந்தவள் நிலமைக்கு உலகமே ஒத்தாசை கொடுத்தது. இவ்வாறு தனித்துவிடப்பட்டாலோ தனித்துவிட்டாலோ யாரும் வாழாது மாண்டுவிடுவார்கள் என்று யாரும் கருதிவிடக் கூடாது. பூமியில் விழுந்த குழந்தை யாரும் உதவுவார்கள் என்று நம்பியா இப்பூமியில் பிறந்தது? அக்குழந்தை வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ளவில்லையா! 

      ஒரு மனிதன் வாழுகின்ற வாழ்க்கையில் வைத்தியர்கள், நாட்டு உதவிகள், எதிரிகள், சூழல் என அத்தனையும் ஒரு மனிதனுக்கு உதவி நிற்கின்றன. பாதையில் சென்று பனியில் விழுந்து விடாதிருக்க நகரசுத்திகாப்பாளர் பனியை விலக்கிவிடுகிறார். பாதை வெளிச்சமாகிறது. மனை விளங்க சேகரித்த குப்பைகளை வீசிவிட்டால், அவற்றைச் சுத்தமாக்குபவர் துணை புரிகிறார் வீடு சுத்தமாகிறது. நோயால் வருந்தாதிருக்க வைத்தியர் உதவி செய்கிறார். ஆனால், நாம் வேண்டித் தொழுது நன்றி சொல்வோம், என்றும் கண்டறியா அந்த ஆண்டவனை. உலகில் பிறந்த மனிதர்களுக்கு உலகே ஏதோ வகையில் உதவி செய்யும். கண் முன்னே காட்சியளிப்பவர்களும், அவர்களைத் தாண்டி கண்ணிலே நாம் காணாவிட்டாலும், எம் வாழ்க்கைக்குத் தூண்டுகோலாய் உதவியாய் பலருக்குள்ளே பலர் மறைந்திருந்து உதவி செய்து கொண்டே இருப்பார்கள். உதாரணத்திற்கு நாம் உண்ணுகின்ற தேசிய உணவு சோற்றை எடுத்துக் கொண்டால் அதை விற்கும் கடைக்காரனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதை விற்பனவு செய்யும் மொத்த வியாபாரிக்கு நன்றி சொல்ல வேண்டும். அதை உற்பத்தி செய்த உழவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். உழைக்கும் ஊக்கத்தை உருவாக்கிய அவன் தாய்க்கு நன்றி சொல்ல வேண்டும். அது விளைவிக்கும் நிலத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். நிலத்தை உழும் எருதுக்கு நன்றி சொல்ல வேண்டும். விளைவிக்க உதவும் சூரியனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்படி அரிசிச் சோற்றுக்குள்ளேயே இத்தனை நன்றிகள் கூற வேண்டுமானால், நாம் வாழும்வரை உடலும் உளமும் வளரப் பாதுகாக்க உதவுகின்ற எத்தனை பேருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். எவர் உதவியும் எனக்குத் தேவையில்லை.  என்னால் தனித்து இயங்க முடியும். என எவர் கூறினாலும், எவர் உதவியுமின்றி எவராலும் வாழமுடியாது. வாழ்க்கை என்பது ஒருத்தரை ஒருத்தர் தங்கியே வாழ வேண்டி இருக்கின்றது.  வாழ்க்கை முழுவதும் ஒரு மனிதன் வாழ பலர் ஒத்தாசை கிடைத்துக் கொண்டெ இருக்கும். நன்றி சொல்லத் தொடங்கிவிட்டால், உலகத்து உயிர்கள், உணுவு தரும் தாவரங்கள் அனைத்துக்கும் நன்றி சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். புழு பூச்சிகளைக் கூட நாம் விட்டு வைக்க முடியாது. இந்நன்றியுணர்வு மனிதனுக்கு மட்டுமா இருக்கின்றது. வாலை ஆட்டும் நாயும் பாலைச் சொரியும் பசுவும் இளநீர் தரும் தென்னையும் நன்றியணர்வுக்குச் சாட்சிகள் இல்லையா? அதனாலேயே வள்ளுவப்பெருந்தகை செய்நன்றி அறிதல் எனும் அதிகாரத்தை ஆக்கியுள்ளார். நன்றி சொல்வது மடடுல்ல. நன்றி உணர்வு உள்ளவர்களாகவும் நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். 

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  மகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்

    நாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...