• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 22 நவம்பர், 2010

  உச்சி மோந்த தமிழ்க் கன்னி


                     


                               உச்சி மோந்த தமிழ்க் கன்னி

  வண்ணச் சொல்லும் வகைவகையாய்ப் பொருளும் கலந்து வாரி என்னை அணைத்து மகிழும் எழுத்து வள்ளல்களே! எனக்காயத் தரப்படும் சில மணித்துளிகள் என் பெருமையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன். 

  நான் பிறக்கும் போதே சுந்தரத் தோற்றத்துடனும் இலக்கண அமைப்புடனும் இலகுவற்ற முறையுடனும் இனிமையாகத் தோன்றினேன். என் தந்தையார் சழவனழன் ஆணையிலும் குறுமுனி அகத்தியன் அறிவிலும் அகிலத்தில் அவதரித்தேன். கடந்துவந்த பாதையிலே நான் பதித்து வந்த கோலங்கள், கோலவாரியாக மாறுபட்டுக் கொண்டேயிருக்கின்றன. மூவேந்தர் ஆட்சியிலே பூரித்து நின்ற என்னைக் கடல்கோள்கள் அச்சுறுத்தின. எனினும் காலன் என்னைக் கவரவில்லை. முதல், இடை, கடை என்று முறையே சங்கங்கள் வைத்து என்னை வளர்க்க மன்னர்களும் புலவர்களும் தங்களைப் போல் முனைந்து நின்றனர். சங்கப்பலகையிலே நான், எட்டுத்தொகை, பத்துப்பாட்டென அழகு அணிகளில் பொய்யாமொழி, நான் பொய்யாமல் இருக்க, நீங்கள் என்னை அடிக்கடித் தொட்டுக் கொள்ளும் குறள்வெண்பாவால் ஆரம் சூட்டினான். காதல், வீரம், மேவி நின்ற காலத்திலே காதலால் மேம்பட்டேன். துறவு மேவி நின்ற காலத்தில் துறவினால் மேம்பட்டான்.

           அடுத்து வந்த பல்லவர் காலத்திலே பக்திப்பாடல்களால் என்னைத் தூவி மகிழ்ந்தனர். தாழிசை, துறை, விருத்தம் கலந்த பாக்களினால் பாடல்களைச் சமர்ப்பித்தனர். சோழர்காலத்திலே நளவெண்பா, பரணி, பிள்ளைத்தமிழ் என வகைவகையாய்ப் படைத்தளித்தனர். நாயக்கர் ஆட்சிக்காலத்திலே விகடகவி, சிலேடைக்கவி, வசைக்கவி போன்ற சிறப்புமிக்க வடிவங்களை வடித்து எனக்கு அளித்ததுடன் சந்தச் சுவை கலந்த பாடல்களையும் அருணகிரிநாதர் என்னும் முருகபக்தன் எனக்களித்தான். குறவஞ்சி, பள்ளு போன்ற பிரபந்தங்கள் இக்காலத்தில் என்னை அலங்கரித்ததுடன் இவற்றிற்குச் சிந்து முதலிய செய்யுள்வகைகளைக் கையாண்டு பேச்சுவழக்கிலுள்ள சொற்கள் கையாளப்பட்டமையை, தற்கால எளிய போக்கிற்கு நாயக்கர் காலமே வித்திட்டது. என மனதில் நான் நினைப்பதுண்டு. நாயக்கர் காலத்தில் என்னை அலங்கரிக்க வடமொழி தழுவினர். ஐரோப்பியர் இலக்கியங்களின் போக்கைத் தழுவினர். ஐரோப்பிய நாட்டார் தம்மதம் பரப்ப என்னைத் தாராளமாக ஆய்ந்து கற்று எனக்கே பல படைப்புக்கள் ஆக்கி வைத்தார்கள் என்றால், என் பெருமையை என்னென்பேன். இக்காலத்து என்னுள் பதிந்த இலக்கியங்கள், நாடக இலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள், அத்தனையையும் பட்டியலிட்டு அழகாய் எடுத்துரைக்க எனக்காய் அமைக்கப்பட்ட நேரம் போதாது. ஆதலால், ஆவலாய் என்னை அளக்கிறேன், அளவாய் இப்போது. 20ம் நூற்றாண்டிலே பாரதியை, கம்பதாசனை, கவிமணியை இவர்கள் போன்ற எண்ணற்றோரை நாவாரப் புகழுகின்றேன்.

           இன்று 21ம் நூற்றாண்டிலே புதுமைப் பெண்ணாய் நான் வலம் வருவதென்றால், இலகுநடையிலே பட்டிதொட்டி எங்கும் வாழும் அத்தனை மக்களின் மனதிலும் என்னை விதைக்கின்றீர்களே. கணனிப் பரப்பில் முகநூல் (Face Book)வடிவினுள் முனைந்து நிற்கும் நான் கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தினுள் நுழைகின்றேன்.  அதுமட்டமல்ல, உலகெங்கும் வாழும் என் அருமைக் குழந்தைகள், '' தேமதுரைத் தமிழோசை உலகு எல்லாம் பரவும் வகை'' செய்து தாங்கள் வாழுகின்ற உலகு எங்கும் தங்கள் சின்னஞ்சிறிய விரல்கள் எடுத்து என்னுள் குதித்து விளையாடுகின்றனர். எனக்காயப் படைத்த படைப்புக்கள் அத்தனையும் தாம் வாழும் நாட்டு மொழியில் மொழி பெயர்க்க முன் வந்துள்ளனர். இதைவிட மகிழ்ச்சி எனக்கு என்ன தேவை? மூன்று வயதில் திருஞானசம்பந்தர் பாடிய போது பெற்ற சுகத்தைவிட, இன்று அந்நிய சூழலிலே இச்சிறார்கள், இலண்டன் தமிழ் வானொலியில் என்னை வாழ வைக்க வார்த்தெடுக்கின்ற படைப்புக்கள் கேட்டு நான் பஞ்சாமிர்த சுவையைப் பருகி இன்புறுகின்றேன். இளஞ்சிட்டுக்களே! உங்கள் உச்சிமோந்து நான் வாழ்த்துகின்றேன். இக்குழந்தைகளின் அணைப்பினாலும் எனது தந்தையின் ஆசியினாலும் காலம் தோறும் தோன்றும் புலவர்கள், ஆர்வலர்களின் அன்பளிப்புக்களினாலும் கன்னியாய்க் காலங்கழிக்கின்றேன். காலன் கண்ணில் அகப்படாமல்.

  1 கருத்து:

  1. உச்சியிலிருந்த தமிழ் கன்னி
   கொச்சைப்படுகிறாள் சொந்த நிலத்தில்.
   அச்சமின்றி இங்கவள் வளர
   அத்தனை முயற்சிகளும் வெல்லட்டும்.
   vetha.Elangathilakam.
   Denmark.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  இளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020

                                        கலாசாரக் காப்பாளர்களாக இளையோர் நம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம்...