• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வியாழன், 25 நவம்பர், 2010

  ஒழுங்கை விழுங்கும் மனிதர்கள்

                                  


                                        ஒழுங்கை விழுங்கும் மனிதர்கள்

  அரோஹரா..... என்னும் ஒலி ஹம் நகரில் பள்ளி கொண்டுள்ள அம்மன் காதுகளில் அலைஅலையாய்ச் சென்றடைய, செவிப்பறையை அதிரச் செய்த ஓசை கேட்டு கல்லாய் அமர்ந்திருந்த விக்கிரகம் கண்கள், மெதுவாகத் திறக்கப்படுகின்றது. சனக்கூட்டத்தின் இடிபாடுகள் தென்படுகின்றது. கோயில் மணிச்சத்தத்திலும் கூட்டத்தின் சத்தம் அபாரம். வாய்களினால் வந்த வார்த்தைகள் மனங்களில் உறையவில்லையே. அகல விரித்த கண்கள், அடுத்தவர் ஆடை அலங்காரங்களில் மொய்க்கின்றனவே. மனம் எங்கோ, வார்த்தைகள் எங்கோ செல்கின்றனவே. திறந்த கண்கள் திரும்பவும் மூடின. மந்திரங்கள் மணியோசைகள் அத்தனையும் மெல்ல மெல்ல அடங்கின. 

                           அடியார்கள் அனைவரும் அன்னதான மண்டபத்தை மொய்த்தனர். பல நாட்கள் பட்டினி கிடந்து ஒருநாள் உணவு கண்ட பரபரப்பு. அடிபட்டு இடிபட்டு பந்திக்கு முந்துகின்றனர். ''இந்த ஐரோப்பிய மண்ணில் அந்நியர் அவலம்'' என ஒரு ஜேர்மனியர் பத்திரிகைக் குறிப்பிறகுத் தலைப்பு இடுகின்றார்.  சற்றே விலகி அகன்ற அம்மன் கோயில் வீதியில் மெல்லென வந்த தென்;றல் காற்றின் ஸ்பரிசத்தை ஆகாயத்தை அண்ணாந்து நோக்குகின்றேன். வரிசைவரிசையாய் அழகாகச் சிறகு விரித்துப் பறக்கின்றன புள்ளினங்கள். அவற்றின் ஒழுங்கின் நேர்த்தியை வியந்து பார்க்கின்றேன். கோடு போட்டு விட்டது போல் கோணாமல் செல்கின்ற அழகை இரசித்தபடித் தரையை நோக்கிக் கண்களை இறக்குகின்றேன். வரிசைவரிசையாய் எறும்பு அணி ஒன்றின் அணிவகுப்புத் தென்படுகின்றது. அதைச் சற்றே சீண்டிப் பார்க்க ஆசை கொண்டு இடையே ஒரு குச்சியைப் போடுகின்றேன். எந்தவித சஞ்சலமுமின்றி மிக இலாவகமாகத் தடையை விலக்கி, ஒழுங்காக நிமிர்ந்து, நேர் பாதை கொண்டு, நிதானமாக முன்னேறும் யாங்கைக் கண்ணுற்றேன். என் மனக்கண்ணை குளக்கரை நோக்கித் திருப்புகின்றேன். தாய் வாத்து மிதந்துவரக் குஞ்சுகள் அதைத் தொடர்ந்து ஒழுங்கு மாறாது ஒய்யாரமாய்ப் பவனி வரும் இரம்யத்தை நினைத்துச் சிரித்த வண்ணம் அன்னதானக் கூட்டத்தைப் பார்க்கிறேன். அன்று காளமேகம் கண்ட சத்திரம் என் மனதில் பொறி தட்டுகிறது. ஒரு சத்திரத்திலே ஒரு பிராமணி இலைக்கும் வாய்க்கும் இடையிலே ஒரு உணவுப் போராட்டமே நடத்தகின்றார். உண்ணம் வேகத்தில் அவர் தலைமுடி அவிழ்ந்து உணவில் விழ, அதை உதறிவிடுகின்றார். அந்த உதறலில் பறந்து வந்த சோற்றுப் பருக்கை காளமேகம் உணவில் விழுகின்றது. அருவருப்புடன் ஆத்திரம் மேலிட, 
          
               ''சுருக்கவிழ்ந்த முன் குடுமிச் சோழியா சோற்றுப்
                 பொருக்குலர்ந்த வாயா புலையா – திருக்குடந்தைக்
                 கோட்டானே! நாயே! குரங்கே! உனையொருத்தி 
                 போட்டாளே வேலையற்றுப் போய்''

  என்று வசை பாடுகின்றார். அக்கவி இங்கிருந்திருந்தால்,

                 பட்டுவேட்டி பளபளக்க பட்டுப்புடவை மினுமிங்க
                 வட்டில் சோற்றுக்காய்த் தட்டுத் தடுமாறுபவரே – உங்கள்
                 கட்டுப்பாடு நிலைகுலைகிறது கற்றுக் கொள்ளுங்கள்
                 கற்றுத் தருவார் ஐந்தறிவு ஓரறிவு உயிர்கள்

  என்று அழகாகப் பாடியிருப்பார்.
                 
                                                     ஆறறிவு படைத்த மனிதனென தம்மைத் தாமே உயர்வாகக் கருதும் நம் மனிதர்கள், ஆலயங்களில் மட்டுமல்ல. திருமண வைபவங்களில் கூட மொய் எழுத முனைந்து நிற்கும் போது, விழாக்களின் போது, கச்சேரிகள் நடந்து கொண்டிருக்கும் போது என எங்கும் சீர்கேடு, ஒழுங்கின்மை. கலையைக் கருத்துடன் சபையிடம் ஒப்படைக்கும் போது நம்மவர் சம்பாஷணைக் கச்சேரி ஆரம்பித்துவிடும். நடந்து கொண்டே இருப்பார்கள். மேடையிலோ கலைஞன் தன்னை மறந்து தன் கலைப்படையலை நடத்திக் கொண்டிருப்பார். உணவு விற்பனை அமோகமாக நடைபெறும். பொறுமை இல்லையெனில், எதற்குப் பொது இடம். ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ளத்திலிருந்து வர வேண்டும். நாகரீகம் கற்றுக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். நேரத்தைப் பொறுமையுடன் பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால், ஒதுங்கி விடவேண்டும். ஒழுங்கை விழுங்கிவிடக் கூடாது. பலர் கூடும் கூட்டத்திலே ஒழுங்கு மீறி நடக்க வேண்டாம் என்று ஒரு உலகநீதி பாட மீண்டுமாய் உலகநாதர் வந்து பிறக்க வேண்டும் போல் இருக்கின்றது.
               
                

  4 கருத்துகள்:

  1. ஒழுங்கை நன்றாகக் கூறியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
  2. ஒழுங்கை நன்றாகக் கூறியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
  3. ஒழுங்கை நன்றாகக் கூறியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
  4. ஒழுங்கை நன்றாகக் கூறியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...