• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 28 நவம்பர், 2010

  வாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்

            வாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்

  தாய்நாடு ஒரு மனிதனுக்குத் தாயைப் போல் அமைகின்றது. ஒருவன் அந்தத் தாய்நாட்டை விட்டு வேறுநாட்டுக்குத் தஞ்சம் புகுந்தால், அந்த நாடு அவனுக்கு வளர்ப்புத் தாயைப் போல் அமையும். சொந்தத் தாயை விட்டுப் பிரிந்தவன், வளர்ப்புத் தாயை சொந்தத் தாயைப் போலவே கருத வேண்டும். தாய்க்குச் செய்யும் நன்றிக்கடனை வளர்ப்புத்தாய்க்கும் செய்ய வேண்டும் அல்லவா?  வாழுகின்ற நாட்டை விட்டுச் செல்லுகின்ற நிலை வந்தால், நிலத்திலிருந்துவிட்டுச் செல்லுகின்ற போது பின்பக்கம் ஒட்டியிருக்கின்ற மண்ணைத் தட்டிவிட்டுச் செல்வது போல், அந்த நாட்டை மறந்து செல்லுதல் கூடாது. வாழவந்த நாடு உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க வீடு, உற்றார் உறவினர்கள் போல் நீ ஏன் வாழும் நாட்டு மொழி கற்கவில்லை? எனக் கேட்டு மொழியை இலவசமாகக் கற்பித்து, வாழ்வதற்கான வேலைவாய்ப்புக்களைத் தேடித் தருவதுடன் சகல வசதிகளும் தந்து தஞ்சம் புகுந்தவர்களைப் பாதுகாக்கின்றது. 

  தஞ்சம் புகுந்த நாட்டிற்கு வந்தவர்கள் தமக்குக் கிடைக்கின்ற வருமானத்தில், கிடைக்கும் அரசாங்க உதவிகளில் மிச்சம் பிடித்து, தாய்நாட்டில் இருக்கும் உறவினர்களுக்கு அனுப்புகின்றார்கள். இப்படிச் செய்கின்ற போது அந்தநாட்டுக்கு அந்நியசெலவாணி அதிகரிக்கின்றது. இப்படிப் பார்க்கும் போது  வாழ வந்த நாடு தஞ்சம் புகுந்தவர்களுக்கு உதவி செய்வதுடன், அவர்கள் உறவினர்கள், அவர்கள் தாய்நாடு போன்றவற்றிற்கும் உதவுகின்றது. அகதிகளைக் காப்பது புகுந்த நாட்டின் கடமை அல்ல. அது ஒரு மனிதாபிமான செயல். இந்த மனிதாபிமானம் காட்டும் நாட்டுக்கு அகதிகளாய் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும். சிலர் உடலில் வலிமையும், வயதும் இருந்தும் உடம்பை வளைத்துப் பணி செய்யாது, வீட்டில் அடைந்து கிடந்து சோம்பேறிகளாக யாருக்கும் பயனற்றவர்களாக வாழுகின்றார்கள்.                     வேலை செய்து கிடைக்கும் வருவாயை விட வேலை செய்யாமலே   ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும் சந்தோசத்தில் வாழுகின்றார்கள். குழந்தைகள் அதிகமாகப் பெறுகின்ற போது குழந்தைகளுக்காக அரசாங்கம் வழங்கும் பணம் (முiனெநசபநடன) அதிகரிக்கின்றது. முதல் இரண்டு பிள்ளைகளுக்குக் கிடைக்கும் பணத்தைவிட மூன்றாவது பிள்ளைக்கு அதிகமான பணம் வழங்கப்படுகின்றது. அதனால், குழந்தை உற்பத்தி சிறந்த உற்பத்தி எனக் கருதி அத்தொழிலிலேயே ஈடுபட்டுவிடுகின்றனர். இந்தக் குழந்தைகள் நாட்டுக்கு உதவுகின்ற பிள்ளைகளாக வளர்க்கப்பட்டால்,குழந்தை உற்பத்தி பலனைத் தரும். ஆனால், பெற்ற குழந்தைகளையே சரியான முறையில் வளர்க்கத் தெரியாது வளர்க்கும் போது அவர்களால் நாட்டுக்கு நன்மையா? தீமையா? ஏற்படும்.

              சரியான முறையில் பிள்ளைகள் வளர்க்கப்படாத போது கிரிமினல்களும் நாட்டைப் பழுதடையச் செய்பவர்களும் அதிகரித்து விடுகின்றனர். இந்த நாட்டவர்கள் இப்படியான தவறுகளைச் செய்தால் பொறுத்துக் கொள்ளலாம். வாழ வந்தவர்கள் செய்யலாமா? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா? களவு செய்தல். அரசாங்க உடைமைகளைப் பழுதடையச் செல்தல், உதாரணமாக, பஸ், புகைவண்டியில் இருக்கையில் காலணி அணிந்த காலைத் தூக்கி வைத்தல், ஆயுதங்களால் இருக்கைகளை கிழித்தல், கூரான ஆயுதங்களால் அரசாங்க உடைமைகளில் கீறுதல், வீதிச் சுவர்களில் தேவையற்ற படங்களை வரைதல் போன்றவை. இவ்வாறான வேலைகளைச் செய்யும் போது அரசாங்கம் இதைத் திருத்தவதற்கு மேலதிகச் செலவுகளைச் செய்ய வேண்டி ஏற்படும். இது அகதிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட செலவுடன் மேலதிக செலவை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைகின்றது. சிந்திக்கத் தெரியாத எதிர்காலப் பார்வை இல்லாத பெற்றோர்களுக்கு புத்தி சொல்ல வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள், சமூகநல சேவையாளர்கள், ஆலோசகர்களையே சாரும். நாட்டுப்பற்றும் சூழல் பற்றும் மனிதனுக்கு அவசியம். 'நாடு என்ன செய்தது எனக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு'' என்ற பாடலைப் போல் பிறர் எமக்குச் செய்ய வேண்டும் என்பதை விடுத்து நாம் பிறருக்குச் செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்ப்போம். சுயநலவாதிகளால் ஒரு நாடு முன்னேற்றம் காணாது. பொதுநலவாதிகளே ஒரு நாட்டைக் கட்டிக் காக்கக் கூடியவர்கள்.

                       கற்பிக்க பாடங்களின் ஊடாக ஒழுக்க முறைகளைக் கற்பித்தல் வேண்டும். வன்முறைகளை வெளிப்படுத்துகின்ற பிள்ளைகளைச் சரியான புத்திமதிகளைக் கூறித் திருத்த வேண்டும். அதிகமான கண்டிப்பும் கூடாது. கண்டிப்பு அதிகரித்துவிட்டால், கண்டிப்பவர்கள் இல்லையென்றால், பிள்ளை தவறுகளை அதிகமாகச் செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. பொருள்களை உடைக்கும், தனது சேட்டைகளைப் பிற பிள்ளைகளிடம் காட்டும். அம்மாவின் உறவு பிள்ளைகளுக்கு அவசியம். எவ்வாறான அவசிய வேலைகள் இருந்தாலும், அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு பிள்ளைகளுடன் உறவாட வேண்டும். அவர்களைச் சிரிக்க வைக்க வேண்டும். நல்ல விதையிலிருந்தே நல்ல மரம் வளரும். அதை மனதில் கொண்டு பிள்ளைகளை வளர்த்தால், எந்த நிலையிலும் அவர்களுக்கு மனநோய்கள் வருவதற்குரிய வாய்ப்புகள் இல்லை. சிறுவயதில் கவனிக்காமல் விட்டுவிட்டு வளர்ந்தபின் ஐயோ! என்மகன் கெட்டுப் போய் விட்டானே என்று கலங்குவதில் பயனில்லை. சொல்லுக்கு இருக்கும் சக்தி வேறு எதற்கும் இல்லை. சொற்களை நாம் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் மனங்களை வெல்லலாம். மனங்களை வென்றெடுக்கும் போது அறிவுரைகள் பலிக்கும்.

           நாம் வாழுகின்ற நாட்டிலே அடிப்படை உணவு, சுகாதாரவசதிகளுடன் வாழ்வதற்குரிய பொருள்கள் குறைவான விலையில் கிடைக்கின்றது. ஏனென்றால், நாடு சுத்தமாகவும் நாட்டிலுள்ள மக்கள் சுகதேகியாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே ஆகும். இவற்றைச் சரியான முறையில் வெளிநாட்டவர்கள் பயன்படுத்தல் வேண்டும். இதைவிடுத்து சுகத்தைக் கெடுக்கும் மதுபானம், சிகரெட், னுசழபநnஇ போன்றவற்றைப் பாவித்து குற்ற வேலைகள் செய்து நாட்டைச் சீர்குலைப்பதனால், தொலைக்காட்சியும் die ausreißer ( வீட்டை விட்டு வெளியேறியோர்) Teenager außer Kontrolle  கட்டுப்பாடற்ற பருவவயதினர்) die Mädchen gang போன்ற நிகழ்ச்சியும் நடத்த வேண்டியது அவசியமாகின்றது.

               எனவே ஒவ்வொரு மனிதர்களும் எதிர்கால வாழ்க்கையை மனதில் கொண்டு தாம் சரியன முறையில் நடந்து தம்மை ஏற்றுக் கொண்ட நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக நடந்து தமது பிள்ளைகளைச் சிறப்பான முறையில் வளர்த்தால் வாழ வந்த நாடு நம்மை ஏற்றுக் கொண்டதற்கு நன்றியுள்ளவர்களாவோம்.

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...