• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 10 நவம்பர், 2010

  சூழ்ச்சியில் புகழ்ச்சி

                     


  ஒரு காரியத்தில் செயல்படும் போது, அது பிறர்க்கு அரிய பெருமையைச் சேர்க்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். செய்கின்ற சூழ்ச்சி புகழ்ச்சியை அள்ளித்தரக் கூடியதாக இருத்தல் வேண்டும்.  நாரதர் கலகம் ஏற்படுத்தினால், அதில் நன்மையில் முடியும் என்பது புராண வரலாறு.  பெண்ணின் கூந்தலில் இருந்து வருவது இயற்கை மணமா? செயற்கை மணமா? எனப் பாண்டிய மன்னன் எழுப்பிய வினாவிற்கு இயற்கை மணமே என்னும் தொனியில் தருமி மூலம் பாடல் அனுப்பி நக்கீரரைச் சோதிக்க முழுமுதற் கடவுள் செய்த சூழ்ச்சி நக்கீரருக்குப் புகழை ஏற்படுத்தியது. ஆதிமூலம் இயற்றிய பாட்டில் பொருள் குற்றம் சுட்டிக்காட்டிய நக்கீரர் ''நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என வாதிட்டு, வந்திருப்பது பரம்பொருள் என்று அறிந்த போதும் தமிழின் தூய்மை கெட்டுவிடல் கூடாதென்றுத் தமிழ் மேல் தான் கொண்ட அளவற்ற பற்றினை நிருபித்துக் காட்டினார். இங்கு நக்கீரர் தமிழ் அறிவையும் அதன் மேல் அவர் கொண்ட தீராத பற்றையும் உலகுக்கு அறியச் செய்ய, இறைவன் செய்த சூழ்ச்சி நக்கீரருக்குப் புகழ்ச்சியைத் தந்தது.

                         
                         இதேபோல், கண்ணன் செய்த சூழ்ச்சியால் கர்ணனுக்குப் கிடைத்தது புகழ்ச்சியே. பாரதயுத்தத்தில் அம்புகள் துளைக்கப்பட்ட நிலையில் குற்றுயிராய்க் கிடக்கின்றான், கர்ணன். ஆயினும் அவன் கை வில் அம்புகள் செலுத்திய வண்ணமே இருக்கின்றது. உயிர் உடலை விட்டுப் பிரிய மறுக்கின்றது. எண்ணமோ துரியோதனனை எண்ணித் துயருறுகின்றது. கலங்கினான், அர்ச்சுனன். கண்ணா! நான் என் செய்வேன்? இந்தக் கர்ணனை எப்போது நான் வெல்வேன்? இந்தப் போரில் எப்படி நான் வெல்வேன்? அஞ்சினான் அர்ச்சுனன். ''இந்தப் போரில் எத்தனை முறை முயன்றாலும் கர்ணனை வெற்றி கொள்ள உன்னால் முடியாது. அவன் செய்த தருமம் அவனை இறக்கவிடாது கட்டிக் காக்கும்.' என்று கூறிய கண்ணன், கிழப்பிராமணன் உருவெடுத்தார். கன்னன் முன் வந்தார். ''வறுமைப் பிணியால் வந்துள்ளேன். ஏதும் தந்துதவுவாயா கர்ணா? என இறைஞ்சிக் கேட்டார்.
              
               '' ஆவியோ நிலையிற் கலங்கியது யாக்கை
                    அகத்ததோ புறத்ததோ அறியேன்
                  பாவியேன் வேண்டும் பொருளெலாம் நயக்கும்
                    பக்குவத்தில் வந்திலையால் 
                  ஓவிலாது யான் செய் புண்ணியம் அனைத்தும்
                    உதவினேன் கொள்க நீ   உனக்கு  ...'என்றார்.
                                                        
  தான் செய்த புண்ணியம் அனைத்தையும் தாரை வார்த்துக் கொடுத்தான். கர்ணன் உயிர் இறையடி இணைந்தது. கர்ணன் மறைவுக்குக் கண்ணன் காரணமாயினான். இங்கு கண்ணன் சூழ்ச்சியில் கன்னனுக்குக் கிடைத்தது புகழ்ச்சி. பிராமணனாகிய  பரசுராமன் அளித்த சாபத்தினால் உரிய நேரத்தில் வித்தைகள் மறந்த நிலையில் கிடக்கும் காணனிடம் பிராமண உருவெடுத்துக்  கிருஸ்ணபரமாத்மா செல்கின்றாரென்றால் அங்கு கன்னனுக்குக் கிடைக்கவிருப்பது புகழ்ச்சியே. கொடையென்று வந்துவிட்டால், தன்னை நாடி வந்தவர் தன்னை வஞ்சித்தவராயினும் தயங்காது வாரிவழங்கக்கூடிய வள்ளல் கர்ணன் என்பதை உணர்த்துவதற்காகவே இவ் வடிவம் தாங்கினார். அடுத்து இறைவனே கையேந்திப் பிச்சை கேட்ட மாமனிதர் என்ற பெருமையும் கன்னனுக்கு ஏற்பட்டது.
                            
               எனவே சூதும் வாதும் பிறர்க்குச் சுகத்தை ஏற்படுத்தல் வேண்டும். சூழ்ச்சியின் பலன் மற்றவர்க்குப் புகழ்ச்சியைக் கொடுப்பதாக இருத்தால், அந்தச் சூழ்ச்சி கூட புகழப்படுவதாக அமையும்.

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...