• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 14 டிசம்பர், 2010

  தற்பாதுகாப்பு


  ஒரு மனிதன் வாழும் வரை தன் வாழ்வில் தனக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதல், தற்பாதுகாப்பு எனப்படுகின்றது. மிருங்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூரிய பற்களும், நகங்களும், சிறகுகளும், திண்ணிய கால்களும் கொண்டு வாழ்கின்றார்கள். ஆனால், மனிதன் இத்தகைய கருவிகளுடன் பிறக்கவில்லை. ஆயினும் தன் அறிவென்னும் ஆயுதத்தால், தன்னைக் காத்து அகிலத்தில் சிறந்து வாழ்கின்றான். இம்மனிதன் தன்னைப் பாதிக்கின்ற விடயங்களாக உள்ளம், உயிர், உடல், மானம், மரியாதை போன்றவற்றை மனம் கொள்ளுகின்றான். இவற்றைப் பாதுகாப்பதற்குத் தன்னாலான முயற்சிகள் அத்தனையையும் நாடுகின்றான். நோய்நொடியின்றி வாழ நல்ல உணவுப் பழக்கவழக்கங்களையும் உடற்பயிற்சிகளையும் செய்கின்றான். தன் உடலுக்கும் உளத்துக்கும் யாதொன்றும் நடந்துவிடக் கூடாதென்பதற்காகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வான்.
  தன்னைத்தான் காதலனாயின் எனைத் தொன்றும் 
  துன்னற்க தீவினையின் பாற்

  என்ற வள்ளுவர் குறளைப் போல் ஒருவன் தன்னில் பற்றும் பாசமும் கொண்டிருக்கும் போது தீவினை யாதொன்றும் செய்ய மாட்டான். ஏனெனில் அதனால் ஏற்படுகின்ற பழி, பாவங்கள் அனைத்துக்கும் அவனே காரணமாகி விடுவான். ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சரியான முறையில் பாதுகாத்துக் கொண்டால், உலகத்தில் எவ்விதப் பிரச்சினைகளுக்கும் இடமில்லை. ஆயினும், எல்லோரும் ஒழுக்கசீலர்களாக இருப்பதில்லையே. அதற்கமைய ஏற்படுகின்ற பிரச்சினைகளில் இருந்தும், சூழல் மாசடைதலில் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. மானம் மரியாதை இழக்கின்ற போது உள்ளத்தால் பாதிக்கப்படுகின்றான். எனவே உள்ளத்தைப் பாதுகாக்க மானம், மரியாதையைப் பாதுகாப்பது அவசியமாகின்றது.

  மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் 
  உயிர்நீப்பர் மானம் வரின் 

  என்னும் குறள் விளக்குகின்றது. மானத்தைப் பெரிதாக மதிக்கும் மனிதன் தன்னைப் பாதுகாக்கின்ற தற்பாதுகாப்பை மறந்து விடுகின்றான். ஆனால், சிலர் மனமோ மரியாதையோ எதுவானாலும் தமது புகழுக்காக தமது காரியம் நடைபெற வேண்டும் என்பதற்காக மானம் என்பதைப் பாதுகாக்க விரும்புவதில்லை. இவர்கள் தமது மானம் என்னும் தமது உளஉடைமைப் பொருளை இழந்து விடுகின்றார்கள். இவ்வாறு சில மனிதர்கள் இருக்க மானம், மரியாதையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சில மனிதர்கள் தமக்கு மரியாதை இழக்கின்ற சந்தர்ப்பம் ஏற்படுகின்ற போது இவ்விடத்தை விட்டு மௌனியாக விலகிவிடுகின்றான். இங்கு மௌனம் தற்பாதுகாப்புக்கலையாகத் திகழ்கின்றது. 32 பற்களை அரணாக அமைத்து, ஒரு நாக்கை மட்டும் கொண்டிருக்கும் மனிதன், அதனைப் பயன்படுத்தி அளந்து பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். 10 மணிநேரம் பேசவேண்டுமானால், 10 நாள்கள் பேசாமல் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். 

  யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
  சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு

  என்று வள்ளுவர் தெரிந்துதான் சொல்லியிருக்கின்றார். இந்த நாவே பல உளப் போராட்டங்களுக்களுக்குக் காரணமாய் அமைந்து விடுகின்றது. பேச்சுச் சுதந்திரம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்தாலும், பேசுகின்ற பேச்சைப் புரிந்து கொள்ளாத மனிதர் எதைப் பேசினாலும் புரிந்து கொள்ளப் போவதில்லை. அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே அமையும். இக்காலப்பகுதியில் நாவென்ற கூரான ஆயுதத்தாலே பலர் பல இதயங்களைக் குத்திக் கிழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பல உளப்போராட்டங்களுக்குக் காரணமாக இருக்கின்றார்கள். உளத்தை அழித்து வாழும் ஒர் வாழ்க்கை நன்றாம் என்று கருதுவோரும் உளரோ வாழ்வில் என்றால், ஆம் என்றே கூற வேண்டும். உளத்தை அழித்தல், உயிரைக் கொல்லலுக்குச் சமமாகும். எனவே இது போன்றோருடன் உரையாடும் போது நாவடக்கம் ஒரு சிறப்பான தற்பாதுகாப்புக்கலை என்றே கருதுகின்றேன். நாவாலே கெட்டாரும் உண்டு. நாவிழக்கப் பேசுவாரும் உண்டு. நாமாக இவ்வுறவைத் துண்டித்துக் கொண்டால், நல்லது நடக்கும் நம் வாழ்வில். 

                அடுத்து மரியாதை என்னும் பண்பை எடுத்துக் கொண்டால், ஒரு சுவரிலே பந்தை எறிகின்ற போது அந்தப் பந்து திரும்பவும் நம்மை வந்தடைகின்றது. அதேபோலேயே ஒரு மனிதன் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கின்ற போதே தனது மரியாதையைப் பெற்றுக் கொள்ளுகின்றான். ஆறிவைப் பெற்றுத் தரும் கல்வியானது ஒரு மனிதனுக்கு மரியாதையைக் கொடுக்கின்றது. பெருக்கத்து வேண்டும் பணிவு என்பது போல் கற்கக் கற்க பணிவும் கற்றவர்களிடம் வந்து சேருகின்றது. எனவே மற்றவரை மதிக்கின்ற பண்பையும் பெற்றுக் கொள்ளுகின்றார்கள். கற்றவர் சபையிலே நின்று பேசக்கூடிய சக்தியை கல்வியின் மூலம் ஒரு மனிதன் பெறுகின்ற போதே அம்மனிதன் பலரால் மதிக்கப்படுகின்றான். சபைநடுவே நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறிய மாட்டான் காட்டிலுள்ள நன்மரம் என்று ஒளவை கூறியது கல்வியின் மகத்துவத்தை எடுத்துக் காட்டவே ஆகும். கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதன் பொருள், கற்றவர் எங்கு சென்றாலும் கல்வியின் மேல் பற்றுக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். எங்கு எந்த மொழி வழங்குகின்ற நாடாக இருந்தாலும், அந்த மொழியை இலகுவாகக் கற்று அந்நாட்டில் மரியாதை உடையவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதனாலேயே சென்ற இடமெல்லாம் சிறப்பு ஏற்படுகின்றது. எனவே மரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், கல்வியில் பற்றுக் கொள்ள வேண்டும். அது பெற்றுத் தரும் மரியாதையைப் பாதுகாக்கும் தற்பாதுகாப்புக் கலையை. 

                           பொதுவாக அனைத்து உளப் போராட்டங்களுக்கும் மனஅமைதி அவசியமாகின்றது. அந்த மனஅமைதியைப் பெற்றுத்தரும் யோகாசனக்கலையானது, ஒவ்வொரு மனிதனையும் உடலால் ஏற்படும் நோய்களில் இருந்தும் உளத்தால் ஏற்படும் நோய்களில் இருந்தும் பாதுகாக்கின்றது.

                     எனவே தன்னைப் பாதுகாக்கும் தற்பாதுகாப்புக்கலைகளாக உடற்உயிர் பாதுகாப்புக்கலைகளான கராட்டி, யுடோ, யோகாசனம் போன்றவையும். சத்தான உணவுவகைகளும், கல்வி, நாவடக்கம் போன்றவையும்  அமைகின்றன. எனவே இவற்றில் மனம் பதித்து வாழுகின்ற வாழ்க்கையை வசந்தமான வாழ்க்கையாக வாழப்பழகிக் கொள்வோம்.

  1 கருத்து:

  1. தற்பாதுகாப்புப் பற்றி மிக நிதானமாகவே கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. பின்பற்றுவோர் பயனடையக்கூடியது. வாழ்த்துகள் கௌசி.
   Vetha. Elangathilakam
   Denmark.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்

  உதவி செய்வது என்பது இப்போது விளம்பரமாகப் போய்விட்டது. வலது கை கொடுத்தால், இடது கைக்குப் புலப்படாது என்று இருந்த காலம் மாறி, இப்போது உதவி செய...