• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 20 டிசம்பர், 2010

  மொழிக்கலப்பு


  கடலலையாய் ஓங்கியும் குறைந்தும் ஓயாது கட்டிடத் தூண்களில் பட்டுத் தெறித்த கரங்கள் இசைத்த தாளக் கச்சேரியில் கண்களில் துளிர்த்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்த வண்ணம் மேடைக்கு வந்தான,; சுப்பிரமணியன். துக்கம்மிகும்போது மட்டுமன்றி மகிழ்ச்சி பீரிடும் போதும் வலியின் தாக்கத்தின் போதும் இதயம் முதலில் செய்தி சொல்வது, கண்களுக்குத்தான். உடனே கண்களும் தான்அறிந்த செய்தியை வெளிப்படுத்தி விடும் வாயாகிவிடும். இப்போது சுப்பிரமணியன் என்னும் பெயர் இந்துக்கடவுளின் பெயர் என்பது ஐரோப்பியர்கள் நன்கு அறிந்திருந்தனர். அறியச் செய்ததும் அவனில் கொண்ட அபிமானமே. அவனுக்குப் பொன்னாடை போர்த்தவில்லை. ஏனென்றால், இது ஐரோப்பிய அரங்கு. பொன்னாடைக்கு எங்கே இப்போது புளகாங்கிதம். புகழ் இழந்த போர்வை அல்லவா அது. இரவல் கவிதையில் புகழ் தேடும் கவிஞர்கள் மார்பில், தலைகுனிந்தல்லவா நிற்கின்றது: ஸ்குவிட் என்னும் கடற்பிராணி தன் மேனியில் ஒரு வெளிச்சத்தைக் கொண்டு கடலடியில் திரியுமாம். அதுபோலவே தமது புகழைத் தாமே பரப்பச் செலவு செய்யும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கொண்டதல்லவா இந்நாடு. இவர்களுக்கு மத்தியில் தமிழனாய்த் தமிழிசை மூலம் தமிழை ஐரோப்பியர் புரட்டிப் பாhக்க இசை என்னும் மின்சாரத்தைப் பாய்ச்சியவன், சுப்பிரமணியன். அவன் பாடியது வேற்றுமொழிப் பாட்டாக இருந்தாலும் அதில் அரைப்பகுதி தாய் மொழியைக் கரைத்துவிட்டான். மொழிக்காப்பாளர் முறைத்தனர், கண்டித்தனர். ஆனால், இன்று உலகஅரங்கில் அவன் பாடல் அரங்கேறியபோது உலகம் விழித்தது. அனைத்து இசை கேட்கும் இளையவர்கள் காதுகளில் எலலாம் காற்றுடன் கலந்து தாலாட்டியது. வாய்களில் எல்லாம் நாவுடன் கலந்து நடனம் புரிந்தது. 
                                 உலக அரங்கிலே 2010 ம் ஆண்டிற்கான சிறந்த பாடகன் என்னும் நினைவுச் சின்னம் ஒரு தமிழனின் கரங்களுக்குக் கிடைத்த பெருமையில் கைகளில் தன் இலட்சியப்பரிசை அடக்கமாய்த் தாங்கினான். கைகளில் தொலைவாங்கி தரப்பட்டது. அது சிலர் கைகளில் புதைந்துவிட்டால். அடுத்தவர் நேரத்தையும் சலிப்பையும் சேர்த்தே வாங்கிவிடும். அதைப் பறித்தே எடுக்க வேண்டிய சூழ்நிலை பல தமிழ் மேடைகளில் பழக்கமாய் விட்டது. ஆனால், சுப்பிரமணியனோ பரந்த கடலின் நடுவே கப்பலினுள் இருந்த வண்ணம் கரையில் தொலைத்த ஊட்டச்சத்தைத் தேடிக் கொண்டிருப்பவன்போல் கண்களால் வலைவிரித்தான். அவன் கண்கள் ஏக்கத்தையும் சேர்த்தே கண்ணீர் முத்துக்களைச் சொரிந்து கொண்டிருந்தது. '' என் தந்தை எனக்குத் தந்தது, இசைபயிலப் பணம். என் தாய் எனக்குத் தந்தது, ஒத்தழைப்பு. ஆனால், இசைக்கு உரம் போட்டு '' அந்நியர் உன் குரல் கேட்டுத் தம்நிலை மறக்க வேண்டும். தமிழின் இனிமை உன் குரல் மூலம் அவர் நாடிநரம்புகளை ஊடறுத்துச் செல்லவேண்டும். தாய்மொழிச் சொற்கள் அந்நியமொழிச் சொற்களுடன் சேரட்டும் தங்கத்துடன் செம்பைக் கலந்து பாவனைக்குக் கொண்டு வா. சாதனை வீரனாய்த் தங்கப் பதக்கம் தாங்கி வா'' என்று நாளும் எனக்கு ஊக்கம் தந்த மொழி ஆசிரியை இன்று எங்குள்ளாரோ  எங்குள்ளாரோ? அவருக்கே இவ் அனைத்துப் புகழும். என்னால் முடியும் என்பதை உணர்த்தியவர் அவர்தானே. என்று நன்றியறிதலை வள்ளுவப்பிரியனாய் உணர்த்திப் பாதங்களை இருப்பிடம் நோக்கி நகர்த்தினான்.
            சாதனை வீரர்கள் உருவாகின்றார்கள். உருவாக்க உந்து சக்தியாக மறைவாக மாசற்ற மனத்துடன் இருப்பவர்கள் மறக்கப்படுகின்றார்கள். இதுவே இன்று மனிததர்மமாகப்படுகின்றது. இது ஒருபுறம் இருக்க, மொழிப்பற்றுப் பாடி எமது மொழிப் பெருமையை நாமே புகழ்ந்து கொண்டிருப்பதில்ல பெருமை. முதலில் வேற்று மொழிகளில் எல்லாம் தனது தடத்தை எமது மொழி பதிக்க வேண்டும். எத்தனை மொழிகளுக்குப் புகலிடம் கொடுத்தது எமது தமிழ்மொழி.  இப்போது அது அடுத்தவர்களிடம் போய்ச் சேர்ந்து தனது அடையாளத்தைப் பதிப்பது மட்டுமல்ல அவர்கள் நாவில் நர்த்தனமாடவும் வேண்டும். இதுவே இன்று அந்நியநாட்டிற்குப் படையெடுத்த வந்த தமிழர்களின் கடமையாக இருக்க வேண்டும்.

  1 கருத்து:

  1. பல உண்மைகள் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. எழுத்தாளரும், கலைஞர்களும் ஸ்குவிட் ஆனது கூறப்பட்டுள்ளது. ஆசியாவிலும் இந்த நிலையாகவே உள்ளது. எங்கு போய் முடியுமோ! வாழ்த்துகள் சகோதரி.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு

  காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாருமில்...