• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 29 ஜனவரி, 2011

  புலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங்கம் 4)

                                                                                                                         
  வைபவங்கள்

  புலம்பெயர் நாடுகளில் நடைபெறுகின்ற வைபவங்களில் பூப்பனிதநீராட்டுவிழா, திருமணவிழா போன்றவற்றை எடுத்துநோக்குவோம். 

                                                                             பூப்புனித நீராட்டுவிழா:

  பருவ மடைந்தா ரெனப்பறை சாற்றி
  பலவருடங் கழித்து விழாச் செய்து
  பலநூறு பேருக்கு அழைப்பிதல் கொடுத்து
  சிலரை மட்டும் உபசரித்து
  பல ஆயிரங்கள் செலவு செய்தும்
  சிறிது பணச் செலவில் 
  கரண்டி பரிமாறாது
  சிறிதும் கையலம்பாது 
  உணவு உருசிக்கச் செய்து
  விருந்தினர் நிலை சிந்திக்காது
  பல மணிநேரம் புகைப்படம் எடுத்து
  இறுதிவரைப் பெண்ணை நிறுத்தி வைத்து
  பலர் வேதனைப்பட்டு வாழ்த்தும்
  பூப்புனித நீராட்டுவிழா.

         இது புலம்பெயர்விலே பெயர் பெற்ற விழா. பலர் இதைப் பணச்சடங்கு என்றும் கூறுவார்கள்.

                                                               பூம்புனிதநீராட்டுவிழா:

  ஒரு பெண் இயற்யாக உடலினுள் ஏற்படுகின்ற ஓமோன் மாற்றங்களால் முதல் மாதவிடாய் காண்பது பூப்படைதல் என்படுகின்றது, அன்றிலிருந்து அப்பெண் ஒரு குழந்தையைச் சுமப்பதற்குத் தகுதிபெற்றவளாகிவிடுகின்றாள். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பூப்படைதல் முக்கிய அம்சமாகின்றது. எப்படிப்பட்ட பெண்ணாயினும் இக்காலத்தில் அழகாகவே காட்சியளிப்பாள்; கன்னியென்னும் அந்தஸ்துப் பெற்றுக் காண்பவர்கள் கண்களுக்கு அழகுப்பொம்மையாகவே தோற்றமளிப்பாள். இவ்வாறான பெண்ணை மேலும் அழகுபடுத்தி அலங்கரித்து ஒரு காட்சிப்பொருளாக மேடையில் மணித்தியாலக்கணக்கில் நிறுத்திவைத்து, நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தாயகத்தில் நாம் கண்டறியாத, கேட்டறியாத, தமிழர்கள் வைஸ்ணவர்கள, என்ற பேதமின்றி ஒருபுதுவித கலாசாரப் படிவங்கள் புலம்பெயர்வில் படிந்துவிட்டன. இது ஒரு சடங்காகக் காணப்பட்டாலும் புலம்பெயர் பெற்றோர் கூறுகின்ற காரணம், 'நாம் இவளுடைய கல்யாணத்தை நடத்தி அழகு பார்க்க முடியுமோ என்பது சந்தேகம். அதனாலே இச்சடங்கைச் செய்வோம். நாம் பிறருக்குக் கொடுத்தவற்றையெல்லாம் எப்படி மீட்கப்போகின்றோம்'' என்பதேயாகும். அப்படியானால், முதலில் தமது பிள்ளைகளில் பெற்றோரே நம்பிக்கை வைக்காதபோது பிள்ளைகள் எப்படிப் பெற்றோரின் பேச்சுக்கு இடம்தரப் போகின்றார்கள். பூப்படைந்தவுடனேயே முடிவுகட்டி விடுகின்றார்கள். தமது பிள்ளைகள் தாம் விரும்பிய ஆணைத் தமது விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்யப்போகின்றார்கள் என்பதை. இதைவிட இன்னும் ஒரு காரணம் இச்சடங்குகளுக்குக் கூறப்படுகின்றது. பூப்புனிதநீராட்டுவிழா என்பது பெற்றோர்களுக்கு ஒரு முதலீடாக அமைகின்றது என்று சொல்பவர்களும் உண்டு. புகைப்படக்கலைஞர் சட்டதிட்டங்களுக்கமைய சடங்கு நிகழ்வுகள் நடைபெறும். திரைப்பட இயக்குனர்போல் சில புகைப்படக்கலைஞர்கள் காணப்படுவார்கள். அவர்கள் அதட்டலுக்கும் ஆள்காட்டிவிரலுக்கும் ஏற்பப் பெற்றோர்கள் தம்மை அமைதிப்படுத்தி அவதானமாக இருக்கவேண்டும்.


  திருமண பூப்புனிதநீராட்டு விழாக்களின் பொதுநடவடிக்கை

  விழா ஆரம்பம், அழைப்பிதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தைக் கடந்துவிடும். வடை, கோப்பி தேநீருடன் விருந்தினர்கள் வழிமேல் விழி வைத்துக் காததிருப்பார்கள். வருகின்ற விருந்தினர்கள் 400 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து வந்தவர்களாகவும் இருப்பார்கள். இவ்வைபவத்தில் கலந்து கொண்டு வேறு ஒரு அழைப்பிதழ் கிடைத்த வைபத்திற்கும் போகவேண்டும் என்ற கலவரத்தில் காணப்படுவார்கள். ஏனென்றால், அழைப்பிதலைப் பெரிதாக மதித்து அவர்களிடம் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணப்பாங்கோடு காத்திருப்பவர்களுக்கு நேரகாலதாமதமாக உள்நுழையும் பூப்படைந்த பெண்ணோ, திருமணம் செய்யவிருக்கும் மாப்பிள்ளை, பெண்ணோ, பெரும் சங்கடத்தை ஏற்படுத்திவிடுவார்கள். 
                வைபவ மண்டபத்தில் பாடல்கள் ஒலிக்கும் அது செவிப்பறைக்குச் சாவுமணி அடிக்கும். தலைக்குள் ஏற்படும் வலியைத் தவிர்க்க அங்கு ஆரவாரமாகத் திரியும் ஒருவரை அழைத்து ஒலியின் தன்மையைக் குறைக்கும் படிப் பணிவுடன் கேட்டால், ஓரளவு ஒலி குறைய மூச்சுவிடும் செவிப்பறைக்கு, என்ன இது ஒலி குறைந்துவிட்டதே என்று நினைத்த வேறு ஒருவர் ஒலியின் அளவை அதிகரி;க்கச் செய்ய நடுக்கம் வந்துவிடும். மீண்டும் ட்ரம் ஒலி காதைப்பிளக்கும். அழுகின்ற செவிப்பறையுடன் சுகதேகியாக விழாமண்டபம் நுழைந்தவர்கள் தலைவலி நோயாளியாக வீடுநோக்கிப் புறப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். காசையும் கொடுத்துத் தலைவலியையும் வாங்குவது என்னும் பழமொழி இதுதான் என்பது இங்கு வந்தபின்னேதான் உணர்ந்து கொண்டேன். ஏனிந்தப் பேரொலி? புரியவில்லையே. கண்ணதாசன் மேளதாளங்கள் திருமணவீட்டில் ஒலிப்பது, வந்திருப்பவர்கள் கூறுகின்ற அமங்கள வார்த்தைகள் விழாக் கதாநாயகர்களுக்குக் கேட்கக் கூடாது என்பதற்காக என்றார். அமங்கள வார்த்தைகளைச் சொல்பவர்கள் பிறருக்குக் கேட்கும்படியாகவா சொல்லப்போகின்றார்கள். மெல்லிசை மனதுக்கு இனிமை பயக்கும் என்பதைப் புரிந்தும் புரியாமல் நடக்கும் பேர்வழிகளை என்னென்பது. 
                 சடங்குநடைமுறைகள் மேடையில் நடந்து முடிவடைய  உணவுபரிமாறப்படும். இது ஒரு பெரிய சமாச்சாரம். இதனை அடுத்த அங்கத்தில் அநுபவிப்போமா. 

  இக்கட்டுரை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. பலரின் புலம்பலும் புண்படும் வார்த்தைகளும் என் வரிகளின் மூலம் பலருக்கு வெளிச்சமாக்கப்படுகின்றன. புரிதலும் திருந்தலும் மனிதவர்க்கத்தின் கடமையல்லவா. காலப்போக்கில் நாம் மாறிவிட்டோம் என்னும் போதுதானே உடலிலும் உள்ளத்திலும் வளர்ச்சி கண்ட பெருமை எமக்கு ஏற்படும். அனைத்து வைபவங்களும் இப்படி என்று சொல்லமுடியாது. அநேகமான வைபவங்கள் இப்படி நடைபெறுவதனாலேயே நான் என் வரிகளை விதைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. வாசித்தவிட்டு மௌனமாகிவிடாதீர்கள். மூளைக்கு ஏற்றுங்கள். உங்கள் அபிப்பிராயங்களைத் தாருங்கள். நன்றி.  2 கருத்துகள்:

  1. நல்ல யதார்த்தமான பதிவு.
   லைவ் ரிலே மாதிரி இருந்தது படிக்கிறப்ப..
   பயனுள்ள தகவல்... நெறய்ய தெரிஞ்சுக்க+புரிஞ்சுக்க..
   பி.கு.: இந்த இலங்கை தமிழர்களுக்கு மட்டும் தமிழ் எப்படிங்க விளையாடுது நுனிநாக்குல ?
   தமிழோட அழகே உங்க மக்களோட உச்சரிப்புலதான்..

   பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே,

   உங்கள் வாழ்த்துக்களும் வரவேற்புக்களும் ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றன. தொடரும் எழுத்துக்களுக்குத் துணைச் சேர்க்கின்றன. தொடருங்கள் வாசித்த பயனை மறவாமல் வழங்குங்கள். நானும் தவறாமல் தமிழை அள்ளித் தருவேன்.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...