• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 7 பிப்ரவரி, 2011

  மனதின் மாறாட்டம்            சுந்தரிக்கு அன்று இனம்புரியாத ஒரு பயம் திடீரென்று மனதில் ஏற்பட்டது. எத்தனை காலம் தான் நான் வாழப் போகின்றேன். மனிதனுடைய வாழ்க்கை நினைப்பது போல் நடப்பதில்லையே. திடீரென்று ஏதாவது ஒரு அசம்பாவிதம் என் வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்டால். உடும்புப் பிடியாக ஒட்டியிருக்கும் என் மகள் இதைத் தாங்குவாளா! இறுக இறுக இரவில் என்னைக் அணைக்கும் போது எனக்குள்ளேயே இந்த ஏக்கம் தொடராக என் மனதில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதை மனதில் கொண்டுதானோ ஐரோப்பியர்கள், குழந்தைகளைத் தனியே படுக்கப் போடுகின்றார்கள். மனதில் தன்னம்பிக்கையும் பயமின்மையையும் தனித்து வாழும் பக்குவத்தையும் ஏற்படுத்தத்தான் என்பதை நன்கு அறிந்திருந்தும், வெள்ளைத் தோல்கள் பாசமில்லாதவர்கள் தன்னந்தனியே பிள்ளைகளைப் போட்டுவிட்டு அவர்கள் சுகமாகத் தூங்குகின்றார்கள். என்றெல்லாம் குறை கூறுகின்றோம். ஆனால், எதையுமே திட்டமிடாது வாழ்க்கையயில் தொடர்ந்து திண்டாடும் எம்மவர் வாழ்வின் படிமானங்களைத் தெரிந்து கொள்வதில்லை. பாசமென்ற பெயரில் பயந்தாங்கொள்ளிகளை உருவாக்கும் பெற்றோர்கள் அல்லவா, நாங்கள். பலவாறான எண்ணங்களின் பின் முடிவானது அவள் மனதில் ஒரு துணிவு. கணவனிடம் சென்று மெதுவாகக் கூறினாள்.  'பிள்ளையை இன்று அவவுடைய அறையில் படுக்கவிடுவோம். தற்செயலாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் நான் படுக்க வேண்டிவந்துவிட்டால், அதைப்பற்றி சிந்திக்காது இருக்க வேண்டுமல்லவா? 'திடீரென்று என்ன இந்தச் சிந்தனை'' கணவனின் சந்தேகம். அப்படியொரு பெரிய விசயமுமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவக்கு எல்லாம் பழக்கத்தானே வேண்டும். 
                           மகள் பாடசாலை சென்றவுடன் ஆயத்தம் பலமாக இருந்தது. மகளுடைய அறையை அழகுபடுத்தி அதில் ஆசை ஏற்படும் வண்ணம் தடபுடலான அமர்க்களம். அறையினுள் கட்டிலைச் சுற்றி அழகான பொம்மைகளின் அலங்காரம். கணவனிடம் கட்டளையிட்டாள், படுக்கைக்குக் கொண்டு போனவுடன் நான் பால் கொடுத்து விட்டுவந்துவிடுவேன். நீங்கள் தான் சிறிது நேரம் பக்கத்தில் படுத்திருந்து விட்டு வரவேண்டும். அவ அடம் பிடிப்பா பிள்ளையின் நல்லதுக்குத் தானென்று நீங்கள் தான் எடுத்துச் சொல்ல வேண்டும். பிள்ளையை கவலைப்பட விடாமல் நீங்கள் தான் பார்க்கவேண்டும். அனைத்துக்கும் சம்மதித்தார் கணவன். மகளும் வந்தாள். மாலை நேரமும் வந்தது. அம்மாவின் முன்னெடுப்புக்கு முதலில் பலத்த எதிர்ப்புப் பிள்ளையிடம். ஒருவாராக சம்மதத்துடன் கட்டிலுக்குச் சென்றுவிட்டாள்.  சுந்தரி தனது கட்டிலுக்குப் படுக்கச் செல்லுமுன் மகளை அணைத்து முத்தமிட்டு இரவுவணக்கம் சொல்லி படுக்கையை அடைந்தாள். போர்வையினால் உடலைப் போர்த்தினாள். பிரண்டுபிரண்டு படுத்தாள். இறுகஇறுகக் கண்களை மூடினாள். நித்திரை வருவதாயில்லை. மெல்லெனக் கால்கள் மகளின் அறையை நோக்கி நகர்ந்தன. கணவனிடம் கொஞ்சம் விடுங்கள் என்று சொல்லியவண்ணம் நித்திரையிலிருந்து மகளை எழுப்பாமல் தூக்கிக் கொண்டு தனது கட்டிலுக்குப் போனாள் சுந்தரி. மகளை அணைத்தபோதுதான் நித்திராதேவி அவள் கண்களை அணைத்துக் கொண்டது.

  2 கருத்துகள்:

  1. இன்றுதான் தங்கள் பதிவை பார்க்க முடிந்தது
   மிகச் சிறப்பாக உள்ளது.
   குறிப்பாக மனதின் மாறாட்டம் அற்புதம்
   முதலில் அறிவுரீதியாக நீங்கள்
   சொல்லிப்போகிற விஷயங்களை
   ஒப்புக்கொள்ளச் செய்கிறீர்கள்.
   பின் நம் ரத்தத்தில் ஊறிய
   நம் தாய்மை உணர்வை
   விளக்கம் ஏதும் சொல்லாது
   செயலாகவே சொல்லிப்போவது
   படைப்பின் சிறப்பு
   தொடர வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  2. எனது அம்மாவும் இப்படித்தான் அம்மா கூறுவார். இவ்வாறுதான் என்னை தனிமைபடுத்த நான் பழகிக்கொள்ள நினைத்தார். பின்பு அவர்களாலேயே முடியவில்லை. நான் பக்கத்தில் இருந்து அனைத்துக்கொண்டு உறங்கினால்தான் அவர்களுக்கு தூக்கமே வருகிறதாம்.

   தங்கள் கதையை படித்தவுடன் என் அம்மாவிடம் கூறினேன் அனைத்து தாயுள்ளமும் இந்த பாசத்தில் தான் சிக்கிக்கொண்டுள்ளனர் என்றார் சிரித்துக்கொண்டே. நன்றி!

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...