வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

புதன், 23 பிப்ரவரி, 2011

அநாமதேய தொலைபேசி


குண்டுமல்லிகைச்சரம் கொண்டுவந்த வாசனை அவள் அருகே கொண்டு சென்றது என் மனதை. திருவிழாக் கூட்டத்தின் நடுவே அழகுத் தேராய் அவள் அசைந்து வரக் கண்டு அசையாது நின்ற என் விழிகள், நீண்டு வளர்ந்த கருங்குழலின் எழிலில் மொய்த்துக் கொண்டன. ஐரோப்பியமண்ணில் இப்படி ஒரு குடும்பக் குத்துவிளக்காய் பிரகாசம் வீசும் உடல் வனப்பில் ஒரு பெண்ணா! ஆச்சரியப்பட்டு நின்ற என்னைத் தட்டித்தந்தாள், என் சிநேகிதி. '' அதுதான், அதுதான் அந்தா போகிறாளே அந்தப் பெட்டைதான் உன்ர ளவரனநவெ க்குக் கல்யாணம் பேசி குழம்பிப் போன பெட்டை. திடுக்கிட்டேன். ஆண்டாண்டாய் நான் சேகரித்து வைத்த ஆசிரியத்தரத்தின் அரைப்பகுதியை இழந்த அவமானம் ஏற்பட்டது. பக்தி, அடக்கம், பண்பான பேச்சு இவை அனைத்தும் நான் கண்ணால் கண்ட காட்சிகள். கடவுளிடம் ஒரு விடுதலை வாங்கி விரைந்தேன் வீடு நோக்கி. பாடும் காட்டுக் குயிலின் வாயை அடைக்க முடியுமா? சமுதாய சீர்கேட்டை படம் பிடிக்கும் என் பேனாவைத் தடுக்கமுடியுமா? ஏன்? எப்படி? மீண்டும் வண்டு துளைக்கத் தொடங்கியது சிந்தனைப் பெட்டகத்தை.  
         'எங்கே அவன்? என் அருமை மாணவன்?'' வினவினேன், அவன் தோழனை."விடுமுறைக்காய் நாடுவேறு பறந்து விட்டான்" 'திருமணத்தடைக்கு காரணம்தான் யாதோ? மீண்டும்துளைத்து எடுத்தது எனது வினா? விடையும் தேடித்தந்தது. காதலில் விழுந்திருந்தால், கடைசிவரைப் போரிட்டிருப்பான். இவள் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டாள். பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. அதனால் பெரிதாய்க் கவலை அவன் கொள்ளவில்லை. அநாமதேயத் தொலைபேசி ஒன்று அவன் வாழ்வில் அக்கறை கொள்வதாய் வந்திருந்தது. யாரோ ஒருவன், வார்த்தைகளில் அவள் வாழ்க்கையை எரிப்பதற்குத் தீ வைத்தான். நண்பனிடம் இருந்து வந்த ஆதாரம் எனக்குக் கைகொடுத்தது. 
         பொறுத்திருந்து அவன் வருகையைக் கண்டறிந்து சிறிது நேரம் உரிமையுடன் உரையாடினேன். சினிமாக்களிலேயே வில்லன்கள் சொந்தங்களுக்குள்ளேயே வஞ்சம் தீர்ப்பதற்கு வாளேந்துவார்கள். ஆனால், மாற்றான் வாழ்வைப் பேசியே அழிப்பதற்கு இங்கு தொலைபேசி ஏந்துவார்கள். ஒருவனுடன் தொடர்பு கொண்டுள்ள அவள், உங்கள் மகனைத் திருமணத்தில் தொடர்பு கொள்ள ஆசைப்படுகிறாள். இப்படிப் பல அவதூறான வார்த்தைகள் கூறிக் கூடிவாழ எண்ணும் குருவிகளைக் கலைத்து விடுகிறார்களே. அடுத்தவர் வாழ்வின் அழிவுக்குத் தூபம் போடுவோர் காணும் சுகம்தான் யாதோ? மாற்றான் துயரத்தில் மகிழ்ச்சி காணும் மனங்களாலே வாழ்வை இழந்தோர் எத்தனை. அடுத்தவர் எம்மீது கறைகளைப் பூசிவிட்டால் கழுவிவிட்டு நிமிரும் தைரியம் பாதிக்கப்பட்டோருக்கு வளர வேண்டும். இல்லையேல், பூச எத்தனிப்போரைச் சேற்றினுள் புதைத்து அமிழ்த்துவதற்குச் சாமர்த்தியம் வேண்டும். வாழ வைப்பவர்கள் திரையின் பின் நின்று நிலைமை உரைக்க மாட்டார்கள். முகமூடி அணிந்து முகவரி உரைக்காது. பொல்லாத வார்த்தை உதிர்க்க மாட்டார்கள். திருமண வயதுக்குப் படி கண்டுவிட்டால், பகுத்தறிவு வேண்டாமா! பரிசம் போட்டவள் வாழ்வு பற்றிச் சிந்திக்க வேண்டாமா! நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டு நின்ற விடயம் தொடர வேண்டுமென்று உரிமையுடன் உத்தரவு போட்டு அவன் கண்களைத் திறக்கச் செய்தேன்.

1 கருத்து:

கே. ஆர்.விஜயன் சொன்னது…

நல்ல எழுத்து நடை. நல்ல சொல்லாடல்.வாழ்த்துக்கள்

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...