• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 22 ஏப்ரல், 2011

  சுரங்கள் சிந்துகின்றன

  மண்டபம் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. பட்டாடையில் பெண்கள் பளபளத்தனர். அரங்கு அழகுக் கோலம் காட்டி நின்றது. அத்தனை பேரும் இசையை சுவாசிக்கும் இதயம் படைத்தவர்கள். முன் வரிசையில் சரஸ்வதி போல் வீற்றிருந்தாள், சுரதா. வண்ணப்பட்டாடையில் கட்டம் போட்ட துகில். அதில் இசைக் கருவிகளின் இலச்சினை. வாத்தியங்கள் அத்தனையும் வாரியெடுத்த தேகம். அவள் இதழ்களில் சுரங்கள் வாசம் செய்கின்றன. நாவில் சரஸ்வதி வீணையுடன் வந்து குடிகொண்டிருந்தாள். கச்சேரி களைகட்டியது. இதயங்கள் அத்தனையும் இசையில் சங்கமமாயின. ஆயினும், சுரதாவின் மனதில் ஏற்பட்ட இரணத்தின் வேதனை குறைந்தபாடில்லை. சில அதிகார வேட்கை கொண்ட புல்லுருவிகள் கூறிய வார்த்தைகள் மனதில் ஆழமாகப் பதியப்பட்டிருந்தன. சிறப்பு விருந்தினர் உரை வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டாள்,சுரதா. 

                   ஒலிவாங்கி கைகளில் தரப்பட்டது. வார்த்தைகள் சரமாரியாகப் பொழிந்தன. '' இசையால் வசமான இதயங்கள் அத்தனைக்கும் என் இதயபூர்வமான வணக்கங்கள். சிறப்பு விருந்தினராக மேடைக்கு என்னை அழைத்த போது அப்பெருமையை ஏற்றுக் கொள்ளும் சமுதாயத்தினிடையே தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்;றேனா? என்பது கேள்விக்குறி. மனதில் பட்டதை பட்டென உரைக்கும் ஆளுமையையும் ஒருமைப்பாட்டையும் இந்த இசை எனக்குத் தந்துள்ளது. இசை கற்கும் போதே எமது உள்ளமும் தூய்மையாக்கப்படுகின்றது. இசைமீது பக்தியும் ஏற்படுகின்றது. '' பெருக்கத்து வேண்டும் பணிவு' என்பது போல் இயல்பாகவே பணிவும் ஏற்பட்டுவிடுகின்றது. தேன் தானும் கெடாது. தன்னைச் சேர்ந்தவரையும் கெடுக்காது. இவ்வாறுதான் இசைத்தேன், தன்னை இசைப்பவரையும் இன்புற வைத்து, அதை இரசிப்பவரையும் இன்புற வைக்கும் தன்மை கொண்டது. உலகம் அனைத்தும் இசை மயம். குயிலின் குரல், கடலலையின் ஓசை, நீரோடையின் சலசலப்பு, இவையெல்லாம் இயற்கை எமக்களிக்கும் இசைக்கச்சேரிகள். ஆனால், இலக்கண அமைப்புக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டவை அல்ல. கர்நாடக இசை, முறைப்படி சங்கீத இலக்கணங்களுக்கமைய வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்காக கர்நாடக இசை கற்றுவிட்டேன், என நான் ஒரு போதும் பெருமைப்பட்டதில்லை. அத்தனை அறிஞர்களும் அடிப்படை அறிவு கொண்டவர்களா? இல்லையா? என ஆராயாமலே இரசிப்பவள,; யான். இசை ஒரு பொதுச்சொத்து. இதை இரசிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. நான் தான் இசைஞானி. எனக்கு வாத்தியங்கள் வாத்தியம் வாசிப்பவர்கள் தான் இவர்கள். ஏனக் கலைஞர்களை அடிமைப்படுத்தி, எம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்வது கீழ்த்தரமானதல்லவா? கலைஞர்களை இகழ்ந்து மேடைகளில் முழக்கமிடுவது அநாகரிகமானதல்லவா. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் சாதகமாகப் பெருங்கலைஞர்களாக உருவெடுத்தவர்கள், அடிப்படை கர்நாடக இசை அறிவுமில்லாது, ஏனைய கலைஞர்கள் மனதைப் புண்படுத்தல் மன்னிக்க முடியாத குற்றம். 
          ' போற்றுவார் போற்றட்டும்ளூ புழுதி வாரித்
           தூற்றுவார் தூற்றட்டும்ளூ தொடர்ந்து செல்வேன்
           ஏற்றதொரு கருத்தை என(து) உள்ளம் என்றால்
           எடுத்துரைப்பேன்ளூ எவர் வரினும் நில்லேன்! அஞ்சேன்'
  மேலும் அனைத்து இசைப்படைப்பாளிகளும் உலகுக்கு இன்பம் தருபவர்கள். எனக்கூறி என் சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன்'. பார்வையாளர் கரகோஷம் ஓங்கி ஒலித்தது. 
             நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி தெளிந்த சிந்தையுடன் மெல்லென இருப்பிடம் நோக்கி நகர்ந்தாள். இரண்டு வாரங்கள் தன் மனையாளின் இதயத்திலிருந்த இரணங்களுக்கு இவ் அரங்கு மருந்திட்டது கண்டு, அவள் கணவன் அவள் கரங்களைத் தன் இரு கரங்களால் இறுகப்பற்றிக் கொண்டான். 

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...