• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 22 ஏப்ரல், 2011

  எத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே

   

  வட்ட வடிவமான பூகோளத்தில் வளமாக வாசம் செய்யும் நாம், இயற்கையில் இரம்யத்தை இரசிக்கும் போது இன்னிசை மனதில் இழையோடிக் கொண்டேயிருக்கும். சூரியன் தன் வர்ணப் பெட்டகத்திலிருந்து வர்ணக்கதிர்களை எடுத்து உலகெங்கும் அள்ளித் தெளித்துவிட்டான். ஆஹா....எத்தனை வர்ணக்கலவை. இவை புரிகின்ற வர்ணஜாலக்காட்சியே வானவில்லின் வடிவம். அற்புதம், அற்புதம். ஆகாயத்திரையில் செம்மஞ்சள் கதிர்களால் வண்ணப்படம் வரைந்து, கடலலையில் நிறக்கண்காட்சியை நடத்தி மெல்லமெல்லத் தன் கரங்களால் வர்ணக்கலவையை வாரி எடுத்து, கதிரவன் நாள்தோறும் உலகுடன் உறவாடி மகிழ்கின்றான்.
                                  காற்றுக்கும் மரத்துக்கும் என்ன காதல் இச்சையோ? ஒட்டி உறவாடி ஆடி, மகிழ்கின்றனவே. மெல்லியதென்றல் தன் மென்கரங்களால் மரக்கிளைகளைத் தழுவ ஒய்யாரமாய்க் குதூகலிக்கும் மரங்களில் திடீரென விளையாடிப் பார்க்க நினைத்த காற்றுச் சற்று மிதமாகத் தடவியது. சடாரென இலைகள் ஆட்டம் கண்டன. ஆடிஆடி இலைகள் மகிழ, அதை ஆட்டிஆட்டிக் காற்றும் மகிழ நடன அரங்கேற்றம் ஒன்றை நடத்தத் திடீரென்று மழை முகிழ்கள் தமது கட்டை அவிழ்த்து விட்டன. சேர்த்து வைத்திருந்த வெள்ளிக்கம்பிகள் சரசரவென மண்ணோக்கி விரைந்து மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் போட்டன. மழையோடிணைந்து இடிமுழக்கம், பக்கவாத்தியம் இசைக்க ஒரு நடன அரங்கேற்றம் அரங்கேற்றியது. கொட்டும் மழையில் கொண்டாட்டம் கண்டு காற்றும் மழையும் கலகலக்கின்றன. கச்சேரியில் தம்மை இழக்கின்றன.
                                   இன்னுமொரு இலையுதிர்காலக் கச்சேரியை இரசிக்கப் புகுவோம். காலத்தின் கோலத்தால், களை இழந்த சருகுகளின் சங்கீதத்தை இரசிக்க எண்ணிய காற்றுச் சற்று சருகுகளைத் தூண்டிவிட்டது. சலசலவென மண்ணின் மடியில் சரணடைந்தன, சருகுகள். போதுமா! காற்றுக்கு. ஒரு மூச்சு வேகத்தைக் கூட்டி விசிறியது. கூடிக்கிடந்த சருகுகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து பறந்து கண்களுக்குப் பரவசமூட்டின. சங்கீதத்தைக் காற்றுக்குச் சமர்ப்பித்தன. இயற்கை எத்தனை களியாட்டங்களை எமக்குக் காட்டுகிறது. 

                                    சிறகுகளில் சித்திர வேலைப்பாடமைத்து சிங்காரமாய் வந்து மலர்களில் அமர்ந்து கொள்ளுகிறதே வண்ணத்துப்பூச்சி. அகலக் கண் விரித்து அருகே சென்று பார்த்தால், வண்ணத்துப்பூச்சியை மலர் இரசிக்கிறதா! மலரை வண்ணத்துப்பூச்சி இரசிக்கிறதா! என்று புரியாது நிற்போம். ரோஜாமலருக்குள் இததனை சோகமா! முள்ளின் மேல் மலர்ந்ததனால், ரோஜாக்கள் இரத்தம் சிந்துகின்றனவா! காயம் செய்த ஆயுதத்தை அருகே வைத்துக் கொண்டு இரத்தம் சிந்துகின்றதே இந்த சிவப்பு ரோஜா.   காலைவேளை கண்ணீர்த்துளிகள் அந்த ரோஜாக்களின் மேல் பனித்துளிகளாய்ப் பட்டும் படாமல் படர்ந்து கிடக்கின்றன. இவை கண்டு கழிக்கின்றன எம் மனங்கள்.


                                    இன்னும் எத்தனை எத்தனை இன்பம் கிடக்கிறது, பூமியில். அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்திட இன்பப் பக்குவ மனம் கொண்டான், மனிதன். கவிக்கண் கொண்டு படைத்தான், கவிஞன். உவமைமிகு உரைநடைச் செய்யுளாய் வடித்தான், எழுத்தாளன். ஓவியமாய் வடித்தான், ஓவியக் கலைஞன். இசையாய் இசைத்து இன்புற்றான், இசைஞானி. அத்தனையையும் தன் கைக்குள் அடக்கி, இரசித்து இரசித்து இன்புற்றான் புகைப்படக் கலைஞன். இவை அனைத்திற்கும் அப்பால் அப்படி என்னதான் உள்ளது! என்று ஆராயப் புகுந்தான், விஞ்ஞானி 

  இத்தனை உள்ளங்களிலும் எண்ணங்களைத் தூண்டிவிடும் எழிலரசி இயற்கை மாதேவியே நீ வாழி, வாழி

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  மகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்

    நாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...