வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

ஆணே உன் கதி இதுதானா?                        


பகலவன் கடமையைப் பங்கேற்றுக் கொண்ட வீதிவிளக்குகள், அசைவின்றி அமைதியைப் பேணிப் பாதுகாக்கும் சாலையோர மரங்கள், வியாபாரநிலையங்களின் விடிவிளக்குகள், உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் ஆரவாரமில்லாத மாலைப்பொழுது. ஆனால், அவள் மட்டும் சாளரம் நடுவே  சாலையை நோக்கியவண்ணம் நின்றாள். அவள்தான் சாரதா. மணி இரவு பன்னிரெண்டை வழியனுப்பி வைத்திருந்தது. அயலவர் ஆழ்ந்த உறக்கத்திற்குத் தன் காலடிஓசை தகராறு செய்யக்கூடாது என்பதற்காக வாடகை வீட்டின் படிகளில் மெல்லெனத் தாண்டித் தன் வாசல் கதவை மெதுவாய்த் திறந்தான், பத்மன். இனிமையான இளமைப் பருவங்கள் கடமைச் சுமையால் கரைந்தோட, காதோரம் வெள்ளிக் கம்பிகள் அவதாரம் செய்ய, நாற்பத்தைந்து வயதில் தன் மூளையில் தட்டிய, தனக்கென்று ஒரு துணை தேவை என்னும் விடயத்தைக் கருத்தில் கொண்டு துணை பெற்றான். ஆர்ப்பாட்டம் இல்லாது ஆலயத்தில், மங்கலநாணைத் தன் மனைக்கும் மனதுக்கும் சொந்தக்காரிக்கு அணிவித்தான். அவளும் அவன் மனதுக்குப் பிடித்த பெண்ணாய் அன்போடு வாழ்கின்றாள்;. இன்னும் அவனுக்குஇரவே பகல், பகலே இரவு. உணவை வாயில் திணித்த வண்ணம், அடுத்த நாள் கடமைகள் பற்றி மனைவியின் விளக்கத்தைப் பெற்றான்.


                          தாயகத்திலிருந்து தாயாரின் தொலைபேசி வந்ததாம். அத்தானுக்கு ஆரம்பித்துக் கொடுத்த நிறுவனம் அமோகமாய் வெற்றிநடை போடுகின்றதாம். அக்காளுக்குக் கட்டிக் கொடுத்த வீட்டில் இரு மாடிகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் தொலைபேசி ஒன்று அனுப்பப்பட வேண்டியுள்ளது. தங்கையின் திருமணம் தடபுடலாக 500 பேர் வாழ்த்த சொகுசு ஹொட்டலில் தடபுடலாக நடந்தேறியுள்ளது. தம்பிக்குத் தலைநகரில் தலைசிறந்த வியாபாரநிறுவனம் அமைத்தாயிற்று. கடைக்குட்டிக்குப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இவையனைத்தும் வந்த செய்திகளாய் இருக்க. "தம்பியை ஒருக்கால் நாளைக்கு ரெலிபோன் எடுக்கச் சொல்லு பிள்ள'" இது நாளைய கடமையாய் இருந்தது. 


                         சிரித்தபடி சாரதா கன்னத்தைத் தடவியபடி, 'இன்னும் ஒரு கடமைதானே பாக்கி இருக்கிறது. அதன் பின் நமக்காக நாம் வாழ்வோம்' என்றான், பத்மன். அவன் கூறிவிட்டான். அது எந்த அளவிற்கு உண்மை என்று உணராதவளானாள், சாரதா. ஆனால், அவனுக்காக அவன் வாழும் நாளை எண்ணி இரு ஜீவன்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன என்பது மாத்திரம் உண்மை.


               தாயகத்திலிருப்போரே! அந்நியமண்ணில் பணங்கள் மரங்களிலிருந்து பறிக்கப்படுவதில்லை. உடலைக் கசக்கிப்பிழிந்து, மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்து கைளில் தவழ்கின்றன.


கருத்துகள் இல்லை:

சீர்கெட்ட வாழ்வு

                            நேரமோ 10. நித்திரையோ கண்ணைச் சுருட்டுகிறது. நாள் முழுவதும் வேலை செய்து வீடு வந்து ஓய்ந்து ஒரு பிடிச் சோ...