• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 25 ஏப்ரல், 2011

  எண்ணமும் வாழ்வும்                                              அது ஒரு வியத்தகு உலகம். ஆண்டவனின் அற்புதப் படைப்பு. இயற்கையே அதற்குத் தீனி போடும். அங்கு விருந்தாளிகளே மனிதர்கள். பூமியைப் போர்த்திவிட்ட பச்சை ஆடையில் விலங்குகளின் இராட்சியம். விருட்சங்கள் பரந்து விரிந்து விண்ணிலிருந்து ஆதவன் மண்ணைத் தடவத் தடை போட்டிருந்தன. விருட்சங்களை முத்தமிடும் மேகங்கள், விண்ணுக்குச்செய்தி சொல்ல விரைந்து கொண்டிருக்கும். கீச்சிடும் குருவிகளின் சங்கீதக் கச்சேரிக்குச் சல்லரி தட்டும் நீரருவிகள், கானகத் தெருவிற்கு வெள்ளைத் தெரு போட்டிருந்தன. மழையின் பின் விடுபட்டுக் கோடையின் மகிழ்ச்சிக் குதூகலிப்பில் தம்மை மறந்து பாடல் இசைத்துப் பறந்து கொண்டிருக்கும் அந்தப் பறவைகளைக் காணக் கானகம் நோக்கித் தொலைநோக்கியுடன் நாளும் வரும் விருந்தாளி, சிமோன்.
        சிமோனுக்குப் படைக்கப்படும் விருந்து காதினிக்கப் பாடும் பறவைகள். கண்குளிர அவை பறக்கும் காட்சிகள். கொதித்துக் கொண்டே வடிந்தோடும் பாலோடையின் அருகேதான் கச்சேரி கேட்க ஒதுங்குவான். அவனுக்கு வருமானம் நாட்டில். பிடிமானம் காட்டில். உழைக்கும் நேரம் தவிர அவன் உல்லாசம் காண்பது, இவ்வுலகில்தான். மலைகளில் ஏறிஏறி அவன் கால்கள் தேடுவதும், இப்பறவைகளைத்தான். உறங்கும் நேரம் கூட அவன் கட்டிக் கொண்ட படுப்பது, தலையணையல்ல. பறவைகள் பற்றிய புத்தகமே. அவனது நீண்ட கால்கள் நாரைக் கொக்கை நினைவுபடுத்தும். நீண்ட மூக்கு பறவைகளின் சொண்டுக்கு விளம்பரம் செய்யும். அமைதியாக அங்குமிங்கம் பார்த்துக் கொண்டிருந்து ஓரிரு வார்த்தைகள் பேசும் பாங்கு, பறவைகள் தலையைத்திருப்பித் திருப்பிப் பார்த்து இடையில் ஒரு தடவை கீச்சிடும் அந்தச் செயலைப் படம் பிடித்துக் காட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவன் கைவிரல்களும் கால்விரல்களும் மெல்லமெல்ல குவிவடைந்து வளைந்து பறவைகளின் பாதங்கள் போலவே மாறிக் கொண்டே வருகின்றன. உன் எண்ணத்திற்கு    நாளும் நீ என்ன தீனிபோடுகின்றாய்? என்று வினாவினேன். பறவை, பறவை, பறவை. அப்படி என்ன சுகம் அதில் காண்கின்றாய்? என்றேன். பார்ப்பது சுகம், அது பறப்பது சுகம் அதன் உருவம் சுகம், உணர்வு சுகம் என்று அவன் சுகங்களைச் சுவையொடு சொன்னான். அதனால் மெல்லமெல்ல அதுவாக மாறுகின்றான்.
                  மனிதனின் எண்ண அலைகளே அவனை ஆட்டிப்படைக்கின்றன. இது கண்கூடாக் கண்ட ஒரு அத்தாட்சி. எண்ணங்கள் பிற உயிர்களிடம் ஏதோ ஒரு தனிச்சக்தியாகப் பரவுகின்றன. அது காந்த சக்தி கொண்டது. மனோதத்துவ நிபணர்கள் கூற்றுப்படி உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகத்தான் மனிதன் இயங்குகின்றான். என்றும் சந்தோஷமான மனநிலையுடைய ஒருவன் முகம் செழிப்புடனும், கவலையுடனும் மனவருத்தத்துடனும் இருக்கும் ஒருவனின் தோற்றம் வாடிவதங்கிய செடிபோல் இருப்பதையும் கணுகூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. எமது எண்ணத்தின் படியேதான் வாழ்க்கை அமைகின்றது. எண்ணம் ஒருவனின் உடல் அமைப்பையே மாற்றும்போது உளஅமைப்பை மாற்றாமலா விடப்போகின்றது. பெண்வேடம் போட்ட அமெரிக்க நகைச்சுவை நடிகர், Philip Wilson இவ்வேடம் தன்னுடைய Personality ஐ மாற்றிவிடுவதாகக் கூறி அவ்வேடம் போடுவதையே  விட்டுவிட்டார்.                                                                                                                                                                                                                  
            எனவே  நாம் மனதில் எதை எண்ணுகின்றோமோ அப்படியே ஆகிவிடுகின்றோம். எண்ணமென்பது உயர்வானால், அது வாழ்வை உன்னதமாக உயரவைக்கும். நல்லதையே எண்ணுவோம் நல்லவராய் வாழ்வோம்.
  1 கருத்து:

  1. ""நாம் மனதில் எதை எண்ணுகின்றோமோ அப்படியே ஆகிவிடுகின்றோம். எண்ணமென்பது உயர்வானால், அது வாழ்வை உன்னதமாக உயரவைக்கும். நல்லதையே எண்ணுவோம் நல்லவராய் வாழ்வோம்.""
   நல்லவராய் வாழ்வோம். நானும் இதை முழுதாக ஏற்கிறேன்.
   Vetha.Elangathilakam.
   Denmark.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...