• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 11 மே, 2011

  என்னையே நானறியேன் (அங்கம் 3)


   

   உள்ளுரமொடு உற்றறிவது பெருத்தது
  கண்ணுறக்கமும் உடலயர்ச்சியும் வெறுத்தது
  பல்கலைகளும் பயில்பயிற்சியும் வளர்ந்தது
  நல்மதியுடன் மாணவர்களும் மகிழ்ந்தனர்
  ல்லறிஞர்கள் நாட்டுயர்வினர் நாடவே 
  பற்கலையுடன் விழாவொன்று நடந்தது
  விளையாட்டுடன் விருதுகளும் கிடைத்தன.  பிரமாண்டமான இவ்விழாக்களும் விளையாட்டுப்போட்டிகளும் நடந்தேறி சூழல்சுற்றங்களின் கண்களும் இக்கல்விச்சாலையிலே மொய்த்தன. அக்கல்விச்சாலையைத் தம்பக்கம் அபகரிக்கத் தமிழ்க்கல்வி நிறுவனம் போட்டா போட்டி போட்டது. மாணவர்களைத் தம்;பக்கம் இழுக்கவும், அவர் மனதை மாற்றவும், தம் கல்விச்சாலையுடன் வரதேவி வளர்த்தெடுத்த கல்விக்கோயிலை வலுக்கட்டாயமாக இணைக்கவும் பல கஷ்டங்களைக் கொடுத்தது. வரதேவி ஆத்மதொழிலுக்கு அடிக்கடி இடையூறுகள் தலையெடுக்கத் தொடங்க, ஆண்டுகள் கடந்தன. அன்புமகன் அடியெடுத்தான், எழுதுகோல் பிடித்தான், வரி தொடுத்தான். பாலர்பாடசாலை நோக்கி அவனது தினசரி வாழ்வு திருப்பம் கண்டது. அவள் தேடலறிவின் பார்வை, ஆணிவேராய் நம்பியிருந்த தன் குடும்பத்தலைவன் குணங்களின் குழறுபடியில் நோட்டம் கண்டது.

   நண்பர்கள் வருகையின் போது மாத்திரம் ஏதாவது சிற்றுணவாய்க் கடிக்கவும், குடிக்கவும் பயன்பட்ட பழக்கம் நாளுக்குநாள் உற்ற தோழனாய், உற்சாக பானமாய் உடலுள் சென்று தீவிர உணர்வுடன் தீவிரமாய்த் தொழிற்பட்டு அன்புக்கு விரோதியானது. நீரோடும் உடல் வேண்டும். நீரோடு வாழ வேண்டும். அந்நீரோடு மது சேர்ந்தோடினால், உளவோட்டம் நெருங்கிவிடும், உளநெருக்கடி கண்டுவிடும். 

  அன்று அளவுக்கு மீறிய குடிபோதையில் கத்தி எடுத்தான். கத்தி என்றால், வெட்டும் என்று அறிந்திருந்தும் தீட்டிய கத்தியில் கூர்பரிசோதனை செய்யத் துணிந்தான். 'விடுங்கோ! உங்களுக்கென்ன விசரே பிடிச்சிருக்கு.விடுங்கோ கத்தியை விடுங்கோ''. வரதேவி போராட்டமானது புனிதம் இழந்த அவன் போக்கால் தோல்வி கண்டது. தனது கையைக் கத்தியால் சீவி எடுத்தான். கையிலிருந்த வடிந்த
  இரத்தத்தைப் பார்த்து ஒரு கோரச்சிரிப்புச் சிரித்தான்.  5 விரல்களால் குருதியை அள்ளி எடுத்தான். வீட்டுச்சுவரிலே அச்சடித்தான். 

  விரல் ஓவியங்கள் குருதிக்கலவையில் விசித்திரமாய்த் தோன்றின. அவள் அசையவில்லை, கண்கள் இமைக்கவில்லை, விறைத்த பார்வையில் விடுபடவில்லை. முதலுதவி செய்ய முன்வரவில்லை. அவள் இரக்கமுள்ளவள், ஆனால்,  இரக்கமற்ற விலங்குகளிடம் அவ் இரக்கம் துடிப்படைய மாட்டாது. அவள் பாசமுள்ளவள். ஆனால், பண்பில்லாதவர்களிடம் அது அடிபணிய மாட்டாது. வெட்டியவனே கட்டுப் போட்டான். எப்படிப்பட்டவனானாலும் காயம் மாற்ற மருத்துவர்கள் தயங்காது தொழிற்படல் மருத்துவதர்மம் அல்லவா. அதனால், பிழைத்துப் போனான். நாளுக்குநாள் வீட்டில் பேயாட்டம். அடித்து நொறுக்கும் கண்ணாடிப் பாத்திரங்களே, நாளும் அவ்வீட்டில் ஒலிக்கும் இசைக்கச்சேரி. குருதிவாடையே அவ்வீட்;டின சாம்பிராணி; வாசனை. நான்கு சுவருக்குள்ளே 4 வயதுக் குழந்தையின் இதயம் உடைந்த போனது.  பயங்கர மிருகங்களிடையே அகப்பட்ட சின்னப் பூனை போல் உடல் நெளிந்து நெளிந்து ஒளிந்து வாழ்ந்தான் சின்னவன்.

  கணவன் மிருகமானால்,ஒதுங்கிப்பதுங்கி வாழும் ஒரு அப்பாவியாய் ஒரு பெண் வாழ வேண்டும். தீமையைத் தட்டிக் கேட்கும் தீவிரவாதியாகவோ அதட்டலுக்கோ மிரட்டலுக்கோ அடிபணியாத மனத் தைரியம் மிக்கவளாகவோ வாழ்ந்தால் அவள் வாழ்வு'குரங்கின்             கைப்பூமாலையே''  

                                            திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பார்களே. சொர்க்கம் கண்மூடிக் கொண்டு தான் மானுக்கு மதயானையை நிச்சயிக்குமோ. அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து அக்கினி வலம் வந்து மாங்கல்யம் அணிவிக்கின்றார்களே அது ஏன்? அம்மி போல் கல் மனம் கொண்ட ஆண்மகனும் உண்டு என்பதற்காகவோ! அருந்ததி காட்டகின்றார்களே, கற்புக்கரசியாய் கணவன் தவறுகளைக் கண்டு கொள்ளாதே என்பதற்காகவோ. அக்கினி வலம் வருகின்றார்களே, அது ஏன்? வாழ்க்கை என்னும் தீக்கு அருகே வந்துவிட்டாய். எட்டி அவதானமாய் நில். உன் வாழ்வை எரித்துவிடும் வல் அரக்கர்களும் இருக்கின்றார்கள் என்று அச்சுறுத்துவதற்காகவோ! இத்தனை சடங்குகளும் செய்து பத்துப் பொருத்தம் பார்த்து குடும்பமாய் இனமாய் நண்பர்களாய் சேர்ந்து குதூகலமாய் ஒரு கொடுமைக்குள் அல்லவா வரதேவி வாழ்க்கையைத் தள்ளிவிட்டார்கள். இந்த சாத்திர சம்பிரதாயங்கள் சொன்ன நற்பலன்கள் இங்கு எப்படித் தீப்பலன்கள் ஆயிற்று. இன்னும் உண்டு இதைவிட மேலும் உண்டு. பெண்களே கண்களைத் திறவுங்கள். வரதேவி வாழ்க்கைச் சரிதம் தரும் பாடம் அதுவரை இன்று நிறுத்தி அடுத்த அங்கத்தில் தொடர இருக்கின்றேன்.

  3 கருத்துகள்:

  1. வாசிக்க கொஞ்சம் வேதனையாக உள்ளது
   --

   பதிலளிநீக்கு
  2. வாசித்தேன் தீவிரமாகப் போகிறது..அடுத்தது எப்படியெனப் பார்ப்போம்....

   பதிலளிநீக்கு
  3. எப்படியெல்லாமோ உலகில் மனிதர்கள் வாழ்கின்றார்கள். நாம் அறிந்து சில அறியாது பல. ஆனால், அனைத்தும் வெளிச்சத்தக்கு வரவேண்டும். புலம்பெயர்வில் பல பெண்களின் பும்பல்கள் தொடர்கதையே.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...