என்னால் உள்வாங்கப்பட்ட இசையின் இரு சம்பவங்கள்


    Get this widget |     Track details  | eSnips Social DNA    

   
                      என்னால் உள்வாங்கப்பட்ட இசையின் இரு சம்பவங்கள்

இதயம் நுழைந்து உணர்வுகளை மீட்டி உடலுக்கும் உயிருக்கும் உற்சாகத்தை அள்ளி வழங்கும் உன்னதக்கலை இசை ஆகும். உலகம் முழுவதும் ஓசை மயம். அவ் ஓசைகள் ஒருமித்து ஒலிக்கையில் நாம், உன்னத இசையை ஊனக்கண்களாலாலும் காதுகளாலும் பார்த்தும் கேட்டும்; மகிழலாம். புல்லாங்குழலினுள் நுழையும் காற்று வெளிவரும் போது இசையாகப் பரிமளிக்கின்றது. எனவே ஓசையில் இன்பம் கண்ட மனிதன், தன் ஆசையில் கருவிகளை உருவாக்கி, அக்கருவிகளுக்கு நாமம் வழங்கி அக்கருவிகளின் ஓசைகளை இசையாக்கி இன்பங் கண்டான். அவ் இசைக்கருவிகளின் தனித்தன்மைக்கு இணை சேர்க்கக் கவி வடித்து இராகம் அமைத்து பாடலாக்கிப் பலரும் இரசிக்க பிரபலமாக்கினான். பாடலும் ராகமும் இசைக்கருவிகளின் இணைவும் இணைந்து ஒலிக்கும் ஓசைக்கு மனிதன் அடிமையானான். 
                             காலைவேளை நாளும் நான் காணும் காட்சி ஒன்றை, இன்று இவ்வேளையில் வெளிக் கொண்டு வருகின்றேன். நான் வேலைக்குச் செல்வதற்காய் பஸ்தரிப்பில் காத்திருக்கும் வேளையில், வாகனங்களின் ஓசையை செவிமடுத்து எனக்குள் ஒரு இசையை உருவாக்கிக் கொண்டு நிற்பேன். அவ்வேளை என்னருகே ஒரு இசைப்பிரியர் தன்னை மறந்து காதுக்குள் கருவி மாட்டி (Head Phone)  காலிரண்டும் ஆட்டம் போடத் தன் கீழுதட்டை மேற்பற்களால் கடித்துக் கொண்டு முணகியபடி நிற்பார். சுற்றவர என்ன நடக்கிறது என்ற எந்தவித எண்ணமும் அவரிடம் இல்லை. உணர்வுகள் அனைத்தும் அவர் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும் இசைக்குள் அடங்கிக் கிடக்கும். அவரருகே அவர் தாயார் சிரித்தபடி நிற்பார். தன் மகன்,  பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவரேயானாலும், இன்னல்கள் பல மத்தியில் வளர்த்தெடுக்கும் பிள்ளையேயானாலும் தன் பிள்ளையின் மகிழ்வில் இன்பம் கண்டபடி புன்சிரிப்புடன் பக்கத்தில் நிற்பாள். இவர்கள் காத்து நிற்பது, வலதுகுறைந்தோர் பாடசாலை பேரூந்துக்காக. அவர் முனகலே அவரது இசையாகும். அவர் வாயிலிருந்து வடிந்து கொண்டிருக்கும் எச்சிலே அவர் இசையில் இன்பம் கண்ட இனிப்பாகும். அந்த பேதலித்த புத்தியில்லா மனிதனுக்கு இவ் இசை எவ்வளவு இனிப்பை அள்ளி வழங்குகிறது என்று பார்த்தீர்களா? புத்தியுள்ள மனிதர்கள் தான் இசைக்கு அடிமையென எண்ணி நாம் இருத்தல் ஆகாது. உண்மையில் என்னை மறந்து அந்த இசைப்பிரியனின் செயற்பாட்டை நோக்கியபடியே நிற்பேன். இவ்வாறு இசையானது, நோயாளிக்கு மருந்து, இசைக் கலைஞர்களுக்கு உயிர், இசைப்பிரியர்களுக்குப் போதை. இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.
          இந்த இசையைப் புலம்பெயர்வில் கையாளும் இளந்தலைமுறையினரின் திறமையை எண்ணி நான் வியந்து போவதுண்டு. இங்கு வாழும் இளந்தலைமுறையினர் பேசுவதற்கு கடினப்படும் ஒரு மொழி தமிழ். இதில் ஆச்சரியப்படுவதற்கோ, கோபப்படுவதற்கோ யாதொன்றும் இல்லை. நாள்முழுவதும் பாடசாலை, வேலைத்தளங்கள், வியாபார ஸ்தாபனங்கள், என்று எங்கு பார்த்தாலும் வாழும் நாட்டுமொழியே ஒலித்துக் கொண்டிருக்கும் போது தாய்மொழிப் பயன்பாடு குறைந்து காணப்படல் உண்மையே. ஆயினும், இவ்வாறான சூழ்நிலையிலும் தாய்மொழி சினிமாப்பாடல்களை மனனம் செய்து இசைக்கருவிகளை நளினமாகக் கையாண்டு இசை வழங்குகின்றார்களேயானால், அவர்களைப் பாராட்டாமல் இருக்கமுடியுமா? அவர்களை வெளியுலகுக்குக் கொண்டு வராமல் இருக்கமுடியுமா? அன்று ஜேர்மனியில் வசிக்கும் இளங்குயில் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி ஒன்றைச் செவிநுழைக்கும் சந்தர்ப்பம் ஒன்றைப் பெற்றேன். எசன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்;கும் தமிழ்ப் பற்றாளர். இசைப்பற்றாளர், சமூகசிந்தனையாளர் நயினை விஜயன் அவர்களின் மேற்பார்வையின் கீழ், இளவட்டங்கள் இணைந்து உருவாக்கிய இசைக்குழுவே, இளங்குயில் இசைக்குழுவாகும். பாடகர்கள், இசைக்கலைஞர்கள் எசன் நகரிலும் வேறுவேறு பகுதிகளிலும் இருந்து ஒன்று சேருகின்றனர். இதில் இசை வழங்கும், பாடல் இசைக்கும் சின்னவர்கள் உற்சாகத்தையும் திறமையையும் வார்த்தைகளால் வடிக்க முடியாது. இந்தியத் திரைப்படங்களில் பாடப்பட்ட பாடல்களேயானாலும் இந்நாட்டு இளையவர்கள் முயற்சியில் வெளிவருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்றேயாகும். பாடல்கள் காதுகளில் நுழையும் போது எம்மை மறந்து விடுகின்றோம். 

                                                  
           இத்தனை திறமையும் கொட்டிக் கிடக்கும் இளையவர்கள் உண்டு துப்பிய எச்சிலைத்தான் பாடுகின்றார்கள் என்ற எண்ணம் பாடல்களைக் கேட்கும் போது விட்டுப் போகின்றது. ஆனாலும், அவர்கள் தனித்திறமைக்கு ஒரு சவாலாக சாதனை படைக்க நாம் ஊக்கம் கொடுத்தல் எமது கடமையாகின்றது. அதாவது திரைப்படப்பாடல்கள் ஒரு திரைப்படச்சூழ்நிலைக்காகப் (Situation) பாடப்படுகின்றது. யாரோ பாடி, யாரோ இசையமைத்து இந்தியாவில் வெளியான பாடல்களே திரைப்படப்பாடல்கள். இவற்றைத் திரும்பவும் எடுத்துப் பாடுவதில் இளங்குயில் இசைக்குழுவினருக்கு உள்ள உற்சாகமும் ஊக்கமுமானது மேலும் அதிகரித்து தாமாகவே இசையமைத்துப் புதுப் பாடலாய் படைத்து பலரும் சுவைக்கச் செய்ய வளரவேண்டும். அப்போது உலகறியும், மேலும் உலகு மெச்சும் கலைஞர்களாக இவர்கள் போற்றப்படுவார்கள். அதற்குரிய திறமையும் அவர்களுக்கு இருக்கின்றது என்பதை அறியக்கூடியதாக இருந்தது.  இதைவிட இசை வழங்கும் போது பலரும் சுவைக்கும் அளவில் இசையின் ஒலியை மட்டுப்படுத்த வேண்டியது பொறுப்பாளர்களின் கடமையாகும். இல்லையெனில், தரம் நிறைந்த இசையின் தரத்தை கேடபோர் தரம் குறைத்து எடைபோட்டுவிடுவார்கள் என்பதை மிகவும் அக்கறையுடன் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளேன்.   எவ்வளவு திறமை இருந்தாலும் அதைச் சரியான முறையில் கையாளாவிட்டால், அத்தனை திறமையும் இழந்துவிடும். காதுக்கு இனிமை கூட்டும் இசையே சிறப்பானது. காது வெடிக்கும் இசையை யார் கேட்பார். 
   இதைவிட புலம்பெயர்வில் கல்வி, வேலையென எத்தனை பல சுமைகளுக்கு மத்தியில் கலைஞர்கள் தமது படைப்பைப் பலரறிய வெளிக் கொண்டுவரும் போது அதனைக் கேட்போர் உற்சாகமாகக் கரங்களால் தாலாட்டாது, சோம்பி இருத்தலானது, அக்கலைஞர்களின் உற்சாகத்தைக் கீழிறங்கச் செய்யும் செயலாகும். எம்மவரிடமுள்ள பாரிய குறைபாடு என்னவென்றால், யாரெது செய்தாலும் புகழ்வதற்கு மனம் ஒவ்வாது. கரகோஷம் செய்து கலகலப்பாக்க உற்சாகம் இராது. செய்பவர்கள் செய்யட்டும் எமக்கென்ன என்று கண்ணெதிரே நடப்பவற்றைக் கண்டு கண்திறந்து தூங்கிக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறான உள்ளங்கள் திருந்த வேண்டும். திறமைசாலிகள் மேலும் வளர ஊக்கம் தரவேண்டும். வாழ்க இளங்குயில் இசைக்குழுவினர்.
  இவ்வாறு இசையின் வேறுபட்ட இரு சம்பவங்கள் என் பார்வையில் இங்கு படைக்கப்பட்டுள்ளன. நுகர்ந்தோம் தம் கருத்தைப் பலரறியத் தெரியப்படுத்தினால் நானும் இன்புறுவேன்.கருத்துகள்

Reverie இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் ஆதங்கம் புரிகிறது சகோதரி...திறமை மட்டும் போதாதில்லையா..இந்த வியாபார உலகில்...
வழக்கம் போல் நல்ல பதிவு... வாழ்த்துக்கள்...
Ramani இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் படைப்புகளின் அடி நாதம்
தாங்கள் தமிழ் மொழியில் கொண்டுள்ள பாண்டித்தியம்
அதை கையாளும் லாவகம்
தங்கள் குரல் வளம் இவைகளைக் கொண்டே
தாங்கள் உறுதியாக இசையின் பாலும்
தமிழ் மொழியின் பாலும் அதிக ஈடுபாடு
கொண்டவராகத்தான் இருப்பீர்கள் என
அனுமானித்தருந்தேன்
இந்தப் பதிவை முழுவதும் படித்தவுடன் கேட்டவுடன்
அது உறுதியானது
அதுமட்டுமல்ல பணிச் சூழலின் காரணமாக
நேரமின்மையையாலோ அல்லது பதிவுலகிற்கு இவ்வளவு போதும்
என்கிற எண்ணத்தாலோ தங்களின் முழுத் திறனை
வெளிக்கொணராது இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
உண்மையில் தங்கள் பதிவைத் தொடர்வதில்
மிக்க பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்
Rathnavel இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
சி.பி.செந்தில்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
குட் போஸ்ட் வித் ஒண்டர்ஃபுல் லே அவுட்
vetha.Elangathilakam. இவ்வாறு கூறியுள்ளார்…
இங்கு இசைக் குழுக்களிடையே உள்ள மாபெரும் குறைபாடு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நானும் இதை அனுபவ பூர்வமாக அனுபவித்து வேதனைப் படுவதுண்டு. இன்னும் இது தொடருகிறது. பின்னணி இசையை காது வெடிக்க வைத்து பாடுபவர் குரலை மழுங்கடித்து சபையிலிருந்து கேட்பவரின் வெறுப்பைச் சம்பாதிக்கும் செயல். எடுத்துக் கூறினாலும் செவி மடுப்பாரில்லை. என்று இவர்கள் திருந்துவாரோ என்றும் தெரியவில்லை.
இளங்குயில் இசைக்குழுவிற்கும் கௌரிக்கும் வாழ்த்துகள்.
Vetha. Elangathilakm.
http://www. kovaikkavi.wordpress.com
அப்பாதுரை இவ்வாறு கூறியுள்ளார்…
இசையை ரசிக்கின்றார், இசையின் உருவம் தெரிகின்றதா என்றார் கண்ணதாசன். இசைக்கு மொழி, சாதி, மதம் எனறு எந்தவித பேதமும் இல்லாததால் எளிதாக பரவ முடிகிறது. இசைக்கு வயதும் கிடையாது என்பதால் எட்டிலிருந்து எண்பது வரை பிடித்தமட்டில் பிடித்துக் கொள்கிறது. இசையின் தரம் என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது. எந்த இசையானாலும் ரசிக்க வேண்டுமென்பதில்லை. ரசித்த இசையைப் பாராட்டவும் ஊக்கம் தரவும் மறுப்பவர்கள் உண்மையில் செவிடர்கள். ரசிக்க முடியாத இசையை ஏளனம் செய்பவர்கள் குருடர்கள்.

சிந்தனையைத் தூண்டியப் பதிவு.
மாய உலகம் இவ்வாறு கூறியுள்ளார்…
இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவம் இல்லை...
இசை ஒரு மாபெரும் சக்தி...
சிவகுமாரன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆமாம் நானும் கவனித்திருக்கிறேன். வெளிநாட்டில் வாழும் சிலர் தமிழில் பாடச் செய்கிறார்கள். ஆனால் பேசத் தெரியவில்லை. அப்படி பார்த்தால் அழிந்து கொண்டிருக்கும் மொழியை இசை தான் இன்னும் சில காலத்திற்காவது எடுத்து செல்ல இருக்கிறது என்பது உண்மை
சிவகுமாரன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆமாம் நானும் கவனித்திருக்கிறேன். வெளிநாட்டில் வாழும் சிலர்தமிழில் பாடச் செய்கிறார்கள். ஆனால் பேசத் தெரியவில்லை. அப்படி பார்த்தால் அழிந்து கொண்டிருக்கும் மொழியை இசை தான் இன்னும் சில காலத்திற்காவது எடுத்து செல்ல இருக்கிறது என்பது உண்மை
nadaasiva இவ்வாறு கூறியுள்ளார்…
திறமைசாலிகள் மேலும் வளர ஊக்கம் தரவேண்டும். தாமாகவே இசையமைத்துப் புதுப் பாடலாய் படைத்து பலரும் சுவைக்கச் செய்ய வளரவேண்டும். அப்போது உலகறியும், மேலும் உலகு மெச்சும் கலைஞர்களாக இவர்கள் போற்றப்படுவார்கள். வாழ்க இளங்குயில் இசைக்குழுவினர்.
நல்லதொரு அறிவிப்பு, நன்றிகள் கௌசி !!
marimuthu mathivanan இவ்வாறு கூறியுள்ளார்…
Good n nice perception, best wishes from Mathivanan/Muscat-Oman
marimuthu mathivanan இவ்வாறு கூறியுள்ளார்…
Good and nice perception, best wishes from Mathivanan/Muscat-Oman

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்