வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

தூது போ மேகமே!


தூது போ மேகமே!


ஓடுகின்ற மேகமே! ஒருமுறைதான் கேளாயோ!
வாடுகின்ற மனதின் வார்த்தைகளைக் கேளாயோ!
நாடுவிட்டு நாடு சென்றநாயகனின் காதினிலே
நானுரைக்கும் செய்தியினை 
நாட்டமுடன் கூறாயோ!

நாளும் பகலும் கண்விழித்து 
நான் வளர்த்த மகவொன்று
தேன் இனிக்கப் பேசுவதை
வானிருந்து நீ கேட்டு
வாஞ்சையுடன் சொல்வாயோ!

கொஞ்சும் மொழி கூறுகையில்
வாஞ்சையுடன் தந்தை 
வந்தடையும் நாளதனை
நெஞ்சழுந்தக் கேட்கின்றாளெனக்
கொஞ்சம் நீ கூறாயோ!

பஞ்சணை சுகத்தினிலே
வஞ்சனை கலந்த சொல்
தஞ்சமாய்ப் போனதனால்
வஞ்சினான் இங்கு வாடுகின்றேனென
நெஞ்சுறைக்கக் கூறாயோ!

கடலளவு வாழ்க்கையிலே 
கடுகளவு என்னுள்ளம்
கலங்கி நிற்கும் செய்தியினை
நிலாமகளின் துணை கொண்டு
நீ உரைக்க மாட்டாயோ!

சுற்றத்தார் கண்களுக்கு
வற்றாத வாழவு காட்டி
முற்றத்து நிலாவுக்கு
முறையிட்டு நான் அழும் செய்தியினை
முறையாய் நீ உரைக்காயோ!

என் வீட்டு முற்றத்தில் - அவர்
விதைத்துச் சென்ற வார்த்தைகள்
விரியன் பாம்பாய் வந்து
வில்லங்கம் செய்கிறது
ஆசை வார்த்தைகளை 
அள்ளிவீசிய செயல்
ஆணி அடித்தது போல்
சுள்ளென்று தைக்கிறது
நல்லவன் என்றே நான்
நம்பியிருந்த எண்ணமெல்லாம்
நஞ்சாய் உடலைக் கொல்வதனால்,
கொந்தளிக்கும் மனதின்
கொப்பளங்கள் வெளிவரும் முன்
நல்லநாள் பார்க்காத 
நாள் ஒன்று தேர்ந்தெடுத்து 
நாரசமாய்ச் செய்தியொன்று
வாரக் கடைசியில் - உன்னை 
வந்து அடையுமென்று
சகலதுமாய்ச் சொல்லிவிடு

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

புரட்டாதிச் சனிவிரதம்


 
           
இவ்வருடம் புரட்டாதி மாதம் 24 ஆம் திகதி தொடங்கி புரட்டாதிச் சனிவிரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. கன்னிகாமாதம் என்று சொல்லப்படுகின்ற புரட்டாதி மாதத்திலே கன்னிகா விருட்சம் பரவியிருக்கின்ற தினம் புரட்டாதி மாத முதற்சனியாகும். இந்நாளிலேயே சூரியனுக்கும் அவர் மனைவி சாயாதேவிக்கும் மகனாகச் சனீஸ்வரன் தோன்றினார் என்பது ஐதீகம்.

             இச்சனிக்கிரகம் 9 கிரகங்களில் ஒன்று. இது சூரியகிரகத்திலிருந்து மிக எட்ட இருக்கின்ற ஒரு கிரகமாகும். தனக்கு மகன் பிறந்திருக்கின்ற செய்தி கேட்டு சூரியபகவான் மகனைப் பார்க்க ஆவலுடன் சென்றார். மகனைக் கண்ட மாத்திரத்தில் அவர் குஷ்டரோகியானார். இதனால் கோபம் கொண்ட சூரியனும் மகனாகிய சனீஸ்வரனைத் தூக்கிவீசினார். அவரும் தூரத்திலே முடங்கிவிட்டார். அதாவது முடவனாகி விட்டாராம். வேடிக்கையாக இருக்கின்றதல்லவா? இதுவும் புராணங்கள் கூறுகின்ற கதைதான். சூரியனுடைய தள்ளுவிசையினால் வீசப்பட்டிருக்கும் ஒரு கிரகமே சனிக்கிரகமாகும். சூரியனுக்கு அருகே எதுவுமே செல்ல முடியாது. அருகே சென்றால், செல்பவை தூக்கிவீசப்படும். ஒரு எல்லை தாண்டிப் போனால், உள்ளே இழுத்துவிடும். உறிஞ்சி இழுத்து வீசி எறியப்பட்ட ஒரு கிரகமே சனிக்கிரகமாக இருக்கலாம். இதற்கு இப்படி ஒரு கட்டுக்கதையா?
   
சனீஸ்வரன் கிரகங்களிலே பாபக்கிரகமாகக் கருதப்படுகின்றது. அக்கிரகத்திலிருந்து வீசப்படுகின்ற தீய கதிர்வீச்சானது, உடலிலே பல தீய தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இதனாலேயே பயபக்தியுடன் சனிக்கிரகத்தை சனீஸ்வரன் என்று அழைக்கின்றோம். இக்கதிர்கள் மூளைநரம்புகளைப் பாதிக்கின்றது. எண்ணங்களை மாற்றிவிடுகின்றது. இதனாலேயே சனிக்கிழமைகளில் (எள்எண்ணெய்) நல்லெண்ணெய் தேய்த்து சூரிய உதயத்தில் அரைமணி நேரம் நின்று குளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஜாதகத்தில் சந்திரராசிக்கு 1,2,5,8,12 ஆகிய இடங்களில் சனிபகவான் சஞ்சாரம் செய்கின்ற போது அந்தச் சனி பகவானுடைய கதிர்வீச்சு அதிகரிக்கும். இதனால், எள்எண்ணெயில் ஊறிய உடம்பு இக்கதிர்களைத்தாக்கவிடாது.

             கிரகதோஷம் ஒருவர் வாழ்நாளிலேயே ஒவ்வொரு 30 வருடத்திற்கும் ஒரு தடவை வருமாம். இத் தோஷம் உள்ளவர்களுக்குக்கு புத்திரபாக்கியம் குறைவு, மிருகபயம், மரணபயம், அதிகசெலவு, பணநஷ்டம், தேகசுகம்குறைவு, வீண்சச்சரவு போன்றவை நிகழும் எனப் பயம் காட்டப்பட்டுவிட்டது. மக்கள் மனதில் ஒரு நம்பிக்கையை எடுத்துக்காட்ட இவ்வாறு கூறப்படுகின்றது. மனமே எல்லாவற்றிற்கும் காரணமானது. கிரகக்கதிர்களினால், உடலும் அதனோடு இணைந்த மனமும் பாதிக்கப்படுபவர்களுக்கு மேற்கூறியவை நிகழச் சந்தர்ப்பம் இருக்கின்றது.  கிரகதோஷம் உள்ளவர்கள் சனீஸ்வரனுக்குரிய தானியமாகிய எள்ளைச் சிறிதளவில் எடுத்து, சனீஸ்வரனுக்குரிய நிறமாகிய கறுப்புத்துணியில் ஒரு பொட்டலமாக கட்டி, ஒரு மண்சுட்டியில் நல்லெண்ணை விட்டு அதற்குள் இந்த பொட்டலத்தை வைத்து எரித்தல் வேண்டும். எள் உணவை சனீஸ்வரன் வாகனமாகிய காகத்திற்குக் கொடுக்க வேண்டும். சனீஸ்வரனின் நிறம் கறுப்பாகக் கருதப்படுவதால், கறுப்புத்துணியில் கட்டப்பட வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. இக்காலங்களில் விரதம் இருந்தால் சனீஸ்வரன் மகிழ்ச்சியடைந்து இப்பாதகங்களைக் குறைப்பார் என்றும் கருதப்படுகின்றது. பெரியவர்கள் பால்,பழம் போன்றவையை உணவாக உட்கொள்ளலாம் என்றும் குழந்தை நோயாளிகள் இட்லி முதலிய எளிய உணவை உட்கொள்ளலாம் என்றும் சொல்கின்றார்கள். இட்லி எனப்படுவது எளிமையான உணவு என்பது கேள்விக்குறி.
           
                                                இவ்விரதம் விஷ்ணுகோயிலில் அநுஷ்டிக்கப்படுகின்றது. ஏனென்றால், புரட்டாதி மாதத்திலே சூரியன் கன்னிராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசியானது, புதனின் ஆட்சியின் உச்சவீடு. மகாவிஷ்ணுவே புதனாக அவதரித்தவர். எனவே விஷ்ணுகோயிலில் இவ்விரதம் அநுஷ்டிக்கப்படுகின்றது. என்று கூறுவர். ஆனால் சிவன் கோயிலிலும் இவ்விரதம் அநுஷ்டிக்கலாம். ஏனென்றால், சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவி கிடைக்க வேண்டுமென்று காசிக்குச் சென்று காசிவிஸ்வநாதரை வழிபட்டுப் பதவியைப் பெற்றதன் காரணத்தினால் சிவன் கோயில்களில் இவரை வழிபடுவது சிறந்தது என்றும் கூறப்படுகின்றது. விஷ்ணு ஆதிமூலம். இவரே அவதாரங்கள் எடுக்கக் கூடியவர். சூரியன் உட்பட கிரகங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முதல் இருந்த நிலையே ஆதிமூலநிலை. இந்தநிலையையே விஷ்ணுவாக உருவகித்திருக்கின்றார்கள். அவதாரம் என்றால், ஆதியிலிருந்த இரசாயண மூலக்கூறுகள் கீழே இறங்குதல். எனவே விஷ்ணு நிலையே அவதாரம் எடுக்கக் கூடிய நிலையாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிரபஞ்சமானது சிவனாக உருவகிக்கப்பட்டிருக்கின்றது என்பதை எனது திருநீலகண்டர் என்னும் கட்டுரையில் வாசித்திருப்பீர்கள். எனவே இந்தப் பிரபஞ்சமாகிய சிவன் கோயிலிலும் சனிக்கிரகம் இருக்கலாம் ஆதிமூலமாகிய விஷ்ணு கோயிலிலும் சனிக்கிரகம் இருக்கலாம் அல்லவா.

                                         சனிக்கிரகத்திலிருந்து வருகின்ற கதிர்கள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாயிருந்தால், எள்எண்ணெயை உடலிற்குப் பூசுகின்றோம். அது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால், அதை எரிப்பதன் அவசியம் தான் என்ன? என்ற வினா எழலாம். எள்ளானது எள்எண்ணெயில் எரிகின்ற போது அதன் தன்மை ஆவியாக வெளிவருகின்றதல்லவா? இதனை எமது மூளையிலுள்ள அமிக்டாலா  உணர்ந்து கொள்வதுடன் அதற்கேற்பத் தன்னுடலிலே மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

            புரட்டாதி மாதத்திலே குளிர்காலம் ஆரம்பித்துவிடுகின்றது. சூரியவெளிச்சம் குறைந்துவிடுகின்றது. பகல் குறைந்து இரவுப்பகுதி அதிகரித்தும் காணப்படுகின்றது. இதனால் தாவரங்கள் பச்சையம் தயாரிப்பது குறைந்துவிடுகின்றது . ஒட்சிசனை வெளியிடுவது குறைகின்றது. எள் உணவிலே arginin என்று சொல்லப்படுகின்ற அமினோவமிலம் இருக்கின்றது. இந்த அமினோவமிலம் சுவாசிக்கப்படுகின்ற ஒட்சிசனுடன் இணைந்து நைத்திரிக்கமிலத்தை உருவாக்குகின்றது. இந்த நைத்ரிக் அமிலம் அல்லது நைத்திரிக்மோனோ ஒக்சைட் இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்கின்றது. இரத்தக்குழாய்கள் விரிவடையும் போது உடலுக்குக் கொண்டுசெல்லப்படும் ஒட்சிசனின் அளவும் அதிகரிக்கின்றது. இதனால் இக்காலப்பகுதியில் ஒட்சிசனின் அளவு உடல் உறுப்புக்களுக்குச் சென்றடைய எள் உணவு உதவுகின்றது. இதைவிட இந்த எள்உணவானது இரத்தக்குழாய்களின் சுவர்களில் காணப்படுகின்ற மெல்லிய சுவர் போன்றிருக்கும் பகுதியையும் வலுவடையச் செய்கின்றது. எனவே எள் உணவு உண்பது இக்காலப்பகுதியில் மிகவும் அவசியப்படுகின்றது. 
            
                                  எனவே காரணமில்லாமல் இவை ஏற்படுத்தப்படவில்லை என்பது இவற்றின் மூலம் தெளிவாக்கப்படும் போது விரதம் காப்பாரும் விளக்கம் பெறுவர் எமது இளையசந்ததியினரும் இவைபற்றிப் புரிந்து கொள்வதுடன் பிறருக்கும் புரியச் செய்வர். 

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

மது அருந்திய மாது

                                                                         
    Get this widget |     Track details  | eSnips Social DNA    

அவள் அடக்கமாகத்தான் இருந்தாள், அவனின் ஆசைக்கு அடிபணிய மறுத்தபோது. அவள் கற்புக்கரசியாகவே இருந்தாள், கணவன் கட்டளைக்குக் கட்டுப்பட மறுத்தபோது. கணவன் என்ன கடவுளா? மனைவி கொள்கையைக் கலைத்து எறிய. மனத்திறம் இல்லா மங்கை மதித்திறம் மாயமாய்ப் போம். இந்த மதிவதனி கலங்கப்பட்டாள். கணவன் கைகழுவி விட்டான். காரணம் அவள் அவளாக இல்லாத காலப்பொழுது. 
  
                                     நண்பர்கள் கூடிக் குடித்துக் கும்மாளம் அடிக்க மதிவதனியை அவள் கணவன் கூடவே கூட்டுச் சேர்த்தான்;. வயிற்றைக் குமட்டும் வாடை, அவளைத் திக்குமுக்காட வைத்தது. அவள் மூக்கிற்கு அவள் விரல்கள் தடைபோட்டன, அவன் இன்பத்திற்கும் களியாட்டத்திற்கும் அவள் கைப்பொம்மை.

                                                    முதல்முதலாகத்தான் அருந்தினாள். தன்னை முழுவதுமாய் இழந்தாள். அந்த மது இரத்தநாளங்களில் தன் கைவண்ணத்தைக் காட்டியது அதை அருந்திய மாதுக்கு. உள்ளே சென்ற போதை, உலகமே சுற்றுவது போன்ற உபாதையை ஏற்படுத்தியது. தட்டுத்தடுமாறித் தன் படுக்கையில் வந்து விழுந்தாள். கணவனோ மது போதையில் வரவேற்பறைத் தரையில் மல்லாந்து கிடந்தான். கட்டிலில் கிடந்தவன் ஸ்பரிசம் அவள் உள் உணர்வுகளுக்குத் தூபம் போட்டது. தன்னை மறந்தாள், தன் மானம் கெட்டாள், தன் கணவன் தோழன் போதையில் தனை இழந்தாள் நங்கை. கணவன் கண்கள் படம் பிடித்த காட்சியின் சாட்சியால், கணவனால் கைவிடப்பட்டாள். காரணமானவனோ கைவிரித்தான். 

இன்று மதிவதனி மதி இழந்த காரணத்தால் கலங்கப் பட்டஞ்சுமந்த பாவையானாள்.
                  
                              இவை அனைத்தும் ஏன்? ஐரோப்பிய வாழ்வில் அறிவுக்கு ஆயிரம் இருக்க, இந்த அசிங்கமான வாழ்க்கை முறைக்குத்தம்மை அடிமைகளாக்குவதற்கோ விமானம் ஏறி இங்கே எம்மினம் வந்தடைந்தது. பெண்தவறி விழுந்தாலோ, தள்ளி விழுத்தப்பட்டாலோ பழிபாவங்கள் அனைத்தையும் அவளே சுமக்கவேண்டியவளாகின்றாள். தொல்பழங்காலத்தில் வரன்முறையற்ற உறவு இருந்திருக்கலாம். விலங்குகளைப் பார்த்து பழகிய மாந்தரினம் அவற்றைப் போல வாழ்ந்திருக்கலாம். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக பண்பட்ட கலாச்சாரத்தில் சீர்பெற்றுச் சிறப்புப் பெற்று வாழும் இனம் தமிழ் இனம். இன்றும் ஐரோப்பியரால் போற்றிப் புகழப்படும் ஒரு கலாச்சாரம் எம்முடையது. அதைக் கலங்கப்படுத்தவே இவ்வாhறான காடடுமிராண்டிகள் புல்லுருவிகளாய்ப் புறப்பட்டுப் புகலிடத்தில் நமது புனிதத்தைப் புதைக்கின்றார்கள்.

பெண்ணினமே! நீ என்றும் உன் மதித்திறத்தை, மனத்திறத்தை இழந்து விடாதே.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

மாற்றங்கள்கல்லுங் கத்தியாய் வாளும் வான்குண்டாய்
மனிதன் கண்டது மாற்றம்
நடையாய் நடந்தின்று நாடு கடந்து
படையாய் தொடர்வது பறக்கும் மாற்றம்
மாற்றங்கள் தொடர்கிறது உலகில் - மனிதன்
மனமாற்றம் அடையத் துடித்தாலும்
அழியவில்லை ஆரம்ப ஆச்சாரம்
துடிப்புடன் சொல்பவரும் சொந்தத்தில் மாற்றமில்லை
எடுப்புடன் வருபவரும் பழைமையை எடுத்தெறிய மனமில்லை
மாற்றங்கள் காண வேண்டும் - ஐயோ
மாற்றங்கள் காண வேண்டும் யாம்
புத்தி சொல்லப் போபவரை புரிந்துணர வேண்டும் - பழம்
புத்தியைக் கத்திபோல் வெட்ட வேண்டும்
பூவாய் மணக்க வேண்டும் மாற்றம்
இசையாய் இனிக்க வேண்டும் மாற்றம்
இல்லத்தில் இருந்து உள்ளப் படுக்கையில்
உறைய வேண்டும் மன மாற்றம்
நல்லதைத் தேடி நாம் வாழப் பழக வேண்டும்
செல்லும் இடமெல்லாம் சிந்தனை தேடவேண்டும்
நாலுபேரோடு நாமும் பழகி நல்லவராய் நாம் வாழ
மாற்றங்கள் காண வேண்டும் - ஐயோ
மாற்றங்கள் காண வேண்டும் யாம்இக் கவிதை முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

நேயராற்றுப்படை


                                 
                                       

ஆற்றுப்படை :

               வறுமை காரணமாக ஒரு மன்னனிடம் பாடல்கள் பாடி பரிசில்கள் பெற்று வரும் புலவர், திரும்பி வரும் வழியிலே காணுகின்ற புலவர்களிடம் அம்மன்னன் பெருமைகள் கூறி, அம்மன்னனைச் சென்றடையும் வழியினையும் தெரியப்படுத்துவதாய் ஆற்றுப்படை நூல்கள் அமைகின்றன. திருமுருகாற்றுப்படையானது இவ்வண்ணமே முருகனிடம் முத்திபெற்ற பக்தன் வேறு ஒரு பக்தனுக்கு முத்திக்குரிய வழிமுறைகளைக்கூறி ஆற்றுப்படுத்துவதாக அமைகின்றது. அதாவது வழிப்படுத்தவதாக அமைகின்றது.

இவ்வண்ணமே இலண்டன் தமிழ் வானொலியில் பலன் பெற்ற ஒருநேயர், தமிழ் அறிவின்றித் தமிழ் அறிவைப் பெற அவாவுற்றிருக்கும் ஒருவருக்கு அவ்வானொலியை ஆற்றுப்படுத்துவதாய் இவ் நேயராற்றுப்படை அமைகின்றது

            வானொலி வருகை 

   கார்இருள் பருகி அகல் விசும்பைப் பகலாக்கி 
   பார் எங்கும் விரிகதிர் பரப்பி
   பரிதி பவனி வரும் பகல் பொழுதில் 
   தமிழ் பிறந்தன்ன, கலைபிறந்தன்ன 
   மங்கல இசை மகிழ்ந்து வரவேற்று 
   மனை மங்கலம் காண்பதன்ன ஒலிபரப்பும் 
   இலண்டன் தமிழ்வானொலி நாளும் வலம் வரும் 

            நேயரது வறுமை 

   ஓண்கடல் தாண்டி உறவுகள் துறந்து 
   நிம்மதிதனைக் காண நெடும்பயணம் செய்து 
   அந்நிய நாட்டில் அல்லலுறும் தாய்மொழி மறந்து 
   தவிக்கின்ற செல்வங்கள் தமிழ்மொழித் திறன்காண
   வழி தெரியாத் தமிழர்களே!!!  

          அறிவுபெற்ற நேயர் அதன்திறன் கூறல் 


   இன்தமிழைச் சுவைப்போமாளூ இனியஇசை கேட்போமா,
   எம்சிறார் எதிர்காலம் தமிழின்றித் தொடருமாவெனப் 
   பாலையாய் வற்றிய நெஞ்சுக்குப் பாலூற்றும் 
   பார் போற்றும் வானொலி பணியாற்றிப் பலன்தர 
   பேர் பெற்று வாழ்கிறார் எம்மவர்,  எம்சிறார் 
   கேளீர்! அதன் வளத்தைப் பெறுவீராக! 
   

           வானொலியை அடையும் வழி 


   இங்கிலாந்து நாட்டில் ஈஸ்ற்கேம் நகரில் 
   இலங்கு புகழ் இலண்டன் தமிழ் வானொலி
   இருந்து பணிபுரிய செய்மதி இழுத்துவரும் 
   கொட்ற்பேர்ட்டில் பதினோராயிரத்துப் பன்னிரெண்டைத் 
   தொட்டிழுத்தால் தொடரும் உங்கள் மனம் நோக்கி
   மின்னஞ்சல் மறுவடிவம் மிதமாய் தோன்றிடும்

           நேயர்கள் வாழ்த்து 

   நேயர்குழாம் நெஞ்சால் இணைந்த குழாம்
   அடியெடுக்கும் அன்புச்செல்வம் அனைவரையும் 
   அன்புடனே வாழ்த்தி வளர்த்தெடுத்து
   இன்பங் காண்பார்.

         அதிபர் பெருமை

   அடுத்த தலைமுறை நோக்கி எடுத்த
   இலட்சியப்பயணம் கொண்ட இரசாயணப்பொருள் - அவர்
   இரும்புக் கவியையும் பொன் கவியாக்குவார்
   புல்லையும் ஆயுதமாய் புதுப்பிப்பார்
   முனகலையும் இராகமாக்கும் முனைவர்
   கல்லையும் சிற்பமாக்கும் கலைஞன்
   ஓட்டுக்குள் தலைமறைக்கும் ஆமைபோல் 
   ஒளித்திருக்கும் திறமைகளை வெளிக் கொணர்வார் – உங்கள்
   தமிழ் வறுமையையும் போக்குவார்
   தயங்காது களம் புகுவீர்  

                         
 இலண்டன்தமிழ் வானொலியில் 14.12.06 அன்று என்னால் எழுதி வாசிக்கப்பட்டது.
   
                                         

வியாழன், 1 செப்டம்பர், 2011

என் வாசகங்கள்


                     நன்றி நவிலல்

    நன்றிநவில விதிமுறை இல்லை
    நாவின் முனைப்பில் நடைமுறைப்படுத்தப்;படும்.


   வலிந்து கேட்பதன்று நன்றி 
    நன்றி பெற்றார் மனத்தின்கண்
    விரும்பிக்கொடுப்பது.


    நன்றிநவில சிந்திப்பதில்லை நாநுனி
    நவிலத் துடிப்போடு வெளிப்படும்.
    
                          

                            உயர்ந்தோர் உள்ளம் 


     பெருக்கத்துப் பணிவும் தாழ்வுவரின் தளராமையும்
    உயர்ந்தோர் உள்ளத்தின் பண்பாகும். 


   அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தோர் உயர்ந்தோராகார்
    உள்ளத்தால் உயர்ந்தோர் உயர்ந்தோராவார்.


    மனிதரில் தரம் பார்க்காது குணம் சேர்க்கும் 
    உயர்ந்தோர் உள்ளம்.
     
                                 
                                   
                             பொறாமை 

புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது 
புகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள் 
புகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.


பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே
அவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும். 

                                              

                                  சந்தேகம் 

சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது
சந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும். 

                                       

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...