• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 20 டிசம்பர், 2011

  கட்டிடமும் வாழ்வியலும்
       
               
  42 வருட காலமாக ஜேர்மனியிலுள்ள சோலிங்கன் நகருக்கு அழகு சேர்த்து, வருமானத்தை அள்ளித் தந்து, தலைநிமிர்ந்து கம்பீரமாக காண்போர் கண்களுக்கு விருந்தளித்து, நெடிதுயர்ந்த தோற்றமாக 68 மீற்றர் உயரமாகக் காட்சியளித்த Turm Hotel  என்று அழைக்கப்பட்ட நான் இன்று சோபையிழந்து என் மேனியினுள் அணுகுண்டை அடக்கி வைத்து வெடிக்க வைத்து இரண்டு செக்கனில் தரைமட்டமாக தரையிலே விழுத்தப்பட்டுக் கிடக்கின்றேன். 18.12.2011 என் வாழ்வின் முடிவுகாலம். எத்தனை நாட்டவர் என் மேனியில் தவழ்ந்து விளையாடினர். தமது வியாபாரக் கணக்கை அள்ளிக் கட்டினர், உல்லாசமாக உறங்கி எழுந்தனர்.  நான் வெறும் கட்டிடமே ஆனாலும், என்னில் துள்ளிக்குதித்த எத்தனையோ குழந்தைகள் இன்று வயோதிபராக என் அழிவைக் காண படையெடுத்து நின்ற கோலத்தைக் காணுகின்றேன். 40 ஆயிரம் மக்கள் என் வீழ்ச்சியின் இரம்மியத்தைக் காண திரண்டிருப்பதாகக் கணக்கீடு சொல்கிறது. என் அந்திமக் கிரியைக்கு இத்தனை கூட்டமா! என் மரணத்திற்கு இவ்வளவு சனக்கூட்டமா! ஆச்சரியம்! 


                       நான் இருந்த போதும் அழகுதான் இறக்கும் போதும் என் காட்சி அழகுதான் என்று என்னில் விருப்புக் கொண்ட ஒருவர் கண்ணீர் மல்கக் கூறியதைக் கேட்ட போது இந்நிலையிலும் நான் மகிழ்ச்சியடைகின்றேன். வெள்ளைக்காரர் கல் நெஞ்சக்காரர் என்று பல வெளிநாட்டவர்கள் கூறுவதைக் கேட்டிருக்கின்றேன். ஒரு கட்டிடமாகிய என் இழப்புக்குக் கண்கலங்கியவர்களைக் காணும் போது என் கல் உள்ளமே கலங்குகிறது. குற்றுயிராய்த் தரையில் கிடக்கும் என்னைப் பல திக்கிலும் நின்று படம் எடுக்கின்றனர். பார்த்து ரசிக்கின்றனர். 


                        படைக்கப்பட்ட அனைத்திற்கும் அழிவு இருக்கின்றது. ஒவ்வொரு இழப்புக்கும் ஈடு செய்ய ஒன்று தோன்றிவிடும். அந்தவகையில் என் இழப்பை ஈடு செய்ய 29,000 சதுரமீற்றர் பரப்பில்  அதிநவீன கட்டிடம் ஒன்று இங்கு வந்து அமரப் போகின்றது என்பதைப் பலர் பேச நான் கேட்டேன். அன்றிலிருந்து என் உள்ளத்தில் அழிவின் அச்சம் புகுந்து கொண்டது.             கல்லாலும் மண்ணாலும் சீமெந்தினாலும் இரும்பு கம்பிகளினாலும் என் உருவத்தை உருவாக்கினார்கள். எலும்பாலும் தசையாலும் நீராலும் குருதியாலும் மனித உடல் உருப்பெறுகின்றது. எனக்குள்ளே அறைகளும் சாளரங்களும் கதவுகளும் கூரையும் படிகளும் என அங்கங்களாக, மனிதர்களும் மூளையும் முள்ளந்தண்டும் கைகளால் உறுப்புக்களும் பல்வித இயந்திரங்களும் தாங்கி உலகில் நடமாடுகின்றார்கள். நான் ஓரிடத்தில் நின்று நிமிர்ந்திருக்க மனிதர்களோ ஓடியோடி உழைத்து நிமிர்ந்து நிற்கின்றனர். கதவைத் திறந்து சாளரத்தைத் திறந்து காற்றை நான் உள்ளெடுக்கின்றேன். மனிதர்களோ நாசியினூடு காற்றை உள்ளெடுத்து வெளியிடுகின்றார்கள்.  ஒவ்வொரு தூண்களும் என்னைத் தாங்கி நிற்பதுபோல் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் அக்குடும்பத்தைத் தாங்கி நிற்கின்றார்கள். தாய்,தந்தை, பிள்ளைகள் தத்தம் பணியை சரிவர அழகுறச் செய்யும்போதே அக்குடும்பம் சிறந்த குடும்பமாகத் திகழமுடியும். இல்லையெனில் சீரழிந்த குடும்பமாக உலகுக்கே எச்சரிக்கையாக அமைந்துவிடும். என் உடலுக்கு அழகுசெய்ய வண்ணக்கலவைகளினால் மேல்ப்பூச்சிடுகின்றார்கள். மனிதர்களைப் பார்க்கின்றேன். தோலால் போற்றித் தம் அவயவங்களை மறைத்து அழகாய் நடமாடுகின்றார்கள். 

               என் அடித்தளம் சரியான முறையில் அமைக்கப்பட்டிருந்ததனாலேயே இத்தனை காலமும் இயற்கைத் தாக்கங்கள் எல்லாவற்றையும் தாங்கி இன்றுவரை எந்தவித பழுதுமின்றி வாழ்ந்து வந்தேன்.  இடையிடையே எனக்கு அழகுச் சத்திரசிகிச்சைகள் செய்து அழகு பார்த்தார்கள். அப்போது என்னைப் பார்த்து நானே பெருமிதம் கொண்டிருந்தேன். தேவை என்று வரும்போது என் தேவை குறைந்து என்னால் எந்தவித பயனும் இல்லை என்று கருதும்போது என்னை அகற்ற மனிதர்கள் எடுக்கும் முயற்சிக்;கு தலைசாய்க்கின்றேன். பயனில்லை என்று கருதும்போது இடைஞ்சலாக நாம் ஏன் இருக்க வேண்டும். மனிதர்கள் கூட சரியான அடித்தளம் இல்லையென்றால் வழி தவறிப் போகின்றார்கள். பெற்றோரின் சரியான வளர்ப்பு முறையில் வளருகின்ற பிள்ளைகளே. சமுதாயத்தில் நின்று நிலைக்கின்றார்கள். உடலளவில் கூட உறுதியான சத்தான உணவுகளை உட்கொள்ளும்போதுதான் எதிர்காலத்தில் நோய்நொடியற்ற வாழ்வைப் பெற முடியும். இல்லையென்றால் நோய்வாய்ப்பட்டு இறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இல்லையெனில் நோயினால் துயருறும் நிலை கண்டு பொறுக்காத மனிதர் என்னை அழித்ததுபோல் ஊசிமருந்தைச் செலுத்தி உடலிலிருந்து உயிரை அகற்றிவிடுவார்கள். என் இழப்பை ஈடுசெய்ய இன்னுமொரு கட்டிடம் வந்துவிடும். அதேபோல் ஒருவர் இழப்பை ஈடுசெய்ய இன்னுமொருவர் மனிதர்களுக்கு வராமலா போவார்கள். தாயை இழந்த பிள்ளைக்கு அந்தத் தாய் இல்லையென்றாலும் அதே அன்பு கிடைக்காது விட்டாலும் ஏதோ ஒரு ஆதரவு கிடைத்தே ஆகும். இழப்பை எண்ணி ஏங்கிக் கிடப்பதை விட அந்த இழப்பை ஈடு செய்யும் வழிவகைகளையும் தேடிக்கொள்ள வேண்டும். இன்று நான் சமாதியாகிவிடுகின்றேன். என் அடித்தள மண் பின்தோன்றும் நவீன கட்டிடக் குழந்தைக்குப் பயன்படட்டும். உயிர்வாழ்ந்த போது மனிதர்கள் செய்கின்ற நற்காரியங்களும், நல்லுரைகள், நற்பணிகளும் எதிர்கால சந்ததிகளுக்கு நல் உரமாகப் பதியட்டும். 


  http://www.youtube.com/watch?v=TkTly8_Uf50&feature=related  10 கருத்துகள்:

  1. thanks.
   wonderful reflections on architecture and its impact in society.

   pondicherry shiva.

   பதிலளிநீக்கு
  2. கட்டிடங்களிற்கும் உணர்சிகள் இருக்கின்றன.. மெல்லிய இழையினூடு அவை எங்களுடன் இனைக்க பட்டிருப்பது போன்ற்றிருக்கிறது உங்கள் பதிவு...

   பதிலளிநீக்கு
  3. கட்டிடம் தன் வரலாறு கூறுதல் போல
   அழகாக அமைத்து இருக்கிறீர்கள். அங்கே
   Turm Hotel கட்டிடத்தில் உன்னதமும்
   கண்கூடாக தெரிகிறது.

   ///என் உடலுக்கு அழகுசெய்ய வண்ணக்கலவைகளினால் மேல்ப்பூச்சிடுகின்றார்கள். மனிதர்களைப் பார்க்கின்றேன். தோலால் போற்றித் தம் அவயவங்களை மறைத்து அழகாய் நடமாடுகின்றார்கள். ////

   தோலை மட்டும் அழகாக்கி
   உள்ளம் புரையோடிப் போயிருக்கும்
   மனிதர்கள் வாழும் காலமிது.
   அதைக் கட்டடத்தின் வார்த்தைகளால்
   அழகாகச் சொல்லிவிட்டீர்கள் சகோதரி.

   பதிலளிநீக்கு
  4. என் அந்திமக் கிரியைக்கு இத்தனை கூட்டமா! என் மரணத்திற்கு இவ்வளவு சனக்கூட்டமா! ஆச்சரியம்!

   வாழ்வியலோடு குழைத்து அளித்த கனமான ஆக்கம்!

   பதிலளிநீக்கு
  5. கட்ட்டிடத்தில் தொடங்கி இறுதியில் மனிதவாழ்வை அதனுடன் ஒப்பிட்டு சுவாரசியமாக நல்லதொரு செய்தியை சொல்லியிருக்கிறியள். கௌசி வாழ்த்துக்கள்.

   பதிலளிநீக்கு
  6. //என் உடலுக்கு அழகுசெய்ய வண்ணக்கலவைகளினால் மேல்ப்பூச்சிடுகின்றார்கள். மனிதர்களைப் பார்க்கின்றேன். //

   பேச முடியாத கட்டடத்தை பேச வைத்துள்ள அழகிய பதிவு தான். பாராட்டுக்கள். vgk

   பதிலளிநீக்கு
  7. வை.கோபாலகிருஷ்ணன்,Rathnavel ,அம்பலத்தார்,இராஜராஜேஸ்வரி ,மகேந்திரன் ,சாய் பிரசாத் ,pondicherry shiva.

   தளம் வந்து பின்னூட்டம் இட்ட உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

   பதிலளிநீக்கு
  8. நட்ட கல்லும் பேசுமோ ?
   தங்களைப் போன்று ஜடத்தினுள்ளும்
   துடிக்கும் ஆன்மா குறித்து அறிந்து தெளிந்து
   ஒரு அருமையான வாழ்வியலோடு இயந்த
   படைப்பைத் தரக் கூடிய தங்களைப் போன்றவர்களின்
   படைப்பில் நட்ட கல் என்ன
   கல்லும் மண்ணும் கூட மனம் திறந்து
   மகிழ்வாய் நிச்சய்ம் பேசும்
   மனம் கவர்ந்த் அருமையான பதிவு
   தொடர வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  9. Ramani சொன்னது//


   உலகப் படைப்பு அனைத்தினுள்ளும் ஜீவனைப் பார்க்கின்றேன். சிந்தனையை அதனுள் சேர்க்கும்போது அற்புதமாக எனக்குத் தெரிகின்றது. உங்கள் ஆத்மார்த்தமான பின்னூட்டமே எழுத்துலகுக்கு ஒரு வரப்பிரசாதம் மிக்க நன்றி

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  திருமதி வந்தது எப்படி

  ஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம் தான். இதைச் சொல்வது ஆண்களுடைய வாயாக இருந்தாலும் மனதளவில் பெண் ஆண் என்ற வேறுபாடு எம்முடைய...