• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 31 ஜனவரி, 2012

  பொறுமையின் கனிவு அங்கம் 2


   
             


  முடிவாக எதைத்தான் பரிசோதனை செய்வோம். இந்த இரகுவின் இரத்த அழுத்தத்தின் மேலோட்டம் கீழிறங்க வழிதான் யாது?  இறுதிப் பரிசோதனை சிறுநீரகப்பரிசோதனை. முயற்சி நமது கையில் முடிவு இரகுவின் உடலில். மருத்துவர்கள் ஆலோசனையின் பெயரில் சிறுநீரகப் பரிசோதனைக்காய் வேறு மருத்துவமனை அவனைத் தத்தெடுத்தது. தகுந்த பரிசோதனைகளின் பின் முடிவும் கண்டறிந்தது. ரகுவின் இரண்டு சிறுநீர்த் தொழிற்பாட்டு நிலையங்களும் 25 வீதமே தொழிற்படுகின்றன. இப்போது கவிதா கண்களில் கண்ணீர்த் தேங்கி கட்டுப்பட்டாயிற்று. 

          அளவுக்கு மிஞ்சினால் இன்பம் தரும் மதுபானம் வாந்தியாய் வெளியேறிவிடும். தித்திக்கும் இனிப்புச் சக்கரை, வியாதியை அன்புடன் பரிசளிக்கும். இன்பத்தின் மறுபகுதி துன்பம் அல்லவா. முதுகுதான் வெளித் தோற்றம் இடுப்பில் மறைந்திருக்கும் இடது, வலது சிறுநீரகங்களின் வடிவமும் தொழிலும் வெளித்தோற்றத்தில் யாரறிவார். குருதியில் குணம் தரும் சத்துக்களும் உண்டு, கழிவுகளும் கூடவே உண்டு. நாளொன்றுக்கு 350 தடவைகள் சிறுநீரகத்தினூடாகப் பயணம் செய்யும் வேகக் குருதியைச் சுத்தமாக்கி அனுப்பிக் கொண்டிருக்கும் தொழிற்சாலையே இந்தச் சிறுநீரகம். 
                
           உடலுக்குத் தேவையான புரதத்தை இரத்தம் எடுத்துச் செல்கிறது. செல்கள் புரதத்தைப் பயன்படுத்தியது போக மிஞ்சிய கழிவுகள் நைட்ரஜன் அடங்கிய யூரியாவாக மாறும். இவை இரத்தத்திலே மீண்டும் கலந்துவிட்டால், உயிர் உடலைவிட்டு விடை பெற்றுவிடும். அதனால், இந்த யூரியாவை இரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்து சிறுநீராக கழிவான வெளியகற்றுகின்ற பாரிய பணியை சிறுநீரகம் செய்கின்றது. இது நல்லவற்றை உடல் ஏற்கத் தீயவற்றை வெளியகற்றும் சுத்தீகரிப்புத் தொழிலாளி. வாழும் நாள் வரை இரவுபகலின்றி நமக்காய் உழைக்கும் தியாகி. அவர் உழைப்புத் தொய்வு கண்டுவிட்டால், அழுக்கனைத்தும் இரத்தத்துடன் இணைந்து இழுக்கடைந்த உடலாகும். இந்நிலைக்குத் தள்ளப்பட்டான் ரகு.

              நமது இதயத்திலிருந்து இரத்தம் தமணிகளின் வழியாக நெப்ரானை வந்தடைகின்றது. இங்கு இரத்தத்தின் திரவப்பகுதிகளான பிளாஸ்மோ, குளுக்கோஸ், அமினோஅமிலங்கள், பொட்டாசியம், குளோரைட் போன்றவை வடிகட்டப்படுகிறது எஞ்சிய இரத்தம், நெப்ரானிலுள்ள குளோமெருலஸ் குழாய்ப் பகுதியை வந்தடைகின்றது. இங்கு போடோசைஸ் செல்கள் வடிகட்டியாகச் செயல்படுகின்றன. இங்கு இரசயான மாற்றங்களுக்கு உட்பட்ட இரத்தம் டுயூபிள் என்னும் நுண்குழாய்களை வந்தடைகின்றது.  இங்கு உடலுக்குத் தேவையான சத்துக்களாகிய சோடியம், பொஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவற்றின் சரியான அளவுகள் கணக்கெடுக்கப்பட வேண்டும். இத்தொழிலைச் சிறுநீரகம் மிகக் கண்ணியத்துடன் செய்கின்றது. இந்த அளவில் குறைவு காணப்பட்டால் மீண்டும் அவற்றை இரத்தத்தில் கலக்கச் செய்யும் பணியையும் தலைமேற் கொண்டு செய்கின்றது. 
                    
                  இரகுவுக்கு நோய் இதுவே என்று ஊர்ஜிதமாகிவிட வைத்தியர்கள் துரிதமானார்கள். ஜேர்மனிய வைத்தியத்தை உலகமே அறியும். மனிதனைப் பார்த்தே பணத்தைப் பார்க்கும் மனிதத்தன்மை படைத்தவர்கள். பணமில்லாத காரணத்தினால் நோயாளிகளைத் தவிக்கவிட்ட வைத்தியர்களை எத்தனையோ தமிழ்ப் படங்களில் பார்த்திருக்கின்றேன். பண வசதி குறைந்தவர்களுக்குக் கூட அனைத்து மருத்துவ வசதிகளையும் பெறக்கூடியது வாழ்வளிக்கும் நாடு. இந்த வகையிலே இரகுவின் கையின் தோலைக் கிழித்து ஒரு செயற்கை இயந்திரம் நிரந்தரமாய்ப் பொருத்தப்பட்டது. அதனூடக இரத்தம் சுத்தீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். நாடிக்குள்ளால் குருதி வெளியேறும் போது நாளத்தினூடாகப் புதிய குருதி செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். ரகுவின் உடலும் துரும்பானது. உற்றார் உறவினர் துணையிழந்தான். கூடிவந்த உறவுகள் அவனை நாடவில்லை இப்போது சிறுநீரக தானம் வழங்க யாரும் முன் வரவில்லை. யாரால் தான் இம்முடிவு எடுக்க முடியும். முடிந்தவர் இரத்தம் கூட ரகு உடலுக்கும் பொருந்த வேண்டுமே. அப்போதுதானே அவனுடலும் அந்நியனாய் இவ்வுறுப்பை எண்ணாது. ஒன்றுடன் வாழ்ந்து விடலாம், ஆனால், அந்த ஒன்றுக்கு ஏதும் பங்கம் விளைந்து விட்டால்!!!! தம்பதிகள் இருவரும் தவியாய்த் தவித்தனர்.

                        உலகத்தில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் ஒரு சிறுநீரகத்துடன் வாழ்கின்றார்கள். 3 சிறுநீரகத்துடனும் பலர் படைக்கப்பட்டுள்ளார்கள். தேவைப்படுவோர்க்குக் கிடைப்பதில்லை. போதுமென்பார்க்கு அளவு மீறித் தரப்படுகிறது. சிறுநீரகம் தானம் புரியவில்லையே என்று யாரையும் குறைகூற முடியவில்லை. யாரும் தருவதற்காய் முயற்சி செய்வதாய் பாசாங்கு கூடச் செய்யவில்லை. 

  காத்திருப்புத் தொடர்கிறது.

   
               

  16 கருத்துகள்:

  பெயரில்லா சொன்னது…

  வணக்கம். எனது உறவினரின் நண்பர் குடும்பம் அமரிக்காவில் வாழ்கின்றது. அவர் ஒரு வைத்தியர். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து கவலைக்கிடமாக வாழ்ந்துவந்தார். பரிசோதனைகளின்பின் அவரது மனைவி தனது ஒரு சிறுநீரகத்தைக் கொடுத்தார். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. இன்றுவரை 12 ஆண்டுகள் சிகிச்சையின்பின் இருவரும் வாழ்ந்துவிட்டார்கள். 30 ஆண்டுகளுக்குமுன் தன் இதையத்தைக் கொடுத்தவள் 18 ஆண்டு வாழ்க்கையின்பின்னர் தனது சிறுநீரகத்தைக் கொடுத்துத் தன் கணவனைக் காப்பாற்றினாள். (அன்புடன் கங்கைமகன்)

  மகேந்திரன் சொன்னது…

  என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவருக்கு கூட
  மூண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன..
  அடிக்கடி அவர் வலியால் அவதிப்படுவதை
  பார்க்க சகிக்க முடியாது.
  அழகான விழிப்புணர்வு கட்டுரை சகோதரி..
  இன்னும் விழிப்புணர்ச்சி பெருக வேண்டும்.

  வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

  //காத்திருப்புத் தொடர்கிறது. //

  எங்களுக்கும் தான்.

  பழனி.கந்தசாமி சொன்னது…

  என் நணபன் ஒருவனுக்கு இந்நோய் தாக்கியிருந்தது. இரண்டு ஆண்டுகள் டயாலிசிஸ் செய்து பிறகு முக்தியடைந்தார். அந்த இரண்டு ஆண்டுகளும் அவர் அனுபவித்த வேதனை எழுத்தில் சொல்ல முடியாது.

  RAMVI சொன்னது…

  ரகுவின் நிலை வருத்தத்தை தருகிறது.
  சிறுநீரகங்கள் இயக்கம் பற்றிய சிறந்த அறிவியல் தகவல்களுக்கு நன்றி கெளரி.

  சந்திரகௌரி சொன்னது…

  நீண்ட காலங்கள் அவர் பூமியில் வாழவேண்டி இருந்ததனால் அவர் மனைவியின் சிறுநீரகம் அவருக்குப் பொருந்தி இருக்கின்றது. இதுதான் சொல்வார்கள் எதற்கும் ஒரு கொடுப்பினை இருக்கின்றது என்று. நன்றி

  சந்திரகௌரி சொன்னது…

  இயற்கையிலேயே ௩ சிறுநீரகங்கள் இருந்தால் ஏன் வழியால் அவதியுறுக்கின்றார். ஒன்றை நீக்குவதற்கு மருத்துவர்கள் முயற்ச்சிக்கவில்லையா?

  சந்திரகௌரி சொன்னது…

  வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  சந்திரகௌரி சொன்னது…

  உறுப்புகளும் உருவாக்கி அதற்குள் இத்தகைய வேதனைகளும் உருவாக்குவதுதான் தாங்க முடியாது . நோயோ துன்பமோ இறப்பு வரை தாங்கித்தான் ஆகவேண்டியுள்ளது

  சந்திரகௌரி சொன்னது…

  வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  சந்திரகௌரி சொன்னது…

  நன்றி ராம்வி

  திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

  அறியாத பல நல்ல தகவல்கள் ! விளக்கமாக கூறி உள்ளீர்கள் ! மிக்க நன்றி சகோதரி !

  சந்திரகௌரி சொன்னது…

  வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

  Rathnavel Natarajan சொன்னது…

  நல்ல பதிவு.
  அரிய விஷயங்கள்.
  தொடருங்கள்.
  வாழ்த்துகள்.

  சக்தி சக்திதாசன் சொன்னது…

  அன்பின் கெளரி,
  அருமையான, விழிப்புணர்வூட்டும் ஒரு படைப்பு
  அன்புடன்
  சக்தி

  சந்திரகௌரி சொன்னது…

  மிக்க நன்றி

  நெஞ்சம் மட்டும் பேசும் காதல்

  நிற்பனவும் , நடப்பனவும் , பறப்பனவும் தமது மனங்களைப் பகிர்ந்து கொள்ளும் இயல்பான நிகழ்வு காதல். மனிதவளர்ச்சியில் சத்தியமானதும் சாத்தி...