கணனித்தாய் பிரசவித்த குழந்தை. அழகழகான வடிவங்களில், அற்புதமான உறுப்புக்களில் பூலோகத்தில் பூத்திருக்கும் புதுக்கவிதை. அறிவு விரும்பிகள் தத்தெடுத்த செல்லப்பிள்ளை. எடுப்பார் கைப்பிள்ளையானாலும் எடுத்தவர்கள் தம் சுவைக்கேற்ப வளர்த்தெடுக்கும் பாக்கியம் பெற்ற பாக்கியவான்.
கைவந்த குழந்தையைத் தம் எண்ணங்கள், சிந்தனைகள், ஆசைகள், எதிர்பார்ப்புக்கள் அத்தனையும் அச்சேயினுள் ( சேய் - குழந்தை) புதைத்து உலகெங்கும் நடமாடவிட்டுத் திருப்தி காணுகின்றனர்.
தாம் கற்ற விடயத்தை சற்றும் மாறாமல் கச்சிதமாய் காட்சிப்படுத்தும் சிலர் ( பழந்தமிழ் இலக்கியங்கள், கணனி அறிவியல், அறிவியல் தகவல்கள், படித்ததில் சுவைத்தது)
தமது எண்ணங்களைக் கற்பனையாக்கி கவிதையாக்கிப் பலர் கருத்துக்ளுக்கு விருந்தளித்து சிந்திக்கத் தகவல்கள் சிறப்பாய்த் தருகின்றனர்.
தாம் கற்ற பலவற்றைத் தம் மூளைப் பாத்திரத்தில் தேக்கி வைத்து அதனை ஆராய்ந்து சேர்மானங்கள் சேர்த்து பிரித்தெடுத்து உலகுக்கு நற்செய்திகளை சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகின்றனர்.
வாழ்க்கைப் பாடத்தைக் கதாபாத்திரங்களில் ஏற்றி கதைகளாய்க் காட்சிப்படுத்துவோர் சிலர்,
அகிலங்கடந்த சிந்தனையில் ஆன்மீகக் கருத்துக்களை நம்பிக்கை என்னும் நீருற்றி வளர்த்தெடுத்து பிறர் நன்மை கருதி கண்கவர் வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்துகின்றனர் சிலர்.
அநுபவங்களைப் பலரறியப் படங்களுடன் இணைத்துப் பார்வைக்கு விடுவோர் சிலர்.
அகப்புறக் காட்சிகளுக்கு விருந்தளித்த அற்புதக் காட்சிகளை இரசித்து இன்புற்றுத் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என தம் புகைப்படக் கருவிக்குள் அடக்கிக் கொண்டுவந்து பிளாக் குழந்தையில் பிரதிபலிக்கச் செய்கின்றார்கள் புகைப்படக்கலைஞர்கள்.
சுவைகளிலே சிறந்த சுவை நகைச்சுவை. இத்திறமை யாவருக்கும் கிடைக்கப் பெறாத செல்வம். மனிதன் நோய்நொடியின்றி வாழவேண்டுமானால், அவன் நன்றாகச் சிரிக்க வேண்டும். இப்பணியை நற்பணியாய்க் கொண்டு எமையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தவென்றே பிளக் குழந்தையைத் தத்தெடுத்திருக்கின்றார்கள் . நகைச்சுவை மன்னர்கள்.
இயக்குனர்கள், தயாரிப்பாளர், நடிகர், தொழில்நுட்பக்கலைஞர் என முடிதிருத்துபவர் தொடக்கம் ஆடைத்தொழிலாளி வரை பற்பல மக்களுக்குத் தொழில் வாய்ப்பளித்து அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் திரைப்படத்துறையினர் வழங்கும் திரைப்படங்களைத் தமது விமர்சனம் மூலம் பலர் பக்கப் பார்வைக்கு விருந்தளிப்போர் சிலர்,
இயற்கைப் படைப்புக்களை இதமாய்க் கலந்தளித்து சுவையூட்ட சிற்சில மசாலாக்களை சுவைக்கேற்ப சேர்த்தெடுத்து பற்பல வகைகளில் நற்சுவை மேம்பட அறுசுவை உணவுகளை அழகாய்ப் படங்களுடன் காட்சிப்படுத்துகின்றனர் சிலர், நாமும் நம் கணவர் மனமகிழ குடும்பத்தார் குதூகலித்து சுவைத்தின்புற தின்பண்டங்களை திறனாய்ச் செய்து வழங்குகின்றோம்.
நாட்டுநடப்புத் தெரியாது நாம் உலகில் வாழ வீட்டில் இருந்து கொண்டே அறிந்து கொள்ளுங்கள் விருந்தாய்த் தருகின்றோமென செய்திகளைத் தொகுத்துத் தளம் இறக்குவோர் பலர்.
இவ்வாறு பூமியிலே புதிதாய் அவதரித்த பிளாக் குழந்தையினால், கற்றவர் பலர், தம் அறிவைப் பன்மடங்கு விருத்தி செய்தவர் பலர். குடத்துள் விளக்காய் இருந்தாரைக் கோபுரத்து விளக்காக்கியதும் இதுவே. தெரியாதிருந்த பலவிடயங்களைத் தெளிவுற தெரியப்படுத்தியதும் இதுவே, இலக்கியம் அறியாதோரை இலக்கியம் எழுதச் செய்ததும் இதுவே. முகமறியா உறவுகளின் உண்மை நட்பினை உணரச் செய்ததுவும் இதுவே. கற்றவர் பலர் தாம் கற்றவற்றைப் பிறருக்குக் கற்பிக்க களம் தந்ததும் இதுவே.
ஓடி வந்து விருப்புடனே பின்னூட்டம் இட்டு உறவுகளின் வெளிப்பாட்டை விருந்தாய்ப் பருகி, காந்தமாய்க் கருத்துக்களைத் தந்து கவர்ந்திருப்போரும் இங்கே. காட்சிக் குழந்தையைக் கனவிலும் நினைத்து, அழகுபடுத்தி, அற்புதம் காட்டுவோரும் இங்கே. எங்கோ இருந்தபடி எங்கோ கவி எழுதுவோரைக் கருத்துடனே பின்னூட்டம் இட்டு கவியாற்றல் மேம்பட கருணை புரிவோரும் இங்கே.
இவ்வாறெலாம் அழகும் அறிவும் மாறாமல் வளருகின்ற Blog குழந்தை உருவாவதற்கு யார் காரணம்? வெறுமனே கணக்குப் போட மட்டுமே பயன்படுத்தப்பட்ட கணனியை அதிவிரைவு தகவல் தொடர்பு சாதனமாக மாற்றியமைத்த பெருமை அமெரிக்க பாதுகாப்புத்துறை ஏற்படுத்திய ARPA
(Advance Research Projects Agency) என்ற அமைப்பையே சாரும். இது பலத்த ஆராய்ச்சியின் பயனாக 1968 ஜூன் மாதம் ARPANET என்னும் வலையமைப்பை அமெரிக்க அரசின் பாவனைக்குக் கொண்டுவந்தது. இது உருவாவதற்கு அடிப்படைக் காரணம் சோவியத் அரசே ஆகும். ஒன்றை ஒன்று வெல்லவே நாடுகளும் மனிதனும் போட்டாபோட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. 1957 இல் சோவியத் அரசு முதலில் ஸ்புட்னிக் என்னும் செயற்கைக் கோளை விண்ணில் ஏவிவிட
இணையம் இல்லையென்றால், பிளாக் இல்லை பிளக் இல்லையென்றால், எம் உறவுகள் இல்லை. மேற்கூறிய இன்பங்கள் அனைத்தும் இல்லை. எனவே இணையத்திற்கு நன்றி சொல்வோம் எம்மால் அறியப்படாமலே எம்மை நெறிப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றி சொல்வோம். பிளக் உலகு தொடர்ந்து பல பரிமாணங்கள் கண்டு உலகெல்லாம் அறிவுமயம் பரிமளிக்க வேண்டும் என மனமார வாழ்த்தி இணைந்த உறவுகள் யாம் இணைபிரிய வாழ்வு கண்டு பொறாமை வஞ்சனை கலந்த பரிசுத்தவாழ்வு வாழவேண்டும் என நம்மைநாமே நம்பி தொடர்வோம்.
14 கருத்துகள்:
அன்புச் சகோதரிக்கு, உங்கள் வலையில் பின்னூட்டம் இட முடியவில்லை. 'வெளியிடு' கிளிக் செய்யும் போது இங்கே செல்கிறது --->(http://www.animaxwidget.blogspot.com/) கவனித்து சரி செய்யவும். மேலும்..
நல்ல நட்புக்களை இன்று நெருங்கிய உறவுகளாகவே மாற்றித்தரும் [BLOG ப்ளாக்] வலைப்பூ என்ற குழந்தையின் பிரஸவம் பற்றியும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அது வளர்ந்துள்ளது பற்றியும் சிறப்பாகக் கூறியுள்ள இடுகைக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.
vgk வை.கோபாலகிருஷ்ணன்
நல்ல தகவல்கள் சந்திரகௌரி, நன்றி.
ப்ளாக்கைப்பற்றி உங்கள் பாணியில் அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள் ! நன்றி சகோதரி!
இணையத்திற்கு நன்றி சொல்வோம் எம்மால் அறியப்படாமலே எம்மை நெறிப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றி சொல்வோம். பிளக் உலகு தொடர்ந்து பல பரிமாணங்கள் கண்டு உலகெல்லாம் அறிவுமயம் பரிமளிக்க வேண்டும் என மனமார வாழ்த்தி இணைந்த உறவுகள் யாம் இணைபிரிய வாழ்வு கண்டு பொறாமை வஞ்சனை கலந்த பரிசுத்தவாழ்வு வாழவேண்டும் என நம்மைநாமே நம்பி தொடர்வோம்.
அழகான பிளாக் குழந்தைக்கு வாழ்த்துகள்..
அருமையான பதிவு !
வாழ்த்துக்கள் !
உண்மைதான் கெளரி.கட்டாயம் வலைப்பூக்கு நன்றி சொல்ல வேண்டும், நம்மையெல்லாம் ஒன்று சேர்த்ததற்கு.அருமையான கட்டுரை.
உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் மிக்க நன்றி ஐயா
வாருங்கள் நன்றி
நன்றி அம்மா. மனஉறுதி கொள்வோம் . என்றும் தொடரும் பதிவுகளுக்கும் உங்கள் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி
வாருங்கள் நன்றி
எங்கிருந்தோ வந்த நாம் ஏதோ ஒரு உறவுச் சொந்தக்களானோம். கண்ணால் காணவில்லை.ஆனால் கருத்தால் உடன்பட்டிருக்கின்றோம் . நன்றி ராம்வி
அருமையான பதிவு
தூரத்தால் பிரிந்திருந்தாலும் தங்களைப் போல
உயர்ந்த சிந்தனை உள்ளவர்களை
தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை
ஏற்படுத்தித் தருவதோடு அல்லாமல் தங்களிடம் பொதிந்துள்ள
சமூக சிந்தனையுடன் கூடிய அழகிய தமிழை அறிய உதவும்
அழகிய சாதனம் பிளாக்தானே.
அதனையே ஒரு அழகிய பதிவாக்கி அறியாத தகவல்களை
அள்ளித்தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
மிக்க நன்றி ரமணி அவர்களே. உங்களைப் போன்றோரின் வாழ்த்துரைகளே எங்கள் எழுத்துக்கு உரம் ஊட்டுகின்றன .
கருத்துரையிடுக