நன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்


நன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்


           
கதவைத் திறந்து காற்றுப் போல் உள்நுழைந்து தன் கைப்பையை விசுக்கி எறிந்து சோபாவில் தொப்பென்று விழுந்த கார்த்திகாவைப் பார்த்துச் சிரித்த அவர் கணவர், 'இன்று வேலைத் தளத்தில் கால்கள் ஓரிடத்தில் நிற்கவில்லையோ நகரும் படிகள்போல் நடமாடியபடியேதான் இருந்தனவோ!'' அப்படியொன்றுமில்லை என்று அலுத்துக் கொண்டாள், கார்த்திகா. ' அப்படியென்றால், அம்மாவுக்கென்ன கோபம் 90 பாகை காட்டுகிறது.'' என்று மெல்லச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்த கணவரிடம் ' இந்த நந்தா குடும்பம் இந்த ஜேர்மனி மண்ணில் கால் பதித்த போது வெற்றுக் கடதாசியாய் கண்ணும் கையும் தய வும்  நெin  உம் துணைபோக பேந்தப்பேந்த முழித்து அப்பாவிகளாய் எங்களிடம் எப்படித் தஞ்சம் புகுந்தார்கள். உடலும் உள்ளமும் வருந்த நேரமும் பொழுதும் போர் புரிய அனைத்தையும் எதிர்த்துக் கட்டுப்படுத்தி அவர்கள் உள்ளத்தில் நாட்டையும் மொழியையும் வாழ்முறையையும் எழுதி வைத்தது யார்? இன்று கண்பார்க்கிறது. மனம்  விரும்பியும் விரும்பாமலும் சிரிக்கிறது. கால்கள் நின்று பேச நேரமில்லாது நடந்து கொண்டே இருக்கிறது. என்ன நன்றி கெட்ட ஜென்மங்கள். ஓடிவந்து கட்டித் தழுவி கார்த்திகா, கார்த்திகா என்று வாயெல்லாம் பல்லாய்ச் சிரித்து உரிமை கொண்டாடியவர்கள் இன்று பார்க்கும் இடங்களிலெல்லாம் கண்டு கொள்ளாமல் போவதைப் பார்க்க இந்த மனிதர்கள் எல்லாம் இப்படி இதயத்தில் இரண்டு வேறுபட்ட அறைகள் வைத்து நன்றி மறந்தவர்களாய் எப்படி வாழுகின்றார்கள்'' என்று வெறுப்பாய்க் கூறிய கார்த்திகாவிடம்,' இதுதான் வாழ்க்கை கார்த்திகா. நாம் ஏணியாக இருக்க மேலே ஏறிக் கொண்டே போவார்கள். அந்த ஏணியை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. கீழே வரும்போதுதான் அதன் துணைதேவை. இப்போது அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம். அனைவரும் தங்கள் தரத்துக்குக் கீழே. அவர்கள் தரம் உயர்வதை இவர்கள் விரும்புவதுமில்லை. தமது தரத்துக்கு மேலே இருப்பவர்களுடன் பழகுவதற்கும் இவர்கள் விரும்புவதுமில்லை. மனிதப்பண்புகள் மாறுபட்டவை. தன்னைத்தானே பெருமைப்படுத்தி வாழ்வோர். தனக்கு மேல் ஒருவர் வாழ்வதை விரும்ப மாட்டார். அவர்களுடன் ஒட்டிக் கொள்ளவும் விரும்பமாட்டார். ஏனெனில் தற்பெருமை பேசத் தன் தகுதிக்குக் குறைவான தகுதியுள்ளார் மாத்திரமே தேவை. அவர்களை விட ஒருபடி உயர்ந்தவரிடம் உள்ள நற்பண்புகள் சேகரிக்கும் அறிவுக்களஞ்சியம் இவர்களிடம் இல்லை. நாம் மலையில் பெருக்கெடுக்கும் நதியாக இருப்போம். செல்கின்ற வழியெல்லாம் செழிப்பை ஏற்படுத்துவோம். வழிதோறும் தொட்டுக்கொள்ளும் மூலிகைகளின் சிறந்த பண்புகள் எல்லாம் ஏற்றுப் புனித நதியாதல் போல் சிறந்த பண்புகளைப் பெற்றுய்வோம். குட்டையாய் நின்று எருமைகள் குழப்பிய நீராய் இருப்பாரைப் பார்த்து அநுதாபப்படுவதை விட யாதொன்றும் செய்தல் முடியாது. எழுந்திடு! உனக்காய்ப்பல கருமங்கள் காத்திருக்கின்றன. அற்ப விடயங்களுக்கு உணர்ச்சிவசப்படுதல் அற்பபுத்தி'' என்று ஆறுதலுடன் அரிய பிரசங்கம் செய்த கணவனின் பேச்சுக்குத் தலைசாய்த்துத் தன் பணி தொடர்ந்தாள், கார்த்திகா.
         
திறந்தே இருக்கும் இதயக்கதவினுள் புகுந்தவர் பலர். அதில் பதிந்தவர் சிலர். புகுந்து விரைந்து பறந்தவர் ஒரு சிலர். புகுந்து இருந்து புண்படுத்துவோரும் சிலர். புகுந்து பிரிந்து புண்புடுத்துவோரும் உளர். அதில் இதுவும் ஒரு வகை. இதயம் சொல்லும் கதை.

கருத்துகள்

அம்பலத்தார் இவ்வாறு கூறியுள்ளார்…
நம்மவர் பலரின் மனநிலையை மிகவும் தெளிவாக எடுத்துக்கூறியிருக்கிறீர்கள். தம்மைவிட மேலை உள்ளவர்களைப் பார்த்து அவரிடம் உள்ள நல்ல பண்புகளை, நல்ல குணங்களை அறிந்து தாமும் உயர்வோம் என்பதைவிடுத்து மேலே உள்ளவனையும் இழுத்து தாம் வாழும் சாக்கடையில் விழுத்துவோம் எனும் மனநிலையை அண்மைக்காலங்களாக பலரிடமும் காணக்கூடியதாக இருப்பது வேதனை தரும் உண்மை. இது ஆரோக்கியமான ஒரு சமுதாயத்திற்கு உகந்தது அல்ல.
பழனி.கந்தசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
இதுதான் உலகம்.
மகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்…
மனிதர்கள் பலவிதம்
அவர்களில் நாம் பழகுவது சிலரிடம்
அதிலும் நம் நெஞ்சில் நிறைபவர் மிகச் சிலரே....

அருமையான ஒரு பதிவாக்கம் சகோதரி.
நன்றி உணர்வு எல்லோருக்கும் அமைவதில்லை...
அவற்றை மறப்பவர் தம்மை மறப்பவரே என்பது
மிகச் சரியான சொல்....
சசிகலா இவ்வாறு கூறியுள்ளார்…
நாம் நதியாக இருப்போம் என்று விளக்கிய விதம் அருமை .
ரெவெரி இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மையில் இது ஒரு இதயம் வரைந்த கதை தான் சகோதரி...
சக்தி சக்திதாசன் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பினிய கெளரி,
நல்லதோர் கருத்தை அருமையாக, அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்." இதுதான் வாழ்க்கை ! இதுதான் உலகம் ! " என்றுகூடச் சொல்லலாம். ஆனால் இதைப் பார்த்து மனம் தளரக்கூடாது. உங்களின் எழுத்துக்கள் அனைவருக்கும் உபயோகமானவை.
அன்பான வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்தி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்