• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

  கண்ணுக்கு ஏன் கறுப்புக் கண்ணாடி?


     வாசல் கதவை விரைவாய்த் திறந்து ஓடி வந்த பவித்ரா, விசையாகத் தன் கைப்பையைச் சுழட்டி எறிந்தாள். கட்டிலில் சடாரென்று விழுந்தாள். வெம்மி நின்ற அழுகை வெடித்தது. அடக்கமுடியாத கண்ணீர் மடைவெள்ளம் திரண்டதுபோல் தாரைதாரையாகத் தலையணையை நனைத்தது. விரக்தியின் விளிம்பில் நின்று விசும்பினாள். 

        பவித்ரா அழகுப்பெண். திருமணநாளுக்காய் நாள்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கும் கனவுக் கன்னி. கௌரவமான குடும்பம், வெளிப்படையான போக்கு, பெற்றோர் பேச்சுக்கு மறுப்புக் கூறி அறியாத பண்பு. கல்லூரிப்படிப்பைக் கச்சிதமாய் முடித்தபோது பெற்றோர் முடிவுசெய்த திருமணத்திற்குத் தலைசாய்த்து நின்றாள். 

        அன்புமகள் விசும்பலில் கலவரம் அடைந்த தாய் பதட்டத்துடன் ஓடிவந்து மகளைத் தொட்டது தான் தாமதம், சடாரென்று எழுந்தாள் பவித்ரா தாயின் தோளில் முகம் புதைத்து விக்கி, விக்கி அழத் தொடங்கினாள். காரணம் புரியாத தாய், என்ன என்ன நடந்ததென ஆரவாரமாய் அவசரப்பட்டுக் கேட்டாள். கண்ணீரை இரு கைகளினாலும் துடைத்துவிட்டுத் தாயை விறைத்துப் பார்த்தாள். சுட்டெரித்தன கண்கள். சொற்களில் இயலாமை கலந்திருந்தது.  ||நான் ஏன் தமிழ்ப் பெண்ணாகப் பிறக்க வேண்டும். நீங்கள் ஏன் இங்கு வந்து வாழவேண்டும். ஏனிந்த நாட்டில் என்னைப் பெற்றெடுக்க வேண்டும் நான் வாழ்வதா? சாவதா? விளக்கம் புரியாத தாய் கண்களைச் சுருக்கினாள். பவித்ரா கைப்பையிலிருந்த கடிதத்தைத் தன் தாயிடம் நீட்டினாள். கடிதவரிகளில் தன் பார்வையைப் புதைத்தாள் தாய்,

  அன்புள்ள பவித்ராவிற்கு,

  நான் அதிகம் எழுதவில்லை. கோப்பிக்கடையில் 4,5 Boys உடன் இருந்து நீ கதைத்துக் கொண்டிருந்ததாக எங்கள் நாட்டவர் எங்கள் வீட்டாரிடம் கூறியிருக்கின்றார்கள். இதைவிட வேறும் கூறப்பட்டிருக்கின்றது போல் தெரிகின்றது. இன்றுடன் எங்கள் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. உன்னைப்போல் தானே நானும் பாசம் என்னும் வேலியினுள் அடைக்கப்பட்டவன். வேலியை மீறி வர என்னால் முடியாது. மன்னித்துவிடு. 

  அன்புடன்
  ரவி

  கடிதத்தை வாசித்து முடித்துவிட்டு நிமிர்ந்தாள் தாய். அவள் விரல்கள் மகளின் கண்ணீருக்குச் சமாதி கட்டியது. நான்கு கண்களும் நிலைக்குத்தி நின்றன. 'கண்ணீர் விட்டு அழும் கோழையையா என் வயிறு என் வயிறு சுமந்தது. உன்னில் நான் வைத்திருப்பது நம்பிக்கை. அடுத்தவர் பேச்சையெல்லாம் நம்பி அவற்றுக்கெல்லாம் ஆமாப்போடும் அழுக்குமனம் படைத்தவன் தாலிக்கு உன் தலை நீட்டப்படுவது அவமானம். மானம் காக்க மரக்கிளையையை வேண்டிநின்ற 
  காலப்பகுதியில் நாம் வாழவில்லை. கையைப்பிடித்தால் பிள்ளைபிறக்கும் என்னும் அறியாமை இருளில் உன்னை வளர்க்கவில்லை. சொந்த நாட்டைவிட்டு வந்த நாட்டிலும் நமது இனம் வக்கிரபுத்தியில் வாழ்வதைக் கண்டுகொள்ளாத அடிமட்டமானவர் அல்ல உன்தந்தை. நடந்தது நடந்து முடிந்ததாக இருக்கட்டும். இனி நடக்கப் போவது நல்லதாக அமையட்டும். உடைமாற்றிப் புறப்படு. சுத்தக்காற்றைச் சுவாசிக்க நிதானமாக நடப்போம்|| தைரியமான வார்த்தைகளை அள்ளித் தூவிவிட்டு அத்தனை சுமையையும் தன் மனதில் ஏற்றி எழுந்தாள் பவித்ராவின் யதார்த்தத் தாய். 

  சமுதாயமே!
    
           எங்கள் பிள்ளைகளை வாழவிடுங்கள். கண்ணுக்கு கறுப்புவிழி இறைவன் படைத்தாயிற்று. மேலும் கறுப்புக்கண்ணாடி கொண்டு உலகைப் பார்க்காதீர்கள். அடுத்தவன் வாழ்க்கைக்கு வேட்டு வைத்து அழகு பார்க்காதீர்கள். 'தமிழர்களைக் காண நாங்கள் அஞ்சுகிறோம். தமிழர்களைப் பிடிக்கவில்லை. எங்களை ஊடறுத்துப் பார்க்கின்றார்கள். பெற்றோர்களின் அடுத்தவர்கள் என்ன கூறுவார்கள் என எண்ணி எமக்குப் போடும் கட்டுப்பாடுகளைப் பொறுக்கமுடியாதே தொலைவிலுள்ள பல்கலைக்கழகங்களை நாங்கள் தெரிந்தெடுக்கின்றோம் என்று மனஅழுத்தங்களை வெளிப்படுத்திய எத்தனையோ இளையவர்கள் வார்த்தைகளைக் காதில் போட்டோம். பண்பாடு, கலாசாரம், என்று கூறிக்கொண்டு காலநிலை, பௌதீக சூழ்நிலை Nபுhன்றவற்றால் மாறுபட்ட ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நீங்களும் இந்த வயதைக் கடந்து வந்தவர்கள் தானே. வாழ்க்கை இனிமையானது. பாவம் அவர்கள் பல்வேறுபட்ட கலாசாரங்களுக்கு நடுவே பல்வேறு தோணியில் கால் வைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிகள். முதலில் உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். அவர்கள் கருத்துக்களுக்கு இடங்கொடுங்கள். நண்பர்களாய் ஆலோசனை வழங்குங்கள். எதையுமே எதேச்சையாக முடிவெடுக்காதீர்கள். ஆழமாகச் சிந்தியுங்கள் அவசரம் இன்றி வெளியிடுங்கள். சமுதாயத்தை விளித்துக் கேட்கிறேன். பவித்ராவிற்கு, அவள் தாய் கூறிய தீர்ப்புச் சரியானதா?

  5 கருத்துகள்:

  1. சரி... நல்ல பல கருத்துக்கள்...

   பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

   பதிலளிநீக்கு
  2. மிகச் சரியான, தெளிவான ஆலோசனைதான் கூறியிருக்கிறார் பவித்ராவின் தாய்.

   படிப்போரின் சிந்தனையையும் தூண்டும் வரிகளுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  3. தலைப்புத் தேர்வு புதுமையாக உள்ளது.

   படத்தேர்வு நல்லாயிருக்கு.

   சிந்திக்க வைக்கும் படைப்பாகவும் உள்ளது.

   பாசம் என்னும் வேலியில் அடைக்கப்பட்ட + வேலியை மீறி வர முடியாத என்ற ரவி என்ற இந்தக்கால இளைஞன் சொல்வது நம்பும்படியாக இல்லை. இது இங்கு நம் நாட்டுக்கே இப்போது பொருந்துவதாக இல்லை.

   அதுபோல பவித்ரா என்ற, இந்தக்கால படித்த ஒரு பெண், அதுவும் வெளிநாட்டில் வாழும் பெண். சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய பெண், இதற்கெல்லாம் போய் கண்கலங்குவதும் ஏற்கும்ப்டியாக இல்லை.

   பவித்ராவின் தாய், பவித்ராவுக்குக் கூறியுள்ள ஆலோசனை, பவித்ராவின் தாய் என்ற ஸ்தானத்தில் மிகவும் விவேகமான செயல் தான். தன்னம்பிக்கை ஊட்டுவதும் தான்.

   படைப்புக்குப் பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்>

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தெளிவான பார்வை. என்ன செய்வது இப்போதும் இப்படியும் இங்கு வாழ்கின்றார்கள் . நன்றி சார்

    நீக்கு
  4. தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என்று படிக்க ஆரம்பித்தேன்.... இதைப்போல் நிறைய பவித்ராக்களும், ரவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்....

   ரவியும் நம் நாட்டை விட்டு வெளிநாட்டில் வசிப்பவர் தானே? அவருக்கு தெரியாதா? இதே அவர் தன் உடன் பணிபுரியும் பெண்களுடன் சேர்ந்து உட்கார்ந்து மதிய உணவு உண்ணலாம்... அவர் வீட்டு பெண்கள் இதே போன்று உடன் படிக்கும் அல்லது பணிபுரிவோருடன் கோப்பி ஷாப்புக்கு போய் காபி அருந்தலாம்.. அது தவறாக தெரியாது... அதே தன் வீட்டுக்கு வரும் பெண் மட்டும் எந்த ஆணுடன் பேசவோ நட்பு கொள்ளவோ பழகவோ கூடாது என்று அழுத்தமாக சொல்கிறார்கள்...

   இது இந்த காலத்துக்கு ஏற்றதே இல்லையே... அதுவும் வெளிநாட்டில் இது கண்டிப்பாக சாத்தியமும் இல்லை...

   ரவி தான் இப்படி சொல்லிவிட்டான் என்றால் பவித்ரா ஏன் உடனே மனம் சோர்ந்து போகவேண்டும்.. கல்யாணத்திற்கு முன்பே அவனுடைய கோழை குணம் அறிய கிடைத்த வாய்ப்புக்கு கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும்.. திருமணத்திற்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் பவித்ராவின் கதி???

   பெண்களை அடுப்படியுடன் இரு, கருத்து சொல்லாதே, ஆண்களுடன் பேசாதே என்று அடக்கிவைத்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.....

   பவித்ராவின் தாய் எத்தனை விவேகி... எத்தனை தைரியமாக ரவியின் வார்த்தைகளை எதிர்க்கொண்டார்... பாராட்டவேண்டும் அவரை....தன் பெண்ணை எந்த தாயும் நல்ல முறையில் தான் வளர்ப்பார்.. அதில் எந்தவித மாறுதலான கருத்தே கிடையாது.... அதனால் தான் பெண்ணுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதும் அவர் நிதானமாக அதே சமயம் உறுதியான முடிவை எடுத்து பவித்ராவையும் இது போன்ற விஷயங்களை எதிர்நோக்கவும் சொல்லி இருக்கார்....

   இது கதை அல்ல.... நிதர்சனம்.... எத்தனையோ தாய்மார்கள் ஐயோ தன் பெண்ணுக்கு வாழ்க்கை அமைந்தால் போதும் என்று கிணற்றில் தள்ளிவிடுவது போல சரியான துணையுடன் சேர்த்து வைக்க தவறுவதால் தான் பலபேருடைய வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடிப்பதும், புது மணமான பெண் தற்கொலை செய்துக்கொள்வதும்....

   இது எல்லாவற்றிலிருந்தும் தன் பெண்ணை காப்பாற்றி விட்டார் பவித்ராவின் தாய்.. அவருக்கு என் சல்யூட்...

   தவறு பவித்ரா மீது அல்ல... ரவியின் கண்ணோட்டத்தில் தான் தவறு.. பார்ப்பது எல்லாம் தவறாக தெரியும் ரவியை திருமணம் செய்திருந்தாலும் பவித்ராவின் நிலை மிக மோசமாக இருந்திருக்கும்....

   அருமையான படிப்பினை கதையை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் கௌரி.. சௌக்கியமா இருக்கீங்களாப்பா?

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...