Headlines News :
வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்
Home » » யார் குற்றவாளி?

யார் குற்றவாளி?

Written By Chandragowry Sivapalan on திங்கள், 24 செப்டம்பர், 2012 | 08:29


             

கனகர் கட்டிலை விட்டுத் துடித்து எழுந்தார். விடிந்தும் விடியாத பகல்பொழுது ஜேர்மனியில் வானுலகை இருட்டாகக் காட்டிய மாரிகாலம். அசதியாய்த் தூங்கியவருக்கு அலாரச்சத்தம் கூடக் காதில் கேட்காது ஓய்வுக்காய்த் தூங்கிய உடலானது அவர் அறிவுக்கு  நேரத்தை உணர்த்தாது தூங்கச் செய்திருந்தது.  பதறிய உடல்களுக்குள்ளே பார்க்கும் கண்கள் மணிக்கூட்டுக்கம்பியை  பதட்டத்துடன் பார்த்தன. நேரம்காட்டி மணி ஏழைக் கடமையுணர்வுடன் காட்டியது. ஓடிப் போய்க் குளியலறையினுள் நுழைந்தவர். கடகடவென்று குளித்து உடை மாற்றினார். மனைவி கொடுத்த தேநீரை அருந்தியவருக்குக் காலை உணவைப் பற்றிய சிந்தனையே இன்றி வேலைக்குப் போவதற்காக அவசரமாகக் கிளப்பிவிட்டார். அந்நியாட்டில் கால் வைத்ததிலிருந்து, ஓயாது உழைத்து, அண்டிய நாட்டைத் தெண்டாது தனக்கென்று ஒரு வீடும், தன் பெயர் சொல்ல ஒரு மகனையும் பெற்றெடுத்து அடுத்தவருக்குப் பாரமில்லாது தன் பலமுள்ளவரை தானும் தன் வேலையுமென்று கௌரவமாக வாழ்ந்தவர்தான் அவர். சட்டைப் பைக்குள் கையை வைத்தவர், ´´ராணி...``என்று பலமாகக் கத்தினார். என்ன என்று மனைவி ஓடி வந்தாள். என்னுடைய கார் திறப்பு எங்கே? தன் பதட்டம் புரியாத மனைவியிடம் திறப்பைச் சட்டைப்பையினுள் காணாதவிடயம் பற்றி அறியும் நோக்குடன் கத்தினார். மிக ஆறுதலாக ´´பிள்ளை எடுத்திட்டுப் போயிற்றான்`` என்று விடையளித்தாள் மனைவி ராணி. ´´உனக்கு அறிவிருக்கா? நான் வேலைக்குப் போக வேணும். ஏன் அவன்ட  கார் எங்கே?`` குதியாய்க் குதித்தார் கனகர். ´´ஏன் கத்துறீங்கோ. அவன்ட கார்ல ஏதோ பழுதாம். உடனே வந்திடுவேன் என்று சொல்லித்தான் எடுத்திட்டுப் போனான். வந்திடுவான்`` என்று வக்காளத்து வாங்கினாள் வழக்கமான அம்மாக்களின் பண்பில் சற்றும் விலகாதவளாய் அவர் மனைவி ராணி. ´´போதும் நிறுத்து. எல்லாம் நீ கொடுக்கிற தைரியம். எனக்கு வேலை முக்கியம். அவன் தான் ஊதாரியாய்த் திரிகின்றான் என்றால், என்ர வேலைக்கும் வேட்டு வைக்கப் பார்க்கிறான். வேலையும் போனால் வாழ்ந்த மாதிரித்தான்`` தலையிலே கை வைத்தபடி போய் சோபாவில் அமர்ந்து கொண்டார். 

        காத்திருக்கும் மணிப்பொழுதுகள் அவர் மனதுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. கண்கள் மணிக்கூட்டுக்கம்பியை அடிக்கடி பரிசீலனை செய்தது. வேலைததத்தளத்தில் என்ன பொய்யை எப்படிச் சொல்வதென மனம் அங்கலாய்த்தது. கடமையை கண்ணாகக் கருதுகின்ற கனகருக்கு வீட்டில் சோம்பேறியாய்ச் சோர்ந்து கிடப்பது பெரும் சங்கடமன விடயம் அதனால், செய்யும் தொழிலை முழுமையாகக் காதலித்தார். அதற்கேதும் பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். ஆயிரம் பொய்களை அடுக்குடுக்காய்ச் சொல்லி அரசாங்கப்பணத்திலே சுகமாக படாடோபமாக வாழுகின்ற மக்களுக்கு நடுவே சொந்தக் காலில் நிற்கதற்காக படாதபாடுபடுபவர் அல்லவா இவர். நடந்து போகக்கூடிய தூரம் என்றால் நடந்தே பறந்திருப்பார். பஸ் வசதியுள்ள இடமானால் பஸ்ஸில் பிரயாணம் செய்திருப்பார். பஸ் தரிப்பிடம் செல்வதற்குமுன் மகன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருப்புத் தொடர்ந்தது.  

அப்படியென்ன அவசரமோ? நீதான் உருப்படாமல் திரிகின்றாய் என்றால், என் வேலைக்கு ஏன் வேட்டுவைக்கப் பார்க்கின்றாய்´´ என்றபடி கார்த்திறப்புக்காய் கையை நீட்டினார். கெதியாய் தா! நான் போக வேண்டும். ´´அது கார் அடிபட்டுப் போச்சுது´´ பதட்டம் ஏதுமின்றி அலட்சியமாகவிடையளித்தான் மகன். கனகருக்கு உச்சியில்  ஓங்கி அடிப்பது போல் இருந்தது.  கோபம் தலைகால் தெரியாது தாண்டவமாடியது. மகனுக்கும் அப்பாவுக்குமிடையே வாக்குவாதம் தொடர அது முற்ற மகனின் கைகள் தனது தந்தை சட்டையை இறுக்கப்பிடித்தது. தன் பலமெல்லாம் சேர்த்து தந்தையை தள்ளி விழுத்தினான். உடைந்து போனார் கனகர். ஒன்றே ஒன்று என்று கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்து பிள்ளை, தோளில் போட்டு சீராட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து செல்லமாய் வளர்த்த பிள்ளை. இன்று..... அவரால் இந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. 

          ஓடிப்போய்க் கதவைத் தாளிட்டார். ஓ..... என்று அழுதார். கதவைத் திறப்பதற்காகப் பதறினாள் மனைவி ராணி. எந்தத்தவறும் தான் புரிந்ததாக உணராது பதட்டமில்லாது அமர்ந்திருந்தான் மகன் கோபி. பாரிய முயற்சியின் பின் கதவு திறக்கப்பட்டது. அந்தரத்தில் தொங்கிய கால்களைக் கண்டு ஓ.... என்று தலையில் அடித்தபடி கதறினாள்  விதவையாய் பட்டம் ஏற்கப் போகின்ற  மனைவி ராணி. அவர் உயிரற்ற உடல் நோக்கி ஸ்தம்பிதமானான் மகன். இப்படியும் அப்பாவி அப்பாக்கள் ஐரோப்பிய நாடுகளிலே.......

இக்கதாபாத்திரங்களில் யார் குற்றவாளி?

ஆசிரியர் குறிப்பு:

இந்த வயிற்றில் இப்படி உருவுடன் இப்படித்தான் பிறக்க வேண்டும் என்று தீர்மானித்தா நாம் பிறந்தோம். பிறப்பு எம்மால் தீர்மானிக்க முடியாமல் இருக்கும் போது இறப்பை மட்டும் எப்படி எம்மால் தீமானிக்க முடியும். பொறஐமு என்பதைப் புரியாத மனிதர்களாய் நாம் வாழலாமா? திடீரென எடுக்கும் முடிவுகளைச் சற்றுத் தாமதித்துச் சிந்தித்துப் பார்த்தால், அந்த முடிவு கேலியாக இருக்கும். இதற்காகவா இப்படி ஒரு முடிவு எடுத்தோம் என்ற எண்ணத் தோன்றும். ஒருவேளை தந்தையாய்த் தனையனைப்பற்றிச் சிந்தித்திருக்கலம். இன்று கைவைத்தவன் நாளை கைவைக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம். இதற்கு வழிவகுத்தவர் தந்தையும்தானே. தட்டிக்கேட்க வேண்டிய நேரத்தில்விட்டுக் கொடுத்துவிட்டு காலங்கடந்த பின் எடுக்கும் முயற்சிகள் தோல்வியே. எதிலுமே அக்கறை இல்லாத மகனுக்குத் தனிவாகனம் வாங்கிக் கொடுத்தது எதற்கு? எனவே தந்தையும் குற்றவாளியே. ஒரு முறையே வாழுகின்ற வாழ்க்கையை இடைநடுவே முடித்துக்கொண்ட முட்டாளே இந்தத்தந்தை. 

         அடுத்துத் தாய். குழந்தை வளர்ப்பில் கூடுதலான பொறுப்பு தாயிடமே சாரும். தந்தையில் மதிப்பும் மரியாதையும் கொண்டுவர வேண்டியது தாயயின் கடமை அல்லவா. சிறுவயதில் இருந்தே தந்தையைப் பற்றிய தவறான பதிவு மனதில் பதிந்துவிட்டால், வளர்ந்தபின் மாற்றத்தான் முடியுமா? பிள்ளையைப் பெண்கள் வயிற்றில் சுமப்பார்கள். அது படைப்பின் மகிமையும் கட்டாயமும் கூட. தந்தை மார்பில் அல்லவா சுமக்கின்றார். சுகதுக்கங்கள் எல்லாம் துறந்து குடும்பத்திற்காய் ஓடாய்த் தேய்கின்றார். இந்த உண்மையைப் பெற்ற பிள்ளைகளிடம் நாளும் மந்திரமாய் ஓத வேண்டியது தாயின் கடமை. அப்போது தந்தையை மதிக்க மைந்தன் தவறமாட்டான். எனவே தாயும் குற்றவாளியே.
    
            அடுத்து மகன். துடிக்கும் இரத்தம் எது பற்றியும் சிந்திக்காது. வளரும் போதே எதிர்கால சிந்தனை பற்றிய நன் நூல்களைக் கற்கும் பக்குவத்தை வளர்த்தெடுக்க வேண்டும். எதையும் சிந்தித்து செயலாற்றும் தன்மையை வளர்க்க வேண்டும். பொறுப்புணர்ச்சி சிறுவயதிலிருந்தே பயிற்றுவிக்கப்படல் வேண்டும். அப்பாவில் அன்பு இருக்கும் அளவில் மரியாதையும் இருத்தல் வேண்டும். தந்தையின் முன் கால்நீட்டி இருத்தலே தவறு என்ற கலாசாரத்தில் வந்தவர்கள் நாம். கழுத்துவரை கை செல்ல முற்படுதல் முறையற்ற செயல் அல்லவா! முறையற்ற செயலால் கண் இழந்ததேயான வாழ்க்கைக்கு அடி எடுத்த மகனும் குற்றவாளியே. 

           எனவே ´´ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்´´ என்னும் பழமொழியில் மனம் பதித்து தம் வாரிசுகளை சரியான முறையில் வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து கடினமான இனிமையான வாழ்வை சுவையோடு வாழ அவதானமாக இருப்போம்.Share this article :

7 comments:

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான, வேதனையான பதிவு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பெற்றோர்கள் உணர வேண்டிய கருத்துக்கள்... அருமை... நன்றி அம்மா...

சந்திர வம்சம் சொன்னது…

சிறு வயதில் அப்பாவைக் கண்டதும் எழுந்தது நினைவில் வருகிறது. [நேரம் வாய்த்தால் பார்க்க:பத்மாவின் தாமரை மதுரை

rufina rajkumar சொன்னது…

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. என்னை பொறுத்தவரை தந்தை தான் முதல் குற்றவாளியாக தெரிகிறார். என்ன தான் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தாய்க்கு அதிகம் என்றாலும் மகனை வளர்ப்பதில் குழந்தைப் பிராயத்தில் தந்தையின் கண்டிப்பு அதிக பலன் தரும். தாயின் அன்பும் தந்தையின் கண்டிப்பும் ஒன்றை ஒன்று நிறைவு செய்தால் தான் அது முழுமை பெரும். தன்னை கை நீட்டும் அளவு இடம் கொடுத்து வளர்த்த தவறு ஒரு பக்கம் என்றால், அதை தாங்க மாட்டாது தற்கொலை முடிவு எடுத்தது அடுத்த தவறு.

kovaikkavi சொன்னது…

கருத்தாடலுக்குரிய தலைப்பு.
பணி தொடர நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

2008rupan சொன்னது…

வணக்கம்
சந்திரகெளரி

யார் குற்றவாளி? என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கம் மிகச் சிறப்பாக உள்ளது, உண்மையில் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இருந்திரந்தாள் இப்படிப்பட்ட பிரச்சினை வந்திருக்க மாட்டாது,20.11.2012இன்று உங்களின் பதிவு வலைச்சரம் கதம்பத்தில் பதிவிடப்பட்டள்ளது வாழ்த்துக்கள்
பார்ப்பதற்கு இங்கே சுட்டி
http://blogintamil.blogspot.com/

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Seshadri e.s. சொன்னது…

முடிவு வேதனையூட்டுவதாய் இருந்தது!நல்ல பதிவு!

எனது நூல்

எனது EBook

Versatile Blogger Award

Versatile Blogger Award

Fabulous Blog Ribbon Award

Fabulous Blog  Ribbon Award

திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு

திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு

தமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு

தமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான    முதல்பரிசு

ஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்

ஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை  கவிதை போட்டிக்கான இரண்டு  முதல்பரிசுகள்

Test Footer 3

kowsy2010 in youtube

Loading...

Blog Archive

எனது மற்றய வலை

இவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது

MyFreeCopyright.com Registered & Protected

Popular Posts

Blogger இயக்குவது.
Das Wetter in Solingen

Google+ Badge

 
Support : Creating Website | Kowsy | Kowsy
Proudly powered by Kowsy
Copyright © 2011. gowsy - All Rights Reserved
Template Design by சந்ரு Published by EMN