வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

சனி, 29 செப்டம்பர், 2012

உறவே உன்னை நான் வெறுக்கின்றேன்
அந்திவேளை ஆதரவான தென்றலே!
சிந்தனை சிதறடிக்கும் பொழுதுகளில்
நாற்காலியை முற்றத்தில் போட்டு – உன்
ஸ்பரிசத்தில் உறைந்தபடி சுவாரசியமாக
நூல்களில் நுழைவேனே சுவைப்பேனே – என்னுடன்
ஒட்டி உறவாடிய நீ
எப்போது சூறாவளியாய் மாறினாயோ – பலர் 
சோகங்களைச் சுமந்தாயோ அன்றுதொட்டு 
காற்றே! உறவே! உன்னை நான் வெறுக்கிறேன்.


சூரியன் இளைப்பாறும் சொர்க்க வாசலை
கண்கள் சுவைக்க 
தங்கமென மின்னும் அலைக்கரங்களை
மனது இரசிக்க
சங்கீதமாய் சலசலக்கும் ஓசையிலே
என்னை நான் மறக்க – என்
நெஞ்சம் உன்னோடு உறவாடி மகிழ்ந்ததே
கவிதைப்புயல் கடகடவென்று பிரசவமாகியதே – ஆனால்
எப்போது நீ பொங்கியெழுந்து 
அப்பாவி உயிர்களை விழுங்கி ஏப்பமிட்டாயோ அன்றுதொட்டு
கடலே! உறவே உன்னை நான் வெறுக்கிறேன்.

கருத்தொட்டுக் கன்னியானேன் - நீங்கள்
வாழும்வரை வார்த்தை தவறவில்லை
பொங்கிப் பூரிக்கும் வயதினிலே
அந்தரங்க ஆசைகள் அசை போடும் பொழுதுகளில்
அன்பான தந்தை ஆதரவான தாயார்
சமுதாயக் கண்ணாடியில் தளும்பாது நடக்கும்
தரமான குடும்பம் தரமேதும் குறையாது வாழ
மனதுக்கு வேலி போட்டேன்
அன்புக்கு அடி பணிந்தேன் - உங்கள்
ஆசைகள் தீர்க்கப் பட்டங்கள் சுமந்தேன்
அத்தனையும் உங்களுக்காய் அர்ப்பணித்தேன் - என் 
மடி தவழும் வாரிசு உங்கள் மடி தவழ வேண்டுமென்று
திட்டம் போட்டேன் கட்டளையிட்டேன்
கேட்டீரா! என் ஆசை தீர்த்தீரா! 
கடமை முடிந்ததும் கடையேறி விட்டீரே!
பெற்றோரே! உறவே உங்களை நான் வெறுக்கிறேன்கூடிக்கும்மாளமிட்டோம் கூடிப்பிறந்தோரிடம் 
கூறாத இரகசியங்கள் கூறிப்பரிமாறினோம்
உள்ளொன்று வைக்கவில்லை 
உடலிரண்டாய் உயிரொன்றாய் உலகில் வலம் வந்தோம்
வாழ்வின் உயர்வுக்கு வாழ்க்கைப் பொழுதுகள் தாரைவார்த்தோம்
இன்று நீ எங்கே?
நட்பே! உறவே! உன்னை நான் வெறுக்கின்றேன்.

நீயின்றி நானில்லை 
என்னுயிர் உன்னுயிர் வேறல்ல
என் நிழலில் என்றும் நீ தொடர்வாய்
வாழ்வென்னும் வண்டிலைச் செலுத்தும் சக்கரங்களாவோமென
வாழ்வின் சாட்சியாய் முத்தாய்க் குழந்தைகளைப் பெற்றெடுத்தோம்
சக்கரத்தை உடைத்ததும் ஏன் சத்தியங்கள் மறந்ததுமேன்
துணையே! கணவனே! உறவே! உங்களை நான் வெறுக்கின்றேன்


பாசமெனும் நீரூற்றி பரிவு என்னும் ஒளி கொடுத்து
பாதுகாப்பெனும் காற்று வீசி வாழ்க்கையெனும் வேரூன்ற
வளமான வாழ்வை வாரிவழங்கி வளர்த்தெடுத்த சேய்
கண்டதே காட்சி கொண்டதே கோலமென
எம்மைக் கணக்கெடுக்கவில்லை
அன்பை வன்பாக்கினான் பாசத்தை மோசமாக்கினான்
அணைப்பை நெருப்பாக்கினான்
அனைத்தையும் தூசாக அர்ப்பமாக நினைத்து
காதலியருகிருக்க கடைக்கண்ணால் பார்வையிட்டு
காரிலே பாதையைக் கடக்கின்றான்
மகனே! உறவே! உன்னை நான் வெறுக்கின்றேன்

  உறவுகள் வரலாம் மறையலாம்
  வருவதும் மறைவதும் உறவுகள் இலக்கணம்
  உள்ளத்து உரம் உறைந்தால் - வாழ்வில்
  உயிருள்ள வரை சோர்வில்லை
  மறதியுள்ள வரை சோகமில்லை.

18 கருத்துகள்:

அ. வேல்முருகன் சொன்னது…

இயற்கையை எதிர்த்து
இகலோகத்தில் வாழ்வேது
இனியது இடராகலாம்
இடர் தொடராகா

எனவே
எதையும் ஏற்போம்

T.N.MURALIDHARAN சொன்னது…

வித்தியாசமான கோணத்தில் வித்தியாசமான கவிதை.
நீங்கள் என் வலைப்பாக்கம் சமீப காலமாக வருவதில்லையே!நேரம் இருப்பின் வருகை தரவும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான சிந்தனை வரிகள்....

சந்திரகௌரி சொன்னது…

நன்றி சார்

சந்திரகௌரி சொன்னது…

நீண்ட விடுமுறை அதனாலேயே எதிலும் முழுமையாக ஈடுபட முடியவில்லை

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி

Ramani சொன்னது…

உறவின் பல்வேறு மாறுபாடுகளைச்
சொன்னவிதமும்.வெறுப்பதாகச் சொன்னாலும்
உறவின்பால் கொண்ட உள்ளார்ந்த மதிப்பைச்
சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
தொடா வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் அழகான சொல்லாடல்கள்

மாறுபட்ட சிந்தனையும் சிறப்பான ஆக்கமும்

தென்றலாய் வருடிய போது சுகமாய் உள்ளது
அதுவே புயலாய் மாறும் போது தாங்கத்தான் முடியவில்லை

அன்பின் அலைகளைத் தொட்டு மகிழ்கிறோம், அதே
சுனாமியாய் மாறும் போது எப்படித் தாங்க முடியும்?

பச்சை இலைகள் துளிர்த்து வரும் போது, மரத்திலிருக்கும்
பழுத்துக் காய்ந்த இலைகள் சருகாகி விடைபெற்றுச் செல்வது இயற்கையே .. அதையே எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்! ;)

தொடரும்......

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:

கூடிக்கும்மாளமிட்டோம்.... கூடிப்பிறந்தோரிடம்
கூறாத இரகசியங்களைக் கூறிப்பரிமாறினோம்... ;)))))

சபாஷ்! பாராட்டுக்கள், வாழ்த்துகள்,

பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன்
VGKSasi Kala சொன்னது…

மறதியுள்ள வரை சோகமில்லை
மறக்கத்தெரியாத இனமாக மனித இனம் இருக்கிறதே என்ன செய்வோம் சகோ. சிந்திக்க வைத்த வரிகள்.

Seshadri e.s. சொன்னது…

வித்யாசமான, சிந்திக்க வைத்த பதிவு! நேரம் கிடைக்கையில் என் வலைப்பூவிற்கு வருகை தாருங்கள்! பகிர்விற்கு நன்றி!முடித்த விதமும் அருமை!

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி சார் . தொடருங்கள் . வாழ்த்துகள்

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி சார் . தொடருங்கள் . வாழ்த்துகள்

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி சார் . தொடருங்கள் . வாழ்த்துகள்

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி நிச்சயமாக

சந்திரகௌரி சொன்னது…

சில விடயங்களுக்கு நிச்சயமாக மறக்க முயற்சிக்க வேண்டியுள்ளது . மிக்க நன்றி

மஞ்சுபாஷிணி சொன்னது…

அன்பின் சந்திரகௌரி,

இன்று வலைச்சரத்தில் உங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கோப்பா..

இவரின் இனிமையான குரல், பாடிக்கேட்டிருக்கிறேன். திண்மையான பதிவுகள் வாசித்து அறிந்திருக்கிறேன். மென்மையான மனது பேசி அறிந்திருக்கிறேன். இவரின் நட்பு எனக்கு கிடைத்தது எனக்கு மிக சந்தோஷம் என்றே சொல்வேன். இவர் பதிவுகளில் உயிர்ப்பு இருப்பதை நானே உணர்ந்திருக்கிறேன் பலமுறை.... உங்களுக்கும் படிக்கத்தோணுகிறது தானே இவர் பதிவுகளை?? பார்ப்போமா?

கண்ணுக்கு ஏன் கறுப்புக்கண்ணாடி?
தாயார் பாடல்
உறவே உன்னை நான் வெறுக்கின்றேன்

அன்புடன்
மஞ்சுபாஷிணி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_4.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...