• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 24 அக்டோபர், 2012

  கவிதை பாடலாம்
       சோகம் மனதுள் புகுந்தாலும் சொல்லொணாத்துயர் சூழ்ந்தாலும் அணைப்பொன்றை மனம்நாடும். அதனாலேயே ஓடிவந்து தலையணையில் முகம் புதைத்து விக்கி விக்கி அழுதாள் காவியா. காவியா மனவேதனையின்  காரணம்   அறிய மகளை அணைத்தெடுத்தாள் தாய். உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் தாயன்றி வேறு எத்துணையும் தாயின் பரிவைப் பெறமுடியாது. தலையணை தவிர்த்து தாயின் தோளணை தேடி எழுந்து கட்டியணைத்து புலம்பினாள்.
   

  "யாப்பெருங்கலக்காரிகை கற்றேன்ளூ பரணி கற்றேன்ளூ கவிதை நூல்களெல்லாம் கரைத்துக் குடித்தேன். ஆனால் கவிதைப் போட்டியில் வென்றவளோ, கல்வி அறிவு சிறிதும் இல்லாதவள். ஆங்கிலத்தை இணைத்தெல்லாம் கவிதை பாடினாள். இது தான் கவிதை தருமமா? இதை நான் ஏற்க வேண்டுமா?

  என்று கலங்கினாள். ஒன்றிலே ஆழமான ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதில் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தாலும் அதனை இழக்கும்போது மனம் சோர்ந்துவிடும். இதயமே வெடித்துவிடுவது போன்று மனம் வருத்தமடையும். இதயம் வடித்த கண்ணீர் கண்கள் வழியாக தன் வேதனையை வெளிக்காட்டி தாரைதாரையாக அத்தாட்சி பணியை மேற்கொண்டது.

  மகளின் கண்ணீரின் காரணம் கண்டறிந்த தாய்,

                "தலையிடி காய்ச்சல் வந்தால்
                தயவுடன் மருந்தைக் கேளாய்
               மலையிலுள்ள கல்லைத் தூக்கித்
                தலையில் போட்டால்
               தலையிடி நின்று விடும்''
        
               "பைசாவைக் கொடுத்து
                 நைசாக வாங்கிப்
               பையன்கள் ஊதும் பலூன்
                 படார் படார்''
           
               "உச்சியில் நாலு மயிர்  ஓரமெல்லாம் தான் வழுக்கை
               குருத்தெடுத்த வாழை போல் கூனிக் குறுகி நின்றார்''

  இவையெல்லாம் கவிதை போல் உனக்குத் தெரிகிறதல்லவா? இங்கு உவமையில்லையா? எதுகையில்லையா? ஆனால் இதைப் பாடியவர் யாரென்று தெரியுமா? பாடசாலைப் படியை மிதிக்காத ஒரு பாமரன்''

  விக்கித்து நின்றாள், மகள்.
                  
  "இதிலிருந்து என்ன தெரிகின்றது. ஆராரோ ஆரிவரோ தாலாட்டுப் பாடல் தொட்டு ஒப்பாரி அமங்கலப் பாட்டு வரை பாடல் மனித வாழ்வில் ஒட்டிக் கொண்டிருக்கின்றது. பாட்டுப் பாடும் புலவனும் தேடிப்பெறும் கரு வாழ்வில் கலந்து நின்று மிளிர்ந்து நிற்கும் நிகழ்வுக் கோலங்கள். விறகை வெட்டும் விறகு வெட்டியும், வெத்திலை உரலில் போட்டு வாய்சிவக்கக் கவிபாடும் எம்மூர் பாட்டியும் இன்னும் எமது மனக் கண்ணில் நின்று நிலைக்கும் கவிஞர்கள்.
                   

  கவிபாடக் காவியம் கற்றிருக்க வேண்டும், இலக்கணம் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். என்ற அவசியமில்லை. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும். கேள்வி ஞானமும், உணர்ச்சிப் பெருக்கும் கற்பனை வளமும் நிறைந்து விட்டால், மூளை கொட்டிக் கொண்டே இருக்கும், கவிதை பெருகிக் கொண்டே இருக்கும். இப்படித் தான் பாடவேண்டும் என்ற வரன்முறை கொண்டு பாடியிருந்தால், புதுக்கவி புனைந்து பாரதி இன்றுவரை எல்லோர் இதயங்களிலும் இடம் பிடித்திருப்பாரா?
                   

  அந்நிய மொழியைத் தமிழ் மொழியில் கலந்து கவிதையின் சிறப்பைச் சீர்குலைப்பதாகப் பலர் கலங்குகின்றார்கள். மொழி எமது எதிhகாலத் தலைமுறையினரைச் சென்ற சேர வேண்டும் என்று அல்லும் பகலும் கண்முழித்துக் கட்டுரைக்கும் எமது முயற்சி என்னாவது. எமது தமிழை எமது தலைமுறையினர் நாடி வரவேண்டுமென்றால், இலகுபடுத்தல், விளங்கச் சொல்லல் அவசியம். அந்த விளக்கம் எங்கே கிடைக்கும்? அவர்கள் பரீச்சயமான மொழியின் மூலம் தானே கிடைக்கும். அதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளல் தவறா? சூழ்ச்சியில் புகழ்ச்சி காணல் எமது புராணக்கலை அல்லவா? அருணகிரிநாதர் தமிழில் வடமொழி கலந்த போது  நாம் ஏற்கவில்லையா? மணிப்பிரவாளநடை என்று நாம் இரசிக்கவில்லையா?
          

              "வால வ்ருத்த குமார னெனச்சில
                வடிவு கொண்டுநின் றாயென்று வம்பிலே
              ஞாலநின்னை வியக்கு நயக்குமென்
                நடனங் கண்டும் வியவாமை யென்சொல்கேன்
              பால லோசன பாநுவி லோசன
                பற்ப லோசன பக்த சகாயமா
              கால காலத்ரி சூல கபாலவே
                கம்ப சாம்ப கடம்ப வனேசனே''

  இது எப்படியிருக்கிறது. மணிப்பிரவாளநடை.
             
              அடுத்து காவியா! சொற்களைக் கவிச்சுசைக்கேற்ப பிரித்துச் சொல்லல், நீட்டிச் சொல்லல், போன்று சந்தத்திற்கேற்ப தன் சுதந்திரத்தைக் கையாள்வான் கவிஞன். இதற்காகவே அளபெடை இலக்கணத்தில் இடம்பெற்றது. இலங்கு என்பது பிரகாசம் எனப் பொருள் பெறும். ஆனால் பாட்டில் ஓசை குறையுமிடத்து அந்த ஓசையை நிறைத்தற் பொருட்டு இலங்ங்கு என்று ஒற்றளபெடை பயன்படுத்தல் மரபல்லவா? இதே போலவே ஐயா என்னும் சொல் அய்யா எனவும் ஒளவை என்னும் சொல் அவ்வை எனவும் வழங்கப் படுகின்றது. இந்த ஐ, ஒள என்னம் இரு சொற்களும் இலக்கணத்தில் போலி என்று அழைக்கப்படுகிறது. எனவே, அதுவும் கவிஞன் சுதந்திரம்.
               

  இதைவிட இன்னுமொரு சர்ச்சை எம்மவரிடையே நடமாடுகின்றது. ஓரவர் பயன்படுத்திய சொல்லை, பொருளை வேறு ஒருவர் கையாளுகின்றார். என்பதே அது. இதுவே பலவித ஆராய்ச்சியின் பலனாக நான் கண்ட உண்மை என்னவென்றால்,
       
         "கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
          என்ன பயனும் இல''

  என்னும் திருக்குறளை மனதில் பதித்த கம்பர், மாடத்திலே மலர்ப்பந்தாடிய சீதையையும் வீதியில் மாமுனியுடன் வந்து கொண்டிருந்த இராகவனையும் நோக்க வைக்கின்றார். ஷஷகண்ணொடு கண்ணினைக் கவ்வி..''


   என்று வரிகளைத் தொடுக்கின்றார். இதேபோல் கம்பரைக் கையாண்ட எமது கண்ணதாசனை நோக்கினால், கம்பர் ஓரிடத்தில் பயன்படுத்திய

                 "தோள் கண்டார் தோளே கண்டார்
                   தொடுகழல் கமலமன்ன
                   தாள் கண்டார் தாளேகண்டார்
                   தடக்கை கண்டாருமஃதே.......''

  என்னும் வரிகளை

                                   " தோள் கண்டேன் தோளே கண்டேன்
                                     தோளில் இரு விழிகள் கண்டேன்''


  என்று பாடல் யாத்துள்ளார்.

  இதேபோன்று ஆலயமணி என்னும் படத்திற்கு கண்ணதாசனிடம் ஒரு பாடல் கேட்கப்பட்டது. அவரும்.
                
               " தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
                அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே –அந்த
                தூக்கமு;ம் அமைதியும் நானானால் ...''

  என்னும் பாடலை அனுப்பியிருந்தார். ஆனால், முதல் கிழமை வாலி எழுதி அனுப்பியிருந்த பாடல் போல் இப்பாடல் காணப்பட்டிருந்தது. அது

               "தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்
                சாந்தம் உன் மனதில் நிலவட்டும் - அந்த
                தூக்கமும் சாந்தமும் நானாவேன்''

  இங்கு அமைதி சாந்தமானது நெஞ்சு மனதானது. இருவரின் எண்ணப் போக்கும் ஒன்றாயிருக்கிறதே எனக் கண்ணதாசனிடம் வினவியபோது, அவர் கூறிய பதில்  ஆ.மு.தியாகராஜ பகவதர் அம்பிகாபதியாக நடித்த படத்தில் வந்த  


                   "தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும். 
                    சாந்தம் உன் மனதில் நிலவட்டும்! – ஆகா. 
                   அந்தத் தூக்கமும் சாந்தமும் நானானால்"

   என்னும் வசனமே இருவர் மனதிலும் நின்று நிலவியது என்பது தெரிய வந்தது.


  அதேபோல் அண்ணாத்துரை வரிகள் கூடு கண்ணதாசன் பாடல்களில் பிரதிபலித்திருப்தை அறியலாம். வேலைக்காரி என்னும் படத்தில் கோபத்தில் இருக்கும் கதாநாயகனுக்கு நண்பன் 


  "கத்தியைத் தீட்டாதே. உன் புத்தியைத் தீட்டு"

   என்று கூறுவதாக வசனம் எழுதியிருந்தார். இதனையே கண்ணதாசன் விளக்கேற்றியவள் என்னும் படத்திற்கு பாடல் எழுதும்போது

                   "கத்தியைத் தீட்டாதே

                   உந்தன் புத்தியைத் தீட்டு

                   கண்ணியம் தவறாதே

                   அதிலே திறமையைக் காட்டு"


   என்று பாடல் எழுதினார்.

   இன்னுமோர் இடத்தில் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சிக்கு மாறியபோது ஆதரவாளர்கள் அனைவரும் சிவாஜி கணேசனை தரக்குறைவாகத் திட்டியபோது அண்ணாத்துரை அவர்கள்     


                        "எங்கிருந்தாலும் வாழ்க"

   என்று வாழ்த்தினாராம். இதுவே பிற்காலத்தில் நெஞ்சில் ஒரு ஆலயம் என்னும் படத்தில்

                       "எங்கிருந்தாலும் வாழ்க

                        உன் இதயம் அமைதியில் வாழ்க"
   

   எனக் கண்ணதாசன் அவர்கள் வரிகள் அமைக்கக் காரணமாயிற்று.  

          
                               எனவே, கற்றது கருத்தில் நிறைந்தால் அது எப்போதோ கவிவரியாக வெளிவரும் அது தன்னையறியாமல் உணர்ச்சி வேகத்தில் கொட்டும் போது மூளையென்னும் பண்டகசாலையிலிருந்து பெருக்கெடுக்கும்.
                               
                               அதனால், கவிதைக்கு யாரும் உரிமை பாராட்ட முடியாது. அது இப்படித்தான் இருக்க வேண்டும். இலக்கண வரம்பு முறைக்குள் அமைய வேண்டும். என்பதெல்லாம் அவசியமில்லை. இலக்கணத்தில் முழுக்கவனமும் நீ கொண்டதனால், கவிச்சுவையைத் தொலைத்திருக்கின்றாய்  என்று நினைக்கின்றேன். அனைவரும் கவரும் உத்தியைக் கையாண்டு அவள் வெற்றி பெற்றிருக்கின்றாள். இது மரபுக் கவிதை பாடும் போட்டி என்று வந்திருந்தால், உன்னுடைய கவிதை வெற்றி பெற்றிருக்கலாம். அதனால், மகளே ஒருவன் முன்னிலைக்கு வரவேண்டுமானால், சந்தர்ப்பம் சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப தொழிற்படவேண்டும் இந்த உண்மையை உணர்ந்துகொள் காவியா. இப்போது புரிகிறதா? யாரும் கவிபாடலாம் என்னும் கவிதை தருமம்'' என்று கூறித் தாய் மெல்லச் சிரித்தாள்.

                தாயின் நீண்ட விளக்கத்தில் தெளிவுபெற்ற மகளும் காலத்துக் கேற்பக் கவிபாடும் உத்தியில் தன்னை ஈடுபடுத்தும் முனைப்புடன் அகக் கண்ணைத் திறந்தாள். அவள் கற்ற இலக்கணமும் தாயின் கருத்தும் ஒருங்கிணைய கற்பனைக்கு மோட்டர் பூட்டினாள். அவள் சிந்தனையின் தலைமையகம் தொழிற்படத் தொடங்கியது.

  9 கருத்துகள்:

  1. அங்கங்கே கேள்விகள் - உண்மையான கேள்விகள்...

   வள்ளுவர், கம்பர், கண்ணதாசன், வாலி, தியாகராஜா பாகவதர் என அனைவரையும் பகிர்வில் கொண்டு வந்தது சிறப்பு...

   நன்றி...

   பதிலளிநீக்கு
  2. மகளுக்குச் சொல்வதாக பாவனை செய்து
   எம் போன்று அனைவரும் அறிய ,
   நாங்கள் அறியாத பல
   அரிய செய்திகளை சொல்லிச் சென்றது
   மனம் கவர்ந்தது
   தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்
   வாழ்த்துக்களுடன் .....

   பதிலளிநீக்கு
  3. யாரும் கவிபாடலாம் சிறப்பான விளக்கம்.

   பதிலளிநீக்கு
  4. அழகான பாடல் வரிகளும் ஆங்காங்கே விளக்கங்களும், மிகவும் அருமை.

   எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் கண்ணதாசனைப் பற்றியும் அவர்களின் பாடல் வரிகளையும் பகிர்ந்துள்ளது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

   பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
  5. நீண்ட ஆனால் சுவாரஸ்யமான விளக்கம்...

   பதிலளிநீக்கு
  6. தமிழ்....
   அழகுத்தமிழ்....
   செந்தமிழ்....
   இதில் தொடங்கும் வேள்வி கவிதை, கதை, கட்டுரை என்று பல பரிமாணம் எடுக்கிறது.... தமிழில் இலக்கணமும் இலக்கியமும் அறிந்த கவிஞர்கள் மிக அற்புதமாக அசத்தலாக நொடியில் படைத்துவிடுவார்கள்....

   ஆனால் இலக்கணமே அறியாத என்னைப்போன்றோர், இலக்கியம் என்றாலே என்னவென்று அறியாத என்னைப்போன்றோர் என்ன செய்வார்? எப்படி அனுபவிக்கமுடியும் தமிழின் ருசியை...

   அதற்காகவே முளைத்த நாட்டுப்புற பாடல்களும், எளிய பேச்சுத்தமிழிலும் உரைநடையிலும் அமைந்த தாலாட்டு பாடல்களும் சொல்லி செல்லும் கருத்துகள் மிக மிக அதிகம்...
   புதுக்கவிதைகள் எதுகை மோனையுடன் விளக்கிய கவிதை வரிகள் மிக பிரமாதம் சந்திரகௌரி….

   முதலில் இலக்கணமாக வெண்பா அமைத்தால் நானும் விழி பிதுங்குவதுண்டு…. மகள் எத்தனை கற்றாலும் கற்றலுக்கான அமைதியும் அடக்கமும் மரபுக்கவிதை மட்டுமே கவிதை அல்ல என்பதை உணர்த்த தாய் சொன்ன உவமைகளும் பாடிய கவிதை வரிகளும் மிக மிக சிறப்புப்பா…

   கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்பதில் தொடங்கி.....

   அன்றைய நாளில் இருந்து இன்றைய ஸ்டைல் வரை அசத்தும் கவிஞர் வாலி....

   இன்றும் என்றும் தேனாய் இசைக்கும் கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள்...

   ஒரு காலத்தில் எம் கே பாகவதர் என்றால் அவர் குரல்வளம் தான் முதலில் நம் நினைவுக்கு வருவது....

   இப்படி எல்லோரின் திறமையையும் வகைப்படுத்தி சொன்னது மிக சிறப்புப்பா...

   பாடறியேன் படிப்பறியே பள்ளிக்கூடம் தானறியேன் அப்டின்னு சுஹாசினி மேடையேறி பாடினப்ப தான் பாட்டின் பொருள் அறிந்து ரசிக்க ஆரம்பித்தனர் மக்கள்…. அதற்கு முன் பிரம்மாண்டமாய் பாடிய மரி மரி நின்னே ராகத்தை அறிந்தவர் பொருளுடன் ரசிக்க மற்றோர் புடவை டிசைன் நகை வீட்டுக்கதை சமையல் கதை பற்றி பேசிக்கொண்டிருப்பதை உணர்த்துவார் சுஹாசினி சிந்துபைரவி படத்தில்…

   அதுபோல தமிழில் கவிதைகள் எழுத படைப்புகளை படைக்க மொழி அவசியம் என்றாலும் அதனுடன் க்ரியேட்டிவிட்டி, ஈடுபாடு, கற்பனை வளம் சிந்திக்கும் திறன், சிந்தித்ததை அப்படியே படைப்பதில் இருக்கும் ஆற்றல் இதெல்லாம் அவசியம் என்பதை எத்தனை விதமாக உணர்த்தி இருக்கிறார் தாய்… உணர்ந்து தெளிந்தது மகள் மட்டுமல்ல வாசிப்போரும் தான் சந்திரகௌரி….


   இத்தனை பொறுமையாக இத்தனை அழகாக வைரக்கல் பதித்த மணிமகுடம் போல் இந்த பகிர்வு பிரகாசிக்கிறதுப்பா….ஹாட்ஸ் ஆஃப் சந்திரகௌரி…
   மனம் நிறைந்த அன்புநன்றிகள் சந்திரகௌரி பகிர்வுக்கு…

   பதிலளிநீக்கு
  7. கிராமத்து தெம்மாங்கு பாடல்கள் வியக்கவைக்கும்.
   [உ.ம்]"மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே!"
   ஏற்றம் இரைக்கும் இவர் என்ன படித்தார்?
   அழகான பதிவு.

   பதிலளிநீக்கு
  8. அருமையானதொரு விளக்கம்

   ஒரு செயலை விளக்கும் போது கவிஞன் வார்த்தைகளுக்கு எங்கு போவான். நீங்களும் நானும் தூக்கத்தை தூக்கம் என்றுதான் சொல்ல முடியும்

   மொழி என்பது மக்களுடையது, பேசாத எதும் மொழியாக முடியாது, திராவிட மொழி குடும்பத்தில் அப்படிதான் துளு காணாமல் போய் விட்டது.

   எனது கருத்து

   மொழி ஒரு கருவி - மக்களிடம் தொடர்பு கொள்ள

   பேசுவதை எதிராளி புரிந்து கொண்டு சரியான பதிலை சொல்ல வேண்டும். அதுவே மொழி

   எதிராளி புரிந்து கொள்ளவில்லையென்றால்?......

   கவிஞர் காசி ஆனந்தன் தமிழனா, தமிங்கிலனா என்ற புத்தகத்தில் ஒரு ஐந்து வரி பத்தி ஒன்றில் தமிழில் எத்தனை மொழிகள் கலந்திருக்கிறது என்பதை உதாரணத்தோடு கூறுவார். ஆம் அதில் கிரேகம், லத்தீன், சீனம், அரபி, சமஸ்கிருதம் இன்னும் சில மொழிகள். ஆனால் அவை அனைத்தும் தமிழாக தோன்றம் கொண்டுவிட்டன.

   அதே நேரத்தில் எந்த மொழியும் தன் தனித்தன்மையை இழந்து விடக் கூடாது.

   புதியன ஒரு மொழியில் சாத்தியம் என்றால் உன் மொழியிலும் சாத்தியம்

   குழந்தைக்கு எந்த மொழியும் தெரியாது, பழக பழகதான் கற்றுக் கொள்கிறது.

   முதலில் மொழியில் களையெடுக்க வேண்டும்

   பழக பழக தான் வார்த்தைகள் வசப்படும்

   கணணியோ, கைப்பேசியோ 20 - 30 ஆண்டு முன் தோன்றிய சொல்.

   மாறா முடியாது, பழகி விட்டேன் என்றால் ஒன்றும் செய்ய இயலாது.

   வள்ளுவனை, கம்பனை, கண்ணதாசனை, பாகவதரை, வாலி இன்னும் பலரை நம்மொழியில் படிக்கும்போது கவி கனிந்து வராதா!   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...