• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வியாழன், 6 டிசம்பர், 2012

  கணனி அருகேயோர் அம்மா

  Image Host

         கள்ளி என் கடைக்குட்டி – ஏன்
         கன்னத்தில் நீர் வடித்தாய்
         பொல்லாப்பு யானொன்றும் புரியவில்லை
         பெண்ணாய் மகவிரண்டைப் பெற்றுவிட்டேன்
      

         செல்லப்பிள்ளை உன் செவ்விதழ்கள்
         சில்லறை கொட்டவில்லை – உன்
         சிந்தையில் உள்ளதைத் தாயறிதல்
         விந்தையொன்றும் இல்லை.

         பத்தரை மாற்றுத் தங்கமே
         பண்பில் நிறைகுடம் நீயன்றோ
         பத்துமாதம் உன் அக்காளும் உன்போல்
         பத்திரமாயென் வயிற்றில் குடியிருந்தாள்.
     


  மூவாறு வயதாகியும் தாயின் முகம்பார்த்தே தூங்கும் மகளைக் கட்டிலில் விட்டு வந்து கதிரையில் சட்டென்று சாய்ந்தாள், சாந்தி. கண்ணீர் கண்களின் ஓரமாய் வடிந்து இதழ்களில் உப்புக் கரித்தது. சின்னவயதில் அக்காள், தங்கை இருவரினதும் சில்லறைச் சண்டைகளைச் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் பார்த்த இரசித்துள்ளாள். அக்காவைவிட ஒருபடி உயர வேண்டும் எனத் தங்கை எடுக்கும் முயற்சிகளைத் தட்டிக் கொடுத்துத் தாயாய் ஒத்துழைப்பும் தந்துள்ளாள். அக்கா பாட வாயெடுக்க அதை அற்புதமாய்ப் பாடி முடித்து அப்பா அம்மா பாராட்டைப் பெற்றுவிடுவாள், தங்கையும். போட்டி வளர்ச்சிக்கு உறுதுணையென்று தூபம் போட்டு வளர்த்தவள் அல்லவா, தாய். ஆனால், பத்துப் பிள்ளைப் பெற்றாலும் தாயன்பு பத்துப் பேருக்கும் மாற்றமில்லாது பகிர்ந்தளிக்கும் பரிசுத்த நீரல்லவா. பெற்றோர்களாகிய தாம், வயோதிப காலத்தின்பின் சகோதரிகள் இருவரும் தமக்குள் தாமே துணையாய் வாழ்வை இங்கிதமாய்க் கழிப்பார்களென்ற நம்பிக்கையில் வாழ்க்கையைச் செலுத்தும் பெற்றோர். சஞசலத்தில் இன்று தவித்தனர். குமணன் இளங்குமணன் வாழ்க்கைபோல் தமது குஞ்சுகள் இரண்டும் தம்மைத்தாமே கொத்தித் தின்றுவிடுமோ என்று பேதலித்தனர்.
                     

                      இருவருக்கும் கொள்வனவு செய்யும் பொருட்களில் சிறிது வேறுபாட்டைக் கண்டால், அல்லது அக்காவிற்கு ஏதோ ஒரு பொருள் பொருத்தமென்று கண்டு அதை வாங்கி வந்தால், போதும்,  ``உங்கள் செல்ல மகளுக்குத்தான் எல்லாம் வாங்குவீர்கள்´´என்று குறையைப் போட்டுவிடுவாள், இளையவள். ஆனால், மூத்தவளோ இதைப் பொருட்படுத்துவதாய் இல்லை. ஏட்டிக்குப் போட்டியாய் வார்த்தையை எடுத்தெறிந்து கொள்ளும்போக்குச் சிறிதும் இல்லை. ஆனால், கடைக்குட்டி என்று கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்த சின்னவள், பண்பிலே நிறைகுடம், பாசத்திற்கு உறைவிடம் அக்காவைப் பிரிந்திருக்கும் வேளைகளில் பிதற்றித் திரிவாள். ``எங்கே, எங்கே´´ என்று அலைந்து திரிவாள். ஆனால், பெற்றோர் பாசம் பகிர்ந்து கொள்ளும்போது மனதுள் வெம்புகிறாள். வார்த்தைகளால் தாயை வம்புக்கு இழுக்கிறாள். அன்றும் அவ்வாறே உயர்கல்விக்கு உயர்ந்ததான பெறுமதியில் உயர்வான பொருளொன்று கட்டாய தேவை கருதி மூத்தவளுக்காய் வாங்கப்பட்டது. அக்காட்சி பொறுக்காது கண்ணீர் வடித்தாள், கட்டிலில் படுத்திருந்த தங்கையென்ற உடன்பிறப்பு. அறிவுரை ஆயிரம் முறை ஆறுதலாய்க் கூறியும் அதை மனதில் நிறுத்த முடியாத மகளை எண்ணிக் கலங்குகிறாள், தாய். 
                       
  இங்கு காட்சி காட்டப்பட்டுள்ளது. முடிவறியாத் திரைப்படமாய் வாசகர்கள் சிந்தனை சிறகடிக்கப்பட்டு அறிவுரைகளும், ஆலோசனைகளும், அநுபவங்களும் பகிரப்படும்போது கணனி காட்டும் கருத்துகளில் தனக்குரிய சாதகங்களைச் சேகரிப்பாள், சாந்தி.

  5 கருத்துகள்:

  1. நானும் அதிகப் பாசத்துடன் கூடிய
   இரண்டு பெண்களுக்கு தந்தையாய்
   இருப்பதனால் இதுபோன்ற நிகழ்வுகளை
   சந்தித்துச் சமாளித்துக் கொண்டிருக்கிறேன்
   நான் இவைகளை சுகமான தேவையான சுமைகளாகக்
   கொள்வதனாலோ என்னவோ வாழ்க்கை
   சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருக்கிறது
   வயதும் அனுபவமும் கொஞ்சம்
   கை கொடுத்துக் கொண்டிருக்கிறது
   வேறு எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை   பதிலளிநீக்கு
  2. பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பாட்ட குழந்தைகள் உள்ள எல்லோர் வீடுகளிலும் இந்தப்பிரச்சனைகள் உள்ளன. நம்மையறியாமல் ஒருவரை மட்டும் எதற்காவது பாராட்டி விட்டாலோ, அல்லது ஒருவரிடம் மற்றொருவரைப்பற்றி ஒப்பிட்டு ஏதாவது சொல்லிவிட்டாலோ, போச்சு.

   அது சிலர் மனதில் ஆழமாக வேரூன்றி பதிந்து நாளாக நாளாக மிகப்பெரிய பிரச்சனைகளையும் தோற்றுவித்து விடுகிறது.

   தாங்கள் சொல்வது போல தாயன்பு என்பது எவ்வளவு குழந்தைகள் இருந்தாலும் சமமாகவே பகிரப்படுகிறது என்பது உண்மையே.

   இது ஏனோ இந்தக்காலக் குழந்தைகளுக்கு உணர முடியாமல் உள்ளது.

   உனக்கு அவள்/அவன் தான் ஒஸத்தி என்பார்கள். மிகவும் ஜாக்கிரதையாகக் கையாண்டு அணுக வேண்டிய பிரச்சனை தான், இது.

   எனக்கும் இதில் பல அனுபவங்கள் உண்டு.

   நல்லதொரு பாசம் பொங்கும் பகிர்வினைக் கொடுத்துள்ளீர்கள்.

   அந்தப்பெண்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஆளுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை, இதைப்பற்றியெல்லாம் நம்மால் அவர்களுக்குப் புரிய வைப்பதும் கஷ்டமே.

   அதன் பிறகு நம்மைப்பற்றியும், நம் அன்பைப்பற்றியும் அவர்களே நன்றாகப் புரிந்து கொள்வார்கள்.

   பல்வேறு காராங்களால் இந்தத்தங்களின் பதிவுக்கு என் வருகை மிகவும் தாமதம் ஆகிவிட்டது. I feel sorry for that. அன்புடன் VGK

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...