• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 19 டிசம்பர், 2012

  தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பேசத் தயங்குவது ஏன்?  தன்னை மறந்தோன் தன் தாயை மறந்தோனாவான். தன் தாயை மறந்தோன் தன் தாய்மொழியை மறந்தோனாவான். தாய் ஒரு மனிதனுக்கு எவ்வளவு அவசியமோ அதேபோலவே தாய்மொழி;யும் அவசியமாகின்றது. மேடைப்பேச்சுக்கும் பலர் பார்வைக்கும் மட்டுமே தாய்மொழியை நேசிப்பதாய்க் காட்டிவிட்டு வீட்டிலும் வாழ்விலும் வேற்றுமொழியில் நாட்டம் கொண்டிருப்பார்க்குத் தம் தாய்மொழியின் அழகும் தனித்தன்மையும்  இரத்தத்தில் ஊறிய இலகுத்தன்மையும் புரியாது.
              தாயின் கருவறையில் சுருண்டு கிடந்த போதே ஒரு குழந்தை தாய்மொழியைக் கற்கத் தொடங்குகின்றது. தாயின் கருவறையில் 11ம் நாளே மூளையைப் பிரித்தெடுக்கக் கூடியதாக இருக்கின்றது. குழந்தை பிறந்த போது உடலில் 11 வீதம் மூளை இருக்கும். வளர்ந்த பின் மனிதனின் உடலில் 2.5 வீதமே மூளை இருக்கும். எனவே கிரகித்தல் என்பது குழந்தையின் வளர்ச்சிப்படியில் முதல்நிலை பெறுகின்றது. கருவறையினுள்ளேயே தனது குழந்தை கேட்டற்புலனைப் பெற்றிருக்கின்றது என்பதை அறிந்த தாய் அக்கால கட்டத்திலேயே அப்புலனை அதிகரிக்கச் செய்ய முயல்தல் வேண்டும். குழந்தை பிறந்தவுடன் அமுதென்று பெயர் கொண்ட தமிழின் முதல் வார்த்தையை அம்மா என்று உச்சரிக்கும் குழந்தைக்கு மம்மி என்று உயிரற்ற உடலுக்குக் கொடுக்கும் பிரத்தியேகமான வார்த்தையை மூளையில் பதிக்கின்றாள். அப்போதிருந்தே தாய்மொழியின் அவசியம் குழந்தைக்கு அற்றுப் போகின்றது.
               
  தாய்மொழியில் அறிவுபெற்று அதில் சிந்திக்கும் குழந்தை தன் கல்வி மொழியிலும் சிறப்படையும் என்பது உளவியலாளர் கருத்தாகும். வாழ்க்கைக்குக் கல்வி மொழி அவசியமாய் இருந்தாலும் உணர்பூர்வமான சிந்தனைப் போக்கிற்கு தாய்மொழி அவசியமாகின்றது. 'தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை என்று வேலூர் மாவட்டம் பேராசிரியர் முத்துசிவன் அவர்கள் கூறியிருக்கின்றார். உலகத்து மொழியெல்லாம் கற்க ஆர்வமுள்ள ஒருவன் தன் தாய்மொழியைக் கற்க ஆர்வப்படவில்லையென்றால் தன் இனத்தைத் தன் கலாசாரத்தை தன் பண்பாட்டை எப்படிக் கட்டிக்காக்க முடியும். தமிழ் இனம் ஒன்று இருந்தது என்று சொல்ல வேண்டிய நிலையே எதிர்காலத்தில் தோன்றும். கல்வி மொழிகளில் எமது மொழிகளிலுள்ள சிறந்த பல இலக்கியங்கள் சிறுகதைகளை கவிதைகளை மொழிபெயர்க்கும்போது எமது மொழியின் சிறப்புக்களை நாம் வாழும் மண்ணின் மக்கள் புரிந்துகொள்ள முடியும். இதைவிட நாம் வாழும் கல்விமொழியின் படைப்புக்களை எமது தாய்மொழியில் மொழிபெயர்க்க முடியுமல்லவா! அத்தோடு எத்தனையோ ஆராய்ச்சிப் புதையல்கள் வெளிக் கொண்டுவரப்படும். இவற்றிற்கெல்லாம் தாய்மொழிப்பற்று மனதில் ஏற்படவேண்டும்.
    
  உலகிலுள்ள மொத்தமொழிகளின் எண்ணிக்கை 6809. இவற்றிலே 700 க்கு உட்பட்ட மொழிகளில் மட்டுமே எழுதவும் பேசவும் முடியும். 100 மொழிகள் மட்டுமே சொந்த வரிவடிவத்தில் எழுதப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் மூலமொழியாகத் திகழ்பவை 6 மொழிகளே. அவை எபிரேய மொழி கிரேக்கமொழி சமஸ்கிருதமொழி இலத்தீன்மொழி தமிழ்மொழி சீனமொழி. இவற்றிலே சீனமொழி தமிழ்மொழி தவிர்ந்தவை பேச்சுவழக்கில் இல்லாதவை. எனவே வரிவடிவிலும் பேச்சுவழக்கிலும் ஆட்சிசெய்து மூலமொழியாகத் திகழும் தமிழ் பேசுவதற்கு யாரும் வெட்கம் கொள்ளத் தேவையில்லை. தமது வாரிசுகளுக்குத் தமிழறிவையூட்ட வெட்கப்படத் தேவையில்லை. குறுமுனி தந்த தமிழ்ளூ குழந்தையாய் தவழ்ந்து கன்னியாய் என்றும் ஆட்சி செய்யும் தமிழ்ளூ தான் பிறந்த நாட்டிலே இன்று அல்லாடுகின்றது. தமிழ்ச் சங்கங்கள் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழ்நாட்டிலே உருவாகும் திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்வுகளும் ஆங்கிலத்தைத் தத்தெடுத்து நன்றாக வளர்க்கின்றன. ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டுச் சென்றாலும் அவர்கள் மொழி எம்முடையோர் நாவிட்டு நகர மறுக்கின்றது. 

                        நான் கண்ட நிகழ்வொன்று தமிழர்கள் மாத்திரமே கூடியிருக்கும் சபையிலே ஆங்கிலத்தில் ஒருவர் உரையாற்றுகின்றார். வீதியில் நடக்கும் போது ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றார். கேலிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருப்பதென்னவென்றால் அங்குள்ளவர்கள் அனைவரும் தமிழ் தெரிந்தவர்கள். ஓரிருவர் அரைகுறை ஆங்கிலம் புரிந்தவர்கள். இவ்விடத்தில் ஆங்கிலம் ஏன்? என்பது புரியாத விடயமாக இருக்கின்றது. மொழி என்பது கருத்துப் பரிமாற்று ஊடகம். தாம் நினைப்பதை பிறருக்கு உணர்த்துவதற்காகப் பயன்படுத்துகின்ற ஒரு சொற்கோவை. இலக்கண இலக்கிய விதிகளுக்கமைய ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு மொழி ஊடகமே தமிழ். இம்மொழி தெரிந்தவர்களிடம் இம்மொழியில் பேசுவதுதானே உண்மைத்தன்மை. ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்த தமக்கென ஒரு மொழியை உருவாக்குகின்றார்கள். ஐரோப்பியர்கள் தமது மொழியை நேசிப்பதாக பேசிக்கொண்டு திரிவதில்லை. ஆனால் தம்முடைய மொழி தவிர்ந்த எந்த மொழியையும் பேசுவதில்லை. பல மொழிகளைத் தேடித்தேடிக் கற்றிருந்தாலும் தேவைக்கேற்பவே அவற்றைப் பயன்படுத்தும் பண்புள்ளவர்கள். மேடைநிகழ்வுகளில் தமது மொழி தவிர்ந்த பிறமொழி பயன்படுத்துவதில்லை. பிறமொழி தெரிந்தவர்கள் மட்டுமே சபையில் கூடியிருக்கும் படசத்தில் பிறமொழியை பயன்படுத்துவார்கள். இது மொழிப்பற்று என்று நாம் சொல்லிக்கொள்ளும் விடயம் இல்லை. தேவையில்லை என்பதே அதற்கான காரணம். தேவை கருதியே பேசப்படுகின்றது. அதைப்புரிந்து கொண்டு இனியதமிழ் பேச நாக்கூசத் தேவையில்லை. அந்நியமொழியில் ஆசை கொள்ளலாம். அதற்காக அதற்கு அடிமையாக வேண்டியதில்லை. அனைத்துமொழிகளும் அறிந்திருத்தல் சிறப்பு. அதைத் தக்கசமயத்தில் பயன்படுத்துவது பெருமை. தகுதியற்ற இடங்களில் பயன்படுத்துவது சிறுமை.

               மேலைத்தேய நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி எமக்கு உழைப்புக்கல்வியல்ல என்பது உண்மையே. ஆனால், விஞ்ஞானமோ பொறியியலோ கற்று கல்லுடனும் மண்ணுடனும் சதையுடனும் உறவு வைத்திருக்கும் ஒருவரைவிட மொழிக்கல்வியும் இலக்கியக்கல்வியும் கற்ற ஒருவரால் வாழ்க்கையின் உன்னத மனிதப்பண்புகள்> மனித உணர்வுகள்> ஒழுக்கநெறிகளை சிறப்பாக அறிந்து கொள்ள முடியும்.

                
  அதைவிட எம் தேசம்விட்டுப் பரந்து வாழும் எம்மவர்கள் மத்தியில் உள்ள ஒரு கருத்து தமிழைக் கற்றுத் தமிழைப் பேசி இங்கு என்ன செய்ய முடியும்ளூ என்ன சாதிக்க முடியும் என்பதே. இங்குள்ளவர்கள் அனைவரும் தாம் வாழும் தேசத்து மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்களும்; இல்லை பேசித் தெளிந்தவர்களும் இல்லை.  ஆனால், எமது தாய்மொழியை அனைவரும் புரிந்தவர்களே. அத்துடன் தாய்நாட்டுத் தொடர்பை என்றும் கொண்டிருக்க வேண்டும். தமக்குப் பின் தமது வாரிசுகள் தமது உறவுகளை தாய்நாட்டிற்குக்  காவிச்செல்ல வேண்டும். எமக்கென சீர் பெற்ற சிறப்புப் பெற்றளூ காலங்கடந்த உன்னத இலக்கியச் செல்வங்கள் கொண்ட ஒரு மொழி இருக்கின்றது என்றும்  நினைப்பவர்கள் வீட்டிலும் வீட்டிற்கு வெளியிலும் தமது வாரிசுடன் தமது மொழியில் பேசுவது சாலச்சிறந்தது என்பது உண்மையே. இதன் மூலம் அழியாச் செல்வமாய் என்றும் எங்கும் தமிழ்மொழி அரசோச்சும் என்பது திண்ணம்.
   
   'பார் பிறந்த தேதியினை பகலறியும் - நீர்சுமக்கும்
   கார் பிறந்த தேதியினை கடலறியும் - நிலத்தடியில்
   வேர் பிறந்த தேதியினை விதையறியும் - நற்றமிழின்
   சீர் பிறந்த தேதியினை செகத்தினிலே யாரறிவார்||
                        

  5 கருத்துகள்:

  1. புலம் பெயர் தேசங்களில்.. இளையவர்கள் ஆர்வத்துடன் தமிழ் மொழி கற்பதனை ஆர்வத்துடன் பார்க்கிறேன். பல தேசங்களில் வாழும் எங்களுக்கு இணைப்பு மொழியாக தமிழ் மட்டுமே இருக்கிறது . ரத்த உறவுககுடன் உறவாடுவதற்கு என்றாலும் தமிழ் கற்கவேண்டும்.

   பதிலளிநீக்கு
  2. தாய் மொழியில் சிந்திப்பதை மழலையிலே தீய்த்து விடுவதாக அமைகிறதே கல்வித் திட்டம். ஆங்கில வழி மழலையர் பள்ளி தமிழை அண்ட விடுவதில்லை.

   ஆயினும் நாம்தான் அதையும் கடந்து நம் மொழியை காக்க வேண்டும்.

   பதிலளிநீக்கு
  3. ஆங்கிலேய ஆதிக்கத்தின் ஆரம்பத்தில் இந்தியாவெங்கும் சுற்றி ஆராய்ந்து ஆங்கில அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்த ஆய்வாளரின் அறிக்கை குறிப்பிட்டது – “தங்கள் மொழியைவிட ஆங்கிலமே உயர்ந்தது, சிறந்தது, மேன்மையானது என்று இந்திய மக்கள் மனதில் பதித்து விட்டால், இந்தியாவை ஆட்கொள்வது எளிது”. இந்த எண்ணத்திலிருந்து இந்தியா (குறிப்பாகத் தமிழ்நாடு) இன்னும் மீண்டெழுந்து வரவில்லை.

   பதிலளிநீக்கு
  4. ஆங்கிலேய ஆதிக்கத்தின் ஆரம்பத்தில் இந்தியாவெங்கும் சுற்றி ஆராய்ந்து ஆங்கில அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்த ஆய்வாளரின் அறிக்கை குறிப்பிட்டது – “தங்கள் மொழியைவிட ஆங்கிலமே உயர்ந்தது, சிறந்தது, மேன்மையானது என்று இந்திய மக்கள் மனதில் பதித்து விட்டால், இந்தியாவை ஆட்கொள்வது எளிது”. இந்த எண்ணத்திலிருந்து இந்தியா (குறிப்பாகத் தமிழ்நாடு) இன்னும் மீண்டெழுந்து வரவில்லை.

   பதிலளிநீக்கு
  5. நீங்கள் எனது வலைப்பூவில் பதிந்த பின்னூட்டத்தின் வாயிலாக இந்த பதிவினை அறிந்தேன்...

   துல்லியமான தகவல்களுடன் உங்கள் ஆதங்கத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளீர்கள் !

   " அங்குள்ளவர்கள் அனைவரும் தமிழ் தெரிந்தவர்கள். ஓரிருவர் அரைகுறை ஆங்கிலம் புரிந்தவர்கள். இவ்விடத்தில் ஆங்கிலம் ஏன்? "

   இந்த கேள்விக்கான விடையை எனது பல பதிவுகளில் தேட முயற்சித்துள்ளேன் ! எனக்கு தோன்றும் காரணம் காலனியாதிக்கத்தின் மிச்சம் ! அன்று வெள்ளைக்காரர்களிடம் பணி புரியும் பொருட்டு ஆங்கிலம் கற்று, அதனை பெருமையாகவும் காட்டிய புத்தி நம் ரத்தத்தில் பதிந்துவிட்டது போலும் !

   நாம் அனைவரௌம் முயற்சித்தால் இந்த நிலையை மாற்றலாம் !

   நன்றி
   சாமானியன்
   saamaaniyan.blogspot.fr

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...