வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

காலங்கரைகிறது
           
தாயின் மடியில் தலை வைத்து
தாலாட்டுச் சுகம் கண்டு
சேயாய் உறங்கிய காலமெல்லாம்
கரைந்துதான் போனதின்று
தேனாகப் பேசி தேனீக்களய்த்
தெருவெல்லாம் மகிழ்ந்தின்புற்ற
காலமெல்லாம் திசைமாறிப் போனதின்
தொடந்து வந்த தொடரூந்தில்
விடைபெற்ற பெட்டிகள்போல்
கடந்துவந்த பாதையில்
கழன்ற உறவுகள் ஆயிரமாயிரம்
நிலைபெற்ற நினைவுகள் தினம்தினம்
நிலையாக மனதில் அலைமோதும் - காலமோ
சில்பூட்டிச் சிறப்பாய்ப் பறக்கிறது
நீரினுள் உப்புப் போல்
கரைகிறது கண்முன்னே
சிறையிருந்த பிரமன் நினைத்தாலும்
முறையாய் யாகம் செய்தாலும்
கரையும் காலம் நிலைப்பதில்லை
விரையும் ஆயுள் குறைவதில்லை
நிலையில்லா உலகவாழ்வதனில் - மக்கள்
நினைவில் சிலையாய் வாழ
தரமான செயல் செய்ய வேண்டும்
தரமான செயல் செய்தேயாக வேண்டும். 


திங்கள், 21 ஜனவரி, 2013

எண்ணத்திடம் சுடராய் மிளிரட்டும்


       
உயிரைத் தினமும் குடித்திடும்
உடனிருந்தே கொல்லும் நோக்காடு
இடியாய் வரும் துன்பம் - ஓர்நாள்
மழையாய் மாறிடுமே
இன்பமும் துன்பமும் இணைவதுவே
இயல்பான இல்வாழ்க்கை
இழந்துவிட்ட இன்பமது
இணைகள் சேர ஒன்றிடுமே
பகிர்ந்தளிக்கும் துன்பம் 
படிதாண்டி ஓடிடுமே
எண்ணி எண்ணி மாய்வதல்ல
இல்வாழ்க்கை
எதிர்நீச்சல் போட்டுவிடு
எண்ணமதை செயல்படுத்து
எள்ளிநகையாடி உதறிவிட
இதுவல்லோ நேரம்
எடுத்து வைக்கும் காலடிகள்
ஏற்றத்தைக் காட்டிவிடும்
பனிகாலம் உறங்கும் மரம்
கோடயில் குதூகலிக்கும்
கரை வந்த அலை 
கடல் நோக்கி மீண்டுவிடும்
கன்னத்துக் கரம் கடுதியாய் விலகட்டும்
எண்ணத்திடம் சுடராய் மிளிரட்டும்.

சனி, 12 ஜனவரி, 2013

பொங்கல் தினமின்று புகழ்மாலை சூடுங்கள்
கவிதையை எனது குரலில் கேட்க பச்சை அம்புக்குறியை அழுத்துங்கள்

 
ஆதி பகவானே உன் ஆட்சியில்
அண்டமெல்லாம் சுழற்சி
ஜன்னலினூடு கள்ளத்தனமாய் 
குடிகொள்ளும் கள்வனே! கதிரவனே! – நீ
இருளைக் களவாடவில்லையானால்
  செழிக்காது உலகு
கிழக்கு வானம் வெளுக்காது விட்டால்
 நிலைக்காது உலகு

கதிரவனே!

உன் கருணைப் பார்வையினால்
 களிப்படையும் இவ்வுலகு
கமக்காரன் ஏர் பிடித்தான் - நீ 
 வெயில் பிடித்தாய், மழை கொடுத்தாய்
ஏற்றம் கண்டது விளைச்சல்
 போற்றிப் பாடினர்; பொங்கல் படைத்தனர்
புத்தம் புதுப்பானையிலே பூமாலைதனை சுத்தி
 புத்தாடை புனைந்து, புதுக்கோலம் வரைந்து
புத்தரிசிப் பொங்கலிலே நறுந்தேனும் பாலும்
 சக்கரையும் நெய்யும் கலந்தேவிட்டு
பொங்கலோ பொங்கலென்று பாடி
 மின்அடுப்புப் பொங்கலினைப் 
பொங்கி மகிழ்கின்றனர் 


கமக்காரன் சேற்றில் கால் வைக்க – நாம் 
 சோற்றில் கை வைக்கின்றோம்
அவன் சேற்றை மிதிக்க – நாடு
 வறுமையை மிதித்து உயர்கிறது
அவன் வியர்வை சிந்துகின்றான் - நாடு
 உயர்வை ஏந்துகிறது
அவன் உழைப்பை ஆளுகிறான் - உலகு
 சிறப்பை ஆளுகிறது
நாடும் வீடும் சிறப்பாய் வாழ
 உழைப்பு சுமந்தவரின்
உள்ளம் வாட வரி சுமப்பவர்கள்
 நரிபோல் நலமாய் வாழுகிறார்
கமக்காரரே! சத்திய உழைப்பால்
 சரித்திரம் படையுங்கள்
பொங்கல் தினமின்று
 புகழ்மாலை சூடுங்கள்
பொங்கல் தினமின்று
 புகழ்மாலை சூடுங்கள்

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்


திங்கள், 7 ஜனவரி, 2013

மறக்குமா நெஞ்சு மறக்குமா?


Image Sharing


கவிதையை என் குரலில் கேட்க பச்சை அம்புக்குறியை அழுத்துங்கள்.ஓ நெஞ்சே! ஓ நெஞ்சே!
ஒரு வயதில் நானுடுத்தி விளையாடியதாய்
ஒருமுறை என்னம்மா எடுத்துக்காட்டியதாய்
சிறுவயதில் என் நெஞ்சில் நிலையாய் ஓர் எண்ணம்
சிந்தித்துப் பார்க்கிறேன் சிந்தனையில் எட்டவில்லை
சிவப்புக்கரை சேலையென்று சொன்ன - அச்சேலையை
மறந்துவிட்டாயா? நெஞ்சே மறந்துவிட்டாயா?

நெஞ்சம்:  மறக்கும் நெஞ்சம் மறக்கும்


பத்துவயதில் பவித்திரமாய் வைத்திருந்து
பத்துமுறை உடையணிந்து பக்கத்தில் படுக்கவைத்து
நித்தமும் நகையணிந்து சுத்தமாய் குளிக்கவைத்து
முத்தமும் தித்திப்பதாய் தந்தாயென தாயுரைத்த
முத்துத் தோடணிந்த சித்திரப் பாவையை
சித்தத்தில் கலங்கி மொத்தமாய்த் தெரியவில்லை
கச்சிதமாய்க் காட்டிவிடென் சித்திரப் பாவையை
மறக்குமா? நெஞ்சம் மறக்குமா?

நெஞ்சம்:  மறக்கும் நெஞ்சம் மறக்கும்

ஓடும் பஸ்ஸில் பாய்ந்து ஏறியதும்
உதவும் கரங்களை உதறித் தள்ளியதும்
உண்ணும் கண்களை உறுத்துப் பார்த்ததும்
உரசிய உடல்களை ஊசியால் பதித்ததும்
நிஜமாய் வந்து நிழலாய் மறைகிறது
நினைத்துப் பார்க்கிறேன் நினைவில் முகமில்லை
மறந்துவிட்டாயா?  நெஞ்சே மறந்துவிட்டாயா? 

நெஞ்சம்:   மறக்கும் நெஞ்சம் மறக்கும்

பெண்ணென்றும் ஆணென்றும் மொழியென்றும் பேதமில்லை
பெற்றோரும் மற்றோரும் சுற்றமாய் இருந்ததில்லை
கற்றலும் மறக்கவில்லை களிப்பும் குறைந்ததில்லை
கையுணவு காய்ந்தும் கதைகள் குறைந்ததில்லை
கூடிக்குலாவி நின்றோம் கொட்டமடித்து நின்றோம்
பல்கலையும் பயின்று பாதை மாறிவிட்டோம்
பழகிய உறவுகளும் பறந்து மறைந்துவிட்டார்
பாடிப்பழகிய நட்பைத் தேடியும் காணவில்லை
சாடையாய் முகவடிவம் அகக்கண்ணில் தெரிகிறது
மறக்குமா?  நெஞ்சம் மறக்குமா?  

நெஞ்சம்:  மறக்கும் நெஞ்சம் மறக்கும்
        துன்பத்தை மறந்து மனம் இன்பத்தை நினைத்திருக்க
        இரண்டு மனம் இறைவன் படைக்கவில்லை
        மறக்கவேண்டும் மனம் அமைதி அடைவதற்கு
        சிறக்கவேண்டும் உள்ளம் மறதி துணையிருக்க
       வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...