வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

ஞாயிறு, 31 மார்ச், 2013

தியாகி


           
"இரவும் பகலும் கண்விழித்து, இமையிரண்டும் தூங்காது விழித்திருந்து, வளர்த்தவளே! என் சுகமிழந்து நோய்வாங்கி நான் சுடராய் ஏற்றிய உன் வாழ்வு சிறப்படைய மெழுகுதிரியாய் நான் இருப்பேன்'' இந்த வரிகள் சுமந்த வார்த்தைக்குள் வந்தமர்ந்த மெழுகுதிரியின் விளக்கம் காண மகள், தன் மூளை நரம்பின் வேகம் கூட்டினாள். உலகுக்கு ஒளி தரும் சூரியன், மின்குமிழ், மெழுகுதிரி இம்மூன்றின் பக்கமும் தன் பார்வையைச் செலுத்தினாள்.    
          
               எங்கு கருத்தா இல்லாத கருவி எமது கண்களுக்குப் புலப்படுகிறது. தான்தோன்றீஸ்வரரானாலும் தோன்றியதற்கும் தோன்றுவித்ததற்கும் கருத்தா எங்கோ உள்ளார் என்று தானே தேடிக் கொண்டிருக்கின்றோம். கருத்தா இல்லாது எதுவும் காட்சிப்படுவதும் இல்லை, பயன்படுத்தப்படுவதுமில்லை. நம் தேவைக்கேற்பத் தேடிப்பெறுவோம். உலகுக்கெல்லாம் ஒளிதரும் சூரியன் பூமியில் பார்வை படும் பகுதியில் மாத்திரமே தன் ஒளியைத் தந்துதவுகின்றான். சூரியன் பார்வை படாத பகுதிகள் இருளாலே மூழ்கியிருக்கும். தானாய்த் தேடி ஒளி தரவுமில்லை, நாம் தேடிச் செல்லும் வேளையில் ஒளி தந்துதவுகின்றான். இங்கு வேண்டியவர்களுக்கே வேலைக்கதிர்கள் பயன்படும். இச்சூரியபகவானையும் மீறி நாளெல்லாம் தேவைப்படும் போதெல்லாம் ஒளி தந்து உதவிபுரிந்திடும் தோமஸ் அல்வாஎடிசன் கண்டுபிடிப்பு மின்குமிழும் ஒளி தேவைப்படும் போது மின்சாரம் ஏற்றப்படும் போதே ஒளி தந்துதவுகின்றது. அதை மீறி அழகழகாய்ப் பலவண்ணங்களில் வடிவங்களில் வார்க்கப்பட்டுத் தியாகி என்று பலரால் புகழ்ந்துரைக்கப்படும் மெழுகும் திரி. அது உருகும் தன்மை பெற்றதனால் எழுத்தை ஆளுபவர்கள் வைத்த பெயர் தியாகி. அது தானாய் பிரகாசம் தரும் தன்மை பெற்றதல்ல. ஒட்சிசன் ஆட்சியும் நெருப்பின் உதவியும் ஒன்றாய் இணையும் போதே வேண்டியவர்களுக்கு விளக்காய் ஒளி தரும். அடுத்தவர் ஏற்றும் போதுதான் அழகாய் எரியும். ஒளி தந்து பெருமை சேர்க்கும். இல்லையேல், அழகாய் மட்டுமே இருக்கும். அதனால் அடுத்தவர் பயன் பெறச் சாத்தியமே இல்லை.
    
             சூழலில் இருப்பவர் சுகம் காணத் தன் சுகம் இழக்க ஒரு தியாகி கருதினாலும்  தன் சேவை என்ற தேவையைப் பிறர் ஏற்றுக் கொள்ளத் தேவையான பல காரணிகள் தேவை அல்லவா. உருவாக்கமே உருகலாய் இருக்கும் போது அவ்உருகலில் பல உருவாக்கங்கள் பெறுவதனால் அதை உருவாக்கியவரே சிறப்பாகின்றார். அவ்வுருகலுக்கும் துணை செய்பவரும் சிறப்பாகின்றார். அதில் உருகுபவர் உருகியே தான் ஆகவேண்டும். இது படைப்பின் தத்துவம். ஏந்தி நிற்கும் கரங்களுக்கே பிச்சை போடப்படும். அடுத்தவர்க்குத் தேவை ஏற்படும் போதுதான் தியாகமும் செய்ய முடியும். கொடுப்பவர் இருப்பாரானால் எடுப்பவரும் இங்கு முக்கியம் அல்லவா.
       


        மெல்லொளியில் புத்துணர்வின் தூண்டலே
        தண்ணொளியில் கெடுமணம் துலைப்பவளே
        விண்ணவர் வேண்டுதலிற் குறுதுணையே
        காரிருளின் கார் அகற்றும் காரிகையே
        தேய்ந்தொ ளிதந்தத னால்
        தியாகி யாய்த் திகழ்பவளே.
        தேடிடும் விடை காணத்
        தேர்ந் தெடுத்தேன் இவ்வாக்கமே

சனி, 30 மார்ச், 2013

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் தோழர்கள்அழகான இவ்வுலகில் அரிதான மானிடப்பிறவி எடுத்து தற்காலிகமாக வாழ வந்துள்ளோம். சிலகாலங்களே வாழும் எமக்கு இனிமையான காலப்பகுதி இளமைப்பருவம். பூத்துக்குலுங்கும் பூரிப்புப் பரும். இப்பருவத்தில் எவராயினும் ஒருவித அழகுத் தோற்றத்துடனே உலாவருவார்கள்.

            இவ் அரிய பருவத்தில் எத்தகை இடர் ஏற்படினும் எதிர்த்து நின்று போரிடக்கூடிய வலிமையை மனதில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எமது அறிவு என்பது எறும்பு போன்றது. வாழ்க்கை என்பது யானை போன்றது. வாழ்க்கையினுள் அறிவு புகுந்து கொள்ளும்போது வாழ்க்கையை அசைத்துப் பார்க்க முடியும். ஆனால், எவ்வளவு அறிவு நிரம்பியிருந்தாலும் வாழ்க்கையின் சில புதிர்களுக்கு விடை காணமுடியாது. ஆயினும் வாழ்க்கையை நம்பிக்கையோடு தொடரும் பக்குவத்தை மனதில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அந்த நம்பிக்கையை இளையவர்கள் மனதில் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடமை ஆகின்றது. நம்பிக்கை என்னும் வலுவான ஆயுதத்தைக் கைக்கொள்ளும்போது வாழ்க்கையில் ஏற்படும் பயம், துக்கம், துச்சமாக மதிக்கப்படும். வாழ்க்கையை சுவைக்க வேண்டும் என்ற அத்தியாவசியம் புரிந்து கொள்ளும்.

          பேசுங்கள், பேசுங்கள், நிறையவே பேசுங்கள். உங்கள் உணவருந்தும் மேசை உரையாடும் களமாகட்டும். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் தோழர்கள் என்பதைப் பெற்றோர் ஆணித்தரமாக உணரவேண்டும். அவர்கள் தோளோடு தோள் நின்று அவர்களின் பாதைக்கு அதிகாரப் பாங்கிலன்றி நண்பன் பாங்கில் அறிவுரை வழங்க வேண்டும். அவர்கள் ஆசைகளுக்கு இடமளிக்க மனம் வையுங்கள். தொழில்நுட்ப உலகில் அளவுக்கதிகமான தொடர்புகள் எம்முடைய பிள்ளைகளுக்கு கிடைத்திருக்கின்றன. அதனால், எம்முடைய தொடர்பைப் பிள்ளைகள் துச்சமாக மதிக்கச் சந்தர்ப்பம் இருக்கின்றது.  அதனால், உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமானாலும் காது கொடுத்துக் கேளுங்கள். ஆறுதலாக அபிப்பிராயம் பகிருங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் நடந்த விடயங்களையும் அவர்கள் வாழ்க்கையில் நடந்த விடயங்களையும் பரிமாறிக் கொள்ளுங்கள்.

            எத்தனையோ வசதிகள் நிறைந்த தன்னம்பிக்கையை வளர்க்கின்ற கல்விமுறைகள் நிறைந்த ஐரோப்பிய நாடுகளில், அப்பாவிகளாக வாழவழிதெரியாது ஊமைகளாக எமது இளைய தiமுறையினர் வாழ்க்கையை வெறுப்பது நெஞ்சுக்கு வலியாக இருக்கின்றது. வாழவேண்டிய இனிமையான பருவத்தில் வாழ்க்கையை முடிப்பது இனியும் வேண்டவே வேண்டாம். நம்பிக்கையும் துணிச்சலும் மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்கக் பெற்றோர்களாகிய நாம் முனைந்து நிற்போம்.


வெள்ளி, 29 மார்ச், 2013

பதறிய காரியம் சிதறிப்போம்வாலிபமிடுக்கு, வாலிப்பான உடற்கட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரும்பிய மீசை, வாழ்க்கையின் அத்தியாயங்களை மீட்டவொண்ணா பேதலித்த நிலையில் ஜடமாய்ப் படுத்திருந்தான் பருவக்காளை விசாகன். குமுறிக்குமுறி அழுத கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் தாரை தாரையாக வடிய அவன் முன்னே அமர்ந்திருந்தாள் அவன் தாய் அமலா.

ஆண்டாண்டு காலங்கள் வானொலி என்னும் சமுதாய முன்னேற்ற வான் பரப்பில் பொன்மொழிகளையும்,  வாழ்வியல் சிந்தனைகளையும் வடித்து வடித்து பிறர் வாழ்வுக்கு வளம் சேர்த்த இந்த உள்ளமானது சொந்த வாழ்வின் சிந்தனைகளைச் சிந்திக்கத் தவறிவிட்டது.

அன்று வழமைபோல் மகனின் அறையைத் துப்பரவு செய்வதற்காக அவன் அறைக்குள் சென்றவள் அவன் மேசையை ஒருமுறை நோட்டமிட்டாள். 

"வளர்ந்ததுதான் மிச்சம் ஒருவேலை கூடச் செய்யத் தெரியாது. படிக்கிற மேசை கிடக்கிற கிடையைப் பார்''

என்று தனக்குத்தானே முணுமுணுத்தபடி ஒழுங்கின்றிக் கிடந்த புத்தகங்களை ஒழுங்கு செய்யும் நோக்குடன் புத்தகங்களைக் கையில் எடுத்தாள். ஒரு புத்தகத்தினுள் இருந்து ஒரு புகைப்படம் தரைநோக்கி விரைவாய் விழுந்தது. தன்னைப் பார் என்று கூறுமாப்போல் அழகாய் காட்சியளித்த அந்தப்  புகைப்படம் அவள் கண்களில் தென்பட்டது. குனிந்தாள். தன் கரம் தொட்டுப் புகைப்படத்தை கண்ணருகே கொண்டு வந்தாள். விசாகனும் ஒரு ஐரோப்பிய இனப் பெண்ணும் அருகருகே நின்றாற் போன்ற காட்சி கண்ணில் பட்டது. இதயம் சுக்குநூறாக வெடித்துவிடுவதுபோல் அமலா உணர்ந்தாள்.

இந்த நிமிடம் அமலவிற்கு விசாகன் தாய் என்ற நிலையிலிருந்து தமிழ் சமுதாயத்தினிடையே ஒரு பெண் என்னும் ஒரு எண்ணமே தலைதூக்கி நின்றது. அடக்கமுடியாத கோபக்கனல் தெறித்தது. தொலைக்காட்சி நிகழ்வை சுவாரஸ்யமாகச் சிரித்துச் சிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த விசாகன் முன்னே கையிலிருந்த புகைப்படத்தை வீசி எறிந்தாள். விசாகனும் இலாவகமாக எறியப்பட்ட படத்தை எடுத்துத் தன் சட்டைப்பையினுள் வைத்து விட்டு மீண்டும் தொலைக்காட்சியில் லயித்தான்.
 
"எவ்வளவு தைரியம் உனக்கு. யாரிந்தப் பெட்டை?  
தாயாரின் கேள்விக்குப் பதிலாக
 
"அது என்ர பிரண்ட். படம் எடுப்போம் என்றாள். எடுத்தோம். அதற்கேன் துள்ளிக்குதிக்கின்றீர்கள். இது என்ன புதினமான படமா? சொல்லிவிட்டு சலனமின்றி அமர்ந்திருந்தான் விசாகன்.
 
"எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கு. பிரண்ட் என்றால், என்ன அர்த்தம். அதை ஏன் புத்தகத்திற்குள் ஒளித்து வைத்திருக்கின்றாய். முளைத்து மூன்று இலை விடல்ல. அதற்குள் பெரிய எண்ணங்கள். அலட்சியமான கதை பேச்சு. உன்ன மகனாகப் பெற்றதற்கு இந்த சமுதாயத்தில தலை நிமிர்ந்து என்னால் எப்படி வாழ முடியும்'' படபடவென்று வார்த்தைகளை சரமாரியாகப் பொழிந்தாள்.
 
"இப்ப என்ன நடந்திட்டு. நான் ஒன்றும் ஒளித்து வைக்கல்ல. நீங்க எந்த உலகத்தில. எந்த நூற்றாண்டில வாழ்றீங்கள்? போதும் அம்மா உங்கட சமுதாயக் கதையெல்லாம். அதைத் தூக்கிக் குப்பையில போடுங்க. அப்பா வேலையில்லாமல் கஷ்டப்பட்ட போது எந்த சமுதாயம் உங்கள வழ வைத்தது. நோயாளியாய் நீங்கள் கட்டிலில் கிடந்தீங்களே....எந்த சமுதாயம் உங்களைக் கவனித்தது....'' இது விசாகன் அநுபவித்த அத்தாட்சி வார்த்தைகள். அமலாவும் விடுவதாக இல்லை.

"சமுதாயம் எம்மை ஏறெடுத்துப் பார்க்கவில்லை என்பதற்காக சமுதாயக் கட்டுப்பாடுகளை மீற முடியுமா? பரம்பரைப் பழக்கவழக்கங்களை மாற்றமுடியுமா.....? எப்படியும் வாழலாம் என்பது இல்லை வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதுதான் வாழ்க்கை. இனிமேல் அவளுடைய தொடர்பை விட்டுவிடு''
 
"போதும், போதும் அம்மா! இப்போது கூட உங்கள் சமுதாயத்தின் முன் உங்கள் பெயர் கெட்டுப் போவது பற்றித்தானே சிந்திக்கின்றீர்கள். என்னைப் பற்றி நினைத்துப் பார்க்கிறீங்களா? எதற்காக இங்கு வந்து என்னைப் பெற்றீர்கள்? எல்லா இனங்களுடனும் என்னைப் படிக்க அனுப்பினீர்கள்? இந்த நாட்டு உதவிகளை ஏன் பெற்றீர்கள்? சிறு வயதிலிருந்து இவர்களுடன் பழகுவதற்கு ஏன் அநுமதித்தீர்கள்? முடியாது உங்களால் முடியாது. ஏனென்றால், இங்கு வாழ வேண்டுமென்றால், இணைந்துதான் வாழ வேண்டும். இந்த நாட்டு சுகம் தேவை என்றால், எங்களை இங்கு பெற்று வளர்த்து பயன் பெறுவீர்கள். ஆனால், இந்தப் பெண்களுடன் நாங்கள் வாழக்கூடாது. இது எந்த விதத்தில் நியாயமாக உங்களுக்குப் படுகின்றது அம்மா? என் எண்ணத்தில் ஊறியிருக்கும் அவள் நினைவுகளை இலகுவாக அழித்துவிட முடியும் என்று நினைக்கின்றீர்களா? இது உங்களுக்கு எங்கே விளங்கப் போகின்றது. நீங்கள் மகனை விட சமுதாயத்தைத்தானே நேசிக்கின்றீர்கள்?
 
"நியாயம் நீ பேச நான் கேட்கப் போவதில்லை. எது நல்லது கெட்டது என்ற அறிந்து கொள்ள உனக்கு வயது போதும். எங்களுக்கும் அவர்களுக்கும் ஒத்து வராது. எங்கடைய ஆட்கள் இதை அறிந்தால் என்ன கதைப்பார்கள்''
 
"பார்த்தீங்களா அம்மா. இப்போது கூட எங்கடை ஆட்கள் என்ன கதைப்பார்கள் என்பதுதான் உங்களுக்குப் பிரச்சினை. உங்களுக்கும் அவர்களுக்கும் ஒத்து வராமல் இருக்கலாம். ஆனால், எனக்கும் அவர்களுக்கும் ஒத்துவரும். ஏனென்றால், நாங்கள் அப்படித்தான் பிறந்ததிலிருந்து வாழுகின்றோம்''
 
"அப்படியென்றால், உனக்கு ஒத்துவந்தால் மட்டும் போதும். எங்களுக்கு ஒத்துவரா விட்டால் உனக்குப் பிரச்சினையில்லை. அப்படித்தானே''
 
"இல்லை அம்மா! அது போகப் போகப் பழகிடும்''

இளமையும் முதுமையும் தத்தம் வாதங்களை முன் வைத்தன. வாக்குவாதங்கள் அறிவை மழுங்கடித்தன. "நான் உயிரோடு இருந்தால்தானே இதையெல்லாம் பார்க்க வேணும்...''

அமலா ஓடிப்போய் குளியலறையிலிருந்த கிமிநாசினிப் போத்தலைத் திறந்தாள். குடிப்பதற்காக போத்தலை உயர்த்தினாள். கூடவே ஓடிச் சென்ற விசாகன் போத்தலைத் தட்டிப் பறித்தான் பறித்த விசையில் தன் வாய்க்குள் மருந்தைச் சரித்து ஊற்றினான். உட்சென்ற மருந்து தொண்டை கழிந்து குடல் நோக்கிப் பயணமானது.

அந்தக்கணமே அமலாவுக்குத் தாய்மை மேலோங்கியது. சமுதாயம், சுயசிந்தனை அத்தனையும் எங்கோ மறைந்தது. மகனின் உயிர் ஒன்றே முதன்மையானது. அவசரஅவசரமாக வாகனத்தினுள் மகனை ஏற்றினாள். இந்த நாடகத்தைப் பார்த்தும் பார்க்காது இருந்த தந்தை வாகனத்தின் வேகத்தைத் துரிதமாக்கினார். மருத்துவமனை செல்லும் வழியிலேயே விசாகன் உடல் தாயின் மடியில் சரிந்தது. தன் கைகளால் தன் தலையிலே மாறிமாறி அடித்தாள். வலிக்கும் வரை அடித்தாள்.

பலத்த முயற்சியின் பின் விசாகன் உயிரை மீட்ட வைத்தியர். அவன் பழைய நினைவுகளை மீட்க முடியாது கைவிரித்தார்.

பிற்குறிப்பு:

புலம்பெயர் சூழ்நிலையில் இவ்வாறுதான் பல சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தாய் நினைத்திருந்தால், மிக சுலபமாக இப்பிரச்சினையைக் கையாண்டிருக்கலாம்.

வியாழன், 28 மார்ச், 2013

ஆத்திரம் அறிவைக் கெடுக்கும் 28.03.2013


"ஆத்திரம் அறிவைக் கெடுக்கும்'', "பதறிய காரியம் சிதறிப் போகும்''. பிரச்சினையை எப்படி அணுகுகின்றோம், சமாளிக்கின்றோம், அதை எப்படி அநுபவித்து மீளுகின்றோம் என்பதிலேயே எல்லாம் அடங்கியிருக்கின்றது. மனதினாலே எல்லாம் ஆகும். மூளையே மனமாகச் சக்தி வடிவம் பெறுகின்றது. எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. விதையிலிருந்து செடி முளைப்பது போல எண்ணத்திலிந்து செயல் பிறக்கின்றது. எண்ணத்தைப் புரிந்து கொண்டு உள்ளத்திலிருந்து எண்ணத்தைப் பிரித்தால், எளிதான விடிவு கண்டுவிடலாம். திடீரெனத் தோன்றும் பதற்ற நிலையில் சுயஉணர்வு குறைந்துவிடும். என்ன நடந்தாலும் புரிந்து கொள்ள முடியாது கவனம் சிதறுண்டு போகும். பதற்றம் நீங்கிய பொறுமையே முதலில் கையாளப்பட வேண்டியது. குறிக்கோளும் மகிழ்ச்சியும் பொருள் என்று கொள்ளாது எது நன்மை வளைவிப்பது என்று எண்ணுபவனே பொறுமைசாலி. அப்பொறுமை மூலம் பிரச்சினையை நீக்கிவிடலாம். அமைதியாக இருக்கும் போது ஆலோசனை மூலம் எண்ணங்களை மாற்றியமைக்கலாம். பொறுமை இழந்து கோபப்படும்போது நாம் நிதானம் இழக்கின்றோம். இரத்தக் கொதிப்பு அதிகரிக்கின்றது. கைகால்கள் உதறுகின்றன. நமக்கு நாம் கொடுக்கின்ற தண்டனைதான் கோபம்.

எனவே பொறுமை, நிதானம், பதற்றமற்ற நிலை போன்றவையே மனித வாழ்க்கையை சீரான பாதையில் வழிநடத்திச் செல்ல உறுதுணையான காரணிகளாக அமைகின்றன.

ஞாயிறு, 17 மார்ச், 2013

தன்னிலையறியாப் பெண்ணினமே


     
கொழுத்த பணத்தில் கொட்டமடிக்கையில்
கொண்டுவரும் புத்தம்புது வாதங்கள்
நாற்சந்தி மரத்தடியில் நம்மவர் சேர்ந்திருந்து
வாதிட்ட வாதங்கள் கொஞ்சமல்ல
பெண்ணுரிமை பேசிப்பேசி பழங்கதையாச்சு - இப்போ
பெண்ணிலை வாதமென்ற புதுப்பேச்சு
புதுப்பேச்சு புகுந்து கொண்டு நடமாடுவதால்
விடுதலைப் பத்திரமும் விரைவாய் ஏற்கும் 
விந்தையும் இப்போ புரிந்தாச்சு

பெண்ணெ!
பாவேந்தன் பாடிய பெண்ணுரிமை 
பெருமையன்றோ பெண்ணினத்தின் வாழ்வுக்கு
பெண்ணே!
நீ பாடும் பெண்ணிலை வாதம் 
அழிவன்றோ பெண்ணினத்தின் பெருமைக்கு
ஆணொன்றும் பெண்ணுக்கு அடிமையில்லை
பெண்ணொன்றும் ஆணுக்கு அடிமையில்லை
இயற்கை தந்துவிட்ட தோற்றம்
இதுவே பெண்ணுக்கு தோஷம்
வல்லினம் மெல்லினம் இலக்கணம்
மெல்லினம் பெண்ணுக்கு இலக்கணம்
தாய்மையெனும் சிறப்புத் தந்த பெருமை
தகுதியன்றோ பெண்மைக்கு புரிகிறதோ?
இயற்கை அனைத்தும் பெண்ணாய்க் 
கண்டு போற்றித் துதித்தான் கவிஞன்
பெருமையுனக்குச் சேரல்லையா?
சிவனுக்கு ஒன்று இராத்திரி
சக்திக்கு ஒன்பது இராத்திரிகள்
சமயம் காட்டும் பெருமை போதாதா?

தன்னிலையறியாப் பெண்ணினமே
கோடான ஆணைக் கோலமாக்குபவளே
ஒலியான ஆணை இசையாக்குபவளே
ஓரினமாய் இணைந்து நின்று
உலகுக்கு வழிகாட்டு
வேண்டாத வாதங்களால் 
வீண்பொழுது கழிக்காதே!

புதன், 13 மார்ச், 2013

புதியவை அனைத்தும் பழையவை 12.03.2013
புதியவை என்று உலகில் எதுவும் இல்லை. புதுமையென காணும் அனைத்தும் பழைமையின் மாற்று வடிவங்களே. விதையிலிருந்தே மரம் தோன்றுகிறது. பெற்றோர் மரபணுவில் இருந்தே புதிய உயிர் தோன்றுகிறது. எனவே புதியவை என நாம் ஏற்றுக்கொள்ளும் அனைத்தும் ஏற்கனவே இருந்தவைதான் என்பதை நாம் ஏற்றேயாக வேண்டும். மனிதன் கண்டுபிடிப்பும் புதுமையல்ல. பழைமையிலிருந்தே கண்டுபிடிக்கப்படுகின்றன. மனிதன் கண்டுபிடித்த புதுவடிவம் கனணியது பழைய பொருள்களை வைத்தே தோற்றமானது என்பேன். 
     
                                  இதிலிருந்தே ஒன்று என் எண்ணச்சிறையில் எழுந்துவந்தது. புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் எனப் பிறப்புக்கள் பற்றிச் சொல்லப்படுகின்றன. இறந்த ஒரு மனிதனின் உடலை புதைக்கின்ற போது அவ்வுடலை உண்ணுகின்ற புழு, பூச்சிகளில் அம்மனிதனின் மரபணுக்கள் சேருகின்றன. அப்புழுக்களை உண்ணுகின்ற பறவைகளை மிருகங்கள் உண்ணுகின்றன, மனிதர்கள் உண்ணுகின்றார்கள். 
       
                               இல்லாவிட்டால் புதைக்கப்படும் உடலின் மூலக்கூறுகள் அங்கு வளருகின்ற மரங்களில் சேர்ந்துவிடுகின்றன. அம்மரங்களின் விதைகளை உண்ணுகின்ற பறவைகளின் எச்சம் மூலம் அவை உலகின் பலபகுதிகளில் பரந்துவிடுகின்றது. எனவே, இதுவே மனிதனின் மறுபிறப்பு எனப்படும் தத்துவமாக உணருகின்றேன். உயிர்கள் வடிவங்களில் பலவாகப் பிறப்பெடுக்கின்றன என்பதும் இதுவே. 
   
                                         உடலை எரித்து கங்கையில் கரைக்கின்றனர். அப்போது மறுபிறப்பு ஏற்படாது என்று கருதுகின்றனர். கடல்நீர் அருந்துவதற்கு உரியதல்ல என்பதும் உண்மையே. ஆனால், கடல் ஆற்றுடன் ஐக்கியமாகும்போது அங்கு கடல்நீர் குடிநீராகின்றது அல்லவா? அல்லது மீன் நீரை அருந்துகின்றது அல்லவா? அம்மீனை உண்ணுகின்ற மனிதனின் உடலில் ஒரு சிறு அணுவான இறந்த மனிதன் மூலக்கூறுகள் அடைக்கலமாகின்றது அல்லவா? இயற்கையில் எதுவுமே இறப்பதில்லை. அது என்றும் திரும்பத் திரும்ப இப்பிரபஞ்சத்தினுள்ளே சுழன்று கொண்டுதான் இருக்கும். தோற்றங்கள் மாறலாம். ஆனால், இருந்ததே மீண்டுமாய் தோற்றம் பெறும். 
    

ஞாயிறு, 10 மார்ச், 2013

மழை


                      


ஆகாய அணைக்கட்டை 
அடித்து உடைத்தது யார்?
அடைமழை பொழிகிறதே 
அட்டகாசமாய் இடிஇடிக்கிறதே
வானப்பந்தலிலே வெள்ளிச் சிதறல்களை 
மூட்டை கட்டிவிட்டது யார்?
முடிச்சவிழ்ந்து வெள்ளிக்கம்பிகளாய்
விரைகிறதே மண்ணோக்கி

வானத்து மழையை வரவேற்க
வண்ணமயில்கள் விரித்தன தோகை
அகவலில் ஆனந்தம்
ஓடையெங்கும் தவளைகளின் ஒய்யார ஓசை
சில்லூறுகளின் சிங்கார ஓசை

தத்தோம் தித்தோம் தகதோம்
தகரங்கள் எங்கும் தரிகிடத்தோம்
சளசள படபட கடகடவெனவே
சாரல்கள் எங்கும் கூடங்கள் தோறும்

விரியுங்கள் குடையை முதியவரே
விட்டுவிடுங்கள் இளையவரை 
வானம் தெளிக்கும் பன்னீரால் 
வாழ்த்துப்பெற வழிவிடுங்கள்.வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...