• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 24 ஜூலை, 2013

  ஸ்வரராகா இசைக்கலாலய பேச்சு

                                   
  வானகமும் வையகமும் வாழ்த்த, இவ்வகம் மாஞ்சுவை, தேன்சுவை, பலாச்சுவை என நாச்சுவை கூட்டுமாப்போல் வயலின், மிருதங்கம் வாய்ப்பாட்டு என எம் செவிச்சுவை கூட்டிநிற்க ஸ்வரராகா இசைக்கலாலயத்தின்  20 ஆவது ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள வந்திருக்கின்ற பிரதமவிருந்தினர் ஞானரஞ்சிதம் விஜயரெட்ணம் அவர்களே!   இசைக்கலாலய அதிபர் தர்மினி தில்லைநாதன் அவர்களே! அவருக்குத் துணையாக இக்கலாலயத்தில் பணி ஆற்றுகின்ற வயலின் ஆசிரியை பாலஜோதி அமிர்தலிங்கம் அவர்களே! இசை ஆசிரியர்களே! ஒளியின் திசைக்கேற்ப தலைசாய்த்து வளரும் தாவரம் போல் இசையின் திசைக்கேற்ப நெரளள மாநகரம் நோக்கி வருகை தந்திருக்கும் இசைப்பிரியர்களே! பெற்றோர்களே! அனைவருக்கும் எனை உலகுக்கீன்ற என் பெற்றோரை மனதில் நிறுத்தி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். 
              

                                     தேடிக்கற்ற இசைத்தேன் விருந்து படைக்கக் கொடுக்கும் படையல் நாள் இன்று. தமது ஸ்வரராகா இசைக்கலாலயத்தின் தேனீக்களை ஒன்றாக அழைத்து வந்து எமக்கெல்லாம் இசைப்படையல் கொடுத்துள்ள  ஆசிரியர்களுக்கும், காதுக்குள் நுழைந்து இதயத்தை நிரப்பி மனதை ஒருமைப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் இளம் கர்நாடக இசைப்பாடகர்களுக்கும் முதலில் நன்றியைக் கூறவேண்டும்.
              

                                   கோகுலத்துப் பசுக்களெல்லாம் கோபாலன் குரலைக்கேட்டு நாலுபடி பால் கறக்கும். என புராணம் சொல்கிறது. இசைக்கேட்டு ஓங்கிவளரும் தாவரம் என விஞ்ஞானம் சொல்கிறது. இவ்வாறு உலகத்து மக்கள் அனைவரும் மயங்கும், கட்டுபடும், ஈர்ப்பு சக்தி ஒன்று உண்டென்றால், அது இசை என்கின்ற ஒன்றே என்று சொன்னால், இதை யாரும் மறுக்கமுடியாது. உணவு, உடை, உறையுள் இவற்றிற்கு அடுத்ததாக எது அவசியம் என்றால், அது இசையேதான். பாடாத மனிதன் யாருண்டு, பாடலை ரசிக்காத மனிதன் யாருண்டு. இக்கர்நாடக இசைக்கு தாளம் தெரியாவிடினும் தலையசைத்துத் தலையால் தாளம் போடாத மனிதர்கள் தான் யாருண்டு. 
               


                                 இசையானது மேற்கத்தைய இசை, வட இந்திய இசை அதாவது ஹிந்துஸ்தானி, நாமெல்லாம் இரசித்துக் கொண்டிருக்கின்ற கர்நாடகஇசை என மூன்றுவகைப்படுகின்றது. அதேபோல் இராகங்கள் பலவகைப்படுகின்றன. அவ் இராகங்கள் மூலம் பல பயன்கள் கிடைக்கின்றன என அறிந்தவர்கள் அரிதே. பாகேஸ்வரி ராகம் பாடினால், இரக்கஉணர்வு மேம்பட்டு நிற்கும், கௌரிமனோகரி கேட்பவரைக் கவர்ந்திழுத்து உற்சாகத்தையும் விறுவிறுப்பையும் தரும், தார்சிகா, உடலிலுள்ள நரம்பு மண்டலத்தைச் செவ்வனே பாதுகாக்கும், கேட்டாலோ பாடினாலோ நரம்புவியாதிகள் அனைத்தும் சீரடையும், குறிப்பாக காக்காவலிப்பு நோய் டாட்டா காட்டிவிட்டு ஓடிவிடும். மலகரி ராகம் பாடுங்கள் ஆணவம், கன்மம்,மாயை மறைந்துவிடும். இதுபோல் இன்னும் பல ராகங்களில் இன்னும் பல மருத்துவ குணங்கள். இவை கற்றவர்க்கு புண்ணியம் கேட்பவர்களாகிய எங்களுக்கு கொஞ்சமாவது பலன் கிடைக்கும். 
                  


                             இக்கலாலயத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்களே! நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். பலன் பெற்றவர்கள். இங்கு பயில்கின்றீர்கள். அன்பான பெற்றோர்போன்ற இரு ஆசிரியர்கள் உங்களுக்குக கிடைத்திருக்கின்றார்கள். 20 ஆண்டுகள் தடைகள் தாண்டி ஓங்கி வளர்ந்திருக்கின்றது இக்கலாலயம். இதன் ஒவ்வொரு நடைமுறைகளும் ஓரம் இருந்து கேட்டவள் யான். இது எனது மூன்றாவது ஆண்டுவிழா. இக்கலாலய கீதம் என்னால் எழுதப்பட்டது. அம்மாணவர்கள் என் பாடலும் பாடுகின்றார்கள். இக்கலாலய மாணவர்களினால், வெளியிடப்பட்ட அரும்புகளின் ஆராதனை என்னும் இறுவட்டு கேட்டு இதயம் கனிந்திருக்கின்றேன். ஸ்வரராகா இசைக்கலாலய இருமாணவர்களினதும் கர்நாடகஇசை அரங்கேற்றங்களில் அவர்களின் இன்னிசையில் திறமையில் மெய்மறந்திருக்கின்றேன். அதேபோல் தந்திகள் மீட்டும் சங்கீதத்தை வயலின் இசை அரங்கேற்றத்திலும் சுவைத்திருக்கின்றேன். ஒவ்வொரு விழாக்களிலும் ஓயாத கரஓசைபோல், ஓயாத புகழே இக்கலாலயத்திற்கு எட்டி நிற்கின்றது. இதன் வளர்ச்சி அடுத்தவரை வீழ்த்தி வளரவேண்டுமென்ற வளர்ச்சியல்ல. அடுத்தவரை இசையால் நாம் வளரவேண்டும் என ஊக்குவிக்கும் வளர்ச்சி. இளம் கலைஞர்களை வளர்த்துவிட்ட வளர்ச்சி, இளம் இசை ஆசிரியர்களை உருவாக்கிவிட்ட வளர்ச்சி. இதன் வளர்ச்சி கண்டு வெள்ளிவிழா காணும் ஆசையுடன் எதிர்பார்ப்புடன்  மனதார வாழ்த்துகின்ற ஒரு தாயே நான். 
                 


                                         காலம் சுழல்கிறது, உலகம் உருள்கிறது, நாளும் புதுமைகள் பூக்கின்றன. இக்காலகட்டத்தில் இளைஞர்களே கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் சொன்னது போல் இளைஞர்களே புதுமைகள் படையுங்கள். என்று நான் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். றால வாளை கொலைவெறி எவ்வாறு உலகமெங்கும் பேசப்பட்டதோ! அதேபோல் இளந்தலைமுறையினரே உங்கள் இசைத்திறமையும் புதுமை காணவேண்டும். உலக அரங்கிலே உங்கள் தனித்தன்மை புலப்படவேண்டும். சுவைபுதிது, பொருள் புதிது, வளம்புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை என கவதையில் புரட்சி காட்டிய பாரதி இல்லையென்றால், இன்று வசனக்கவிதை ஹைக்கூக்கவிதை என் கவிதைகளின் பரப்பு விரிந்திருக்குமா?  அதேபோல் இசைக்கு இசையுங்கள்,  இசை ஆராய்ச்சி செய்யுங்கள், மறைவாக எமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை. திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்ற வரிகளைப் புரிந்தவர்கள் நீங்கள். இந்நாட்டார்க்குப் பொறுமையுண்டோ இல்லையோ, ரசிப்பார்களோ, இல்லையோ என்ற ஐயம் கொள்ளத் தேவையில்லை. அழைத்து வாருங்கள், இசைக்கு மொழியில்லை. வார்த்தை புரியவில்லையானாலும் கண்மூடி ரசிப்பார்கள். தெலுங்கு புரிந்தா நாம் தெலுங்கு கீர்த்தனைகள் பாடுகின்றோம். இக்கலாலய மாணவர்கள் துடிப்பானவர்கள். மாற்றுமொழி பேசுவாரிடை எம் கர்நாடக இசையைக் கலக்கச் செய்யும் வல்லமை உங்களுக்குத்தான் உண்டு. இளைஞர்களுக்குத்தான் உண்டு. இக்கர்நாடக இசைவிழாவில் கலப்பிசையைக் கலக்கச் செய்த பெருமை தர்மினி தில்லைநாதன் அவர்ளையே சாரும். அதற்கு இவ்விடத்தில் அவரைப் பாராட்டியே தீரவேண்டும்.
              


                                        தமிழ் பெற்றோர்களுடன் எதுவும் செய்யமுடியாது அன்ரி என்று ஒரு மாணவி சலித்துக் கொண்டதை கேட்டேன். ஒரு தாயாய்ப் புண்பட்டது மனம். காரணம் என்ன. 
                    


                                     வழிவிடுங்கள் பெற்றோரே. உங்கள் பிள்ளைகளை நம்புங்கள். அவர்களுக்குத் தலைமைத்துவத்தை வழங்குங்கள். அவர்கள் சிந்தனைச் செயல்பாடுகளை வளரவிடுங்கள், எதிர்த்துப் பேசுகின்றார்கள் என்று அவர்கள் சிந்தனையைத் தொலைத்துவிடாதீர்கள். ஒருதாயாய் ஒரு எழுத்தாளராய் எதிர்காலத்தை வளரும் சமுதாயத்திடம் ஒப்படைத்துவிடுங்கள் அதை மெருகேற்றிக் காட்டுவார்கள் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.   இவ்விழா அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. இங்கு மிருதங்கம், வயலின் போன்ற இசைக்கருவிகளை இளையோரே இசைத்தார்கள். இவ்விழா நடைமுறைகள் அத்தனையையும் ஆசிரியர்களுடன் பொறுப்பேற்றார்கள். இதுபோன்றே இனிவரும் காலங்களில் நாம் பார்வையாளர்கள், எம் பழங்கதைகளுக்கு விடைகொடுப்போம் என்று கூறிக்கொண்டு இசைபயிலும் மாணவர்களே! சினமிறக்கக் கற்றாலும், சித்தியெல்லாம் பெற்றாலும், மனமிறக்கக் கல்லார்க்கு, வாயேன் பராபரமே எனத் தாயுமானவர் பாடியதுபோல் இசைப்பற்றும், பொறுமையும் பணிவும் இல்லாதுவிட்டால் இசை உங்களைவிட்டு ஓடிவிடும். அதனால், இவற்றை மனதில் பதித்து இசையால் வளருங்கள் என்று உங்களை வாழ்த்தி, வானுயர ஸ்லரராகா இசைக்கலாலயம் புகழ் வளரவேண்டும் என்று மனதார வாழ்த்தி சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். 

   


  4 கருத்துகள்:

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  இளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020

                                        கலாசாரக் காப்பாளர்களாக இளையோர் நம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம்...