வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

திங்கள், 23 செப்டம்பர், 2013

எனக்காய் ஓர் தாய் ஏங்க என் இதயம் சிரித்திருக்கும்


இரண்டு வயதிலே நீ இயல்பாய்த் தமிழ் பேசியபோதும், உன் குதலை மொழியால் குழைந்து குழைந்து காரணங்கள் கேட்டபோதும், இதயத்தை நிமிர்த்தி இமயம் போல் ஒரு நம்பிக்கை கொண்டிருந்தேன். வருங்கால நீதிபதி ஒன்று நியாயங்கேட்க நிமிர்ந்து வளர்கின்றதென்று. என் கன்னத்தில் அழுத்தி நீ முத்தமழை பொழியும்போது என் இதயம் கசிந்து அன்பு ஊற்றுக்களாய் பெருகிக் கொண்டேயிருந்தது. உன் இதயமொழி எங்கள் வாழ்க்கை மேடையிலே சங்கீத சாம்ராஜ்யம் நடத்தியிருந்தது.    

        பூமி சுழன்றதனால் வயதும் சுருண்டு கிடக்கவில்லை. சுயமாக 6 ஆக உயர்ந்து விட்டது. முதல் வகுப்பில் நீ ஸுல்ரியூற்ற தூக்கியபோது நீ பல்கலைக்கழக அநுமதிப்பத்திரம் பெற்றுவந்த பெருமிதம் கொண்டோம். கள்ளி நீ எனக்கு எக்கஷ்டமும் தந்ததில்லை. உன் கணக்குப் பாடத்திற்கு உன் அப்பா உனக்கு உதவிக்கு வர நீ சந்தர்ப்பமும் தந்ததில்லை. நீ பருவவயது கண்டால் சடங்கு செய்யத் தன் வங்கியிலே பணக்கணக்கை மட்டுமே கூட்டும் வேலையைத் தந்தைக்குக் கொடுத்திருந்தாய். ஆசிரியர்கள் எமை அழைத்து உனக்குப் புகழாரம் எங்களிடம் சூட்டும்போது, எங்கள் குடும்ப மரபணுக்கள், உங்கள் குடும்ப மரபணுக்கள் தொழிற்படுவதாய் நானும் உன் தந்தையும் போட்டாபோட்டி போட்டு உன் திறமையில் எங்கள் புகழ் பாடினோம்.

                  வில்லங்கம் வந்துவிட்டது. விடியாத பொழுதுகள் என்  கண்களுக்குள் வந்துவிட்டன. விட்ட சனி ஒட்டிக் கொண்டது. வெட்ட வெளியிலே உச்சிச் சூரியனுக்கு அண்மையில் மல்லாந்து கிடப்பதுபோல் உடலெல்லாம் சுட்டெரிக்கிறது. நெருப்புத் தணலில் நிற்பது போல் தவிக்கிறேன். மகளே உன் வாய்ப்பேச்சு எங்கே மாயமாய்ப் போனது. சித்திரம் கட்டிலில் கிடப்பதுபோல் சிரித்தபடி படுக்கின்றாயே! உன் கலகலத்த சிரிப்பை தன் மருந்தால் சிக்கவைத்த வைத்தியரை நான் சிறைவைக்க முடியாது தவிக்கின்றேனே! முழிக்கும் உன் கண்களுக்காய் மூடாத எம் இமைகள் விரிந்த சாளரமாய் நிலைபெற்றுவிட்டன. 

              அறிவுவாங்கப் பாடசாலை செல்கின்றாய் என்றுதான் நினைத்தோம். நீ காய்ச்சல் அல்லவா வாங்கி வந்திருக்கின்றாய். ஆண்டவனாம் வைத்தியர் ஆண்டவனுக்கு அடுத்தபடி யாரிடம் நாம் போய் நிற்போம். வைத்தியரிடம் தானே உயிர்ப்பிச்சைப் பாத்திரம் ஏந்துவோம். 

            பச்சைக் குழந்தை உனக்கு அன்ரிபயோரிக் தரும்போது அவரைவிட நாமென்ன கற்றுவிட்டோம் என்றும் வைத்தியர் சொல்மிக்க மந்திரமில்லை என்றுமல்லவா நினைத்துவிட்டோம். பாவி கையால் தந்த அன்ரிபயோரிக் உனக்கு நஞ்சாகும் என்று அம்மா நான் நினைக்கவில்லையே! என் கையே உன் இதயம் இரணமாக இடம்தந்துவிட்டதா! மகளே! இக்கையை நானே சுட்டெரிக்கப் போனேனே! உன் தந்தை அதற்கும் தடை போட்டுவிட்டாரே. என் கையைப் பார்க்க எனக்கே அருவருப்பாய் இருக்கிறது. ஒரு பிஞ்சை கட்டிலில் படுக்க வைத்துவிட்ட வைத்தியர், எப்படித்தான் தன் கட்டிலில் தூங்குகின்றாரோ புரியவில்லை. ஒரு வேளை இது இவர்களுக்குப் பழக்கமாய்ப் போய்விட்டதோ. அவதானம் தவறும் வைத்தியரும் கொலைகாரனும் ஒருவர் அல்லவா?

                                      இரவுபகலாய் இதயமில்லாத உன் உடல் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதயம் இருந்தும் என்னால் தொழிற்பட முடியவில்லை. உன்னைப் பார்க்கையிலே உள்ளமெல்லாம் வேகுதடி. ஓர் கத்தி நான் எடுத்து என் இதயத்தை வெட்டி உன் உடலினுள் புதைத்துவிட என் இதயமது  ஆவேசம் கொள்ளுதடி. ஆனால், சட்டம் என்ன கண்மூடிக் கொண்டா இருக்கிறது. உலகப் பந்தை நீ பார்க்க என் உடல் வருத்தம் பொறுத்தேனடி. என் இடுப்புவலி தாங்கி உன் உடலது கண்டு களித்தேனடி. இன்று உன் அருகே ஓர் இயந்திரம் உனக்காகத் துடிக்கும் போது, அதனைக் கையால்; தொட்டு நாளும் கண்ணில் ஒற்றிக் கொள்கிறேன். ஆண்டவனே நேரில் வந்து உன் அருகே படுத்திருப்பதாய் உணர்கின்றேன். 

           எத்தனை காலம் அவர் அருகே அமர்ந்திருக்க முடியும். உன் போல் ஓர் இதயம் எங்கோ உனக்காய்த் துடித்துக் கொண்டிருக்கின்றது. அது எப்போ உன் உடலுள் அமரப் போகின்றது. அவசரமாய் அதைக் கேட்க ஆசையாய் இருக்கிறது. ஆனால், அங்கும் ஓர் தாய் என் போல் பின் ஏங்கித் தான் என் ஏக்கம் தீர்க்கவேண்டும். அப்போது கூட அவளுக்காய் நான் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பேன்.                

9 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கலங்க வைத்தது...

Manjubashini Sampathkumar சொன்னது…

குழந்தையை வயிற்றில் சுமந்து.... அது உலகைப்பார்க்கும் நாள் வரும்போது ஏற்படும் சந்தோஷம்... தாய் தந்தையர் மனம் மகிழும்படியாக கிள்ளை மொழி பேசி பெற்றோர் ஆசியுடன் நன்றாக படித்து முன்னேறி... இப்படியே காலங்கள் சென்றுக்கொண்டிருக்கக்கூடாதா என்று மனம் ஏங்கும் நொடி உடலுக்கு முடியாமல் படுத்த படுக்கையாகி வைத்தியசாலையிலேயே கிடப்பாகி. அம்மா அப்பாவை கஷ்டப்படுத்துகிறோமே என்ற வேதனையில் பிஞ்சு படுக்கையில் நொந்துப்போக.. குழந்தையை இப்படி ஒரு நிலையில் பார்க்கத்தான் இத்தனை பாடுப்பட்டோமா என்று பெற்றோர் மனம் கதற.. வரிகளில் படிக்க படிக்க நெஞ்சு கனத்துக்கொண்டே சென்றதுப்பா சந்திரகௌரி... வரிகளில் அன்பும் தாய்மையும் இழைகிறது.. வேதனைத்துளிகள் கண்ணீராய் தெறிக்கிறதுப்பா.. கடைசிப்பத்தி சோகங்களின் உச்சக்கட்டம்.... இறந்து இன்னொரு தாயின் வயிற்றில் சூல்க்கொண்டு பிறக்க... அந்தத்தாய்க்காகவும் கண்ணீர் சிந்தும் இந்த பேதைத்தாயின் வரிகளை வாசிக்கும்போது மனம் என்னவோ செய்கிறதுப்பா. உங்கள் எழுத்துகள் ஆட்சி செய்கிறது.... வாழ்த்துகள் சந்திரகௌரி பகிர்வுக்கு...

kovaikkavi சொன்னது…

வேதனையான நிலை தான். இது உண்மைக் கதையாயின் பிள்ளைக்கு நல்ல இதயம் விரைவாகக் கிடைக்க இறையருள் கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

சந்திரகௌரி சொன்னது…

மிக்க நன்றி மஞ்சு . இது ஒரு உண்மைக் கதை என்றால் நம்புவீர்களா

சந்திரகௌரி சொன்னது…

நன்றி .நிச்சயமாக

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கலங்க வைத்துவிட்டது சகோதரி

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கலங்க வைத்துவிட்டது சகோதரி

அ. வேல்முருகன் சொன்னது…

வேதனைதான், நல்லவை நடக்கட்டும்

சந்திரகௌரி சொன்னது…

..
Rajaji Rajagopalan கௌரி, Gowry Sivapalan பல உரை நடைச் சித்திரங்களில் உங்கள் அன்னைமீது கொண்ட பாசத்தைப் பிழிந்து எழுதியிருக்கிறீர்கள். இந்த ஒவ்வொன்றிலும் நீங்கள் கண்ட அன்னையின் வடிவம் ஒவ்வொரு வகையான பரிணாமம் எடுத்திருக்கிறது. இவற்றில் நீங்கள் கையாண்ட ஒவ்வொரு சொல்லும் உங்கள் உள்ளத்தில் மலர்ந்தது என்பதை உங்களின் எண்ணற்ற வாசகர்கள் அறிவர். உங்களின் சின்ன வயதில் நடந்தவற்றையும் முக்கியமாக நீங்கள் சுகயீனமுற்றபோது உங்களைப் பராமரித்ததையும் இன்றும் மறவாது உங்கள் அன்னைமீது புகழாரம் சூட்டுகிறீர்கள். இப்படியொரு மகளையும் இத்துணைப் புகழாரத்தையும் பெற அவர் என்ன தவம் செய்தாரோ அறியேன். கொஞ்சும் தமிழில் அழகிய பக்கத்தில் ஓவியமாய் மலர்கிறது உங்கள் அன்னை காவியம். வாழ்த்துகள்.

சீர்கெட்ட வாழ்வு

                            நேரமோ 10. நித்திரையோ கண்ணைச் சுருட்டுகிறது. நாள் முழுவதும் வேலை செய்து வீடு வந்து ஓய்ந்து ஒரு பிடிச் சோ...