• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வியாழன், 3 அக்டோபர், 2013

  ஸ்ரீஜீவகன் அவர்களுடன் பேட்டி  ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவர், டோட்முண்ட் வள்ளுவர் தமிழ் பாடசாலை அதிபர் பொன்னுத்துரை ஸ்ரீஜீவகன் அவர்களுடைய தமிழ்ச் சேவை பற்றியும் திருக்குறள் மனனப் போட்டி சம்பந்தமானதுமான ஒரு பேட்டிப் பதிவு
   


  1.    வணக்கம் ஸ்ரீஜீவகன் அவர்களே!
        வணக்கம் சகோதரி கௌசி அவர்களே!

  2.    16.11.2013 அன்று டோட்முண்ட் நகரத்தில் நடைபெற இருக்கின்ற திருக்குறள் மனனப் போட்டி சம்பந்தமாக உங்களுடன் சிறிது பேசலாம் என்று இருக்கின்றேன்.  அத்துடன் ஜேர்மனியில் வளருகின்ற எதிர்காலத் தமிழ் சிறுவர்களுக்காக நீங்கள் ஆற்றி வரும் சேவைகள் பற்றியும் அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். எத்தனையாம் ஆண்டு நீங்கள் புலம்பெயர்ந்து ஜேர்மனியை வந்தடைந்தீர்கள்?

  திருக்குறள் போட்டி விடயமாகவும், தமிழ்ச் சிறுவர்களுக்கான தமிழ்வளர்ச்சிச் சேவைகள் பற்றியும் அறியமுனையும் தங்களைப் பாராட்டி வரவேற்றுக் கொள்கின்றேன். உங்களின் அறியமுனையும் கேள்விகளுக்கான பதில்களைத் தருகின்றேன்.
  1985ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி ஜேர்மன் நாட்டிற்கு வந்து சேர்ந்தேன்.


  3.    இவ்வாறு பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்கள் மனதில் தோன்றியது? எத்தனையாம் ஆண்டு முதற் பாடசாலை உங்களால் தோற்றுவிக்கப்பட்டது?

  ஜேர்மனியில் காமன் நகரத்தில் 1985ஆம் ஆண்டு ஏழாம் மாதத்திலிருந்து திரு.சிவஞானகுரு அவர்களின் மூன்று பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பாடத்தை அவர்களது வீட்டில் படிப்பிக்கத் தொடங்கினேன். பின்பு காமன் நகரத்தில் வசித்த பிள்ளைகளின் நன்மை கருதி, பத்தாம் மாதம் சரஸ்வதி பூசை நாளில், தனியாக ஆண்கள் குடியிருந்த வீட்டின் முன்அறையில் பாரதி தமிழ்ப் பாடசாலை ஒன்றினை ஆரம்பித்துக் கொண்டேன். இதற்கு உதவியாக காமன் நகரத்தில் இருந்த எல்லோருடைய ஒத்துழைப்புடன், காமன் தமிழர் நலன்புரிச் சங்கமும் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கியது. இது தொடர்ந்து கரிதாஸ் நிறுவனத்தின் உதவியுடன் பல பொது நிறுவனங்களின் கட்டிடங்களில் நடைபெற்றது. அயல் கிராமங்களில் குடியிருந்தவர்களின் பிள்ளைகளும் சேர்ந்து படித்தார்கள். இவ்வாறு பாடசாலை தொடங்குவதற்கான எண்ணங்கள் ஆரம்ப காலங்களில் இருந்தே, என்கடன் கல்விப்பணி என என்னுடன் ஆரம்பித்துக் கொண்டுள்ளது. அது பற்றிய சிறு விளக்கத்தினைத் தரலாம் என நினைக்கின்றேன்.
    
  நான் இலங்கையில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில், அதாவது 1973ஆம் ஆண்டில், வீட்டில் ஓர் பாடசாலையை ஆரம்பித்து எனது கிராமப் பிள்ளைகளுக்குத் தமிழ், சமயம், கணக்கு பாடங்களை நடாத்தி வந்தேன். அதனைத் தொடர்ந்து நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, அப்பாடசாலையில் ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான தமிழ்மொழிப் பாடத்தையும், கணக்கியற் பாடத்தையும் படிப்பிக்க அதிபரால் கேட்கப்பட்டு படிப்பிக்கத் தொடங்கினேன். இவ்வாறாகத் தொடங்கிய ஆசிரியர் பணி மனதிற்கு சந்தோசத்தையும், நான் படித்ததை மற்றவர்களுக்கு கொடுப்பதற்கான மனமகிழ்வையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல தனியார் பாடசாலைகளில் கணக்கியல், பொருளியல் பாடங்களை படிப்பித்தேன். இதுவே இன்றுவரை என்னை ஆட்கொண்டு கல்விப் பணியைத் தொடரச் செய்கின்றது. இது போதும் என நினைக்கின்றேன்.

  4.    நல்லது. அறிவு புகட்டல் என்பது இலங்கையில் சிறுபிராயத்தில்      
         இருக்கும்போதே உங்களுக்கு முளையிட்டுவிட்டது என்பது              
         புரியகிறது. நீங்கள் எத்தனை பாடசாலைகள் ஜேர்மனியில்   நடத்திக்     
         கொண்டிருக்கின்றீர்கள்?
  ஜேர்மனியில் 52 பாடசாலைகள் இணைந்திருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் பல்வேறு நிலைமைகளினால் இன்று 23  பாடசாலைகளே ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையுடன் தொடர்ந்து இணைந்து செயற்படுகின்றன.

  5.    வெளி இடங்களிலும் பல பாடசாலைகள் நடத்துவதாக அறிகின்றேன்.  
          அது பற்றிச் சிறிது விளக்குவீர்களா?
  சுவிஸ், பிரான்ஸ், நெதர்லாண்ட் ஆகிய நாடுகளில் தொடர்ந்து பாடசாலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் டென்மார்க் நாட்டில் இரண்டு வருடங்களும், இலண்டனில் ஒரு வருடமாகவும் பரீட்சைகள் நடைபெற்றன. நோர்வே நாட்டில் உதவிகள் செய்து அவர்களையே பாடசாலைகளை நடாத்தும்படி கூறி உள்ளோம்.

  6.    ஐரோப்பியப்பரப்பில் தமிழுக்கும் எதிர்காலத்              
         தலைமுறைகளுக்கும்       நீங்கள் செய்யும் சேவை  
         பாராட்டப்படவேண்டியது. புலம்பெயர்வின் வாழ்க்கைச் சிக்கல்கள் 
         மத்தியில் இவ்வாறு நீங்கள் தொழிற்படுவது மிகவும் கடினம் என்று   
         நான் அறிவேன். இருப்பினும் இப்படிப் பரவலாகப் பாடசாலைகள் 
         அமைத்துப் பிள்ளைகளை ஊக்குவிப்பது என்பது இலகுவான காரியம் 
         அல்ல. இவற்றை எப்படிக் கொண்டு நடத்துகின்றீர்கள்?  
         உங்களுக்கு  வேறு யாருடையதும் உதவிகள் கிடைக்கின்றனவா?
  ஆரம்பத்தில், பாடசாலைகள் அமைத்துத் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தாய்மொழியாம் தமிழ் படிப்பிக்க வேண்டும் என்ற பெருநோக்கில் பல நகரங்களுக்கும், ஊர்களுக்கும் சென்று பெற்றோர்களுடன் கலந்தாலோ சனைகள் செய்தும், அதன் முக்கியம் பற்றி எடுத்துக் கூறியும், ஆசிரியர்களைத் தேடித்தெரிந்தும், அதிலும் சேவை மனப்பான்மையுடன் படிப்பிக்கக் கூடியவர்களைக் கண்டும், பாடசாலைகளை அமைக்கப் பல சிரமப்பட்டுக் கொண்டேன். 1985ஆம் ஆண்டு காமன் நகரத்தில் 'பாரதி தமிழ்ப் பாடசாலையும்', 1987ஆம் ஆண்டு கம் நகரத்தில் 'கம் தமிழ் பாடசாலையும்', அந்தந்த நகரப் பெற்றோர்களின் உதவியுடன் அமைத்துக் கொண்டோம். இதனைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு டோட்முண்ட் நகரத்தில் நடந்த இலக்கியச் சந்திப்பின் மூலம் பல சமூக ஆர்வலர்களின், ஆசிரியர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையை அவர்களுடன் சேர்ந்து உருவாக்கிக் கொண்டோம். அக்கல்விச் சேவையின் செயற்பாட்டில் மும்முரமாகச் செயற்பட்டு 12 பாடசாலைகளை உருவாக்கிச் செயற்பட்டோம். இதன் வளர்ச்சிப் போக்கில் பல இடையூறுகள் ஏற்பட்டன. இதன்போது நேரடியாக எனக்கு பல அச்சுறுத்தல்களும், தாக்கங்களும் ஏற்படலாயின. இதனை அறிந்த பலர் எதுவித அறிவித்தல்கள் ஏதுமின்றி தாங்களாகவே விலகிச் சென்றுவிட்டனர். இது 1991ஆம் ஆண்டளவில் ஏற்படவே தனியாகச் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தும் சிலர் எனது செயற்பாட்டுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து செயற்பட்டனர். (அவர்களின் பெயர்களை அவர்கள் நன்மை கருதித் தவிர்க்க வேண்டியுள்ளன) தொடர்ந்து தனித்துவமாக 1993ஆம் ஆண்டு வரை செயற்பட்டு, 1993ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பலரை அழைத்து நிர்வாக அமைப்பு முறையை ஏற்படுத்தி செயற்படத் தொடங்கினோம். அன்று தொட்டு இன்று வரை நிர்வாக அமைப்பு முறையில் கல்விப்பணிக்கான சேவை, ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் மூலம் நடைபெற்று வருகின்றது.       

  7.    எம்மவர் மத்தியில் போட்டியும் பொறாமையும் கேட்பதற்கு ஒன்றும்  
         புதியதல்ல. ஆயினும் தடைகள் தாண்டி தொடர்ந்து ஊக்கத்துடன் 
        தொழிற்படும் உங்களைப் பாராட்டியே தீரவேண்டும். 
        பாடசாலைகளுக்கான பாடத்திட்டம் எவ்வாறு தயாரிக்கின்றீர்கள்?

  எமது கல்விச் சேவையின் பாடத்திட்டம், ஆரம்பத்தில் இருந்தே இலங்கைப் பாடத்திட்டத்திற்கு அமைவானது என ஆக்கிக் கொண்டோம். இதில் இலங்கையில் நடைமுறையிலிருக்கும் பாடப் புத்தகங்களை எடுத்து அதில், இங்கு படிப்பிப்பதற்கு ஏற்ற முறையில் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுப் பாட அளவுகளைத் தயாரித்துப் பாடத்திட்டத்தை ஆக்கிக் கொள்கின்றோம். பாடத்திட்டத்தின் இறுதித் தயாரிப்பு பரீட்சைக் குழுவினால் திட்டமிடப்படுகின்றது.

  8.    பாடசாலையில் பரீட்சைகள் நடத்தப்படும்போது வினாத்தாள்கள் 
         உங்கள் பாடசாலை ஆசிரியர்களால் தயாரிக்கப்படுகின்றனவா? 
         அல்லது இலங்கையிலிருந்து வரவழைக்கப்படுகின்றனவா?

  வருடாந்தம் நாம் நடாத்துகின்ற தமிழ்மொழிப் பொதுப் பரீட்சைக்கு ஒவ்வொரு பாடசாலையில் இருந்து கிடைக்கும் கேள்விகளிலிருந்தும், இலங்கைக் கேள்வித்தாள்களின் கேள்விகளின் அமைப்பைக் கவனித்தும், எமது கல்விச் சேவையின் பரீட்சைக்குழுவின் ஆலோசனையுடன் கேள்விகள் தயாரிக்கப்பட்டு இறுதி வினாத்தாள்களைத் தயாரித்துக் கொள்வோம்.

  9.    ஒரு பாடசாலை நடத்துவது என்றாலே பணம் அதிகம் தேவைப்படும். 
         ஆனால், நீங்கள் இத்தனை பாடசாலைகள் நடத்துகின்றீர்கள்.       
         அதற்கான பணவசதிகளை எங்கிருந்து பெற்றுக்கொள்ளுகின்றீர்கள்?

  ஒவ்வொரு பாடசாலைகளும் அந்தந்தப் பகுதியின் பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும்,  சமூகநிறுவனங்களினதும் உதவியுடன் நடைபெறு கின்றன. சில பாடசாலைகள் ஆசிரியர்களாலும், சில பாடசாலைகள் பெற்றோர்களினாலும் நிர்வகிக்கப்படுகின்றன. இதற்கான செலவுகளை பெற்றோர்களும், சில இடங்களில் சமூகசேவை நிறுவனங்களும் பங்கீடு செய்து கொள்கின்றன. நாம் எல்லாப் பாடசாலைகளையும் அவர்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி தேவையான உதவிகளையும், ஆலோசனை களையும் வழங்கி பாடசாலைகளை நடாத்த உதவுகின்றோம். எமக்கு பல செலவுகள் ஏற்படுகின்றன. இவற்றை நாம் ஈடுசெய்வதற்காக பரீட்சையின் போது பெற்றுக்கொள்ளும் சிறுதொகைப் பரீட்சைக் கட்டணத்தையும், சில பாடசாலைகள் தரும் சிறு அன்பளிப்புக்களையும் பயன்படுத்திக் கொள்கின்றோம். 

  10.    ஐரோப்பிய மண்ணிலே தமிழை தொடர்ந்து நிலைநாட்டுவதற்கு 
          எமது பெற்றோர்கள் முனைந்து நிற்பதனாலேயே இதுபோன்ற 
          சேவையை உங்களால் செய்யமுடிகின்றது. எனவே அவர்களுக்கு 
          நன்றி சொல்லத் தமிழர்களாகிய நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். 
          இப்போது அடுத்த விடயத்திற்கு வருகின்றேன். 16.11.2013 அன்று 
          ஜேர்மன் ரீதியில் நீங்கள் திருக்குறள் மனனப்போட்டி நடத்த 
          உள்ளதாக அறிகின்றேன். முன்னமே நீங்கள் வயதுப் பிரிவின்படி 
          விண்ணப்பப் படிவம் அனைவருக்கும் அனுப்பியுள்ளீர்கள். என்ன 
          நோக்கத்திற்காக இப்போட்டி நிகழ்வுகளை நடத்துகின்றீர்கள் என்று 
          விளக்கமாகச் சொல்லமுடியுமா?
  திருக்குறள் தமிழ்மக்களின் வாழ்வியலை எடுத்துக் காட்டும் ஒரு இலக்கண நூல். மக்களை மக்களாக வாழ்வதற்கு வழிகாட்டும் ஒரு அற்புதமான அறநூல். இதனை தமிழ்மக்களும், உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்வரிய பொக்கிசமான தமிழ்மக்களின் வாழ்வியல் நூலை, எல்லாத் தமிழ்ப் பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற பெரிய ஆவலும், வள்ளுவர் வழியை அறிந்து அதன்படி வாழவழி அமைப்பதற்கும் திருக்குறள் போட்டி பயன்படும் என்ற எண்ணமும், இதன் மூலம் பிள்ளைகளின் தமிழாற்றலை வளர்ப்பதோடு, அவர்களின் தமிழ்மொழிப் பேச்சாற்றலையும் வளர்க்கலாம் என்ற நோக்கமும், எனது திருக்குறள் பற்றும் திருக்குறள் போட்டியைத் தொடர்ந்து நடாத்தி வருகின்றமைக்கு மூலகாரணமாகும்.

  11.    இப்பேட்டியின் நோக்கமே இதனை வெளி உலகம் அறியவேண்டும் 
          என்பதுதான். அதனை உங்கள் பதிலில் இருந்து அனைவரும் 
          புரிந்திருப்பார்கள். எத்தனை வருடங்களாக இத்திருக்குறள் 
          போட்டிகளை நடத்தி வருகின்றீர்கள்?

  பல்வேறு பாடசாலைகளுக்கு தெரியப்படுத்தி ஆங்காங்கு திருக்குறள் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால் டோட்முண்ட் நகரத்தில் கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று, இம்முறை எட்டாவது வருடமாக நடைபெறவுள்ளது.

  12.    11 வயதுவரையுள்ள பிள்ளைகளுக்கான போட்டியில் அவர்கள் 
           திருக்குறள்களை மனனம் செய்து கூறுதல் வேண்டும் என்று 
           கேட்டிருக்கின்றீர்கள். இதனால், பிள்ளைகள் என்ன பலன்  
           பெறுகின்றார்கள் என்று கருதுகின்றீர்கள்?

  திருக்குறளைத் தெரிந்திருக்கிறார்கள், திருவள்ளுவரைத் தெரிந்திருக் கிறார்கள், தமிழ்நூல் என்பதைத் புரிந்திருக்கின்றார்கள். தமிழ் சொற்களைத் தெரிந்து, பழகி சிறந்த முறையில் உச்சரித்துப் பேசக் கற்றுக் கொண்டுள்ளார்கள். எதிர்காலத்தில் அறிந்தும், புரிந்தும், விளங்கிக் கொண்டும் தேடல் செய்வார்கள் எனக் கருதுகின்றேன்.

  13.    இத்தனை வருடங்கள் இப்போட்டிகளை நடத்தியதற்கு நீங்கள் கண்ட 
           பலனை வெளிப்படையாகக் கூறுங்கள்.
  முதற் கேள்விக்குக் கூறிய பதிலுடன், மேலும் பிள்ளைகள் மேடைக் கூச்சத்தை விரட்டியிருக்கின்றார்கள். அவர்களில் பலர் தொடர்ந்து திருக்குறள் போட்டிக்கு முகம்கொடுக்க விரும்புகின்றார்கள். பெற்றோர் களின் மனம் மகிழ்ந்திருக்கின்றது. அவர்களும் திருக்குறளைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் திருக்குறள் புத்தகத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள். இதுவே பெரும் பயனாகக் கருதுகின்றேன். 

  14.    நன்றி ஸ்ரீஜீவகன் அவர்களே. சிறப்பான விடைகளை அளித்தீர்கள். 
           உங்கள் குறிக்கோள்கள் நிறைவேறிப் புலம்பெயர்வில் நல்ல 
           சிறப்பான சமுதாயம் உருவாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்  
           கொள்ளுகின்றேன்.
  நன்றி சகோதரி. பலமுனைப்பட்ட கேள்விகள் மூலம், திருக்குறள் போட்டி பற்றியும், கல்விச் சேவை பற்றியும் வெளிக்கொணர வேண்டும் என்ற தங்களின் ஆவலைப் பாராட்டி வாழ்த்துகின்றேன்.


  9 கருத்துகள்:

  1. முதற் கேள்விக்குக் கூறிய பதிலுடன், மேலும் பிள்ளைகள் மேடைக் கூச்சத்தை விரட்டியிருக்கின்றார்கள். அவர்களில் பலர் தொடர்ந்து திருக்குறள் போட்டிக்கு முகம்கொடுக்க விரும்புகின்றார்கள். பெற்றோர் களின் மனம் மகிழ்ந்திருக்கின்றது. அவர்களும் திருக்குறளைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் திருக்குறள் புத்தகத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள். இதுவே பெரும் பயனாகக் கருதுகின்றேன்

   அருமையான பேட்டி
   படிக்கப் படிக்க பெருமையாக இருந்தது
   பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி சார் . போட்டி 16ம் திகதி நடைபெறப் போகின்றது . எண்ணியது எண்ணியவாங்கு நடைபெற்று ஸ்ரீ ஜீவகன் அவர்கள் மனமும் மகிழ்ச்சியடைய வாழ்த்துவோம் .

    நீக்கு
  2. where is my karuththu.....????? (before 2-3 weeks ago...!!)

   பதிலளிநீக்கு
  3. 2-3 கிழமைக்கு முன்பு கருத்துப் போட்டேன் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
   வரவில்லைப் போன்று தெரிகிறது.

   ஜீவகன் அவாகள் பணிக்கு மனம் நிறைந்த வாழ்த்து.
   அவரது பணி தொடர இறையாசியும் கிடைக்கட்டும். அதைப் பதிவாக்கிய தங்களிற்கும் இனிய வாழ்த்து.
   வேதா. இலங்காதிலகம்.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...