• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 6 டிசம்பர், 2013

  இலக்கிய இன்பம்

     

  கண்டவற்றுள் உள்ளம் கலந்து, களிப்படைந்து, தாம் பெற்ற இன்பம் பிறர் அறிய இரசனை கலந்து,  சிருஷ்டிக்கும் படைப்பாளிகளின் படைப்புக்களின் இலக்கியநயம் சுவைத்து இன்புறத்தக்கது. எம்வசம் கிடைக்கும் சிருஷ்டிகளின் உயிரோட்டம் சங்கம் தொட்டு இன்றுவரை அவ்வக்கால மொழிநடை, இலக்கியமாற்றங்களுக்கேற்ப வேறுவேறு பாணியில் பரிமளித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் எழுத்து வடிவங்கள் புரியமுடியாத காலத்தில் கல்வெட்டுப்படிவங்களைப் படிக்கமுடியாதவர்களாக  யாமிருந்தோம். அக்காலகட்டம் மீறி எழுத்துவடிவங்கள் படிக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் பெற்ற இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் எம்மவர் கற்பனை வளத்தில் மேம்பட்டு நின்றதை சுட்டிக் காட்டுகின்றன. ஆயினும் அவற்றிற்குக் கூட பொழிப்புரை எமக்குத் தேவைப்படுகின்றது. அதேபோல், தற்போதைய மொழிநடைகூட எதிர்காலத்தில் எமது ஓரிரு தலைமுறைகளின் பின் பொழிப்புரை தேடி நிற்கும் என்பதைத் தற்கால அறிவியல், பொறியியல் உலகம் காட்டிநிற்கின்றது.  காலங்கள் மாறினாலும் மனிதன் கற்பனைக்கு காட்சிப்படிவங்கள் மாறினாலும் மனிதன் எண்ணப்பாங்கில் மாற்றங்கள் பெரிதாக இருந்ததாக இலக்கியங்கள் மூலம் அறியப்படவில்லை. தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனப் படைப்பாளிகள் படைத்துச் சென்ற படைப்புக்கள். கற்போர் மனதில் இன்பஅருவியைப் பாய்ச்சிவிடுகின்றன.
                         

    
              எண்ணங்களிலே வண்ணக்கலவைகளைக் கலக்குகின்ற  சங்கப்பாடல்களிலே அழகான கற்பனை நயங்கள் காணப்படுகின்றன. கம்பர் கவித்திறத்தில் காதினுக்கும் ஓசைநயம் ஒளிந்திருக்கின்றது, அருணகிரிநாதர் பாடல்களில் சந்தம் பல சிந்திக்கிடக்கின்றன, திருக்குறளிலே சொல்லின்பம் சொக்க வைக்கின்றது, காளமேகம் பொழிந்த கவிமழையிலே ஆங்காங்கே பகுத்தறிவு சிலேடையாக காட்டப்படுகின்றது. இவ்வாறு காலம் காலமாக கையாளப்பட்ட இலக்கியச்சுவைகளிலே இனிமையும் இருந்தது, பொருளும் புதைத்திருந்தது.
                        
  இவ்வாறான இலக்கியக் கடலுள் மூழ்கிய பலரும் எடுத்த முத்துக்கள் போல் இலக்கியக்கடலின் கரையில் நின்று நான் பெற்ற அற்புத இலக்கிய அலைக்கரங்களை சிறிது அலசுகின்றேன். சுவைத்துச்சுவைத்து இன்புறத்தக்க இனிமைமாறா தமிழ்கவிச்சுரங்கத்தில் சிலவற்றை காட்சிப்படுத்துகின்றேன். கவிச்சுவை பற்றிக் கம்பரும்
           
       "தென்னுண் தேனின் தீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்"

                         என்றார். மகாகவி பாரதி கூட


           
            "கள்ளையும் தீயையும் சேர்த்து – நல்ல
            காற்றையும் வான வெளியையுஞ் சேர்த்துத்
            தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
            தீஞ்சுவைக் காவியஞ் செய்து கொடுத்தார்"


  என்று பாடியிருக்கின்றார்.
           
         இலக்கியக்கல்வியாளன் பயன் நோக்கிக் கற்காது. இரசனை இன்பம் கருதிக் கற்கும்போதே பயன்பெறுகின்றான். உழைப்பைக் கருதி இலக்கியம் கற்போர், உள்ளத்துணர்ச்சிக்கு இடம்தர முடியாது போவர். இலக்கியம் சிறுகச்சிறுக மனிதமனத்தைப் பாதிக்கின்றது. உள்ளத்தைப் பண்படுத்துகின்றது. மேம்படுத்துகின்றது. அவற்றை தொடருகின்ற படைப்பாளிகள் அவ்வப்போது பகிர்ந்தளிக்கும்போது மறைந்து, ஒழிந்து வாழும் இவற்றின் சுவையைப் பலரும் பெற வாய்ப்பிருக்கின்றது.

          வள்ளுவப் பெருந்தகை அளித்த குறளமுதத்தைச் சுவைக்கும் போது அதில் பல்வகை சுவை பரந்து காணப்படுகின்றது. அதில் புதைந்து கிடக்கும் சுவை கருதிக் கற்கும்போது பொருள் இன்பம் மனதுள் பதிந்து வாழ்நாள் முழுதும் யாம் ஆற்றும் காரியங்களுக்கு எச்சரிக்கை ஆற்றி எம்மை வழிப்படுத்துகின்றது.


   
             "தீயவை தீய பயத்தலான் தீயவை
              தீயினும் அஞ்சப்படும்"
             
               என்னும் போது தீயவை செய்வதற்கு மனம் அஞ்சுகின்றது. இவ்வாறே இலக்கியச்சுவை ததும்பும் இலக்கியங்கள் மனித உள்ளங்களை ஆட்சி புரிவதைக் காணக்கூடியதாக இருக்கின்றன. மனித மனங்களை ஆட்சி செய்கின்றபோது அது பிறிதோர் இடத்தில் வேறுவிதமாகப் வெளிப்படுகின்றது. பேச்சாளர்கள் தமது பேச்சிலே அப்படியே பயன்படுத்துகின்றனர். எழுத்தாளர்கள் அதன் பாதிப்பிலே வேறுவிதமாக அப்பொருளை அல்லது ஓசையைப் பயன்படுத்துகின்றனர்.

               ஒரு சொல்லைச் சொல்லும் போது அந்தச் சொல்லைவிட வேறு ஒரு சொல் அதன் கருத்தை வெளிப்படுத்த இல்லை என்பதை அறிந்து பொருத்தமான சொல்லைச் சொல்ல வேண்டும் எனச்சொல் பற்றி வள்ளுவர் ஒரு குறளிலே விளக்குகின்றார்.

           "சொல்லுக சொல்லைப், பிறிதோர் சொல் அச்சொல்லை
            வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து"

  இதனையே வெற்றிவேற்கை எனப்படும் நறுந்தொகையிலே வள்ளுவருக்குப் பிற்கால அரசனும் புலவனும் ஆகிய அதிவீரராமபாண்டியன்

        "பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால்
         மெய்போ லும்மே மெய்போ லும்மே
         மெய்யுடை ஒருவன் சொலமாட் டாமையால்
         பொய்போ லும்மே பொய்யோ லும்மே"


  என ஒருவன் சொல்லுகின்ற சொல்லை தனது சொல் ஆற்றலினாலும் சொல்லைக் கையாளுகின்ற தன்மையினாலும் பொய்யை மெய்யாக்கி விடுகின்றான் என எடுத்துக் கூறுகின்றார்.

          இவ்வாறு இலக்கியப் பாதிப்பு இக்கால பாடலாசிரியர்களிடையேயும் காணப்படுகின்றது. அக்கால கண்ணதாசனிடமும் காணப்பட்டது. புகழேந்தி

        "மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
         பங்கயம் என்றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
         காத்தாள்அக் கைமலரைக் காந்தளெனப் பாய்தலுமே
         வேர்த்தாளைக் காணென்றான் வேந்து"

  எனக் கையாண்ட கற்பனையை. கவிஞர் கண்ணதாசன்

        "பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத – நான்
         வளைகொண்ட கையாலே மெதுவாக மூட"

       என வரிதொடுத்துள்ளார்.

             இலக்கிய ஓசைச்சுவையிலே உள்ளம் பதிக்கும்போது இராமனால் சோர்வுற்று இராவணன் கலங்கி நிற்கும்வேளையிலே உலகை மறந்து கும்பகர்ணன் உறங்கிக் கொண்டிருக்கின்றான். அவ்வுறக்கம் நீக்க உள்ளங் கொந்தளிக்கும் தூதுவர்கள் கும்பகர்ணனைத் துயில் எழுப்புகின்றனர்.
                   
         "உறங்கு கின்ற கும்பகர்ண
          உங்கள் மாய வாழ்வெலாம்
          இறங்கு கின்ற தின்றுகாணெ
          ழுந்தி ராயெழுந் திராய்
          கறங்கு போல விற்பிடித்த
          கால தூதர் கையிலே
          உறங்கு வாயு றங்குவாயி
          னிக்கி டந்து றங்குவாய்"


  படிக்கும்போதே நா தாளம் போடுகின்ற  ஓசையினை தன் சொல்லாட்சியினால் கம்பர் தந்திருக்கும் சுவை மெச்சத்தக்கது. இவ்வாறே திரிகூடராசப்பக் கவிராஜரும் திருக்குற்றாலக் குறவஞ்சியிலே பந்தடிக்கும் காட்சியிலே

          "செங்கையில் வண்டு கலின்கலின் என்று
           ஜெயம்ஜெயம் என்றாட - இடை
           சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
           தண்டை கலந்தாட - இரு
           கொங்கை கொடும்பகை வென்றன மென்று
           குழைந்து குழைந்தாட – மணிப்
           பைங்கொடி மங்கை வசந்த சவுந்தரி
           பந்து பயின்றனளே"


  என்று எம்மனதுள் பூம்பந்தடிக்கும் சொல்லாட்சியினைத் தன் வரிகளில் கொண்டிருக்கின்றார்.

              இவ்வாறே காளமேகம் தூது பற்றிக் கொட்டிய ஒரு பாடலிலே
              
            "தாதிதூ தோதீதூ தத்தைதூ தோதாதூ
             தூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த
             துத்தித்த தாதே துதித்துத்தேத் தொத்தீது
             தித்தித்த தோதித் திதி"

                 தோழியின் தூதோ தீதானது. கிளி தூதுபோய்க் கூறாது. பாங்கியின் தூதானது நாட்களைக் கடத்தி வைக்கப்படும் தூதாகும். இறைவனைத் தொழுது தொடர்ந்தால், நல்ல பயனளிக்காமல் வீணாகப் போகும் பூந்தாதையொத்த தேமல் என் மீது விரைவாகப் பாய்ந்து மேலும் அதிகமாகாமல் சுவையான காதலனுடைய பெயரைக் கூறி என்னைக் காப்பாற்றி வைப்பாயாக. என ஓசைச்சுவைமிக்க பாடலிலே சொல்லை ஆட்சி செய்திருக்கும் பாங்கு மெச்சத்தக்கது.

                  அதேபோல் கற்பனை நயம் மிக்க பாடல்களை நம்முன்னோர் படைத்துள்ள பாங்கை நோக்கும்போது சீவகசிந்தாமணியில் ஏமாங்கத நாட்டின் சிறப்பைக் கூறும் ஓரிடத்தில் திருத்தக்க தேவர், தென்னை மரத்திலேயிருந்து பழுத்த தேங்காய் பக்கத்திலே இருந்த கமுக மரத்தின் தலையிலே விழுகிறது. அப்போது அம்மரத்தின் உச்சியிலே கட்டியிருந்த தேன்கூடு உடைந்து போக தேன் வதை கொட்டுகின்றது. அப்படியே தொடர்ந்து விழும் அத்தேங்காய் கமுகு மரத்தின் கீழே வளர்ந்திருந்த பனையிலே விழ அங்கிருந்த பலாப்பழத்தைக் கீறிவிழ அதனடியில் இருக்கும் மாமரத்தில் வீழ்ந்து மாம்பழங்கள் சிதறுகின்றன. தொடர்ந்து அதன் அடியில் இருந்த வாழை மரத்தில் வீழ்ந்து வாழைப்பழங்கள் சிந்துகின்றன. இப்போதுதான் தரைபடுகின்றது. தேங்காய் பழம். இவ்வாறு நாட்டுவளம் கற்பனையில் அழகுறுகின்றது.


             "காய்மாண்ட தெங்கின் பழம்வீழக்
              கமுகின் நெற்றிப்
              பூமாண்ட தீந்தேன் தொடைகீறி
              வருக்கை போழ்ந்து
              தேமாங் கனிசிதறி வாழைப்
              பழங்கள் சிந்தும்
              ஏமாங் கதமென் றிசையால்
              திசைபோய துண்டு"


  திருக்குற்றாலக் குறவஞ்சியிலே திருகூடராசப்பகவிராயர் திருகூடமலையை வர்ணிக்கும் பாடலிலே           
   

             "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
              மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
              கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
              கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
              தேனருவித் திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்
              செங்கதிரோன் பரிகாலும் தேர்க்காலும் ஒழுகும்
              கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
              குற்றாலத் திரிகூட மலையலங் காரர்
              குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே"


  எனத் தன் கற்பனையை மிக எளியவரிகளில் படம்பிடித்துக்காட்டியுள்ளார். இதுவே எழுத்தால் மனதுள் படம் வரைதலாகின்றது.

              கற்பனை சுவைமிக்க கம்பராமாயணத்திலே பல தித்திக்கும் சுவைகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் ஒரு எளிமையான  உவமை
   

  "கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்"

         இதேபோல் அற்புதமான பொருள் புதைந்த ஒரு தனிப்பாடலைச் சீர்காழி அருணாசலக்கவிராயர் தந்திருக்கின்றார்.

        "வெண்ணெயுற்று நெய்தேட வேண்டுமா தீபமுற்று
         நண்ணு கனறேட னன்றாமோ – என்மனத்தை
         நாடிச் சிவனிருக்க நாடாம னூர்தோறும்
         தேடித் திரிவதென்ன செப்பு"


  உள்ளமே! உனக்கு என்ன பேதைமை? வெண்ணெய் கையிலிருக்கும் போது நெய் தேடவேண்டிய அவசியமென்ன? விளக்கு இருக்கும்போது அனலைத்; தேடிப்பிடிப்பான் ஏன்? என் மனதை நாடிச் சிவன் இருக்கும்போது அவனை அகத்துள் நோக்காமல் ஊரூராய்ச் சென்று கோயிலுக்குள் நுழைந்து பார்ப்பது ஏன்?

           படிக்கும்போதே சிந்தனைக்கு வித்திடுகின்றார் அல்லவா!

           இதுபோலவே பாடல் மூலம் மழைபொழியும் மகத்துவத்தை அறிவியல் கண்கொண்டுநோக்கி இலகுவான முறையில் மாயூரம் வேதநாயகம் அவர்கள்,

         "காரேயுன் னீரையெல்லாங் கள்ளன் கவர்ந்தானோ
          நீரே யுதவாய் நெறியாமோ – நேரேதான்
          வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டு
          பேரிகொண்டு நீதிரண்டு பெய்"

  எனப்பாடியுள்ளார். இனி விளக்கத்தைப் பாருங்கள்.

  மேகமே நீ தேக்கி வைத்திருக்கின்ற நீரையெல்லாம் கள்வன் கவர்ந்து கொண்டு போய்விட்டானோ? நீரை உதவாமல் இருப்பது நெறியாகுமா? உனக்கு நேராகத்தானே கடல் உள்ளது. எனவே கடல் நீரை மொண்டு அள்ளிஅள்ளிக் குடித்து வானத்து வழியாகச் சென்று, கருமுகிலாக மாறி, இடிமுழக்கம் செய்து ஒன்று திரண்டு ஷஷசோ|| வெனப் பெய் என சொற்சுவை சொட்டப் பாடியிருக்கும் பாங்கு இனிமை பயக்கின்றது.

              இவ்வாறு நாம் வாழும்காலத்தில் எழுதப்பட்டு சேகரிக்கப்படும் நற்றமிழ் பாடல்களும் மனதுக்குள் புகுந்து மெல்லிய மயிற்தூரிகையால் மனதை வருடிவிடுவதுடன் சுவைத்தின்புறும் கற்பனையைக் கலந்துவிடுகின்றன. பாசமலர் படத்துக்காக கவியரசு கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட தாலாட்டுப்பாடலிலே சில வரிகள்


        "நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி
          நடந்த இளந்தென்றலே
          வளர் பொதிகை மலைதோன்றி
          மதுரை நகர் கண்டு
          பொழிந்த தமிழ்மன்றமே"

  ஒரு குழந்தையைத் தாலாட்டும்போது தென்றலின் வருகையும், தமிழ் மன்றத்தின் தோற்ற வளர்ச்சியையும் எடுத்துக்காட்டி சொல்லவரும் செய்தியைச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் புகுத்திவிடும் கவிவல்லமையை கண்ணதாசனில் காணக்கூடியதாக இருக்கின்றது.
              

   நீலவானிலே நித்தம் காணும் நிகழ்வை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஒருபாடலில் காட்டியுள்ள தன்மையைப் பாருங்கள். இளையநிலா பொழிகிறது என்னும் பாடலிலே

  நிலாவானது


         "முகிலெடுத்து முகம் புதைத்து விடியும் வரை தினம் நனையும்"

         முகிலுக்குள் முகம் புதைப்பதனால், முகிலுக்குள் நிறைந்திருக்கும் மழைத்துளிகளில் தினமும் நனைகிறது என அருமையாக வர்ணிக்கின்றார். அப்பாடலிலேயே

              "வானவீதியில் மேக ஊர்வலம்
               காணும் போதிலே ஆறுதல் தரும்
               பருவமகள் விழிகளிலே கனவு வரும்"

  எனப்பருவப் பெண்கள் நிலாப்பொழியும் நேரம் மேகஊர்வலக்காட்சியில் தமை மறந்து நிற்பதுடன் தம் உள்ளக் காதலுக்கு உருக்கொடுத்து இன்புறும் வேளையையும் இதமாக உலகுக்குக் கொண்டுசேர்க்கின்றார். மேகம் உலாப் போகும் காட்சியை
            

              "முகிலினங்கள் அலைகிறதே
               முகவரிகள் தொலைந்தனவோ
               முக வரிகள் தவறியதால்,
               அழுதிடுமோ அது மழையோ"

  முகிலினங்கள் கடல் மோர்ந்து, நீர் சேர்த்து, உலக நன்மைக்காக மழையாகச் சொரியவில்லை. தமது முகவரிகளைத் தொலைத்துவிட்டன. அதனாலேயே மழையாக அழுகின்றன எனத் தற்குறிப்பேற்ற அணியைக் கையாண்டு அற்புதமாய்க் கற்பனையைக் கையாண்டுள்ள சுவை மெச்சத்தக்கது.

            "நீலவானிலே வெள்ளிஓடைகள்
               போடுகின்றதே என்ன ஜாடைகள்
               விண்வெளியில் விதைத்தது
               யார் நவமணிகள்"

  எனத் தன் பாடலுக்கு இலக்கியஇன்பம் ஊட்டியிருக்கும் கவியரசு வெளிப்டுத்திய இன்பச்சுவை எண்ணஎண்ண இனிக்கின்றது. இதைவிட ஒரு இலக்கியச்சுவையாளனுக்கு சுவையுணவு தேவையா?

                இவ்வாறு எழுதஎழுதக் குறையாத அட்சய பாத்திரம் போல் எங்கள் இலக்கியப்பரப்பிலே பழந்தமிழ் இலக்கியங்களும்  தற்கால இலக்கியங்களும் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை அள்ளிப்பருகி இன்பம் பெற இத்தருணம் மட்டும் போதாது. இப்பதிவு மட்டும் தாங்காது. தொடரும் வாழ்வில் தொகையாய்ப் பெருகும், சுவையாய் தித்திக்கும், தீந்தமிழ் இன்பம் சுவைப்போம்.


  காற்றுவெளி கார்த்திகை இணைய இதழில் வெளியான எனது கட்டுரை  14 கருத்துகள்:

  1. திருக்குறளைப் பற்றி என்ன வேண்டுமென்றாலும் கலந்து ஆலோசிக்கலாம் சகோதரி...

   நன்றி...

   dindiguldhanabalan@yahoo.com

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உங்கள் பதிவில் திருக்குறளுக்கு முதல் இடம் வகிப்பது அறிவேன். அதனால் இப்பதிவில் உங்கள் பற்றியும் எழுதுவதற்கு இருந்தேன். பதிவு நீண்டுவிடும் என்று நிறுத்திவிட்டேன். மிக்க நன்றி. நிச்சயமாக ஏதாவது சந்தேகமென்றால் தொடர்பு கொள்வேன்

    நீக்கு
  2. அருமையான படைப்பாளிகள். அற்புதமான ஆக்கங்கள்.

   ஒருங்கிணைத்துக்கொடுத்துள்ள பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

   பதிலளிநீக்கு
  3. இனிய வணக்கம் சகோதரி,
   இன்ப ஊற்றாம் இலக்கியம் பற்றிய அழகிய புனைவு.
   நெஞ்சத்தில் தேன் வார்க்கும் இனிய
   இலக்கிய பாடல்களை அதன் சுவை மாறாது
   எமது பார்வைக்கும் தித்திக்கும்
   தேன்பலாச்சுளையாய் எமது செவிக்கும்
   ஈந்தமைக்கு நன்றிகள் பல.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி மகேந்திரன் அவர்களே . உண்மை பாடல்களை ஆழ்ந்து நோக்கும் போது எம்மை அறியாமலே இன்ப ஊற்றுப் பெருக்கெடுக்கும்

    நீக்கு
  4. தற்கால இலக்கியத்தில்
   சங்கத்திற்கு நாங்கள் சற்றும் இளைத்தவர்கள் அல்ல என
   கவியரசரும் கவிப்பேரரசும் தருவித்த கவிகளை
   எண்ணிஎண்ணி அளவளாவிட செய்துவிட்டீர்கள்.
   அருமை அருமை.

   பதிலளிநீக்கு
  5. அற்புதமான கட்டுரை
   படிக்கப் படிக்க மனம்
   அதன் சுவை தந்த சுகத்தில் எக்காளமிட்டது
   அறியாதன பல அறிந்தேன்
   பகிர்வுக்கும் தொடரவும்
   மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி சார் . உங்கள் பாராட்டுக்களே எனக்கு ஊக்க பானம்

    நீக்கு
  6. மிக நன்று.
   நல்ல கட்டுரை.
   இனிய வாழ்த்து.
   வேதா. இலங்காதிலகம்.

   பதிலளிநீக்கு
  7. இலக்கிய இன்பம்
   ---------------------------------

   முத்தொட்டுனூரு பாடல் (3*9*100 = 2,700 Poems)
   http://ulikininpin10.tumblr.com/

   பதிலளிநீக்கு
  8. தரமான இலக்கியக் கட்டுரை.
   நிறைய மேற்கோள்கள் உங்களின் வாசிப்பைக் காட்டுகின்றன.
   சமீப காலத்தில் இது போன்ற செறிவான கட்டுரைகளை வாசித்ததில்லை.
   நன்றி.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...