• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 1 ஜனவரி, 2014

  புத்தாண்டில் உதிதெழுந்த நினைவுகள்

  வண்ண வண்ண வேடிக்கைகள், வகைவகையாய் வாழ்த்தொலிகள், எண்ணமெல்லாம் நல்லுணர்வு, ஏற்றம் பெறவே முன்னெடுப்பு. வருடா வருடம் வந்துதிக்கும் இந்நாளில் மாறாத வரவேற்பு,

                 பூலோகம் சுழல்கிறது புதுவருடம் காண்கிறது. பிறந்தநாள் கொண்டாட்டமென தன் சேவையதை பூமியும்தான் மறப்பதில்லை. தன் போக்கையுமே மாற்றுவதில்லை. யுகம் யுகமாய் கடந்து செல்லும் தன் வாழ்நாளில்  தனக்கு மேலும் தனக்குக்குள்ளும் நடப்பது எதுவும் அறிந்ததுவும் சுழன்றதில்லை. மூளை இழந்த மனிதனாய் அது வாழ்தலினாலோ முன்வைக்கும் காலை பின்வைக்காது பிறர் நற்பேச்சுக்கு இடம் தராது. வாழ்வென்பது நிலை இல்லை என்று கூட உணராது தன் போக்கில் செல்கிறது.

         இருநூறு கோடி ஆண்டுகள் தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியிலே முதல் உயிர் கிட்டத்தட்ட ஐந்து கோடி ஆண்டுகளே தோன்றியதாக விஞ்ஞானம் சொல்கிறது. இடைப்பட்ட ஆண்டுகளில் வெறுமையாகக் கிடந்த கிடந்த பூமியிலே எதுவுமே இருந்ததில்லை. கிட்டத்தட்ட முப்பத்தைந்து இலட்சம் ஆண்டுகளே மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான். வளைந்த முள்ளந்தண்டை  நிமிர்த்தினான், இணைந்தே வளர்ந்த வாலை இழந்தான். இன்று பூமியை தன் தேவைக்காய் முயன்று முயன்று தனக்காய் பயன்படுத்துகின்றான். மனிதனை நிறுத்தச் சொன்னால், நிறுத்தப் போவது இல்லை. நிறுத்தினாலும் அவன் மனிதன் இல்லை. மனிதன் தோன்றியதாலேயே பூமியும் பெருமை அடைகின்றது. பூமியின் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதன் வாழ்காலம் சிறிதே. அவன் சேவைகளோ அளப்பெரிதே. புதுமைகள் காணும் மனிதனை வாழ்த்தி, மனிதன் மற்றவர் மனம் போல் வாழும் வழியையும் ஒருமுறை சிந்திக்கத் துணிந்தேன்.

  குழந்தை:

  வெற்றுக் கடதாசி, பக்கம் இருந்து கிறுக்குபவர்கள் கீறல்களே பதியும் கடதாசி. அக்கீறல்களே அதன் எதிர்காலம். அதனால் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பேசத்தெரியாத வாழத்தெரியாத அவ் எதிர்கால மாமனிதனுக்காய் அவதானம் எடுங்கள்.

  பெற்றோர், கணவன் மனைவி:

  தங்கள் வாழ்க்கைக்காக வந்து பிறந்த உங்கள் மகிழ்ச்சியானது தம் சொந்த மகிழ்ச்சியை கொண்டாட வழிவிட்டு, வழிக்காட்டி,  வழிநோக்குங்கள். அவர்தம் மனவிருட்சம் மகிழ் விருட்ஷமாய் இவ்வாண்டு சிறக்கட்டும்.

                ஆண்களே! உங்களை நம்பி தங்கள் சொந்த விருப்புகள் விட்டு, என் குடும்பம் என் கணவன் என் பிள்ளை என வாழவந்த மனைவியின் மனம் அறிந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.  அவள் எதிர்பார்ப்புக்களை முடிந்தவரை முடித்து வைக்க முயற்சி எடுங்கள். திருமணத்தின் முன் அவள் இருந்த நிலை மறக்க திருமணத்தின் பின் அவள் இருக்கும் நிலையை மாற்றி அமையுங்கள். கணவன் ஆக நீங்கள்  நடந்து கொள்ளும் முறையிலேயே மனைவி எண்ணப்போக்கு மாற்றம் காணும்.  

                அதேபோல் தனக்காக ஒரு பாரிய பொறுப்பு இருக்கின்றது என ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து நடந்து கொள்ள சந்தர்ப்பம் அமைவது திருமணத்தின் பின்புதான். எதிர்கால சமுதாயத்தின் ஒரு துளி என் கையிலும் இருக்கின்றது என்னும் எண்ணம் கொண்டு அவதானத்துடன் பொறுமையைத்  துணைக்கொண்டு இல்லத்தின் ஒவ்வொரு அங்கத்தவர்களுக்கும் அச்சாணியாய் நடமாட வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறமையும் ஒவ்வொரு பலவீனமும் இருக்கின்றது. அனைத்து ஆண்களின் திறமையும் என் கணவனிடம் இருக்க வேண்டும். அனைத்து ஆண்களின் பலவீனத்தில் ஒன்று கூட என் கணவனிடம் இருக்கக் கூடாது என்று நினைத்தல் கூடாது. விட்டுக்கொடுத்தல் என்னும் பண்புடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் . கணவன் குறையை மற்றவர்களிடம் பறைசாற்றக் கூடாது. சின்னச் சின்ன அன்பளிப்புக்கள் அன்புக்குத் துணை ஆகின்றது. கணவனுக்கு நிகரான இடம் பிடிக்க பெண்களே நீங்கள் நடந்துகொள்ளும் முறையைப் பொறுத்தே அமைகின்றது. இவ்வருடம் குடும்பங்களில் அமைதியும் அன்பும் நிறைந் திருக்கட்டும். அதன் மூலம் அகிலம் சிறக்கட்டும். 

  சகோதரர்கள்:

  ஒரு வயிற்றில் பூத்த மலர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக கணனித் துணை இன்றி வீட்டில் கலந்துரையாடுங்கள். உங்கள் பெற்றோர் ஏங்கும் எதிர்பார்க்கும் அன்பைத்தாருங்கள். உங்கள் வீட்டில் இருந்து உலகு வியக்கும் சாதனை ஒன்றை உருவாக முயற்சி எடுங்கள் அதன் மூலம் இவ் ஆண்டு நல்லாண்டாய் அமையட்டும்.

  நண்பர்கள் :

  உன்னத உறவென்பார், உதவிடும் துணை என்பார் உலகமே மெச்சிடும் தொடர்பாடல் மனிதப்பிறவி என்பார். ஆனால், நீதான் என் நண்பேன்டா என்று சொல்லி மறுமுனையில் நண்பன் சிறப்பை மனதுள் புதைத்துப் புழுங்குவது, அவன் உயர்வை சகிக்க முடியாது போட்டி போடுவது, போன்ற எண்ணங்கள் இன்றி ஒற்றுமையாய் வாழப் பழகிக்கொண்டால் நீங்கள் இணைந்த முயற்சிகள் உலகின் கண்ணைத் திறக்கும் உயர் திறமை இவ்வருடத்தில் புலப்படும்.

  எழுத்தாளர்கள்:

  எழுத்தென்னும் ஆயுதத்தைத் தாங்கி உலகென்னும் உயர் சிற்பம் உருவாக்கிடும் கலைஞன். தனக்காக வாழாது தன் சமூகத்திற்காக எழுத்தைப் பயன்படுத்துபவன். எழுத்தாளர்களே ! நடந்ததைத் திரும்பிப்பாருங்கள். நன்றி கூறுங்கள்.

  பிரபல்யம் வேண்டி உங்களை விளங்கச் செய்ய மனட்சாட்சியை இழக்க வேண்டாம். மனதில் ஒன்றை நினைத்து புகழுக்காக வேறொன்று பேச வேண்டாம். வாழும் வாழ்க்கை ஒன்றாகவும் எழுதும் வாக்கு ஒன்றாகவும் இருக்க வேண்டாம். புரிந்ததைக் கொண்டு புரியும் வகையில் பிறருக்குப் புரியச் சொல்லுங்கள். எழுத்தில் வடிப்பது எதுவோ அது அனைத்துப் பக்கமும் ஆழ்ந்து பார்த்த  வரிகளாய் இருக்கட்டும். கற்பனைக்கு இடம் கொடுங்கள் காட்சியை நிஜமாக்குங்கள். மனதார வாழ்த்துங்கள். மறைவாக இகழாதீர்கள். உங்கள் எழுத்தை மதிப்பவர் தமக்கு, நீங்களும் மதிப்பை அளியுங்கள். வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள். இவ்வருடம் உலகு நன்மைக்காய் உங்கள் படைப்புக்கள் விரியட்டும். உலகம் உய்யட்டும்,

  அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  3 கருத்துகள்:

  1. தங்களின் எழுத்துலகப் பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோதரியாதே
   புத்தாண்டு வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  2. பிரபல்யம் வேண்டி உங்களை விளங்கச் செய்ய மனட்சாட்சியை இழக்க வேண்டாம். மனதில் ஒன்றை நினைத்து புகழுக்காக வேறொன்று பேச வேண்டாம். வாழும் வாழ்க்கை ஒன்றாகவும் எழுதும் வாக்கு ஒன்றாகவும் இருக்க வேண்டாம். புரிந்ததைக் கொண்டு புரியும் வகையில் பிறருக்குப் புரியச் சொல்லுங்கள். எழுத்தில் வடிப்பது எதுவோ அது அனைத்துப் பக்கமும் ஆழ்ந்து பார்த்த வரிகளாய் இருக்கட்டும். கற்பனைக்கு இடம் கொடுங்கள் காட்சியை நிஜமாக்குங்கள். மனதார வாழ்த்துங்கள். மறைவாக இகழாதீர்கள். உங்கள் எழுத்தை மதிப்பவர் தமக்கு, நீங்களும் மதிப்பை அளியுங்கள். வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள். இவ்வருடம் உலகு நன்மைக்காய் உங்கள் படைப்புக்கள் விரியட்டும். உலகம் உய்யட்டும்,//

   தங்கள் பதிவுகள் குறித்த என் மதிபீட்டை
   அப்படியே பதிவு செய்ததைப் போல இருக்கிறது

   தங்கள் சீரிய எழுத்துப் பணி புத்தாண்டில்
   மேலும் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  3. ''..புரிந்ததைக் கொண்டு புரியும் வகையில் பிறருக்குப் புரியச் சொல்லுங்கள்...''' செய்வோம்.
   இனிய வாழ்த்து.
   Vetha.Elangathilakam

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்

  உதவி செய்வது என்பது இப்போது விளம்பரமாகப் போய்விட்டது. வலது கை கொடுத்தால், இடது கைக்குப் புலப்படாது என்று இருந்த காலம் மாறி, இப்போது உதவி செய...