• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 15 ஜூன், 2014

  தமிழ்மொழியின் சிறப்பும் புலம்பெயர் எதிர்காலத் தலைமுறையினரும்  மனித இனமானது தனது தோற்றத்தில் இருந்து இன்றுவரை பல இயற்கை அழிவுகள், இயற்கை மாற்றங்கள், படையெடுப்புக்கள், மொழிக்கலப்புக்கள், விபத்துக்கள், புதிய கண்டுபிடிப்புக்கள் போன்ற பல மாற்றங்களைக் கண்டிருக்கின்றது. உடல் வளர்ச்சியடைவதற்காக பசிக்கும் போது உண்டல், களைப்பின் போது உறங்குதல் தவிர விலங்கு போன்று வேறு எதுவுமே ஆதி மனிதனுக்குத் தேவைப்படவில்லை. உண்பதற்கு மட்டுமே உணவு தேடிய மனிதன், மிருக வேட்டைக்கு ஆயுதங்களை உருவாக்கும் கலையை முதலில் கற்றான். கல்லைப் பயன்படுத்தி நெருப்பை உருவாக்க முடியும் என்னும் முதல் கண்டுபிடிப்பைச் செய்தான். தனியாய் வாழ்ந்து, குழுக்களாகி அங்க அசைவுகளின் மூலமும் ஒலி அலைகளை எழுப்புவதன் மூலமும்  எண்ணக் கருத்துக்களை வெளிபடுத்தி  வெற்றி கண்டான். முகக்குறி, கைக்குறி, படக்குறி என புலப்படுத்தி காலப்போக்கில் மொழிப்பயன்பாட்டின் முக்கியத்துவத்தினை உணர்ந்து மொழியை உருவாக்கினான். 
                  
                   சொற்கள் கோர்வைகள் ஆக்கப்பட்டு வாக்கியங்களாகி மொழிகள் உருவாயின. மொழிக்கு வரிகள் கொடுப்பதே எழுத்துக்களாகின்றன. இன்று நாட்டுக்கு நாடு மொழிகள் வேறுபட்டு ஏறக்குறைய (6800) ஆறாயிரத்து எண்ணூறுக்கு மேற்பட்ட மொழிகள் வழக்கில் இருக்கின்றன. இவற்றில் (2300) இரண்டாயிரத்து முன்னூறு மொழிகள் மட்டுமே எழுத்துருவில் இருக்கின்றன. அதிகமான மக்களால் தாய் மொழியாகக் கருதப்பட்டு பேசப்பட்டும் எழுதப்பட்டும் கொண்டிருக்கும் மொழிகள் ஆங்கிலம், இந்தி, சீனம், தமிழ். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அன்றும் இன்றும் செழுமையுடன் இருக்கக்கூடிய மொழி தமிழ்மொழி.

                எமது தாய் மொழியாகிய இத்தமிழ் மொழி பற்றிய வரலாறு அறிவு ஆசிரியர்களிடம் இல்லையானால் அம் மொழியின் முக்கியத்துவம் ஐரோப்பிய வாழ் எதிர்காலத் தலைமுறையினருக்கு அறிவிக்க இயலாது போய்விடும். அதுபோல் தமிழ் மொழி கற்கும் ஆர்வமும் அவர்களிடம் இல்லாது போய்விடும். 
                 
                     தமிழனின் பிறப்பிடமும் தமிழ்மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம்தான். இதுவே முதல் மனிதன் தோன்றிய இடமாகிய இலெமூரியாக் கண்டம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இலெமூர் என்னும் குரங்கு இனம் வாழ்ந்ததனால் இலெமூரியா என வழங்கப்பட்டது என்பதனைவிட. குமரி என்பது ஒரு மூலிகைச் செடி. இதுவே எம்மவரால் சோற்றுக் கற்றாழை (ALOVERA) என அழைக்கப்படுகின்றது. இந்த குமரிச் செடி அதிகமாக வளர்ந்திருந்த காரணத்தினால் குமரிக்கண்டம் என இலெமூரியாக்கண்டம் வழங்கப்பட்டது. இலை10மூலிகைஸ்ரீ இலை மூலிகை. இதன் கடை எழுத்து நீங்கி இலைமூலியாகி இலைமூலி இலைமூரியாவாகி அது பின் இலெமூரியாக என வழங்கப்பட்டது என்னும் கருத்தை தேவநேயப்பாவாணர் அவர்கள் கூறுகின்றார். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது. முதல் மனிதன் தோன்றிய இடமே முதல் மொழி தோன்றிய இடமாகவும் இருக்க வேண்டும். அவன் பேசிய மொழியே முதன்மொழியாக இருக்க வேண்டும். அதுவே நாம் பேசும் தமிழ் மொழியாகும். ஹரப்பா நாகரிகத்தை ஆராய்வு செய்த ஹெரஸ் பாதிரியார் சரித்திரம் ஆரம்பிப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே இலெமூரியா நாடு தமிழ்நாடாய் இருந்தது என்று கூறியிருக்கின்றார்.
             
   இயல்பாகத் தோன்றிய மொழிக்கு பதினாறு பண்புகள் இருக்க வேண்டும் 
     
     ''தொ ன்மை இயன்மை தூய்மை தாய்மை 
      முன்மை வியன்மை வளமை மறைமை
      எண்மை இளமை இனிமை தனிமை 
      ஒண்மை இறைமை அம்மை செம்மை 
      எனும்பதி னாறும் இன்றமிழ் இயல்பெனப் 
      பன்னுவர் மொழிவலர் பாவாணர் தாமே''

  எனவே தமிழ் மொழி இயல்பாகத் தோன்றிய மொழியாகின்றது. உலகின் தொன்மை மொழிகளாக ஆறு மொழிகள் உள்ளன. அவை தமிழ், சமஷ்கிருதம், சீனம், இலத்தீன், கிரேக்கம், இப்ரூ ஆகியனவாகும். இவற்றில் சமஷ்கிருதம் பேச்சு மொழி அல்ல. இலத்தீன், இப்ரூ மொழிகள் வழக்கொழிந்து விட்டன. ஆனால் தேவநேயப்பாவாணர் கூறியது போல் இன்றும் இலக்கியச் செம்மை, இலக்கண வரம்பு, பழைமை, நிறைந்த சொல்வளம் மிக்கு என்றும் கன்னியாக விளங்குவது தமிழ் மொழியே. 
   
                       எம் முன்னோர் முதல், இடை, கடை என்று  மூன்று சங்கங்கள் தொடர்ச்சியாக வைத்து தமிழ் வளர்த்தனர். அவர்களால் இயற்றப்பட்ட பல  நற்றமிழ் இலக்கியங்களை கடல்கோள் போன்ற இயற்கை அழிவுகளினால் அழிந்து  போயின. எம்மால் அறியப்படுகின்ற பழந்தமிழ் முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகின்றது.  இது தோன்றிய காலம் கி.மு.3 ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு.5 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகின்றது. இதனை இயற்றியவர் தொல்காப்பியர். இவர் அகத்தியரின் 12 மாணாக்கரில் ஒருவர். ''முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணி'' என்னும் பாயிரத்தொடர் மூலம்  இவர் இந்நூல் யாப்பதற்கு முன்பே சிறந்த பல இலக்கண இலக்கிய நூல்கள் இருந்திருக்கின்றன என்பது அறியக்கிடக்கின்றது.

                     பயன்பாட்டில் உள்ளவை நிலைக்கும் பயன்பாட்டை இழப்பவை அழியும் அந்த வகையில் மொழியும் நிலைக்க வேண்டுமானால் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். பயன்பாடு அதிகரிக்க வேண்டுமானால் தமிழன் வாழுகின்ற இடங்களில் எல்லாம் தமிழ் மொழி பேசப்பட வேண்டும். இன்று இலத்தின் மொழி எழுதப்படும் மொழியாக மாத்திரமே உள்ளது. இந்நிலை போல்  அன்றி எழுதப்படும் மொழியாக மாத்திரமன்றி பேசப்படும் மொழியாக தமிழ்மொழி என்றும் தொடர வேண்டுமானால் அந்நிய நாடுகளிலும் அதன் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் மொழியின் மகத்துவம் அதிகரிக்க  வேண்டும்.        
                     
                            ஒரு இத்தாலி நாட்டவராகிய பெஸ்கி பாதிரியார்  மதம் பரப்பும் நோக்கிலே தமிழகம் வந்தார். இவர் தமிழ் மொழியைக் கற்று தமிழுக்குச் சேவை ஆற்றியது மட்டுமன்றி. தன் பெயரையும் வீரமாமுனிவர் என்று மாற்றினார். அவர் 'என் கல்லறையிலே  நான் ஒரு தமிழன் என்று எழுதுங்கள்' என்று கூறியதன்  மூலம் தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்றை எடுத்துக் காட்டியுள்ளார்.  முதல் தமிழ் அகராதி. கோடு போட்டு எழுதும் மெய் எழுத்துக்களை குற்று வைத்து எழுதவைத்தத்துடன், ர சேர்த்து எழுதும் நெட்டெழுத்துக்களை நீட்டி எழுதும் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ போன்ற நெட்டெழுத்துக்களாக மாற்றியமைத்தமை போன்று தமிழுக்கு பல அளப்பரிய சேவைகள் ஆற்றியுள்ளார். இவ்வாறு வேற்று நாட்டவர் தமிழ் மீது காதல் கொண்டு  தமிழுக்கு சேவை ஆற்றியிருக்கும் போது தமிழ்ச் சிறார்கள் தமிழ்கல்வியைப் புலம்பெயர்வில் கற்று அதன் சிறப்பைப் போற்றுவதில் சிறுமை இருக்கப் போவதில்லை. திருக்குறளின் பெருமை உணரப்பட்டு, அது இன்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் போது அந்நூலை புலம்பெயர் தமிழ் சிறார்கள் கற்பதில் நேரம் விரயம் ஆக்கப்படப் போவதில்லை. 

                இலத்தீன் சட்டத்தின் மொழியாகவும், பிரெஞ்ச் காதல் மொழியாகவும் ஆங்கிலம் வணிக மொழியாகவும், சமஸ்கிருதம் தெய்வீக மொழியாகவும் காணப்பட  தமிழ் மொழி பண்பாட்டு மொழியாகக் காணப்படுகின்றது. நாம் தமிழ் பண்பாட்டைப் போற்றும் ஒரு பரம்பரையை உருவாக்க வேண்டுமானால் மொழிக்கல்வியை வளரும் சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகின்றது.
                   
                    மொழி மனிதனை மனிதன் புரிந்து கொள்ள ஒரு சிறந்த ஊடகமாகத் தொழிற்படுகின்றது. தமிழ்மொழிபேசும் பெற்றோர் வாழுகின்ற புலம்பெயர்வில், பெற்றோரை அவர் தம் பிள்ளைகள் சரியான முறையில் புரிந்துகொள்வதற்கு தமது தாய்மொழியைப் பேசக் கற்றல் அவசியமாகின்றது. எதிர்காலத் தலைமுறையினர் தமிழ் மொழியைப் புறக்கணிக்கின்ற போது எமது பரம்பரைப் பாரம்பரியங்கள் அழிந்துபோகின்றன. பண்பாடு மறைந்து போகின்றது. ஒவ்வொரு இனத்தவரும் தமது பண்பாட்டு அம்சங்களை இன்றும் தாம் வாழுகின்ற பகுதியில் நிலைநிறுத்திக்கொண்டே வருகின்றார்கள் என்பதை பல மொழி பேசுகின்ற மக்களிடையே வாழுகின்ற எமது புலம்பெயர் தமிழ் இளந்தலைமுறையினர் நன்கு  அறிவார்கள். 

                 இன்று ஏறக்குறைய 77 மில்லியன் தமிழர்கள் உலக நாடுகள் எல்லாவற்றியும் புலம் பெயர்ந்து வாழுகின்றார்கள். தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் எல்லாம் தமிழின்  பெருமை போற்றிப் பாதுகாக்கப்படுகின்ற போதுதான்இ தொன்மை பெற்ற எம் செம்மொழியின் சிறப்பானது,  தமிழர் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாட்டவர்களுக்கு அறியக்கூடியதாக இருக்கும். அதற்கு இளந்தலைமுறையினர் தமிழ் மொழியைக் கற்க வேண்டியிருப்பதுடன் அவ் இலக்கண இலக்கியங்களை  அவர்கள் வாழுகின்ற நாட்டு மொழிமூலம். மொழிபெயர்க்க முடியும். அத்துடன் அதன் பெருமையை அந்நாட்டவர்களுக்கு தெரியப்படுத்த முடியும். தான் 

                  புலம்பெயர் இளந்தலைமுறையினர் தமிழ் மொழியில் நாட்டம் கொள்ளவும், கற்கவும் அவர்தம் பெற்றோரும், ஆசிரியர்களுமே முதலில் அக்கறை கொள்ளுதல் அவசியமாகின்றது. பெற்றோர் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளும்போதுதான் பிள்ளைகளுக்கு மொழிக்கல்வியைக் கொடுப்பதற்கு முன்வரமுடியும். பிரெஞ்ச், இத்தாலி, இலத்தீன், ஜெர்மன், ஸ்பெயின், ஆங்கிலம், போன்ற மொழிகளை இரண்டாவது மொழியாகக் கற்கின்ற தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பது கடினம் அல்ல. பெற்றோர் கலைக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம் மொழிக்குக் கொடுப்பதில்லை என்பது ஆசிரியர்களின் முக்கிய குற்றச் சாட்டாக அமைகின்றது. வீட்டிலிருந்து பிள்ளை தமிழ் பாடசாலைக்கு அனுப்பப்படும் போதுதான் ஆசிரியர்கள் அக்கல்வியைப் பிள்ளைகளுக்கு வழங்க முடியும். எனவே எதிர்காலத் தலைமுறையினர் தமிழ்கல்விக்கு முதல் பெற்றோர் பங்கு அவசியமாகின்றது. 

                    இன்று புலம்பெயர்விலே தன்னலமற்ற பல தமிழ்ப்பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றிலே பணிபுரிகின்ற ஆசிரியர்கள் சேவை மனப்பாங்கிலே தமது பணியை ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழ்கல்வி எதிர்காலத் தலைமுறையினருக்குச் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் புலம்பெயர்ந்து வளர்கின்ற எதிர்காலத் தலைமுறையினர் தாய்மொழியைக் கற்பதில் நாட்டம் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர். தமது கல்வி மொழிக்கு எந்தவகையிலும் தமிழ்மொழி பயனளிக்காது என்றே கருதுகின்றனர். தமக்கு வருமானத்தை ஈட்டித்தராது என்னும் கருத்தையும் கொண்டிருக்கின்றனர். 

               அதைவிட எமது தமிழ் பாடசாலைகள் மாணவர்களுக்கு மொழியில்  சரியான ஈர்ப்பை கொண்டுவராதது குறைபாடாகவே காணப்படுகின்றது. ஒரு பிள்ளை தாய் மொழியில் சிறப்புப் பெற்றிருக்கும்போது கல்விமொழியிலும் மிக்க சிறப்பை அடைய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். எனவே தாய்மொழியில்  இலகுத்தன்மையை ஏற்படுத்தும் போது  அது மாணவர்கள் கற்றலுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தும். எனவே பாடத்திட்டம் இலகுவான முறையில் அமையுமாறு தயாரித்தல் கல்வியாளர் கடமையாகின்றது. கற்றலும் கற்பித்தலும் இலகுவாக அமையும் பட்சத்தில் மாணவர்களுக்கு கற்கும் ஆர்வம் தூண்டப்படும். வேற்றுமொழியைக் கல்வி மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்கள் கடினமான வழக்கொழிந்த சொற்களைக் கற்கும் போதும், கடினமான முறையில் இலக்கணத்தைக் கற்பிக்கும் போதும் மொழி கற்பதில் சலிப்படைகின்றனர். தமிழ் கற்பிக்கும் பாடசாலைகளில் சில விரும்பத்தகாத அரசியல் விடயங்கள், அத்துடன் கற்பிக்கும் ஆசிரியர்களின் கவர்ச்சியற்ற கற்பித்தல் நடைமுறைகளும் வகுப்பறைக்கு கற்பிக்கும் ஆயத்தமில்லாது வருதலும், கற்பிக்கும் விடயத்தில் சந்தேகம் தீராமலே கற்பிக்க முன்வருதலும், யதார்த்தத்திற்கும் சூழலுக்கும் ஏற்புடையதாகக் கல்விப்பாடத்திட்டம் அமையாமையும், கல்வி மொழிப் பாடசாலைகளில் ஒரு பாடமாக தமிழ்மொழி இல்லாமையும், அதன் மூலம் தமக்கு எவ்வித பெறுபேறுகளும் கிடைக்காது என்று தமிழ் மாணவர்கள் கருதுவதும், புலம்பெயர் மாணவர்களிடையே தமிழ்மொழியில் நாட்டம் குறைவதற்குக் காரணமாகின்றன.  

                       எனவே குறைகள் எங்கே,  எப்படி உள்ளதோ அதைப் புரிந்து கொண்டு சீரமைப்பதன் மூலம் புலம்பெயர்வில் எமது தாய்மொழியின் சிறப்பை எதிர்காலத் தலைமுறையினருக்கும் கொண்டுசேர்க்க முடியும்.   ஜெர்மன் தமிழ் கல்விச்சேவை 25 ஆவது ஆண்டுவிழா மலருக்காக என்னால் வழங்கப்பட்ட கட்டுரை 

  இக் காணொளியைப் பாருங்கள். நன்றி ராஜா தமிழன்  

  6 கருத்துகள்:

  1. புலம் பெயர் தமிழரிடத்தாவது தமிழ் மொழிப்பற்று இன்னும் இருக்கிறது. ஆனால் இந்தியத் த்மிழர்களிடையேயும் பெற்றோரிடமும் தமிழ்மேல் ஆர்வம் குறைவதே தெரிகிறது.

   பதிலளிநீக்கு
  2. ஜெர்மனிலும் தமிழ் கல்விச் சேவை இருப்பதைப் பார்த்து மாநாடு மிகவும் மகிழ்ச்சி அடைகிறது, அதுவும் 25 ஆண்டுகள் கடந்து விட்டது என்றால் மிகவும் பெரிய விஷயம்.

   கட்டுரையை நான் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். நிதானமாக படித்துவிட்டு கருத்திடுகிறேன்.

   பதிலளிநீக்கு
  3. சிறப்பான பகிர்வு... பாராட்டுக்கள்...

   பதினாறு பண்புகள், விளக்கங்கள் அனைத்தும் அருமை... நன்றி...

   பதிலளிநீக்கு
  4. ஜெர்மனியில் தமிழ் கல்விச் சேவை 25 ஆண்டுகளாக நடைபெற்று வருவது மிகுந்த மகிழச்சி அளிக்கின்றது சகோதரியாரே
   வாழ்த்துக்கள்
   ஜெர்மன் கல்விச் சேவை குறித்த கட்டுரைகளைத் தாங்கள் பதிவிட வேண்டும் என்ற வேண்டுகோளினையும் அன்புடன் முன்வைக்கிறேன்

   பதிலளிநீக்கு
  5. தாய்மொழியாம் தமிழை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசேர்க்கும் அவசியத்தை வலியுறுத்தும் அற்புதமான கட்டுரை. நிறைய தகவல்களை வழங்கியுள்ளீர்கள். ஜெர்மன் தமிழ் கல்விச்சேவை 25-வது ஆண்டு மலரில் வெளியானமைக்குப் பாராட்டுகள் கௌரி.

   பதிலளிநீக்கு
  6. மிக அருமையான கட்டுரை. ஆதாரப்புர்வமான தகவல்களுடன் சுவாரஸ்யமாக கொடுத்துள்ளீர்கள். குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சி உண்மைகள் ஏனோ சர்வதேச அளவில் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன ! திராவிடர்களின் பூர்வீகம் லெமூரியா என்பதை இந்திய வரலாறு கூட தெளிவாக விளக்குவது கிடையாது.

   "தமிழன் என்று சொல்லடா தமிழில் பேசடா " பதிவுகளை, தங்களுக்கு நேரமிருப்பின் படித்து கருத்திடுங்கள்.நன்றி

   http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html


   நன்றி
   சாமானியன்
   saamaaniyan.blogspot.fr

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...