வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

புதன், 2 ஜூலை, 2014

பிள்ளைகளால் காதில் பூச்சூடப்படும் பெற்றோர்


முக்காடிற்ற ஓர் பெண்ணின் மடியில் முகம் புதைத்துப் படுத்திருக்கும் தன் முதற் பிள்ளை நிலை கண்டு முள்ளென நெஞ்சில் ஓர் உணர்வு குத்தி வலித்தது. நடந்தே வைத்தியசாலை அண்மித்த அவள் நெஞ்சும் கால்களும் பாய்ந்தே அவன் படுக்கையை அண்மித்தது. ' Raus....|| மருத்துவமனை திடுக்கிடும்படிக் கூச்சலிட்டாள். ஆத்திரத்திலும் அவலத்திலும் அவசரத்திலும் வலியிலும் தாய்ப்பாஷைதான் நாவிலிருந்து தெறிக்கும். ஆனால், சுதன் தாய் ராதாவிற்கு ஜேர்மன் மொழியே வெளிப்பட்டது. ஏனென்றால், மகன் உறங்கிய மடி மொறொக்கோத் தாய் பெற்று வளர்த்த பெண்ணவள் பஞ்சுமடியல்லவா! தமிழில் கத்திப் பயனென்ன காணப்போகின்றாள். குதித்தெழுந்த ஹில்டா ஜக்கெட்டுக்குள் புகுந்து பாதத்தைச் சிறகாக்கி அவ்விடம்  விட்டுப் பறந்து போனாள். 

            மகனிடம் வந்தாள் ராதா. 

'என்ன இது? யாரது? மகனிடம் வார்த்தைத் தீயை ராதா  கக்கினாள்.

'என்னுடைய ப்ரெண்ட்|| 

பெற்றோரின் காதில் பூச்சூடும் பிள்ளைகளே கூசாமல் பொய் சொல்வதில் திறமைசாலிகள். ஒரு மனிதனுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்யும் கடுமையான எதிரி பிள்ளைகளே. இது புரியமலே பெற்றோர்கள் பிள்ளைகளில் நம்பிக்கை வைக்கின்றனர். 

'போதும்டா...... உன்னுடைய பொய். நான் என்ன விசரி என்று நினைத்து நடக்கின்றாயா? ....|| இது தாயின் புலம்பலானது. 

விறுவிறென்று அறையை விட்டு அகன்றாள் தாய் என்னும் பாவப்பட்ட நெஞ்சம். வழியெல்லாம் கோயில் திருவிழாக்களில் தோளில் விக்கிரகம் சுமந்து சென்ற தன் மகன் காட்சியே நிழலாடியது. ஏன் இப்படிச் செய்தான். மீண்டும் மீண்டும் எழும் வினாவிற்கு விடைகாண முடியாத ஏக்கம் அவள் இதயத்தைப் பிழிந்தெடுத்தது. அவளால் ஜீரணிக்க முடியாத ஒரு தாக்கம் அக்காட்சியில் அடங்கிக் கிடந்தது. எப்படியும் வீட்டிற்கு வரத்தானே போகின்றான். அப்போது பார்ப்போமென கங்கணம் கட்டியது மனது. 

தமிழர்கள் மத்தியில் பெரும் குறையாகக் காணப்படுவது. கௌரவப்பிரச்சினை. தமது பிள்ளைகளைப் பற்றி உயர்வாகப் பேசுவதை பெரிதாக எண்ணும் மனம், குறைகளை வெளிப்படுத்த விரும்புவதில்லை. முற்போக்கு சிந்தனை பற்றி பலர் மத்தியில் முன்னெடுத்துப் பேசினாலும் தனது வாழ்க்கையில் முற்போக்குச் சிந்தனைக்கு இடமளிப்பது இல்லை. உண்மைகள் மனதினுள் உறங்கிக் கிடக்க பொய்மையை பாலம் போட்டு அதன் மேல் நடந்து கொண்டே உண்மைக்கு மாறான பொய்யைப் புடம்போட்டு வெளிக் கொண்டுவரும் கெட்டித்தனம் மிக்கவர்கள். உண்மைக்கு முகம் கொடுக்க மாட்டாது. அதிலிருந்து மீளவும் முடியாது தள்ளாடித் தள்ளாடி மனநோயாளியாகி மாள்கின்றனர். 

மருத்துவமனை விடுப்புப் பெற்று வீடு வந்த மகனிடம் எதுவுமே பேசாது சிலநாட்களை ராதா ஓடவிட்டாள். மனம் திறந்து மகன் ஏதாவது கக்குவான் என காத்திருந்தாள். அவனோ மௌமாகவே மனதை வெளிப்படுத்தாது காலம் கடத்தினான். பொறுமையை இழந்த ராதாவும் வாய் திறந்தாள். 

'யாரவள்.....?

மீண்டும் அதேபதில். தன்னுடன் கல்வி கற்கும் சிறந்த நண்பி.

'அவள் மடி உனக்கு பஞ்சு மெத்தையா?||

'இதிலென்ன இருக்கிறது. இன்னும் நீங்கள் இலங்கையில்தான் இருக்கிறீர்கள். சும்மா எல்லாவற்றிற்கும் சந்தேகம் பட்டுக்கொண்டு...... நாங்கள் அப்படித்தான் பழகுகின்றோம். சும்மா ஊர் பஞ்சாயம் எல்லாம் இங்கே கொண்டு வருகின்றீர்கள். நாங்கள் அப்படியெல்லாம் பழகுவதில்லை. இப்படி ஒருநாளும் நினைக்காதீர்கள்||

பாவப்பட்ட தாய் மனது தனக்குள்ளேயே சாந்தியடைந்தது. பூசை புனக்காரம் விரதம் திருவிழாக்கள் என்று வாழ்நாளை ஓட்டிக்கொண்டிருக்கும் ராதாவிற்கு அவன் வார்த்தை தென்றலாய் மனதைத் தீண்டியது. இந்துமத காரியங்களில் மனம் ஈடுபட்டதனால், மாற்றுமத சிந்தனை பற்றி அறியாத மனம் எதையும் ஆழமாகச் சிந்திக்கத் தயங்கியது. 

கால ஓட்டத்தில் மகன் வார்த்தைகளில் இஸ்லாமிய சிந்தனைகள் பிரதிபலிப்பதை ராதா உணர்ந்தாள். காதலின் வேகம்தான் மகன் கவனத்தை இஸ்லாம் பக்கம் திருப்பியதோ என்னும் எண்ணப்போக்கு ராதாவிற்கு மாறியது. சொற்களின் கோர்வை சொல்லும் விடயங்கள், உலகத்திலேயே சிறந்த மதம் இஸ்லாம். இறுதியில் தோன்றினாலும் இணையில்லாப் பெருமைகளைக் கொண்டு நின்று நிலைக்கும் உண்மை மதமும் அதுவே. இந்து மதம் என்றும் கேள்விக்குறியாக இருக்கும் மதம். உருவவழிபாட்டுத் தத்துவங்கள் அனைத்தும் பொய். இவ்வாறு அடிக்கடி அவன் வாயிலிருந்து தோன்றும் வார்த்தைகள் ராதாவிற்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

இரகசிய உளவுத் தொழிலை மேற்கொண்டு மகன் யாருமறியாவண்ணம் இஸ்லாம் மதத்தைக் கைக்கொள்ளும் விடயத்தை  அறிந்துகொண்டு கோபக்கனல் கக்கினாள். தனக்குக் கீழேயுள்ள சகோதரிகள் நிலைமையைச் சற்றும் எண்ணாது தன் சுயநலத்தை மட்டும் கருதி மதம் மாறிய மகனில் வெறுப்பைக் கக்கினாள் ராதா. மகனுக்குப் புத்திபுகட்டும்படி நண்பர்கள், மதகுருக்கள் அனைவரின் உதவியையும் நாடினாள். 

ஆனால்;;;, சுதன்

'நானென்ன கொலை செய்தேனா? களவு செய்தேனா? மது அருந்தினேனா? பிறர் குடியைக் கெடுத்தேனா? எனக்குப் பிடித்த மதத்தில் மாறினேன். அதற்குக் கூட எனக்குச் சுதந்திரம் இல்லையா? என மதத்தில் மதம் பிடித்து தன் செய்கைக்கு விளக்கும் போதித்தான். 

காதலில் விழுந்ததாலேயே மதம் மாறவேண்டிய சூழ்நிலை உனக்கு ஏற்பட்டிருக்கின்றதா? என கேட்ட கேள்விக்கு. யாரையும் காதலிக்கவில்லை என அடித்துச் சொன்னான். அதனால், சிறது ஆறதலடைந்த தாயும் காலமும் தன் கடவுள் பக்தியும் தன் மகனை மாற்றும் என்ற நம்பிக்கையில் ஷஷஅடிமேல் அடி அடித்தாள் அம்மியும் நகரும்|| மகனின் மனம் தான் நகராதோ என்று எண்ணி வார்த்தை அடிகளால்  வழமையாக நாளும் அடிக்கத் தொடங்கினாள். 

ஆனால், இடியே விழுந்தாலும் நான் நானாகவே இருப்பேன் என்று இதயம் நெகிழாத சுதனும் வாசல்படி தாண்டினான். அவன் மனதுள் அடைத்து வைத்திருந்த உண்மை வழியில்லாது நாளாக வெளிப்பட்டது. நச்சுப்பாம்பு நஞ்சைக் கக்கியதுபோல் நாடகமாடிய பொய்நடிப்பு வெளிப்பட்டது. ஹில்டாவை திருமணம் செய்த உண்மையை வெளியிட்டான். 
கொதித்தெழுந்த ராதாவாள், குளிர்வடைய முடியவில்லை. 

'போடா! வெளியே....... என் கண்ணிலும் முழிக்காதே....... இனி நான் உனக்கு தாய் இல்லை...... இவ்வளவு நாட்களும் நாடகமாடி என்னை ஏமாற்றிக் கொண்டு இந்தவீட்டினுள் நடமாடியிருக்கின்றாயே! என்ன மனஅழுத்தக்காரன் நீ. உனக்குப் பின்னே இருக்கும் உன் சகோதரிகளை நினைத்துப் பார்த்தாயா? சுயநலக்காரன். உன் தேவைகள் எல்லாம் எம்மிடமிருந்து நிறைவேற்றிவிட்டு உன் பொறுப்புக்கள் ஏற்கும் காலத்தில் எல்லாவற்றையும் நினைத்துக் கூடப் பார்க்காமல் உனது விருப்பத்தை நிறைவேற்றிவிட்டாயா? உனக்கென்ன ஒரு குடும்பமாகும் வயதா? படிக்கின்ற பாலகன் நீ......||

'இப்ப என்ன பிரச்சினை. நான் கல்யாணம் செய்தேன் என்றேன். அதற்காக என் தங்கச்சிமாரைப் பார்க்கமாட்டேன் என்றேனா? 

'இப்படியான குடும்பம் என்று யார் இவர்களைத் தீண்டப் போகின்றார்கள்|| என வெறுப்புடன் பகர்ந்தாள் ராதா. 

'இது என்ன பெரிய பிரச்சினை அம்மா. எனக்குப் பிடித்தவளை நான் கல்யாணம் செய்ததுபோல். அவர்களுக்குப் பிடித்தவர்களை அவர்கள் செய்வார்கள். திருமணம் என்பது அவரவர் தீர்மானிப்பது. இதை ஒரு பிரச்சினையாக நீங்கள் ஏன் எடுக்கவேண்டும். எனக்கு இந்த மதம் பிடித்திருக்கின்றது. அதைப்பற்றிக் கதைப்பதற்கு வேறுயாருக்கும் சுதந்திரம் இல்லையே. இது எனது வாழ்க்கை நான்தான் வாழப் போகின்றேன். அதில் தலையிடுவதற்கும் புத்தி சொல்வதற்கும் யாருக்கும் உரிமையில்லை|| தன் பக்க நியாயம் பேசினான். 

தமது வாழ்வுக்குப் பொருந்தாத மகனைத் தூக்கி எறிந்தாள் தாய். அவனைத் திரும்பவும் தன்னுடன் இணைத்துக்கொள்ளத் தற்போது அந்தத் தாய்மனம் இடம் கொடுக்கவில்லை. காலம்தான் இக்குடும்பநிலைமைக்கு வழிசொல்லும். 

தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர் பலர், தம்மைப்பாதுகாத்துக் கொள்ளவும், வருமானத்தைப் பெருக்கவும், வசதிவாய்ப்பபுக்களுடன் வாழவும் விரும்புவதுபோல் பரம்பரைப்பழக்கவழக்கங்களை விட்டெறிய விரும்புவதில்லை. பேச்சுக்கு வாழ நினைத்தாலும் அவர்களால், வாழமுடிவதில்லை. அண்மைய காலங்களில் மதமாற்றம் கட்டுக்கடங்காது போவது யாவரும் அறிந்ததே. பெற்றோர் தாம் கடைப்பிடித்து வந்த மதத்தை தமது பிள்ளைகளும் தொடர வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால், பிள்ளைகளோ தமது நண்பர்கள் மத்தியில் கடைப்பிடிக்கப்படும் மதமே சிறந்த மதமென்று கருதி பெற்றோர் விருப்புக்கு வில்லங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.  

இவ்வேளையில் மதங்கள் ஒன்றிணைவது மட்டுமல்ல, நாடுகளும் ஐரோப்பிய மக்களிடையே ஒன்றிணைகின்றன. பல நாட்டு மக்களுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டிய சூழ்நிலை புலம்பெயர் வாழ்விலே ஏற்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் கலாச்சாரம் பண்பாடு என்று கட்டிக்காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில், உலகஇனங்கள் பல ஒன்றிணையும் கல்விச்சாலையில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்படும் மன ஈர்ப்பைக் கட்டுப்படுத்த முடியாது போகின்றது. எதிர்காலம் இனமத பேதமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கும் என்பது அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், இன்றும் மதப்பற்றுக் கொண்டவர்களிடையே இத்தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாது போகின்றது. அதேவேளை ஒருங்கிணைந்த மதசமுதாயத்தினரிடையே வாழும் பிள்ளைகளுக்கும் இதை ஏற்றுக் கொள்ளமுடியாது போகின்றது. இதனால், பெற்றோரும் ஒருவகையில் பாதிக்கப்படுகின்றனர். பிள்ளைகளும் ஒருவகையில்  அவமானப்படுகின்றனர். 

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது விட்டுக்கொடுப்புக்கள் இருசாராரிடமும் இடம்பெறும்போது இவ்வாறான மனக்கிலேசங்கள் இடம்பெற வாய்ப்புக்கள் குறையும் என்று கருதுகின்றேன். எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது எம்மால் பார்க்கமுடியாது போகும் என்பது நியதி. அதனால், அது எதிர்கால தலைமுறையினரின் கையில்தான் தங்கியிருக்கின்றது. 

10 கருத்துகள்:

இல. விக்னேஷ் சொன்னது…

இது நிஜத்தில் நடந்த சம்பவமா.. ஏனெனில் ஒரு தாய் ஏமாற்றப்படுவதை கதைகளில் கூட படிக்க கஷ்டமாய் இருக்கிறது அக்கா..இப்போது உள்ள தலைமுறைக்கு எதையுமே "TAKE IT EASY" என்று எடுத்துக்கொள்ளும் மன்ப்பாங்கு உள்ளது.. இது பல சமயங்களில் ஆபத்தான விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்பதை உணர மறுக்கின்றனர்.

kovaikkavi சொன்னது…

குளப்பமான பதிவு.
எனது பிள்ளையை 3 கண்களுடன் பார்த்து வெறுத்த அம்மா(எனது பிள்ளை நாகரீகமாக நடந்ததால்) இன்று தனது பிள்ளைக்கு வெள்ளை இணையை மகிழ்வாக திருமணப்பதிவு செய்து மகிழ்கிறார். இதை எனக்குள் நான் பார்த்துச் சிரிக்கிறேன்.
இப்படித்தான் காலம் உள்ளது. நடப்பவைகளைப் பார்க்கத்தான் முடியும். எதுவும் பேசவும் முடியாது.
வேதா. இலங்காதிலகம்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பொதுவாகவே இப்பொழுது குடும்பங்களுக்குள் புரிதல் உணர்வு குறைந்து விட்டது சகோதரியாரே. தொலைக் காட்சியும், அலைபேசியும் வீட்டில் உள்ள அனவரையும் தனித் தனித் தீவுகளாக மாற்றி விட்டது.
தாங்கள் கூறுவதுபோல் விட்டுக் கொடுப்புகளும், குடும்பம், குடும்ப நிலைமை பற்றிய புரிதலும் ஏற்படும்பொழுது நிலைமை மாறலாம்
நன்றி சகோதரியாரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

காலம் எல்லாவற்றிக்கும் பதில் சொல்லும்...

Chandragowry Sivapalan சொன்னது…

உண்மைதான். என்னுடைய வாழ்வியல் இலக்கியங்கள் அனைத்தும் உண்மைச் சம்பவங்களே . சமுதாய விழிப்புணர்வுக்காக இவ்வாறான சம்பவங்களை எடுத்துவருகின்றேன். இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை

Chandragowry Sivapalan சொன்னது…

உண்மை வேதா அவர்களே . புரிந்துணர்வு பதட்டப்படாத மனநிலை யையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். புலம்பெயர்வில் வாழ்வது இன்பமானால் சகிப்புத்தன்மையும் நிச்சயம் தேவை

Chandragowry Sivapalan சொன்னது…

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சார்

ரூபன் சொன்னது…

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்... பார்வையிட முகவரி இதோ.
http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_16.html?showComment=1410829864457#c3775928799328011888

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ரூபன் சொன்னது…

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்... பார்வையிட முகவரி இதோ.
http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_16.html?showComment=1410829864457#c3775928799328011888

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Chandragowry Sivapalan சொன்னது…

மிக்க நன்றி ரூபன் அவர்களே

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...