எழுத்தாளன்

       

எண்ணங்களை வண்ணங்களாய் வடிவமைத்து – தன்
எண்ணம் போல் எடுத்தாளும் வல்லமையாளன்.
தட்டச்சுத் தூரிகையால் கணனித் திரையிலே
கற்பனை ஓவியம் வரையும் கலைஞன் - இவன்
எழுத்துக்கள் பொய்யை மெய்யாக்கும்
மெய்யைப் பொய்யாக்கும்
சத்தியத்தைச் சாகடிக்கும், வாழ வைக்கும்
சம்பவத்தைச் சாக்கடையாக்கும், சரித்திரமாக்கும்

அவன் பேனாக்கு மையூட்ட முடியும்;
மெய்யூட்ட முடியும்; பொய் ஊட்டவும் முடியும்.
கற்பனையைப் படமாக்குவான்;
காட்சியைப் பிறர் மனச்சிறையில் பதிப்பான்.
உள்ளச் சிறையில் உறைவோரை – தன்
சொல்லின் சுவையால் சொர்க்க வைப்பான்.
அவன் வரிகளுக்கு வாளும் தோற்றுப் போம்;
தேன் சுவையும் அற்றுப் போம்.

தான் சேறு பூச நினைப்போரைச்
சாக்கடையுள் வீழ்த்தி அழகு பார்ப்பான்.
தான் வேறுபடுத்த நினைப்போரை
அரியணை ஏற்றி அரசாள வைப்பான்.
பணம் தேடி பாசம் இழப்போர் மத்தியிலே
புகழ் தேடிப் பொழுதிழக்கும் செயல்வீரன்.
காலத்தை வென்று வாழும் சரித்திரநாயகன் - அவன்
தூங்கினால் சரித்திரம் தொலைந்துவிடும்.

கருத்துகள்

kovaikkavi இவ்வாறு கூறியுள்ளார்…
''..அவன்
தூங்கினால் சரித்திரம் தொலைந்துவிடும்...''
உண்மை உணர்த்தும் உணர்வு வரிகள்.
இனிமை.
வேதா. இலங்காதிலகம்.
கரந்தை ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மை
உண்மை
அருமை சகோதரியாரே
G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…
எழுத்தாளன் குறித்த பதிவு கண்டேன். ஒரு சந்தேகம் எழுதுபவனெல்லாம் எழுத்தாளனாகி விட முடியுமா. எண்ணப்பகிர்வுக்கு நன்றி.
Chandragowry Sivapalan இவ்வாறு கூறியுள்ளார்…
எழுத்தை ஆள்பவன் எழுத்தாளன். கிறுக்குவதேல்லாம் எழுத்தாளன் பண்பல்ல.
KILLERGEE Devakottai இவ்வாறு கூறியுள்ளார்…
அவன் தூங்கினால் சரித்திரம் தொலைந்துவிடும்.
அருமை, அருமை.
Iniya இவ்வாறு கூறியுள்ளார்…
அவன் தூங்கினால் சரித்திரம் தொலைந்துவிடும்.
அருமை, அருமை. நற்சிந்தனைகள் சுடர் விடட்டும் மேலும் வாழ்த்துக்கள் ....!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணின் பெருமை உணர்வோம்!

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

இலங்கைப் பயணம்