வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

சனி, 13 ஆகஸ்ட், 2016

                   பேராசிரியர் சிவராஜா ,  பேராசிரியர்    துரை மனோகரன் அவர்கள்                
                                                                  இருவரினதும் விமர்சனம் 

                                                              பேராசிரியர் சிவராஜா 


“இது என் நூல் யாரும் இரவல் கேட்காதீர்கள்” காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கண்ணதாசன் கைப்பட எழுதிய வாசகம்தான் இது. ஒரு பயனுள்ள நல்ல நூலை நாம் யாருக்கும் இரவல் தர மனம் வராது தவிப்போம். அப்படியே தந்தாலும் நினைவுபடுத்தி பெற்றுக் கொள்வோம்.
ஒரு நூலுக்கான மதிப்பை அதை படிக்கும் ஓரிரு பக்கங்களிலேயே தீர்மானித்து விடலாம். மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் புத்தங்கள் உலத்தின் தலைச் சிறந்த மதிப்பைப் பெற்றதாகும்.
படிக்க படிக்க சலிப்பு தட்டாக ஒரு நூல் இந்த முக்கோண முக்குளிப்பு. ஒரு நூலுக்கான தகுதியும் அதுதான்.
சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்நவின்றோர்க்கு இனிமை, நன்மொழி புணர்தல்
ஓசை யுடைமை, ஆழம் உடைத்தாதல்
முறையின் வைப்பே, உலகமலை யாமை
விழுமியது பயத்தல், விளக்கும் உதாரணத்தது
ஆகுதல் நூலிற்கு அழகென்னும் பத்தே

என்று ஒரு நூலிற்கான பத்து அழகுகளைப் பற்றி என் முன்னோடி பவணந்தி எடுத்துரைக்கிறார்.
பத்து பொருத்தமும் பொருந்தி வரும் ஒரு நல்ல புத்தகமே இந்த முக்கோண முக்குளிப்பு.
நன்றாகத் தமிழ் செய்யும் ஞானம் பெற்ற புலம்பெயர்ந்த தமிழச்சியால் (சந்திரகௌரி சிவபாலன்) எழுதப்பட்ட இந்த நூல் பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய களஞ்சியமாகும். தமிழ்ச் சொற்களைப் பொதிந்து வைத்திருக்கும் அம்பராத்தூணி.
இலக்கிய இன்பம்
அறிந்ததும் புரிந்ததும்
சிந்தனையின் தேனூற்று
என்று நூலை மூன்றாகப் பிரித்து பாகுபடுத்தி முக்கோண முக்குளிப்பு என்ற தலைப்பை இந்நூலுக்கு இட்டிருப்பது நூல் பொருத்தமாகும்.
இலக்கிய இன்பம் என்ற பகுதியில் இலக்கயத்தைப் பற்றிய நல்ல புரிதலை நமக்கு கொடுக்கிறார் நூலாசிரியர். இலக்கிய வரிகள் புலவர்களின் அறிவுகள் என இந்தப் பகுதி விரிகிறது. நான் கேளவி படாத இலக்கிய மேற்கோள்கள் இதில் இடம் பெற்றிருக்கிறது. அந்த தகவல்களும் சிறப்பானதாகவே இருக்கிறது.
அறிந்ததும் புரிந்ததும் என்ற தலைப்பில் தமிழர் கலாச்சாரத்தையும் அதற்கான அறிவியல் விளக்கத்தையும் தனக்கே உரிதான அழகான மொழி நடையில் எழுதிருப்பது சிறப்பு. திருநீறு, ஆடி அமாவாசை, ஆலமரத்தடி பிள்ளையார், தமிழர் கலாச்சாரத்தில் தாலி, தலைப்பாகை, விளக்கின் ஆன்மீகத் தத்துவம் என்பது போன்ற புதிய கோணத்தில் சொல்பட்டிருக்கும் செய்திகள் அற்புதம்.
சிந்தையின் தேனூற்று என்ற தலைப்பில் சொல்லி இருக்கும் ஒவ்வொரு கருத்துகளும் நடைமுறை இயல்பையும் அதன் வெளிப்பாட்டு நடைத்தையும் நமக்கு சொல்லி தெளிவை கொடுக்கின்றன.
கல்வி, அன்பு, நட்பு, அனுபவம், சீதனம், திருமணம், வன்முறை, முதியோர் தினம், நம்பிக்கை, கோபம் என்பது போன்ற தலைப்புகளில் எழுதிருக்கும் பாங்கு அழகு.
“இது எனக்கான தெளிவு மட்டுமல்ல உலகத்துக்கான தெளிவு” என்று நூலாசிரியர் சந்திரகௌரி சிவபாலன் ‘விதைத்தை விளக்குகின்றேன்’ என்னும் என்னுரையில் சொல்லி இருக்கிறார். உண்மையும் அதுதான். எல்லோரும் வாசித்து தெளிய வேண்டிய நூல் உருவாகும்.
” தன் எண்ணமென்னும் பொக்கிசத்தை பிறர் எண்ணத்திற்குள் புகுத்தும் அற்புதக்கலை கைவரப் பெற்றவர் சந்திர கௌரி” என்று வாழ்த்துரையில் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கூறும் கூற்று மெய்யானதே.
நூல் அமைப்பு அழகு!
எழுத்தின் வடிவம் வாசிக்க ஆர்வம்!
வாசிக்க ஆர்வத்தைத் தூண்டும் வடிவமைப்பு!
ஜெர்மன் எழுத்தாளர் சங்கம் வெளியீடாக வந்திருக்கும் இந்நூல் எல்லோர் வீட்டு நூலகத்திலும் இருக்க வேண்டிய பயனுள்ள நூலாகும்.
அன்னை சந்திரகௌரி சிவபாலன் அவர்களுக்கும், ஜெர்மன் எழுத்தாளர் சங்கத்திற்கும் என் நெஞ்சம் கனிந்த வாழ்த்துகள்.
மேலும் பல நூல் படைக்க வேண்டும்.

அன்புடன் 
பேராசிரியர் சிவராஜா 
                                                        வாழ்த்துரை

            -    பேராசிரியர் துரை.மனோகரன்

             முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்

               பேராதனைப் பல்கலைக்கழகம்


 இன்று சர்வதேச அளவில் இலக்கியவாதியாகப் புகழ்பெற்றுவரும் சந்திரகௌரி சிவபாலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1980களில் தமிழ் சிறப்புக்கலை பயின்றபோது எனது மாணவியாக விளங்கியவர். இன்று தமது எழுத்தாற்றலை மேன்மேலும் வளர்த்து, தமிழ்கூறுநல்லுலகத்துக்குத் தமது பங்களிப்புகளை வழங்கிவருவதை அறிந்து, நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது ஜேர்மனியில் வாழ்ந்துகொண்டு, தமது படைப்புலகை விரிவுபடுத்தி வருவது பெருமைக்குரியது.


அவரது முதல் நூல் என்னையே நானறியேன் என்னும் நாவல். இலங்கையில் இருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஒரு மத்தியதரக் குடும்பத்தின் வாழ்வியலை அற்புதமாக இந்நாவல் சித்திரிக்கிறது. அவரது இரண்டாவது நூலான முக்கோண முக்குளிப்பு இன்னொரு வகையில் குறிப்பிடத்தக்க நூலாக விளங்குகிறது. இலக்கிய இன்பம், அறிந்ததும் புரிந்ததும், சிந்தனையின் தேனூற்று ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூலுக்கு முக்கோண முக்குளிப்பு எனப் பெயரிட்டமை பொருத்தமேயாகும். அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புநூலாக இது விளங்குகிறது.  


இலங்கையில் பிறந்து வளர்ந்து, கல்விகற்றுத் தொழிலாற்றிய சந்திரகௌரியின் முக்கோண முக்குளிப்பு என்ற நூல் இலங்கையிலேயே வெளியிடப்படுவது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்நூலின் ஆசிரியை பாராட்டுக்கு உரியவர். இந்நூலை வெளியிடும் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கமும் பாராட்டுக்கு உரியது.

எழுத்துலகில் வளர்ந்துவரும் சந்திரகௌரி சிவபாலன், எதிர்காலத்திலும் மேலும் பல சிறந்த 
நூல்களை எழுதி வெளியிடவேண்டும். எனது மாணவி என்ற முறையில் அவரின் வளர்ச்சி கண்டு நான் பெருமிதம் அடைகிறேன். சந்திரகௌரியின் இந்நூல் வெளியீட்டுவிழா சிறப்புற அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

1 கருத்து:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

நூலாசிரியரை முறையாக அடையாளப்படுத்தும்
அருமையான கண்ணோட்டம்

ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண...