Headlines News :
வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்
Home » » காலந்தோறும் தமிழ்க் காதல்

காலந்தோறும் தமிழ்க் காதல்

Written By Chandragowry Sivapalan on திங்கள், 13 பிப்ரவரி, 2017 | 17:33

                     


விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு என்று காதலுக்கு அழகான வரிவடிவம் தந்திருக்கின்றார் கவிஞர் வைரமுத்து. காதல் இல்லாது வாழ்க்கை ஏது! உறவுகள் ஏது! ஏன் உலகுதான் ஏது! வாழ்க்கை வட்டத்திலே  உண்மையும், அழகும், அபூர்வமும், அற்புத உணர்வும் ஏற்படுத்தும் ஒரு உணர்வு உண்டென்றால், அது காதலே! மனிதன், விலங்குகள், பறவைகள் உயிர்கள் அனைத்திலும் இழையோடிக் காணப்படும் இவ்வுணர்வு வாழ்க்கை முழுவதும் தேவையானதாகவும் அகற்ற முடியாததாகவும் பெற்றோரின் பாசம் போல் தொடர்ந்து வரும் உணர்வாகவும் விளங்குகின்றது. காதல் என்றவுடன் காத்திருக்காமல் எங்கள் முன்னே தென்படும் தாஜ்மஹாலும், வடமொழிக் காதல் மீராவும், தமிழ் மொழிக்காதல் ஆண்டாளும் ஆண்டாண்டுக் காலமாகக் காதலுக்கு அடையாளங்களாகக் காணப்படுகின்றனர்.

          கல்லும், மண்ணும், கடலும், மலையும், உலோகங்களும் எனத் தொடரும் இயற்கை வனப்புக்களை அழகு செய்ய இரத்தமும் சதையும் கொண்டு உணர்வுகளுடன் நடமாடிய மனிதன் தோன்றக் காரணமான உணர்வாக இது காணப்படுகின்றது. அதனாலேயே காதல் முதலில் சங்ககாலத்தில் காமமாகவே சொல்லப்பட்டது.

             ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் உடலாலும் உள்ளத்தாலும் இணைந்து தமக்குள் இன்பந்துய்த்து வாழ்தல் என்று காதல் பற்றி நச்சினார்க்கினியார் அழகான விளக்கம் தந்துள்ளார். இவ்வுணர்வினை சங்கப்பாடல்கள் உணர்த்திய  அளவு வேறு எக்காலத்துப் பாடல்களும் உணர்த்தவில்லை என்றுதான் குறிப்பிட வேண்டும். தற்காலப் பாடல்களில் கூட சங்கப்பாடல்களின் தாக்கத்தினை  அதிகமாகக் காணக்கூயதாகவுள்ளது. காதலும் வீரமும் கலந்து கிடந்த சங்ககாலத்திலே அகத்திணைப் பண்பு தழுவிய காதல் பாடல்கள் மனதுக்குள் இனிமை பயப்பனவாகக் காணப்படுகின்றன. செம்புலப்பெயல் நீரார் எனப்படும் புலவர் குறுந்தொகையிலே,

``யாயும் ஞாயும் யாராகியரோ 
 எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
 நீயும் யானும் எவ்வழி அறிதும்
 செம்புலப் பெயல் நீர்போல
 அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே‘‘

உன் தாயும் என் தாயும் யாரோ தெரியாது? எனது தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்னர் அறிமுகமானவர்கள் இல்லை. ஆனால், செம்மண்ணில் மழை நீர் கலந்தால், அந்நீரும் செந்நீராய் கலத்தல் போல நம் இருவர் நெஞ்சங்களும் ஒன்றாகக் கலந்துவிட்டன என கீழ்க் குறிப்பிட்ட பாடலிலே காதலின் சிறப்பைப் புலவர் விளக்கும் பாங்கானது காதலுக்கு முகவரி தேவையில்லை. உறவுகள் பார்ப்பதில்லை. இரண்டு இதயங்கள் மட்டுமே போதுமானது இரண்டறக்கலப்பதற்கு என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

                குறுந்தொகையிலே தலைவியின் நலத்தினைப் பாராட்டித் தலைவன் ஒரு வண்டினைப் பார்த்துக் கேட்பதாக இறையனார் படைத்திருக்கும் இப்பாடலிலே,

``கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி!
 காமம் செப்பாது, கண்டது மொழிமோ
 பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயற்
 செறி எயிற்று அரிவை கூந்தலின்
 நறியவும் உளவோ? நீ அறியும் பூவே``

அதாவது பூக்களிலே இருக்கின்ற தேனை ஆராய்ந்து உண்ணுகின்ற பண்புடைய அழகிய சிறகினைப் பெற்ற வண்டே! உண்மையைச் சொல் மயில் போன்ற மென்மையும், வரிசையான பற்களும் கொண்ட என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நறுமணம் கொண்ட பூவை நீ அறிந்ததுண்டா என்று பாடுகின்றார். உலகின் எத்தனை சிறப்புக்கள் இருந்தாலும் அவை அத்தனையும் காதலியின் கால் தூசுக்குச் சமம் என எண்ணத் தோன்றும் மயக்கத்தை ஏற்படுத்தும் தன்மை காதல் உணர்வுக்கு உண்டு.

                     மறைவாய்க் காதலித்து, யாரும் அறியாது உடன்போக்காய் உற்றார், சுற்றம் துறந்து, வசதி வாய்ப்புக்களை உதறித் தள்ளி  காதலனே துணை. அவனன்றி வேறு எதுவுமே தேவையில்லை என்று எண்ணத் தோன்றும் உணர்வு காதலுக்கு மட்டுமே உள்ளது. இந்த உணர்வினைச் சித்தரிக்கும் ஒரு குறுந்தொகைப் பாடலினை கூடலூர் கிழார் பாடியிருக்கின்றார்.

``முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
 கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
 குவளையுண் கண் குய்ப்புகை கழுமத்
 தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
 இனிதெனக் கணவ னுண்டலின்
 நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே‘‘

தமை விட்டுப் பிரிந்து சென்ற மகள் தன் காதலனுடன் எப்படி வாழ்கின்றாள் என்று அறிந்து வரும் படி செவிலித் தாயிடம் கூறி நற்றாய் அவளை அனுப்புகின்றாள். அதைப் பார்த்து வந்து செவிலித்தாய் கூறிய வார்த்தைகளே இப்பாடலிலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. புளித்த தயிரை காந்தள் விரல்களால் பிசைந்து, தாளிதம் செய்யும் போது அது கருகி விடாது பட்டுச் சேலை முந்தானையிலே கைகளைத் துடைத்துவிட்டு தாளிதத்தை முறையாகச் செய்து சமைத்த உணவினை கணவனுக்கு இடும்போது அவனும் இனிமை, இனிமை என்று சொல்லி உண்டான் என்று நற்றாயிடம் கூறுகின்றாள்.

                காதலனின் சுவைக்காகவும் மகிழ்வுக்காகவும் தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்கக் கூடிய தன்மையை ஒரு பெண் காதல் வசப்படும் போது பெற்றுக் கொள்கின்றாள். இதற்காக பல்கலைக்கழகமோ, கல்லூரியோ சென்று கற்கவேண்டும் என்ற தேவையில்லை. எமக்குள்ளேயே சுரந்து, எமக்குள்ளேயே தொடர்ந்து, வேளை வரும்போது வெளிப்படும் இக்காதல் உணர்வு இப்பிரபஞ்சத்தின் பெருமைமிக்க சக்தியாகக் காணப்படுகின்றது.

           சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய ஐந்திணை ஐம்பது என்னும் நூலிலே காதலின் தியாகத்தினை ஒரு அழகான பாடல் மூலம் மாறன் பொறையனார் எடுத்துக்காட்டியுள்ளார். 

``சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்
 பிணைமான் இனி துண்ண வேண்டிக் கலைமான்தன்
 கள்ளத்தின் உச்சும் சுரமென்பார் காதலர்
 உள்ளம் படர்ந்த நெறி‘‘

சுனையிலே சிறிதளவு நீரேயுள்ளது. ஒரு மானே அருந்தும் அளவுள்ளது. ஆண்மான் குடிக்காது விட்டால் பெண் மான் குடிக்காது. எனவே ஆண்மான் சுனைநீரில் குடிப்பது போல் வாயை வைத்துப் பாவனை செய்து பெண்மானை குடிக்கச் செய்கிறது. காதலிலே விட்டுக்கொடுப்புக்கள், தியாகங்கள், அன்புப் பரிமாற்றங்கள் அளவுக்கதிகமாகவே பேணப்படுகின்றன.

                    பல்லவர் காலத்துத் தோன்றிய ஆண்டாள் பாடல்களிலே ஒரு தலைக்காதல் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. திருநாவுக்கரசர் சிவபெருமானை தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவம் கொண்டு பல பாடல்கள் பாடியுள்ளார்.

              சோழர்காலத்தில் புகழேந்தி, சயங்கொண்டார், கம்பர், ஒட்டக்கூத்தர் போன்றோர் காதல் சுவை மிக்க பாடல்கள் மூலம் காதல் உணர்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ளனர். அதேபோல் புகழேந்தி நளவெண்பாவிலே நளன் தமயந்தி மேல் கொண்ட காதலினை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

             நாயக்கர் காலத்திலே குற்றாலக்குறவஞ்சியில் திரிகூடராசப்பக்கவிராயர்

வாகனைக்கண் டுருகுதையோ - ஒரு
மயக்கமதாய் வருகுதையோ
மோகம்என்பது இதுதானோ - இதை
முன்னமே நான் அறியேன்! ஓ!
ஆகம் எல்லாம் பசந்தேனே - பெற்ற
அன்னைசொல்லும் கசந்தேனே
தாகம் அன்றிப் பூணேனே - கையில்
சரிவளையும் காணேனே.

என காதலினால் ஏற்படும் உணர்வுகளைக் கொண்டு வந்திருக்கின்றார்.

       தற்காலக் கவிஞர்களின் அற்புதமான கவிவரிகள், காதலை வெகுவாக வெளிப்படுத்தியுள்ளன. கவிஞர் மீரா அவர்கள் ஓரிடத்தில் அற்தமான புதுக்கவிதையினைத் தந்துள்ளார்.

        `` நீ என்னைப் பார்த்த பார்வை
         என் நெஞ்சில் முள்ளாய் குத்தியது
         எங்கே இன்னுமொரு முறை பார்
         முள்ளை முள்ளால்தானே எடுக்க முடியும்``
        

கற்றறியாத பாமரர்கள் கூட நாட்டுப்பாடல்கள் மூலமாகத் தமது காதலை வெளிப்படுத்தியிருக்கின்ற பாங்கு ரசித்து இன்புற வைப்பதுடன் இளைஞர்கள் உள்ளத்தில் காதல் என்னும் பயிருக்கு விதை ஊன்றுவதாக உள்ளன.

     
        ``கண்டாங்கி பொடவை கட்டிக்
         கைநிறையக் கொசுவம் வச்சு
         இடுப்பில சொருகிறியே முனியம்மா அது
         கொசுவம் அல்ல எம் மனசு முனியம்மா‘‘
       

            முண்டாசுக்கவி பாரதி கூட காதல் காதல் காதல். காதல்  போயில் சாதல் சாதல் சாதல் என்றார். ஆனால், மனிதன் தோன்றியது தொடங்கி தொடர்ந்து வரும் காதலுக்கு எதிர்ப்புகளும் தொடர்வது இயற்கையாகவே ஏற்படுகின்றது. மரபுகள், கலாச்சாரம், சாதி, மதம், என மனிதனால் உருவாக்கி வைக்கப்பட்ட கட்டுக்கோப்புக்கள் காதலுக்குத் தடை போடுகின்றன. முறை தவறிய காதலினால் தமது வாரிசுகள் வாழ்க்கை முறை தவறிப் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர். இயல்பாகவே தோன்றுகின்ற மகிழ்ச்சியை இடையிலே முறிக்க முயற்சிக்கின்றனர்.

நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்
பாடைகட்டி அதைக் கொல்ல வழிசெய் கின்றார்
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க

என்று தற்போதைய நிலமையினை பாரதிதாசன் தன் பாடல் வரிகள் மூலம் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.
            
                    பகட்டுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும், எதிர்கால சிந்தனை எதுவுமின்றி விளையாட்டாக காதலென்னும் போர்வையில் பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும்  ஏங்க வைத்து ஏமாற்றும் காதல், காதலுக்கே ஒரு அவமானமாகக் கருதப்படுகின்றது. எனவே காதல் செய்வீர்! காதல் செய்வீர்! காலம் முழுவதும் இணைந்திருக்க கருத்தில் கொண்டு, உண்மை அன்பை முதலீடு செய்து, வாழ்வில் முயன்று காதலில் வெற்றி காண்பீர்!
அனைத்து உள்ளங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்
Share this article :

1 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொன்றையும் மிகவும் ரசித்தேன்... வாழ்த்துகள்...

எனது நூல்

எனது EBook

Versatile Blogger Award

Versatile Blogger Award

Fabulous Blog Ribbon Award

Fabulous Blog  Ribbon Award

திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு

திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு

தமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு

தமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான    முதல்பரிசு

ஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்

ஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை  கவிதை போட்டிக்கான இரண்டு  முதல்பரிசுகள்

Test Footer 3

kowsy2010 in youtube

Loading...

எனது மற்றய வலை

இவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது

MyFreeCopyright.com Registered & Protected

Popular Posts

Blogger இயக்குவது.
Das Wetter in Solingen

Google+ Badge

 
Support : Creating Website | Kowsy | Kowsy
Proudly powered by Kowsy
Copyright © 2011. gowsy - All Rights Reserved
Template Design by சந்ரு Published by EMN