• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 28 மே, 2017

                                         
               

                            முதுவேனிற்கால சிறப்பு

  காலநிலை சுற்றுச்சூழலுக்கேற்ப மனிதன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது இயற்கை. அந்தவகையில் 'ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா' என பாப்பாப் பாட்டுப் பாடிய பாரதியை மெச்சும் மாதமாக ஜூன் மாதம் அமையப்பெற்றிருக்கின்றது. இருளின் கோரப்பிடியை விடுத்து ஒளியின் உச்சத்தை அநுபவிக்கும் ஆற்றல் மிக்க மாதம் முதுவேனிற்காலம் ஆகிய ஆனி மாதம். நித்திரையை வெறுத்து பகலெல்லாம் வெட்டவெளியில்  ஆட்டம் பாட்டுக் கொண்டாட்டம் என் சிறுவர்களின் குதூகலத்தை இக்காலத்தில் காணலாம். இரவு 11 வரை பகல் வெளிச்சம். 21 ம் திகதியே இவ்வருடத்தின் அதிகூடிய பகல் நேரமாகக் காணப்படும். இம்மாதம் படுக்கையை வெறுக்க வைக்கும். தோட்டம் செய்வோரும் பயிரிடுவோரும் பூமரங்களை பதியமிடுவோருமென பெரியோர்கள் பூரித்துப் போவர். பூட்டிய வீட்டுக்குள்ளே இருந்து வெப்பமூட்டியை கூட்டிவிட்டுக் குளிர்காய்ந்தவர்கள் எல்லாம் கிறிலன், பாபிகியூ என்று இறைச்சியை வாட்டி வாட்டி வீட்டுக்கு வெளியே இருந்து இரசித்து ருசித்து உண்பார்கள். ஆதிகால மனிதனின் நிலையை நாம் அண்மிக்கின்றோம் என்பதுபோல் வாட்டிய இறைச்சியை வாயில் வைத்துக் கடிக்கும்போது எம்மனதில் இவ்வெண்ணம் தோன்றாமல் இல்லை. நினைக்கவே நாவில் எச்சில் ஊறுகிறது.
              பச்சைப் பசேலெனும் பரப்பிலே படுத்துறங்கி பொழுதுபோக்கும் அழகும். வீட்டின் அறைகளையும், சாளரங்களையும் ஒரேயடியாகத் திறந்துவிட்டு ஊடுருவிச் செல்லும் காற்று தங்குதடையின்றி செல்வதும். பக்கத்து வீட்டில் குடியிருப்போரை அடையாளம் காண்பதும், பழமரங்களும், காய்கறிகளும் பறித்துண்ணப் பயிரிடுவதும் பறித்தெடுப்பதும் என மொத்தத்தில் வெளியுலகுடன் முற்றாகத் தொடர்பு கொள்ளும் தித்திப்பான காலமாக இம் மாதம் இனம் காணப்படுகின்றது.
      ரோமான் நாட்டவர்கள் தமது ஜுபிடர் கடவுளின் மனைவின் பெயராகிய ஜுனோ என்னும் பெயரிலிருந்தே ஜுன் மாதம் பிறந்ததாகவும், கிரேக்க இனத்தவர்கள் தமது இளமைத் தெய்வமான மெர்க்குரிக்கின் ஜுனியஸ் என்னும் பெயரிலிருந்தே ஜுன் மாதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். இம்மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் பிரவேசிப்பதால் மிதுனகாலம் என எம்மவர் அழைக்கின்றனர். மிதுனராசி அளவிலே பெரியது என்னும் காரணத்தால், இதனைக் கடப்பதற்கு நீண்ட நேரத்தை சூரியன் எடுத்துக் கொள்ளுகின்றது என எமது வானவியல் ஆராய்ச்சியாளர்களாகிய ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.

              இம்மாதம் பல விசேட தினங்களைக் கொண்டிருக்கின்றது. அவற்றில் முக்கிய தினங்களை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.          
            நாம் வாழ நல்லவையெல்லாம் காண எம்மைச் சூழவுள்ள சுற்றாடல் சிறப்பாகவும், சுகநலம் பேணுவதாகவும் இருக்க வேண்டும். அதனாலேயே புதுமனை வாங்கும் போது சூழல் பார்த்து வாங்குங்கள் என்று சொல்வார்கள். உலகத்தை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்பவர்கள் மனிதர்களே. நடக்கின்ற இயற்கை அழிவுகளுக்கும், நாட்டு அசம்பாவிதங்களுக்கும் காரணகர்த்தாக்கள் மனிதர்களே. இதனை அறிவுறுத்தும் பாங்கிலே ஆனிமாதம் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.         
                  குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் அக்குழந்தைகளுக்கான சர்வதேச குழந்தைகள் தினத்தை இம்மாதம் முதலாம் திகதி கொண்டாடுகின்றார்கள். இதே குழந்தைகளை வைத்து வியாபாரம் செய்வதும், அவர்களை வேலைக்கு அமர்த்துவதும் பற்றி எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக ஐக்கியநாடுகளின் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பினால், 138, 182 உடன்படிக்கைகளின்படி 2002ம் ஆண்டிலிருந்து 12 ஆம் திகதி ஜுன் மாதம் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றது.
                 தனக்குள் பாசத்தைப் பூட்டி வைத்து வெளிப்படையாக கண்டிப்பை வெளிப்படுத்தி தமது பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக நாளும் உழைக்கும் தியாகி தந்தைக்கு மரியாதை செய்யும் முகமாக இம்மாதம் 3 ஆவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது.
              உலகமெங்கும் போர், புலம்பெயர்வு என மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்ற இக்காலப்பகுதியில் அவர்களுக்கென்றே ஒரு தினத்தை பிரகடனப்படுத்தி ஜுன் மாதம் 20 ம் திகதியை சர்வதேச அகதிகள் தினமாக அறிவித்துள்ளனர்.
               உடல்நலம் பேணி, உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க அதி உயர்ந்த கலை யோகா. சர்வதேச யோகா தினமும்  இம்மாதம் 21 ஆம் திகதியே கொண்டாடப்படுகின்றது.
             இவற்றையெல்லாம் விட ஜேர்மனியில் வாழும் சைவப்பெருமக்களுக்கும், இளந்தலைமுறையினருக்கும், வியாபார ஸ்தாபனங்களுக்கும், ஒரு பொன்னான மாதம் ஆனிமாதம் என்பதை மறுக்கமுடியாது. பட்டுச்சேலை வாங்க வேண்டுமா? பலசரக்குச் சாமான் வாங்கவேண்டுமா? பெட்டி மாம்பழம் வாங்க வேண்டுமா? பெரிதாயக் கொள்வனவு செய்ய வேண்டுமா? லைகா ரி.வி வாங்க வேண்டுமா? லைற்றாப் பெண்களை லைன் அடிக்க வேண்டுமா? பொண்ணு பார்க்க வேண்டுமா? அத்தனைக்கும் ஏற்ற மாதம் அதற்குரிய காமாட்சி அம்பாளுக்கு விழா எடுக்கும் மாதம்  இந்த ஆனி மாதம். ஆஸ்திகனும் நாஸ்திகனும் வேற்றுமையின்றி ஒன்று கூடும் இடமாகிய ஹம் காமாட்சியம்மன் ஆலயத்தின் மகா உற்சவம் இவ்வருட ஆனி மாதம் 12ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25ம் திகதி தேர்த்த்திருவிழா 26ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் முடிவுறுகின்றது. இக்காலப்பகுதி ஊருக்கே உற்சவம் தோன்றும் நாளாகும். நாட்டின் பலபகுதிகள் மட்டுமன்றி வேறுநாட்டின் பல பிரஜைகளும் தேடிவரும் இப்புண்ணிய திருத்தலத்தின் பெருமையினை அத்திருவிழாக் காட்சி புலப்படுத்தும்.

              இவ்வாறு இவ் ஆனிமாதத்திலே இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூடியதாகவுள்ளது.

  3 கருத்துகள்:

  1. ஜேர்மனில எப்பவும் ஒரு நிலையான தட்பவெப்பம் ஆனா இங்கிலாந்தில் மாறி மாறி இருக்கு நேற்று வெயில் இன்று மழை ஜூலை ஆகஸ்ட் தான் கொஞ்சம் வெளியில் பார்பெக்யூ சூழ்நிலை வரும் ..தினங்களும் அவற்றின் கொண்டாட்டங்களை குறித்து வைத்து கொண்டேன்
   நல்ல பதிவு அக்கா ..இங்கும் கார்டன் பார்ட்டிக்கு தயாராகியாச்சு வெயில் எட்டிப்பார்க்கும்போது ஆதி காலத்துக்கு போயிடுவோம் :) தோட்டமிடவும் சோளம் வறுக்கவும்தான் :),.

   பதிலளிநீக்கு
  2. காமாட்சி அம்பாளுக்கு விழா எடுக்கும் மாதம் இந்த ஆனி மாதம். இந்த விழாவில இத்தனையும் கிட்டுமா? அருமையான பதிவு!

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...