வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

ஞாயிறு, 2 ஜூலை, 2017

எனக்காய் ஒரு தாய் ஏங்க என் இதயம் சிரித்திருக்கும்

இரண்டு வயதிலே நீ இயல்பாய்த் தமிழ் பேசியபோதும், உன் குதலை மொழியால் குழைந்து குழைந்து காரணங்கள் கேட்டபோதும், இதயத்தை நிமிர்த்தி இமயம் போல் ஒரு நம்பிக்கை கொண்டிந்தேன். வருங்கால நீதிபதி ஒன்று நியாயங்கேட்க நிமிர்ந்து வளர்கின்றதென்று. என் கன்னத்தில் அழுத்தி நீ முத்தமழை பொழியும்போது என் இதயம் கசிந்து அன்பு ஊற்றுக்களாய் பெருகிக் கொண்டேயிருந்தது. உன் இதயமொழி எங்கள் வாழ்க்கை மேடையிலே சங்கீத சாம்ராஜ்யம் நடத்தியிருந்தது. 
           பூமி சுழன்றதனால் வயதும் சுருண்டு கிடக்கவில்லை. சுயமாக 6 ஆக உயர்ந்து விட்டது. முதல் வகுப்பில் நீ ஸுல்ரியூற்ற தூக்கியபோது நீ பல்கலைக்கழக அநுமதிப்பத்திரம் பெற்றுவந்த பெருமிதம் கொண்டோம். கள்ளி நீ எனக்கு எக்கஷ்டமும் தந்ததில்லை. உன் கணக்குப் பாடத்திற்கு உன் அப்பா உதவிக்கு வர நீ சந்தர்ப்பமும் தந்ததில்லை. நீ பருவ வயது கண்டால் சடங்கு செய்யத் தன் வங்கியிலே பணக்கணக்கை மட்டுமே கூட்டும் வேலையைத் தந்தைக்குக் கொடுத்திருந்தாய். ஆசிரியர்கள் எமை அழைத்து உனக்குப் புகழாரம் எங்களிடம் சூட்டும்போது, எங்கள் குடும்ப மரபணுக்கள், உங்கள் குடும்ப மரபணுக்கள் தொழிற்படுவதாய் நானும் உன் தந்தையும் போட்டா போட்டி போட்டோம். 
             வில்லங்கம் வந்துவிட்டது. விடியாத பொழுதுகள் என்  கண்களுக்குள் வந்துவிட்டன. விட்ட சனி ஒட்டிக் கொண்டது. வெட்ட வெளியிலே உச்சிச் சூரியனுக்கு அண்மையில் மல்லாந்து கிடப்பதுபோல் உடலெல்லாம் சுட்டெரிக்கிறது. நெருப்புத் தணலில் நிற்பது போல் தவிக்கிறேன். மகளே உன் வாய்ப்பேச்சு எங்கே மாயமாய்ப் போனது. சித்திரம் கட்டிலில் கிடப்பதுபோல் சிரித்தபடி படுக்கின்றாயே! உன் கலகலத்த சிரிப்பை தன் மருந்தால் சிக்கவைத்த வைத்தியரை நான் சிறை வைக்க முடியாது தவிக்கின்றேனே! முழிக்கும் உன் கண்களுக்காய் மூடாத எம் இமைகள் விரிந்த சாளரமாய் நிலைபெற்றுவிட்டன. 
              அறிவுவாங்கப் பாடசாலை செல்கின்றாய் என்றுதான் நினைத்தோம். நீ காய்ச்சல் அல்லவா வாங்கி வந்திருக்கின்றாய். ஆண்டவனாம் வைத்தியர் ஆண்டவனுக்கு அடுத்தபடி யாரிடம் நாம் போய் நிற்போம். வைத்தியரிடம் தானே உயிர்ப்பிச்சைப் பாத்திரம் ஏந்துவோம். 
            பச்சைக் குழந்தை உனக்கு அன்ரிபயோரிக் தரும்போது அவரைவிட நாமென்ன கற்றுவிட்டோம் என்றும் வைத்தியர் சொல்மிக்க மந்திரமில்லை என்றுமல்லவா நினைத்துவிட்டோம். பாவி கையால் தந்த அன்ரிபயோரிக் உனக்கு நஞ்சாகும் என்று அம்மா நான் நினைக்கவில்லையே! என் கையே உனக்கு நஞ்சு தந்துவிட்டதா! மகளே! இக்கையை நானே சுட்டெரிக்கப் போனேனே! உன் தந்தை அதற்கும் தடை போட்டுவிட்டாரே. என் கையைப் பார்க்க எனக்கே அருவருப்பாய் இருக்கிறது. ஒரு பிஞ்சை கட்டிலில் படுக்க வைத்துவிட்ட வைத்தியர், எப்படித்தான் தன் கட்டிலில் தூங்குகின்றாரோ புரியவில்லை. ஒரு வேளை இது இவர்களுக்குப் பழக்கமாய்ப் போய்விட்டதோ. அவதானம் தவறும் வைத்தியரும் கொலைகாரனும் ஒருவர் அல்லவா?
                                      இரவுபகலாய் இதயமில்லாத உன் உடல் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதயம் இருந்தும் என்னால் தொழிற்பட முடியவில்லை. உன்னைப் பார்க்கையிலே உள்ளமெல்லாம் வேகுதடி. ஓர் கத்தி நான் எடுத்து என் இதயத்தை வெட்டி உன் உடலினுள் புதைத்துவிட என் இதயமது  ஆவேசம் கொள்ளுதடி. ஆனால், சட்டம் என்ன கண்மூடிக் கொண்டா இருக்கிறது. உலகப் பந்தை நீ பார்க்க என் உடல் வருத்தம் பொறுத்தேனடி. என் இடுப்புவலி தாங்கி உன் உடலது கண்டு களித்தேனடி. இன்று உன் அருகே ஓர் இயந்திரம் உனக்காகத் துடிக்கும் போது, அதனைக் கையால்; தொட்டு நாளும் கண்ணில் ஒற்றிக் கொள்கிறேன். ஆண்டவனே நேரில் வந்து உன் அருகே படுத்திருப்பதாய் உணர்கின்றேன். 
             எத்தனை காலம் அவர் அருகே அமர்ந்திருக்க முடியும். உன் போல் ஓர் இதயம் எங்கோ உனக்காய்த் துடித்துக் கொண்டிருக்கின்றது. அது எப்போ உன் உடலுள் அமரப் போகின்றது. அவசரமாய் அதைக் கேட்க ஆசையாய் இருக்கிறது. ஆனால், அங்கும் ஓர் தாய் என் போல் பின் ஏங்கித் தான் என் ஏக்கம் தீர்க்கவேண்டும். அப்போது கூட அவளுக்காய் நான் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பேன். இதயம் தேடி இரவுபகலாய் விழித்திருக்கிறாள் இத்தாய். 
  
5 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…


மிகவும் சோகமான ஆக்கம். உண்மை நிகழ்ச்சியெனில் விரைவில் சுகமாகப் பிரார்த்திப்போம்.

Chandragowry Sivapalan சொன்னது…

'எனக்காய் ஓர் தாய் ஏங்க........' உங்கள் படைப்பு படித்தேனம்மா......
மிகச் சிறப்பான எழுத்து தங்களுடையது......
மிக்க மகிழ்ச்சி...... வாழ்த்துக்கள்.....
அன்புடன்,
த.இராமலிங்கம்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நெகிழ்ச்சி....

Dr.Ezhilvendan சொன்னது…

இதயம் கனக்க வைக்கிறது உங்கள் பகிர்தல்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

உள்ளத்து உணர்வுகள் வெளிப்படும் உண்மை கதை போலத் தென்படுகிறது.
சிறந்த பதிவு!

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்...