• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வியாழன், 28 செப்டம்பர், 2017

  பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கால வகையினானே


  மொழி உணர்வு என்பது கட்டமைக்கப்படுவதுதானே அன்றி இயற்கையான ஒன்றல்ல. 

  மொழி என்பது ஒரு பரிமாற்று ஊடகம், தொடர்பாடல் ஊடகம் என்பதை மறந்து விடல் கூடாது. தனித்தமிழ் என்று கூறி மொழியைக் கடினப்படுத்துவது மொழி அழிவதற்கான காரணமாகிவிடுகின்றது. இங்கு மொழி இலக்கணம் காப்பாற்றப்படுகின்றது. மொழியைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகின்றது. 

  உலகத்தைக் கையில் கொண்டு ஒரு துறையில் உள்ளவர்கள் தமது துறையில் உள்ளவர்களை நாடி உலகமெங்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுகின்றார்கள். ஒரு நாட்டு ஆண் வேறு நாட்டிலுள்ள வேற்று மொழி பேசும் பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் காதல் கொள்ளுகின்றான். youtbube, Twitter, Instergram, Skype, Facebook, Messenger, Whatsapp. viber போன்றவை    மூலம் பல்வேறுபட்ட மொழி பேசுபவர்கள் பல்வேறுபட்ட மொழி பேசுபவர்களுடன் தொடர்பில் இருக்கின்றார்கள். இவ்வாறு தனிமை, தனித்தியங்குதல் என்பது இக்காலகட்டத்தில் கேள்விக்குறியாக இருக்கின்றது. கலை, கலாசாரம், மொழி அத்தனையும் கலந்துபட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

            அடுத்த தலைமுறையில் எமது மொழி வாழுமா? என்ற கேள்விக்குறியுடன் உலகநாடுகளெங்கும் பரந்து வாழும் நாம். எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு எமது மொழியைப் போதிப்பது அவசியமாகின்றது. மொழியைத் தவிக்கவிட்டுவிட்டு மொழிக்கலப்பு பற்றிப் பேசுவது அபத்தமாக இருக்கின்றது. 

             ஆணும் பெண்ணும் கலந்தால் ஒரு உயிர், நாடுகள் கூட்டுச் சேர்ந்தால் பொருளாதார வளம். மொழிகள் கலந்தால் மொழி வளம். இனங்கள் கலக்கின்றன. கலாசாரங்கள் கலக்கின்றன. மொழியைக் கட்டிக் காக்க வேண்டிய தமிழரே தமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்காது அவர்களுடன் தமிழ் மொழியே பேசாது. தமிழ் மொழி வேற்று மொழிகளுடன் இணைகின்றது என்பதில் கவலைப்படுவதில் நியாயமில்லை.

           வேவ்வேறு மொழி பேசுகின்ற பெண்களையோ ஆண்களையோ திருமணம் செய்யும் போது எமது மொழி வாழும் என்றால், அம்மொழி திருமண பந்தத்தின் போது பகிரப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஒரு தமிழ்மொழி பேசும் பெண், ஒரு ஆங்கில மொழி பேசும் ஆணைத் திருமணம் செய்கின்றபோது தமிழ்மொழி ஆங்கிலமொழி பேசும் ஆணுக்குக் கற்றுக் கொடுக்கப்படல் வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்மொழி வளம் பெற சாத்தியம் இருக்கின்றது. மக்களுக்காகவே மொழி. மொழிக்காக மக்கள் இல்லை.

  கால ஓட்டத்தில் கலந்து வந்த மொழிச் சேர்க்கை:

  படையெடுப்பு, வியாபாரம், அயல்நாட்டு தொடர்புகள் மொழியில் மாற்றங்களை ஏற்படுத்துவது இயற்கை. மொழி உணர்வு என்பது கட்டமைக்கப்படுவதுதானே அன்றி இயற்கையான ஒன்றல்ல. 

  ஆரியம் தமிழ்மொழியில் கலந்திருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் தொல்காப்பியர் காலத்திலும் இக்காலத்திலும் காணப்படுகின்றன. 

  "வடசொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ 
  எழுத்தொடு புணர்தல் சொல்லாகும்"

  வடசொல்லைத் தமிழில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தொல்காப்பியர் விளக்கியிருக்கிறார். ஆரியத்திற்கு உரிய எழுத்தை விடுத்து ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொதுவான எழுத்தில் அமைக்கப்படும் சொல் என்று விளக்கியிருக்கின்றார். எமக்குக் கிடைக்கின்ற முதல் தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் அதில் வடமொழி தமிழில் கலந்திருந்தமையை இதன் மூலம் அறியக்கிடக்கின்றது. 

  அதேபோல் நன்னூலில் " பழையன கழிதலும் புதியன புகுதலும்
  வழுவல கால வகையினானே" என்று சொல்லப்பட்டிருக்கின்றது .

  காலமாற்றத்திற்கேற்ப மொழியில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. அது ஆரோக்கியமும் கூட. சங்க காலத்திலே யவணர் என்ற சொல் வழக்கில் இருந்தது. வியாபார நோக்கில் அந்நிய நாடுகளில் இருந்து தமிழகம் புகுந்த கடல்வழி பயணிகள் தமது மொழிச் சொற்களை விதைத்தமையுடன் என் மொழிச் சொற்களையும் கொண்டு செக்றிருக்கின்றார்கள் என்பது உண்மையே. 

  மாங்காய்      -      Mango (ஆங்கிலம்)
  மண்வெட்டி -     Mametti          (ஒல்லாந்தர் மொழி) 
  தாங்கி             -    Tank          (ஆங்கிலம்)
  வெற்றிலை   -    Betel          (ஆங்கிலம்)
  ஊர்உலா       -    Urlaub      (ஜேர்மன் மொழி)


  அதேபோல் சஙகம் மருவிய காலத்தில் ஏராளமான சொற்கள் தமிழில் வந்து கலந்தன. 

  பல்லவர் காலத்திலே மதங்களின் ஆட்சி மேலோங்கி இருந்த போது  ஆரியர் வழிபாட்டுச் சொற்கள், பொருட்கள் தமிழர்களிடையே கலந்தன. வடமொழி கலந்த உரைநடை இக்காலத்திலேயே வந்துவிட்டது. உதாரணமாக களவியல் உரையை நோக்கலாம். ஆரியச்சொற்களின் ஆட்சிக்கு எதிரான போக்கிலே தமிழின் மேன்மையை எடுத்துணர நற்றமிழ் ஞானசம்பந்தன், தமிழ் மூவர் என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டன. 

           வீரசோழியம் என்னும் வடமொழி நூல் தமிழில் எடுத்தாளப்பட்டுள்ளது. நேமிநாதம், தண்டியலங்காரம், யாப்பெருங்கலக்காரிகை, போன்ற நூல்கள் வடமொழி இலக்கணமரபைத் தழுவி எழுதப்பட்டன. 

  காவ்ய என்னும் வடமொழிச்சொல்லே காப்பியம் என தமிழ்மொழியில் வழங்கப்பட்டது. தண்டியலங்காரத்தில்  காவிய மரபு பேசப்பட்டுள்ளது.

  நாயக்கர் காலத்தை எடுத்து நோக்கும்போது ஆசானும் அகராதியும் துணை செய்தாலன்றி உட்புக முடியாத இரும்புக்கோட்டையிலானது நாயக்கர்காலப்பாடல்கள் என நாயக்கர் கால இலக்கியப்போக்கு காணப்படுகின்டறது. அருணகிரிநாதருடைய பாடல்களில் ; மணிப்பிரவாளநடையினைக் காணலாம். "வாலவ்ருத்த குமரனென சில வடிவங்கொண்டு....'  என்னும் பாடலினை உதாரணத்திற்கு எடுத்து நோக்கலாம். 

  போத்துக்கேய ஒல்லாந்தர் காலங்களில் போத்துக்கேய ஒல்லாந்த மொழிச் சொற்கள் தமிழ்மொழியில் வந்து கலந்தன. இவ்வாறே பிரித்தானியர் ஆட்சியில் ஆங்கில மொழிச்சொற்கள் ஏராளமாகத் தமிழில் வந்து கலந்தன. 

  "நீ எழுதியவற்றை ஆங்கிலம் தெரியாத தமிழனிடம் வாசித்துக்காட்டு அது அவனுக்கு விளங்குமானால், அதுவே சிறந்த உரைநடை'' என பாரதியார் கூறுகின்றார். அந்தளவிற்கு ஆங்கிலம் தமிழில் கலந்துவிட்டது. இதனாலேதான் 2000ஆம் ஆண்டு விடியலில் தனித்தமிழ் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சூரியநாராயண சாஸ்திரிகள் தனது பெயரை பரிதிமால் கலைஞன் என்று மாற்றினார். மறைமலையடிகளின் பெயர் சுவாமி வேதாசலம். வடமொழி சொற்களான சுவாமி என்பதை அடிகள் என்றும், வேதம் என்பதை மறை என்றும்  அசலம் என்பதை மலை என்றும் தமிழுக்கு மாற்றி  மறைமலையடிகள் என்று தனக்குப் பெயரிட்டார்  இதனால், அவரால் ஒன்றும் பெரிதாகச் சாதிக்க முடியாமல் போய்விட்டது. இதன் தொடர்ச்சியே புலம்பெயர்ந்த தமிழர்களிடம் காணப்படுகின்றது. 
            
             இப்போது புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களில் ஒரு சந்ததியினருக்கு இம்மொழிக்களப்பு சங்கடத்தை ஏற்படுத்தினாலும் இது உணர்வுபூர்வமான தன்மையாகவே காணப்படுகின்றது. இனக்குழுமங்கள், கண்டுபிடிப்புகள் எம்முடன் இணைவதுபோல் ஆரோக்கியமான மொழிச்சேர்க்கை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. 


   வேற்றுமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துதல் தான் சிறப்பு அதனைத் தமிழில் எழுதும்போது அது புதிய வடிவத்தைப் பெறுவது இயல்பு. உதாரணமாக   car என்பதை கார் எனப்பயன்படுத்தும் போது இருள் என்ற பொருளைத் தருகின்றது.

            ஏற்கனவே பரிச்சயமான சொற்களை நாம் மாற்றியமைக்கும் போது பரிச்சயம்  இல்லாமல் போகின்றது. கோப்பி என்பதை கொட்டை வடி நீர் என்னும்போது மொழி பின்னோக்கிப் போகவே சந்தர்ப்பம் இருக்கிறது. கோப்பி என்று பயன்படுத்துவது எந்தவித மொழிவளக் குறைவான சொல் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். 

                 15 மொழிகள் பேசுகின்ற ஐரோப்பிய நாட்டில் வளரும் ஒரு பிள்ளை. மொழிகளிலே தமிழ்மொழியே கடினமானது என்கிறாள். இன்னும் தமிழ்மொழி கடினப்படுத்தப்படுவது. மொழிவளம் குறைவதற்குக் காரணமாகின்றது. அடுத்த தலைமுறைக்கு எமது மொழியைக் கொண்டுசெல்ல மொழி இலகுவாக்கப்பட வேண்டும். கடினப்படுத்தப்படக் கூடாது. 

  மொழிக்கலப்புப் பற்றிக் காசியானந்தன்:

  ''இராமசாமி சதுக்கத்தில் சர்க்கார் விராந்தையில் காணப்பட்ட பீரோவைத் திருடிய ஆசாமி துர்அதிஸ்டவசமாக பொலிசாரிடம் வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டான்''

  இராமசாமி  -  வடமொழி
  சதுக்கம்        -  பாளி
  சர்க்கார்       –  போத்துக்கேயம்
  திருடிய       -   தெலுங்கு
  ஆசாமி       –   மலையாளம்
  துர்அதிர்ஸ்டம்  - வடமொழி
  பொலிஸார்        -  இலத்தீன்
  வில்லங்கத்தில் -மராட்டி
  மாட்டி                    -  தெலுங்கு
  கொண்டான்      -  மலையாளம்

  இங்கு தமிழென்று நாம் கருதுகின்ற ஒரு வாக்கியத்தில் எத்தனை பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. 
                   பல மொழிகள் இணைந்தே ஆங்கிலமொழி வியாபார மொழியாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. எனவே பிற மொழிகளை அங்கீகரிப்பதும் பிறமொழிகளில் எம்மொழி இணைவதும் சாதாரணமாக நடைபெறுகின்றது. ஆனால், பிறமொழிகளைக் கையாளும் போது தமிழ்மொழி ஆளுகைக்குள்ளே அமைய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். தேவையானபோது மொழிக்கலப்பு அவசியமாகின்றது. ஒலிபெயர்ப்பு செய்யலாம், புதிய சொற்கள் கண்டுபிடிக்கலாம். 

               எனவே மொழிக்கலப்புப் பற்றிப் பேசும் நாம், எமது எதிர்காலத் தலைமுறைக்கு மொழியைக் கொண்டுசெல்வதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதனைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும் எமக்கு இருக்கின்றது.


  4 கருத்துகள்:

  1. அற்புதமான சிறப்புப்பதிவு .பகிர்ந்து மகிழ்கிறேன்

   பதிலளிநீக்கு
  2. பிறமொழிச் சொற்கள் எவை என்று தெரிந்துகொள்வதில் கூட கற்றவர்களிடமே சில ஐயப்பாடுகளை நான் கண்டுள்ளேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணிக்காலத்தில் முழுக்க முழுக்க தமிழையே பயன்படுத்தி அலுவலக நடைமுறையில் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளேன். அவற்றில் இரு நிகழ்வுகளைப் பகிர விரும்புகிறேன்.(1) அச்சகத்தில் நான் பணியாற்றியபோது Star Press என்ற நிறுவனத்தாருக்கு ரூ.1,50,000க்கு வரைவோலை அனுப்பவேண்டியிருந்தது. தமிழையே பயன்படுத்தவேண்டும் என்று கூறி பதிப்புத்துறை இயக்குநர் (ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இப்பொறுப்பில் இருந்தார்)Star Press என்று போடக்கூடாது ச்டார் பிரசு அல்லது விண்மீன் அழுத்தகம் அல்லது விண்மீன் அச்சகம் என்று எழுது என்று கூறி என்னைப் பாடாய்படுத்தி, வேறு வழியில்லாமல் எழுதி அனுப்பினோம். வரைவோலை திரும்ப வந்துவிட்டது.மறுபடி சிரமப்பட்டு அதனை ரத்து செய்துவிட்டு Star Press என்று புதிய வரைவோலை தந்தோம் (2)பதிப்பகத்தில் நூல் விற்பனையின்போது ஒருவர் வந்தபோது இயக்குநர், நமக்குத் தெரிந்தவர் வந்துள்ளார். அவர் நூல் கழிவு கேட்கிறார். எவ்வளவு முடியுமோ கொடு என்றார். நாங்களும் அச்சகத்தில் சென்று நூல் கழிவினை ஒரு தாளில் சுருட்டி வைத்துக் கொடுத்தோம். அவர்கள் இருவரும் விழுந்துவிழுந்து சிரித்தனர். பின்னர் சமாளித்துக் கொண்டனர். எங்களுக்குப் புரியவில்லை. அவர் கூறியது நூலின் விலைக்கான அதிக அளவிலான தள்ளுபடி Book discount. நாங்கள் புரிந்துகொண்டது அச்சுப்பொறிக்குப் பயன்படுத்தும் cotton waste. இவ்வாறான சூழல்களில் நாங்கள் மாட்டிக் கொள்ளும்போது எங்களை யாரும் காப்பாற்றுவது கிடையாது. இவை போன்றவையெல்லாம் எங்களுக்குப் பின்னர் பாடங்களாக அமைந்தன.

   பதிலளிநீக்கு
  3. எமது எதிர்காலத் தலைமுறைக்கு மொழியைக் கொண்டு செல்வதற்கு முயற்சியையும் பாதுகாக்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கின்றது.
   நன்றி சகோதரியாரே

   பதிலளிநீக்கு
  4. வணக்கம் அம்மா...

   முதலில் இந்த பதிவுக்காக தமிழ்கூறும் நல்லுலகம் சார்பில் நன்றிகள் பல !

   காலத்தின் தேவையையும், யதார்த்தத்தையும் உணார்த்தும் மிக அவசியமான பதிவு இது. மொழிக்கலப்பு காலத்தின் கட்டாயம். ஒரு மொழியின் இலக்கணம் மறக்கப்படாதவரை, சிதைக்கப்படாதவரை அந்த மொழியை வெற்றுமொழி சொற்கள் கொண்டு அழித்துவிட முடியாது.

   காலனியாதிக்க காலத்திலிருந்து அங்கிலமும் பிரெஞ்சும் கீரியும் பாம்பும் போன்றவை. ஆனால் ஆங்கிலத்தில் எத்தனையோ பிரெஞ்சு மொழி வார்த்தைகளும் பிரெஞ்சில் ஆங்கில மொழி கலப்பும் ஏராளம். இதனால் இந்த இரு மொழிகளும் அழிந்துவிடவுமில்லை, தங்கள் தனிதன்மையை இழந்துவிடவுமில்லை !

   மொழியின் பழம்பெருமை பேசும், போற்றும் அதே சமயத்தில் " பழையன கழிதலும் புதியன புகுதலும் " என அம்மொழியே கொடுத்த தெளிவையும் மனதில் கொள்ள வேண்டும்.

   நன்றியுடன்,
   சாமானியன்

   எனது புதிய பதிவு " ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
   https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
   தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...