• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 13 அக்டோபர், 2017

  ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்

  ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண்டு விழா 11.10.2017 அன்று விபுலானந்தர் அரங்கில் மிக விமர்சையாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி ஒரு முப்பரிமாண நிகழ்வாகவே நடைபெற்றது. முத்தமிழ்வித்தகர் விபுலானந்த அடிகளார் அரங்கு, முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு, மாமாங்கப் பிள்ளையார் ஆலய இசை இறுவெட்டு வெளியீடு என அமைந்திருந்தன. விபுலானந்த அடிகளாரின் நூல்களும் சிறப்பு விருந்தினர் பாபு தம்பிராஜா வசந்தகுமார் அவர்களால் கையளிக்கப்பட்டது.

                இந்நிகழ்வில் கனடாவில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த பாபு தம்பிராஜா வசந்தக்குமார் அவர்கள் தயாரித்த விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படமும், மாமாங்கப்பிள்ளையார் ஆலய இறுவெட்டும் ஜேர்மனியில் முதன்முதலாக வெளியீடு செய்யப்பட்டது.  இந்நிகழ்வுக்கு; ஐரோப்பா இலங்கை தொலைதூரக்கல்வி இயக்குனரும் பாரிஸ் உயர் கற்கைபீட பேராசிரியருமான சச்சிதானந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் பொறுப்பாளர் தமிழ்மணி ஸ்ரீஜீவகன் அவர்கள் தலைமைவகித்தார். ஜேர்மனி தமிழ்க்கல்விச்சேவை பழைய மாணவர்கள் நிகழ்ச்சித் தொகுப்பினைச் செய்தனர்.

                மங்களவிளக்கேற்றல், தமிழ்மொழி வாழ்த்துப்பாடல், அகவணக்கம், என மங்களகரமாக விழா ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு முன்னைநாள் உறுப்பினர்கள், பாடசாலைகளின் நிர்வாகிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

                இக்கல்விச்சேவையானது இலங்கைப் பாடத்திட்டத்திற்கமைய இலங்கை அரசினால் வழங்கப்படும் பாடநூல்களைக் கொண்டே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றது என்பது அறியக்கிடக்கின்றது. இக்கல்விச்சேவையின் கீழ் ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிஸ் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் வருடம் ஒருமுறை நடத்தப்படும் ஆண்டு இறுதிப்பரீட்சையில் பங்கு கொள்கின்றார்கள். சித்தியடையும் மாணவர்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு ஆண்டுவிழாவிலே பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு வருடாவருடம் நடைபெறும். அவ்வாறே இவ்வருடமும் ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் தத்தமது திறமைகளையும், கலைநிகழ்ச்சிகளையும் அரங்கில் வெளிப்படுத்தி மகிழ்ந்தார்கள்.

                  விபுலானந்த அடிகளார் ஆவணப்படம் சபையோருக்குக் காண்பிக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது. ஆவணப்படத்தினை ஜேர்மனி கல்விச்சேவை நிர்வாகச் செயற்குழு உறுப்பினர் அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் விமர்சிக்க சிறப்பு விருந்தினர் பாபு தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் ஆவணப்படத்தினை வெளியீடு செய்து வைக்க ஜேர்மனி தமிழ்கல்விச்சேவை பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்கள் ஆவணப்பட இறுவெட்டினைப் பெற்றுக்கொண்டார்.
        

                  மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலய இசை இறுவெட்டினை ஜேர்மனி தமிழ்க்கல்விச்சேவை நிர்வாகச் செயற்குழு உறுப்பினர் சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் விமர்சனம் செய்து வெளியீடு செய்து வைக்க, அதனை பிரதம விருந்தினர் சச்சிதானந்தம் அவர்கள் பெற்றுக் கொண்டார். 

                 ஜேர்மனியின் பல பாகங்களில் சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியர்கள் நால்வர் இணைந்து நடத்திய சங்கீதக் கச்சேரி பார்வையாளர்கள் மனதைக் கவர்ந்தது.

               மாணவர்களின் பரீட்சை விடைத்தாள்களில் காணப்பட்ட சில சுவாரஷ்யமான விடயங்கள் அடங்கிய கருத்துக் களஞ்சியத்தினை விடைத்தாள்களை மதிப்பீடு செய்கின்ற ஆசிரியர்கள் வை.சிவராஜா, அம்பலவன் புவனேந்திரன், சந்திரகௌரி சிவபாலன், இராகுலன் ஸ்ரீஜீவகன் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தமை சுவாரஷ்யமாக இருந்தது.

               சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட பாபு தம்பிராஜா வசந்தகுமார் அவர்களும் முன்ஸ்டர் .பாடசாலை நிர்வாகிகளும் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்கள்.

                  பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்கள் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் ஆரம்பம் பற்றியும் அதனை அவர் இத்தனை வருடங்கள் கொண்டு நடத்துவதற்குத் தான் பட்ட கடினங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். பிரதம விருந்தினர் ஜேர்மனிக்கும் பிரான்ஸ்க்கும் இடையிலுள்ள தொடர்பு பற்றியும் தமிழ்மொழி பற்றியும், சுவாமி விபுலானந்தர் பற்றிய அரிய பல தகவல்களையும் கல்விச்சேவை பற்றியும் பலவாறாகத் தனது உரையை ஆற்றினார். வருகை தந்திருந்த பிரமுகர்கள் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கிச் சிறப்புச் சேர்த்ததுடன் ஆசிச்செய்திகளும் வழங்கினர். ஜேர்மனி தமிழ்கல்விச்சேவை உபதலைவி திருமதி. கலா மகேந்திரன் நன்றியுரையுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.
   


  2 கருத்துகள்:

  1. விபுலாநந்த அடிகளார் பல மாதங்கள், நான் ஆசிரியராய் பணியாற்றும் நிறுவனமான, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தங்கி எழுதிய நூல்தான் யாழ் நூல்.
   விபுலாநந்தர் ஆவணப் படத்தினைக் காண ஆவலுடன் இருக்கின்றேன் சகோதரியாரே
   இப்படத்தினை யு ட்யூப்பில் காண இயலமா,

   புதுப்சேரியினைச் சார்ந்த முனைவர் மு.இளங்கோவன் என்பாரும் விபுலாநந்தர் பற்றிய ஆவணப் படத்தினை எடுத்துள்ளார்
   நன்றி சகோதரியாரே

   பதிலளிநீக்கு
  2. நன்று எல்லோருக்கும் இனிய வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...