• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

  சொல்வாக்கும் செல்வாக்கும்

   Septemper vettimany பத்திரிகையில் வெளிவர இருக்கும் கட்டுரை 
  அறிவும் சொல்லும் ஆற்றலும் உள்ள ஒருவருக்கு அதை வெளியே கொண்டுவர ஏதோ ஒரு உதவி தேவைப்படுகிறது. தனித்து வாழவோ தனியோ ஒரு உற்பத்தியை வெளியிடவோ முடியாது என்னும் போது ஒரு ஊடகத்தின் அவசியம் தேவைப்படுகின்றது. உலகப்படைப்பும் அப்படியேதான் அமைந்திருக்கின்றது. அண்டவெளியிலே சுற்றிவரும் கிரகங்கள் ஒன்றையொன்று சார்ந்தே வாழுகின்றன.

   எமது உடல், மண், நீர், நெருப்பு, ஆகாசம், காற்று, மனது, ஆகியவை ஒன்றோடு ஒன்று சேர்ந்துதான் உற்பத்தியாகின்றன என்று புத்தர் கூறியுள்ளார்.  தனித்து நிற்கும் மரம் கூட வளர்வதற்கு நீரை வேண்டி நிற்கின்றது. தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் அப்படித்தான். பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்று கண்ணதாசன் சொன்னாலும் வாசிக்கப் புத்தகம் கொடுத்த எழுத்தாளன் அம்மேதைக்கு உதவியுள்ளான். ஒரு தனிமனிதனாகப் பிறக்கும் போது தாயின் இரத்தத்தைப் பாலாகக் குடித்தே வளருகின்றான். வளரும்வரை பெற்றோரின் துணையுடனேயே வளருகின்றான். அதன்பின் தன்னுயை வளர்ச்சிக்குரிய ஒரு உதவியை நாடுகின்றான். எனவே ஒருவர் வாழ்வில் பிரகாசித்து நிற்கின்றார் என்றால், அங்கு யாரோ சிலர் பின்னின்று வெளிச்சமிட்டிருக்கின்றார்கள் என்பதை மறுக்கமுடியாது. அதேவேளை அந்த வெளிச்சத்தைக் காண்பதற்கே செல்வாக்கு தேவைப்படுகின்றது என்பது ஒரு வருந்தத்தக்க உண்மையாகும்.

         தன்னை வெளிப்படுத்துவதற்கும் தனது திறமையை விளம்பரப்படுத்துவதற்கும் முனைந்து நிற்கும் மனிதர்கள் எப்படியாவது தமது நிறைவான திறமையையோ, சிறிதளவான திறமையையோ பெரிதாகப் பிரமாண்டமாகக் காட்டப் பிற உதவியை நாடி நிற்கின்றார்கள். அது மனிதனாகவும் இருக்கலாம், இலத்திரனியலாகவும் இருக்கலாம். இதன் மூலம் செல்வாக்கு பெருகுகின்றது. ஆனால், செல்வாக்கு நிறைந்த பிரபலங்கள் தங்கள் சொல்வாக்கை இழக்கும் போதுதான் தமது பெருமையை இழக்கின்றார்கள். சொல்வாக்கு நேர்மையாகவும், சுத்தமாகவும் இருந்தாலேயே செல்வாக்குப் பெருகுகின்றது. செல்வாக்குப் பெருக வேண்டும் என்பதற்காகவும் தமது புகழை மேலே இழுக்க வேண்டும் என்பதற்காகவும் தம் சொல்லில் செயலில் இழுக்கு ஏற்படும் படியாக நடந்து கொள்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

             செல்வாக்கு பணச்செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு, இலக்கியச் செல்வாக்கு, சமயச்செல்வாக்கு, சொற்களின் செல்வாக்கு என்பதுபோல்  செல்வாக்குகளை வகைப்படுத்தலாம். இதில் சொற்களின் செல்வாக்கே சொல்வாக்காக அமைகின்றது. இவையெல்லாம் மக்கள் செல்வாக்குகளே. எச்செல்வாக்காக இருந்தாலும் சொல் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. அரசியல்வாதி சொல்வதைச் செய்ய வெண்டும். இலக்கியவாதி எழுதியவாறு நடக்க வேண்டும். பணம் படைத்தவன் நடத்தையில் சொல்லில் சுத்தம் வைத்திருக்க வேண்டும். இச்சுத்தத்திலிருந்து தவறுகின்ற போது தன் செல்வாக்கை இழக்கின்றான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

            நாம் சொல்லுகின்ற சொற்களில் சில செல்வாக்குப் பெறுகின்றன. அல்லது பெற வைக்கின்றோம் உதாரணமாக நான் கூறிய சொல்லும் செயலும் ஒன்றானால் இவ்வுலகம் சொல்லும் உன் செயல் என்னும் என் வார்த்தைகளின் வழியே நான் நடப்பேனேயானால், அச்சொற்கள் எனக்குச் செல்வாக்கை ஏற்படுத்தும். அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை. உண்மையைச் சொல். அது உன் வார்த்தைகளைப் பாதுகாக்கும் என்று வள்ளலார் கூறிய சொல்வாக்கும், புத்தர் கூறிய பல வாக்குகளும் அவருக்குச் செல்வாக்காக அமைகின்றன. நாளும் பலர் மனங்களின் தூய்மைக்குத் துணையாக நிற்கின்றன.

            அறிஞர்கள் கூறுகின்ற வாக்குகளை நாம் தாரகமந்திரமாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவ்வாக்குகள், நாம் தவறுகின்ற போது எம்மனதைத் தட்டித் திருத்தும். உதாரணமாகத் திருக்குறள் கற்று வளர்ந்த எமக்கு ''எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு'' என்னும் வள்ளுவர் சொல்வாக்கு எம்மை தட்டி வழிநடத்துகின்றது அல்லவா! ''யார் சொன்னார் எவர் சொன்னார் என்றிருக்க வேண்டாம். எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப் பார்'' என்று சாக்ரடீஸ் சொல்வாக்கு எம்மைச் சிந்திக்க வைக்கிறது அல்லவா! எமக்கென்று தரமான ஒரு வாக்கை நாம் கொண்டிருக்கும் போது அவ்வாக்கை மீறுகின்ற மனப்பக்குவம் எமக்கு ஏற்படாது என்று நான் நினைக்கின்றேன்.

              ஆனால், நம்மைத் தேடிவரும் செல்வாக்கைக் காத்திருக்காது மனிதன் செல்வாக்கைத் தேடிப் போகின்ற போதுதான் வாழ்க்கையில் தன் நெறி பிறழ்வை அவன் காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. அவனுடைய விசுவாசம் சற்று தள்ளிநிற்கின்றது.

              இலக்கியச்செல்வாக்கை எடுத்துப் நோக்கும்போது ஒரு இலக்கியவாதி எத்தனை திறமை இருந்தும் செல்வாக்கிற்குக் கைகட்டி அவன் சேவகம் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. சரியான ஒரு இடத்தைப் பிடிப்பதற்கு அந்த ஊடகத்தின் அல்லது செல்வாக்குள்ள ஒரு மனிதனைத் தேடவேண்டிய அவசியம் தேவைப்படுகின்றது. உதாரணமாக சிறந்த ஒரு கவிஞன் தன் கவிதைகளை எத்தனையோ பத்திரிகைகளுக்கு அனுப்பியும் அவனது கவிதை நிராகரிக்கப்பட்டது. கவலையுற்ற அவ் இளைஞன், கண்ணதாசனிடம் தனது கவிதை ஒன்றைக் கொடுக்க அக்கவிதையை மேடையில் கண்ணதாசன் தனது கவிதை என்னும் பாங்கில் வாசித்தபோது அனைவரும் கைதட்டி ஆரவாரித்தார்களாம். அப்போது கண்ணதாசன் ''இக்கவிதையை நான் எழுதவில்லை. இந்த இளைஞனே எழுதினான்'' என்று அவ் இளைஞனை அடையாளம் காட்டினாராம். நல்ல ஒரு படைப்பாளி தன் திறமையைக் காட்ட செல்வாக்குள்ளோரை நாட வேண்டியுள்ளது. அப்படி அந்தச் செல்வாக்கைப் பெற்றுவிட்டால் தன் சொல்வாக்கில் அவன் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது.

                எதிர்காலம் எங்கள் கையில் அதனால், சொல்வாக்கைச் சுத்தமாக்குவோம் செல்வாக்கு எம்மைத் தேடிவரும்.

            6 கருத்துகள்:

  Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…
  இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
  Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

  சொல்வாக்கைச் சுத்தமாக்கினால்
  செல்வாக்குத் தானே தேடிவரும்
  உண்மை தானே!

  G.M Balasubramaniam சொன்னது…

  சொல்வாக்கு இருப்போரெல்லாம் செல்வாக்கு பெறுகின்றனரா

  திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

  குறள் இருக்க பயமேன்...!

  Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

  உண்மைதான். சொல்வாக்கு சுத்தமாகும்போது அனைத்தும் நிறைவேறும்.

  கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

  சொல்லைச் சுத்தமாக்குவோம்
  அருமை சகோதரியாரே

  என்னையே நானறியேன் நாவல்

  ஜேர்மனி வாழ் ஒரு பெண்ணின் உண்மைக் கதை மின்னூலாக