• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 2 நவம்பர், 2018

  வாழ்த்துதலும் தூற்றுதலும்


               
  வெறும் வார்த்தைகளின் சேர்க்கையே வாழ்த்து என்றால், அது புறப்பட்டு வரும் வாயின் உரிமையாளர் யார் என்பது முக்கியம். மனிதனை சாதாரணமான ஒரு பிறவியாக நாம் எடைபோட்டுவிட முடியாது. ''மானிடம் என்பது ஒரு புல்லோ'' என்று பாரதி கேட்டுள்ளார். தோல் போர்த்திய, உணர்வுகள்  பொருந்திய ஒரு இயந்திரமாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. கண்களை மூடி ஒரு முறை உங்கள் உள் உறுப்புக்களை மௌனமாகப் பாருங்கள். ஓய்வின்றி உங்களுக்குள் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அபூர்வ இயந்திரமாகத்தான் உங்களைப் பார்ப்பீர்கள். அந்த இயந்திரங்கள் உடலுக்குள் வெளியிடுகின்ற வாயுக்கள், ஹோமோன்கள், கழிவுகள், அனைத்தையும் தாங்கியபடி, அழகாக நாம் தோன்றினாலும் எமது தோலுக்கு மேலே இலட்சணக்கணக்கான அருவருக்கத்தக்க பக்றீரியாக்கள் நடமாடுவதை ஆiஉசழளஉழிந உதவியில்லாது நாம் காணமுடியாது. நம்மையே நாம் அறியாத போது எம்மை வாழ்த்துபவர் யாரென்று தெரியாமல் அந்த வாழ்த்தின் தன்மையை அறியமுடியுமா?

               வாழ்த்துவதும் தூற்றுதலும் உள்ளத்தின் வெளிப்பாடு ஆகும். ஷஷஉள்ளத்தில் ஒளி உண்டானால், வாக்கினில் ஒளி உண்டாகும்|| என்று பாரதி பாடியுள்ளார். அடிமனதில் இருந்து நல் வாழ்த்து வரவேண்டும். அது கேட்காமலே எமக்குக் கிடைக்க வேண்டும். எம்மைத் தேடி வரவேண்டும். அதுவே நல்வாழ்த்தாக அமையும். சிலர் பணம் கொடுத்து வாழ்த்து எழுதித் தரும்படிக் கேட்பவர்களும் உண்டு. அவ்வாறு பெறும் வாழ்த்துக்களால் எந்தவித பலனும் கிடைக்கப் போவதில்லை.

               வாழ்த்தும் போது எமக்கு ஏற்படும் மனநிலை அதனைக் கேட்கும் போதும் ஏற்படுகின்றது. இரண்டு மனங்களும் ஒருமித்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் சந்தர்ப்பமே இந்த வாழ்த்தும் சந்தர்ப்பம். உள்ளம் என்னும்போது அது எண்ணங்களின் உறைவிடம். ஒரு மனிதன் தன்னுடைய எண்ண அலைகளைக் கடத்தக் கூடிய ஆற்றல் பெற்றிருக்கின்றான். உடல் முழுவதும் பாய்ச்சப்படும் மின்சார அலைகளை நாம் பல இடங்களில் உணர்ந்திருக்கின்றோம். நகரும் படிகளில் கை வைக்கும் சிலருக்குத் திடீரென கைளில் மின்சாரம் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை உணர்ந்திருக்கின்றீர்கள். காந்தக் கதிர்விசை எம்மிடம் இருப்பதைச் சில சமயங்களில் எங்கள் தலைசீவும் சீப்பை எமது தலைமயிருக்கு மேலே பிடிக்கும் போது அத்தலைமயிரைச் சீப்பு கவர்ந்து இழுப்பதைக் கண்டிருப்பீர்கள். நாம் எதிர்பார்க்காமலே சிலரில் மிதமிஞ்சிய பாசம் ஏற்படுகின்றது, ஈர்ப்பு ஏற்படுகின்றது. சிறுகுழந்தைகளிடம் இதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இவையெல்லாம் உடலுக்குள் ஏற்படுகின்ற ஹோமோன்களாலும் எமது உடல் தனக்குள்ளே செயற்படுகின்ற செயற்பாடுகளாலுமே ஏற்படுகின்றது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
             
               Britain‘s Got Talent, Ameriaca’s  Got Talent, Germany Super Talent போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். அந்த நிகழ்ச்சிகளில் சிலர் Mind Reading செய்து காட்டுவதைப் பார்க்கின்றோம். மனக்கட்டுப்பாடு, மனவசியம் போன்றவற்றைச் சரியான முறையில் கற்றுத் தம் மனதை கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பவர்கள், மற்றவர்கள் மனதைப்படித்து விடுகின்றார்கள். அல்லது தம்முடைய மனதில் உள்ளவற்றை அவர்களுக்குச் செலுத்திவிடுகின்றார்கள். அப்போது தொடுகை முறை பயன்படுத்தப்படுகின்றது. அவர்களுடைய நெற்றிப்பொட்டிலே தொடுகின்ற போது ஒருவித மின்சாரம் பாய்ச்சப்படுவதாக பரிசோதனையின் போது அனுபவித்தவர்கள் கூறுகின்றார்கள். சுவாமிகள் செய்கின்ற கட்டிப்பிடி வைத்தியம் கூட இவ்வாறுதான் அமைகின்றது. அவர்கள் கைகளை தங்கள் கைகளுள் அழுத்துகின்ற போது எண்ண அலைகள் மற்றவருக்குப் பாய்ச்சப்படுகின்றது. இதனாலேயே வாழ்த்துபவர்கள் தலையிலே கைவைத்து தம்முடைய நல்ல எண்ணங்களை  வாழ்த்தப்படுபவர்களுக்குச் செலுத்துகின்றார்கள். 

                 இதனாலேயே மாதா, பிதா, குரு வாழ்த்தைப் பெறும்போது நம்பி அவர்கள் கால்களில் விழுகின்றோம. அவர்களும் கைகளால் தலையைத் தொட்டு வாழ்த்தி வாழ்த்தப்படுபவர்களை எழுப்புகின்றார்கள். ஏனென்றால், பெற்றோர் தம்முடைய பிள்ளைகள் கெட்டுப் போகட்டும் என்று ஒருநிமிடம் கூட நினைக்க மாட்டார்கள். நல் ஆசிரியர் தன்னுடைய மாணவன் வளர்ச்சியிலே தன் வளர்ச்சியைக் காண்பார். தனது மாணவன் உயர்வுக்குத் தன்னை அர்ப்பணிப்பார். அவரே உண்மையான ஆசிரியர். அதனால், இவ்வாழ்த்துக்கள் நாம் அச்சம் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டிய வாழ்த்துக்கள். ஆனால் வாழ்த்து என்பது பயங்கரமானது. பயப்பட்டுவிடாதீர்கள்! உண்மையில் வாழ்த்துதல் என்பது
  Elektronik Power
  போன்றது. மின் எம்மைத் தாக்காமல் இருப்பதற்கு றப்பரினால் சுற்றியிருப்பார்கள். அந்த றப்பர் இல்லாவிட்டால் எம்மை அழித்துவிடும். அதிலிருந்து எம்மை நாம் பாதுகாக்க வேண்டுமென்றால், அதை மிஞ்சிய சக்தி எமக்கு இருக்க வேண்டும். இதனாலேயே வாழ்த்தும் போது கூட எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பார்கள். மனமார வாழ்த்தும் சொற்களுக்கு இருக்கும் பயனே, மனம் எரிந்து சொல்லும் வார்த்தைகளுக்கும் இருக்கின்றன. திருமண வீடுகளில் அபசகுனமான வார்த்தைகள் காதில் கூட கேட்கக் கூடாது என்பார்கள்.

            வாழ்த்தலுக்கு இருக்கும் பயன்பாடு போன்றதே. தூற்றுதலுக்கு இருக்கும் பயன்பாடும் அமைகின்றது. வசைபாடல் என்பது அணுகுண்டுக்கு ஒப்பான ஆயுதமாகிறது. இலங்கையிலே நம் பெண்கள் மனம் உடைந்து மண்ணை அள்ளிவீசி அமங்கள வார்த்தைகளால் வசை பாடுவார்கள். அவர்கள் அள்ளிவீசுவது மண் அல்ல. அவர்கள் மனம் வெந்து சொல்லுகின்ற வார்த்தைகள். அவை அன்று நின்று கொன்றது. ஆனால், இன்று அன்றன்றே கொல்வதை நம் நேரிலே கண்டிருக்கின்றோம். இதுவே பழந்தமிழ் இலக்கியங்களில் அறம்பாடி அழித்தல் என்று சொல்வார்கள். வார்த்தை நஞ்சு போன்று ஒருவருடைய மனதை அரித்துச் சல்லடையாக்கி அவரை அழித்துவிடும் தன்மையானது. பழந்தமிழ் பாடல்களில் வசைபாடி மன்னர்களை அழித்த சம்பவங்கள் பாடல்கள் மூலம் அறிகின்றோம். பல்லவ மன்னன் 3ம் நந்திவர்மன் காலத்தில் பாடப்பட்ட நந்திக்கலம்பகம் என்னும் நூல் இதற்குச் சான்றாகும். நந்திவர்மன் தன் அண்ணனின் ஆட்சியை நயவஞ்சகமாக அபகரிக்க,  ஊரூராகப் பாடல்கள் பாடிச் சென்ற தமயன் பாடல்
   
  ''வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
   மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
  கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
  கற்பகம் அடைந்ததுன் தேகம்
  நானும் என் கலியும் எவ்விடம் புகு''

  என்னும் பாடலைக் கேட்டு தன்னுடைய தமையன் என்று அறியாத நந்திவர்மன் தன்னைப் போற்றிக் கலம்பகம் பாடும் படிக் கேட்க, அவரும் 100 பாடல்கள் பாட வேண்டும். 100 ஆவது பாடலில் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று சொல்லத் தமிழின் மேல் கொண்ட பற்றினால், அதற்குச் சம்மதித்த நந்திவர்மன், 100 பாடல்களை எரியும் பந்தலின் கீழ் இருந்து கேட்டு இறந்து போனான். இதுவே அறம்பாடி அழித்த சம்பவம். இதுபற்றி ''நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்'' என்னும் சோமெசர் முதுமொழி வெண்பா வரிகள் கூறுகின்றன.

  வசைபாடக் காளமேகம் என்று சிறப்புப் பெயர் காளமேகப் புலவருக்கு உண்டு. பரிசில்கள் பெறுவதற்காக மன்னர்களை மனமொத்து வாழ்த்தாது வாழ்த்துபவர்கள் கூட பணத்துக்காக வாழ்த்தி பெற்ற பேறை இரட்டையர்கள் ஒரு இடத்தில்

  'குன்றும் குழியும் குறுகி வழிநடந்து
  சென்று திரிவது என்றும் தீராதோ - ஒன்றும்
  கொடாதானைக் காவென்றும் கோவென்றும் கூறின்
  இடாதோ நமக்கிவ் இடர்''

  என்று பாடுகின்றார்கள். வாழ்த்தும் போது கூட உண்மைக்குப் புறம்பாக வாழ்த்தலாகாது. அதேபோல் தூற்றும் போது கூட உண்மைக்குப் புறம்பாகத் தூற்றக்கூடாது. இவை கொடுப்பவருக்கும் அச்சம், பெறுபவருக்கும் அச்சமாகவே படுகின்றன. எனவே ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும். சொல்லும் சொல் எம்மை வெல்ல வைக்கும் சொல்லாக அமைய வாழ்த்துபவர்கள் மனம் நல்மனமாக அமையட்டும்.    

  5 கருத்துகள்:

  Ramani S சொன்னது…

  ஆழ்ந்து சிந்தித்து அற்புதமாக எழுதியுள்ளீர்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  G.M Balasubramaniam சொன்னது…

  ஏன் நாம் சந்திக்கும்பல மனிதர்கள் முன்வாய் வழியே சிரித்தும் கடைவாய் வழியே கடித்தும் வாழ்த்துக் கூறுவதையும்பார்க்கிறோமே

  Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

  வாழ்த்துதலிலும் தூற்றுதலிலும் இவ்வளவு உள்ளனவா? வியப்பாக உள்ளது. இனி சற்றே யோசிக்கவேண்டும் போலுள்ளது.

  திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

  எடுத்துக்காட்டுகளோடு விளக்கம் மிகவும் அருமை...

  கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

  வாழ்த்தும் போது கூட உண்மைக்குப் புறம்பாக வாழ்த்தலாகாது. அதேபோல் தூற்றும் போது கூட உண்மைக்குப் புறம்பாகத் தூற்றக்கூடாது.

  அருமை
  அருமை
  நன்றி சகோதரியாரே

  சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்

  வார்த்தைக்குள் அரிதாரம் பூசி, அலங்காரம் போட்டு அற்புதமாக யாரும் பேசலாம். ஆசைகளை, எண்ணங்களை அடுக்கி வைத்து நடைமுறைப்படுத்த முயற்சியின...