• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 23 டிசம்பர், 2018

  திருமதி. கலாநிதி ஜீவகுமாரனின் தொப்புள் கொடி தந்த உற்சாக வரிகள்

  இதயம் நுழைந்து, உயிரில் கலந்து, உணர்வை உருக்கிய ஒரு நூலென்றால், அது தொப்புள் கொடிதான். புத்தகத்தை முடித்து, மடித்து வைத்த போது என் கண்கள் குளமாகித்தான் போனது. தாயைப் பிரிந்து வாழும் அத்தனை உறவுகளும் நினைத்து நினைத்து உருகும் வரிகள் கலாநிதியின் எழுத்தாற்றலுக்கு ஒரு வெற்றிக்கொடி அசைத்தது. புத்தகம் புதிய அகம் அதற்குள் நுழைந்து வருபவர்களுக்குப் புது அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்கு இந்தப் புதிய அகம் அத்தாட்சியாக அமைகின்றது.     
   
  பட்டங்களும், பதவிகளும், விளம்பரங்களும், பொய்யான புழுகு மூட்டைகளுக்கும் இடையில் உண்மையான எழுத்தாற்றல் வைரம் போல் ஜொலிக்கும் என்பதை இத்தொப்புள் கொடி படம் விரித்துக்காட்டியது. இந்தப் புத்தகத்திற்குப் பெறுமதி கூறமுடியாது என்பதனால்தானோ என்னவோ, திருமதி கலாநிதி அவர்கள் இலவசமாக இப்புத்தகத்தைக் கொடுத்திருந்தார்.
                  
  புத்தகத்தை வாசிப்பதற்காக விரித்தபோது பக்கங்களின் வரிகள் என் கண்களைப் பசைபோட்டு ஒட்டிவிட்டன. வரிக்கு வரி வந்து விழுந்த கவிநடையில் குப்பறவிழுந்து கால் தடக்கிப் போனேன். கவியோடு கதையை நகர்த்த கலாநிதி என் போன்ற வாசகர்களை முன்னமே படித்திருக்கின்றார் என்பது வெளிப்படையாகியது. தாயின் வயிற்றினுள் தொப்புள் கொடியைப் பற்றி வளர்ந்த குழந்தையில் ஆரம்பித்த கதையானது, தொப்புள் கொடி வெட்டப்பட்டு வெளியே வந்து பிள்ளை குரல் எடுக்கும் போது, கருவறை தந்த தாய் உயிர் நீத்த வரலாறு கூறும்போது தொப்புள்கொடி உறவு என்பது தாய் பிரிவின் போதுதான் நீங்குகிறது என்பதை உணரவைக்கின்றார். இவற்றுக்கு இடையில் பிறந்த கலாநிதியையும், அவர் சுற்றங்களையும் பேணி வளர்த்த தாய் தந்தையின் வரலாறும், சகோதர பாசங்களும், கலாசார படிமங்களும், பழக்கவழக்க பண்புகளும், டென்மார்க் தந்த அனுபவங்களும் சுவாரஸ்யமாக பன்னீர்க்குடம் முதல் தொப்புள்கொடி வரை விரிவாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

     எம் தோற்றங்கள் மாறும், தோல் சுருங்கிப் போகும், பற்களும் விழுந்து பொக்கைவாய் மிஞ்சும், தலைக்கு வெள்ளை அடிச்சு இயற்கை சிரிக்கும். ஆனாலும் இந்த முதுமையிலும் பாசம் மட்டும் வற்றாத ஆறாய் ஓடும். எத்தனை அனுபவ மொழிகள். அப்பா அம்மா இறந்தும் இறவாமல் என்னுள் உறைந்து செய்யும் மந்திர வித்தைகளை எப்படி எடுத்துரைப்பேன் என்னும் போது, ஆயிரம் தான் நம்மை வளப்படுத்தினாலும் மரபணுக்களின் தாக்கம் எம்முள் இருப்பதை மந்திரவித்தையாகக் காணுகின்றார். வாழ்க்கைப் பயணத்திலே எமக்குக் கிட்டாத உணவுவகைகளும் சரித்திரம் படைக்கும் எமது உணவுவகைகளும் கலாசாரச் சாட்சியங்களாகும். சிவத்தைப் பச்சை அரிசி உலையில் வடிக்கும் கஞ்சியில் தேங்காய்ப்பாலும் கலந்து காலையுணவாகும். இவ்வாறு இந்நூலில் முழுக்க முழுக்க வரலாற்றுச் சாசனங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
         
   வரிகளுக்குள் உறையும் போது சிறிது நேரம் நின்று என் வாழ்க்கை வரலாறுகளையும் தட்டிப் பார்;த்து அருகே இருக்கும் என் மகள் கணவனுக்கு என்னுடைய பழைய நிகழ்வுகளையும் படம்பிடித்துக் காட்டிவிட்டுத் தொடர்ந்திக்கிறேன். பிள்ளைக்குப் பால் கரைக்க முதல் அவன் பால் பவுடர் என் வாய்க்குள் கொஞ்சம் போய்விடும். என்பது போன்ற பல இடங்கள் எம்மைமீட்டிப்  பார்க்க வைக்கின்றன.
  21 சரக்குகள் சேகரித்து மண் பானையில் சீலைத்துண்டு கட்டி அதில் சரக்கு அரைத்து அதனை தேனில் குழைத்து அதனை பிள்ளைப் பெற்ற தாய்மாருக்கு சாப்பிடக் கொடுப்பார்கள். வேப்பம்பட்டை, இலந்தைப்பட்டை, நொச்சியிலை, பாவட்டை இலை, எல்லாம் கொண்டுவந்து அதனைப் பெரிய அண்டாவில் போட்டு அவித்து அதில் குளிக்க வைப்பார்கள். இவையெல்லாம் புலம்பெயர்ந்த எமக்குப் புத்தகத்திலே படித்துத் தெரிய வேண்டிய விடயங்களாகவே இருக்கின்றன. 
   
        தொப்புள் கொடியைப் பிடித்துத் தொங்கும் பிள்ளை. தன்னையும் தாயையும் பிரித்துவிடுவார்களோ என்னும் ஏக்கத்திலும் கையைத் தவற விட்டுவிட்டால் தொப்புள் கொடி கருப்பையுடன் ஒட்டிவிடும் என்ற அச்சத்திலும் அழுகின்ற காட்சியை அகக் கண்ணால் கண்டு களித்தேன்.

       
   தெரியாத விடயங்கள் பல தெரிந்து கொண்டேன். சிங்கர் மெசினைக் கண்டுபிடித்த சிங்கர் என்பவர் மெசின்  ஊசிக்கு  எங்கே ஓட்டை போடுவது என்பதைக் கனவில்தான் கண்டாராம்.
   
  இதுபோன்று இந்நூலில் முழுக்க முழுக்க பக்தி எம் உள்ளத்தில் பஜனை பாடுகிறது. பரந்து கிடக்கும் சுவைகளில் ஓரிரண்டை மட்டுமே தேர்ந்தெடுத்து விரல்களும் மனமும் தந்த வேகத்திலும் தாபத்திலும் உங்களுக்கு வெளிக்காட்டினேன்.
     
    இதை வாசித்துப் பாருங்கள் நிச்சயமாக உங்களுக்குள் ஒருவிதமான உணர்வு தோன்றும் என்பது நிச்சயம்.
  நன்றி திருமதி கலாநிதி ஜீவகுமாரன். தொப்புள்கொடி உறவு என்பது என் புத்தக அலுமாரியின் பொக்கிசம். புத்தகங்கள் பாரங்கள் அல்ல மூளையின் பக்கப் பிரிவுகளுக்குள்  அடுக்கப்பட்டிருக்கும் நினைவு ஏடுகள்


  1 கருத்து:

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...