• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வியாழன், 4 ஜூலை, 2019

  அட நல்ல தலையிடி  தலை என்ற ஒன்று இருந்தால் அதில் தலைவலி என்ற ஒன்றும் அவ்வப்போது வந்து போகும். எப்படி சுகம் என்று கேட்டால், அட நல்ல தலையிடி என்பார்கள். தலையில் நல்ல இடி கூட இருக்கிறதா? என்றால், நாள் முழுவதும் இடி முழக்கத்துடன் கொட்டோ கொட்டென்று கொட்டும் மழையை இன்று நல்ல மழை என்பதும், நச்சுப் பாம்பை நல்ல பாம்பு என்பதும், சுடுகாட்டை நன்காடு என்பதும்  நமது தமிழ் இலக்கணத்தில் மங்கலம் என்று அழைப்பார்கள். மங்கலம் இல்லாதததை மங்கலமாக அழைப்பதுவே வழக்கில் மங்கலம் எனப்படும்.  தலையிலே தாங்க முடியாத வலியைத் தரும் கொடுமையான வலியை நல்ல தலையிடி என்பதும் மங்கலமே. 

          எங்கள் உடலிலேயே தலைமைப்பீடம் மூளை. அந்த மூளையே எம்முடைய உடலை முழுமையாக இயக்குகின்றது. இந்த மூளையானது தலையில்தானே இருக்கின்றது. அப்படியானால், தலைவலி மூளைக்குள் வந்துவிட்டால்??? பயப்படத் தேவையே இல்லை. மூளைக்குத் தலைவலி வருவதே இல்லை. மூளையைத் தனியே எடுத்து ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டுப் பாருங்கள் சத்தமே இல்லாமல் அமைதியாக இருக்கும். ஏனென்றால் அதற்கு வலிக்காது. இத்தலைவலிக்குச் சுவாரஸ்யமான ஒரு நாட்டுப்பாடல் பாடப்படுகின்றது.

  தலையிடி காய்ச்சல் வந்தால் 
  தயவுடன் மருந்தைக் கேளாய்
  மலையிலுள்ள கல்லைத் தூக்கித் 
  தலையில் போட்டால் தலையிடி நின்றுவிடும்

  அப்பாடா…. தலையிடி மூளைக்கு இல்லை. அப்படியென்றால், எங்கே வருகின்றது? ஏன் வருகின்றது? மூளைக்கு வெளியே அதிகமான நரம்பு மண்டலங்கள் இருக்கின்றன. இவைதான் மூளைக்குச் செய்திகளை அனுப்பி மூளைக்குரிய செயற்பாடுகளைத் தூண்டுகின்றன. அதன்பின் மூளையிடும் கட்டளையை உள்வாங்கி எம்முடைய உடல் உறுப்புக்கள் தொழிற்படுகின்றன. எனவேதான் தலைமைப் பீடம் என்றேன். சும்மா இருக்கும் தலைமைப்பீடத்திற்கு சுற்ற வரவுள்ள உறுப்பினர்கள் சிந்தனையைத் தூண்டச் செய்து கட்டளையை பிறப்பிக்க வைக்கின்றார்கள். இதுபோலவே சுற்றவரவுள்ள நரம்புகளுக்கு அதிகமான இரத்தம் பாய்ச்சப்படுகின்ற போது நரம்புகள் வீக்கமடைகின்றன. அத்துடன் ஏனைய நரம்புகளையும், மூளையையும் அழுத்துகின்றன. “இங்க பாரப்பா எங்களுக்குத் தேவையில்லாமல் அதிகமான இரத்தம் எம்முடைய நரம்புகளுக்குள்ளே வருகின்றன என்று நரம்புகள் முறையீடு செய்ய உடனே மூளை வலியெனக் கண்டுபிடிக்கின்றது. 

            மனிதன் வாழ்க்கையில் பிரிக்கமுடியாதது நோய். ஆனால் மனிதனால், தவிர்க்கக் கூடியதும். தடுக்கக் கூடியதும் நோய்தான். அதிலே தலைவலி இருக்கின்றதே அது நிச்சயமாகத் தடுக்க வேண்டியதுதான். ஏனென்றால், தலைவலி வருகின்ற காரணங்களை அறிந்து அதை நாம் முழுமையாகத் தவிர்த்துவிட்டோமேயானால், மனமும் தலையும் சுகமாக இருக்கும் அல்லவா. உலகத்திலேயுள்ள மக்களில் 70 வீதமான மக்களுக்கு ஒரு தடவையாவது தலைவலி வந்திருக்கும் என்பது உண்மை. இவற்றின் வகைகளை நாம் பார்த்தால் 200 க்கு மேல் இருக்குமாம். இவற்றில் 5 வீதமான தலைவலியே உடம்பில் ஆபத்தான நோய்களுக்கான காரணியாக இருக்கும். ஏனையவை சும்மா எம்மை வாழ்க்கையில் வதைத்துப் பார்க்கும் தலைவலிகளே என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. 

           வாழ்க்கையை நிம்மதியாகவும், நோய் இன்றியும் செலுத்த வேண்டும் என்றால் எமக்குத் தலைவலி தருகின்ற விடயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பது உண்மை. இரவில் அதிகநேரம் விழித்திருந்து கணனி முன் வேலை செய்கின்றபோது கண்ணுக்கு சுமை அதிகரித்து தலைவலியைக் கொண்டுவருகின்றது. இதனைப் பலர் அறிந்திருப்பீர்கள். அதிகமான சத்தத்தைத் தொடர்ந்து கேட்பதனாலும், அசுத்தக் காற்றைச் சுவாசிப்பதனாலும், எமது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாமையான காரியங்களைச் செய்வதனாலும் தலைவலி வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இவ்வாறு சின்னச்சின்ன பல காரணங்கள் இருக்கின்ற போது இவற்றுக்கான தீர்வை நாம் காண்பதற்கு எமக்கு நாமே கேள்விகளைக் கேட்க வேண்டியதும், எம்மை நாம் அவதானிக்க வேண்டியதும் அவசியம். எந்த இடத்தில் இருந்து தலைவலி வருகின்றது. எவ்வாறான சந்தர்ப்பங்களில் தலைவலி வருகின்றது தலைவலி கொடுப்பவர் யார்? எவ்வாறான சந்தர்ப்பங்களில் தலைவலி ஏற்படுகின்றது? என்பதனை அவதானமாக அவதானிக்க வேண்டும். 

  மனஅழுத்தம் தலைவலிக்கு முக்கிய காரணமாகப்படுகின்றது. மனஅழுத்தம் எவ்வாறு ஏற்படுகின்றது. சிலர் பேசுகின்ற போது நேரம் அதிகரிக்க அதிகரிக்க தலைக்குள் ஏதோ செய்வது போல் இருக்கும். அவர் பேச்சை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், நாம் அவர் பேச்சை நிறுத்த வேண்டும். இவை இரண்டும் நடக்கவில்லை என்றால் எமது தலை வலிக்கத்  தொடங்கிவிடும். சிலர் 5 நிமிடம் சொல்ல வேண்டிய விடயத்தை அரைமணி நேரம் சொல்வார்கள். அப்படியே வாய்க்குக் கட்டுப் போட்டுவிட வேண்டும் போல் இருக்கும். குறைவில்லாத சில சொற்களாலே கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே, பல சொற்களைச் சொல்வதற்கு எப்போதும் விரும்புவார்கள், மேன்மையும் கெடுதியும் பேச்சினாலேயே வருவதனால், சொல்லிலே சோர்வு உண்டாகாத படி ஒருவன் தன்னைக் காத்துப் பேணி வருதல் வேண்டும் என்று வள்ளுவர் கூறியிருக்கின்றார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படும் மனஅழுத்தத்தைத் தவிர்க்கும் போது தலைவலிக்கு நாம் தீர்வு கண்டுவிடுவோம். 

  எமக்குப் பிடிக்காத காரியங்களை பிறர் வற்புறுத்தலுக்கு நாம் செய்கின்ற போது  எம்மனதுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு தலைவலியைத் தரும். இவ்வாறான தலைவலியை நாம் தவிர்ப்பது இலகுவாக அமைகின்றது. வெளிப்படையாக அவ்விடயத்திலிருந்து விலகிக் கொள்வது எம்மை நாம் பாதுகாக்கும் காரணியாக அமைகின்றது.

  இதைவிட மனிதர்களின் கண்களுக்கு நன்மை விளைவிக்கும் சக்தியும் உண்டு. தீமை விளைவிக்கும் சக்தியும் உண்டு. அதனாலேயே “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பார்கள். இதற்கு கண்ணூறு கழித்தல் செய்வார்கள். கண்ணினால் வருகின்ற ஊறு கழிக்கப்படுதல் என்பதே அதன் அர்த்தம். இதுபோலவே நாவூறும் அமைகின்றது. குழந்தைகளுக்கு பெரிய கறுப்புப் பொட்டு வைத்து பிறர் கண்கள் பொட்டிலே படிய வைத்துவிடுவார்கள். நம்மோடு பழகுபவர்கள் எல்லோரும் நல்ல மனதுடன் பழகுவார்கள் என்று சொல்ல முடியாது பொறாமை வெறுப்புடன் பழகுபவர்களும் எதிர்மறை எண்ணப் போக்குள்ளவர்களும் உண்டு. அதனால், எண்ணங்களில் நல்ல மனிதர்களைத்தேடிப் பழகுவதும் எம்முடைய தலைவலியை நாம் தவிர்க்க எடுக்கும் முயற்சியாகப்படுகின்றது. 

  எனவே அவதானம் என்பது எமது வாழ்க்கையில் மட்டுமல்ல, எம்மைச் சுற்றியுள்ள சுற்றுச் சூழலிலும், சுற்றத்தாரிலும் என்பதை அறிந்து நடக்க வேண்டியது அவசியம். 

  ஜூலை மாத வெற்றிமணி பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய கட்டுரை.
  சனி, 22 ஜூன், 2019

  தவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை

         


  உலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்பதற்காக கையில் ஒரு மெல்லிய இழையிலான விசிறி கொண்டு நிலத்தில் விசிறி நடப்பார்களாம். ஆனால், அவ்விசிறியின் காற்றினால், எத்தனை சிறிய பூச்சிகள் இறந்தன என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். மனிதர்கள் தம்மை அறியாமல் ஏதோ ஒரு இடத்தில் தவறு செய்தே இருப்பார்கள். உணவுக்காகவோ, தொழிலுக்காகவோ, தேவைக்காகவோ தவறுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இது தவிர்க்க முடியாமலும் போகின்றன. 

  1972 ஆம் ஆண்டு ஒரு விமானம் திடீரெனக் காணாமல் போனது. இவ்விமானத்தை யாராலும் தேடிக் கண்டு பிடிக்க முடியாமல் போனது. 90 நாட்களின் பின்பு சில மனிதர்களுடன் ஒரு பனி படர்ந்த, எந்தவித வெளித் தொடர்புகளையும் ஏற்படுத்த முடியாத ஒரு மலைப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விமானத்தில் பிரயாணம் செய்தவர்கள் பலர் இறந்துவிட மீதமுள்ளவர்கள் சிலரே உயிரோடு இருந்தார்கள். சூழவுள்ள பகுதிகளில் பனி படர்ந்த மலைப்பிரதேசங்களே இருந்த காரணத்தினால், உயிர் தப்பியவர்கள் வாழ்வதற்கு உணவை எங்கேயிருந்து பெற்றார்கள் என்று கேட்டபோது, இருந்த உணவெல்லாம் தீர்ந்து போக பசியால் ஒருவரை ஒருவர் கொன்று தின்றே வாழ்ந்திருக்கின்றார்கள். விமானத்தில் பயணம் செய்தவர்கள் அக்காலத்தில் படித்தவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆளுக்காள் சண்டை செய்து கொல்வதை விட்டு எல்லோருடைய பெயரையும் சீட்டில் எழுதி, அதில் 3 சீட்டுகளை எடுத்து அச்சீட்டில் பெயர் உள்ளவர்களை கொன்று உண்டிருக்கின்றார்கள். மனிதன் தன் தேவைக்காக எந்தளவு கேவலமான நிலைக்கும் போவான் என்பதற்கு இது சான்றாக அமைகின்றது. இவ்வாறான மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் கேவலமானவர்கள் இல்லை. சந்தர்ப்பம் சூழ்நிலையானது மனிதனை இவ்வாறான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதே உண்மை.   ஒரு அறையில் நல்ல கல்வி கற்ற, பண்பாளர்கள் மூவரை அடைத்து வைத்து அவர்களுக்கு 3 வேளை 3 சிறிய தட்டில் ஒரு வாரம் உணவு வழங்கப்பட்டது. அடுத்த வாரம் 2 தட்டாக மாற்றப்பட்டது. அதன் அடுத்த வாரம் 1 தட்டாக மாற்றப்பட்டது. ஒரு வேளை உணவே ஒரு தட்டில் வழங்கப்பட்டது. சிறிது சிறிதாக உணவு குறைக்கப்பட அந்த அறையில் ஒரு பிரளயமே ஏற்பட்டது. ஒவ்வொருவரும் பசி தாங்கமுடியாது ஆளையாள் உணவுக்காகச் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் தாறுமாறாக தாக்கத் தொடங்கினர். பசி வந்தால் பத்தும் பறந்து போம் என்பார்கள். அந்த பத்தில் பண்பு கூட பறந்து போய்விடும். சந்தர்ப்பம் சூழ்நிலை மனிதர்களை பண்பற்றவர்களாக மாற்றிவிடும். ஆனால், இதையும் மீறி மனவஞ்சம் கொண்டவர்களும் இருக்கின்றார்கள். எனது பாட்டி எனது தாயார் இறந்தபின் நான் உயிர் வாழ மாட்டேன்  என்று பிடிவாதமாக இருந்து வாயில் ஒரு பிடிச் சோறு கூட உண்ணாது, அடுத்த 3 வாரங்களில் உயிர்நீத்தார். எனவே சந்தர்ப்பம் சூழ்நிலையே மனிதனை பக்குவத்திற்கும் கொண்டு செல்லுகின்றது. படுகுழியிலும் கொண்டு விழுத்துகின்றது. 

        இதற்கு மனிதனுடைய மனதை ஓரளவிற்கு பக்குவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால், அவன் பட்டுத் திருந்த வேண்டும். அல்லது பண்பட்டுத் திருந்த வேண்டும். தனக்குத்தானே பல கேள்விகளை கேட்க வேண்டும். தன்னுடைய தவறுகளை உணர வேண்டும். வாசிப்பு மனிதனை சிந்திக்க வைக்கும். இதற்கு ஒரு உதாரணம் ஆனி மாத வெற்றிமணி பத்திரிகையில் ஊடகவியலாளர் செல்வராஜா அவர்களுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். அமெரிக்காவின்  Northern Verginia     என்னும் மாநிலத்தின் ஆஷ்பேர்ண் என்னும் கிராமத்திலே இருந்த கறுப்பு இனத்தவர்களின் ஒரு சிறிய பள்ளியில், கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான வார்த்தைகளை 16 -17 வயதுடைய 5 வெள்ளை இனச் சிறுவர்கள் செப்ரெம்பர் 2016 இல் பள்ளிச் சுவர்களில் இரவோடிரவாக எழுதியிருந்தனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை விசாரித்த பெண் நீதிபதி Alejandra Rueda என்பவர் வழங்கிய வித்தியாசமான தீர்ப்பானது வாசிப்பின் மகத்துவத்தை உலகத்திற்கு உணர்த்துவதாக இருந்தது. 


             இந்த ஐவருக்கும் 35 ஆங்கில நூல்களைக் கொடுத்து அவற்றில் ஒவ்வொருவரும் 12 நூல்களைத் தெரிவுசெய்து ஆழமாக வாசித்து, அவ் ஒவ்வொரு நூலின் சாராம்சத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு வருடத்தில் 12 ஆய்வுகளைச் செய்து அந்நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தீவிர தண்டனையை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று தீர்ப்பளித்தார். இது இளயோர் குற்றவியல் கோர்வையில் இயற்பண்பு சார்ந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  இங்கு நாம் ஒரு முக்கியமான கருதுகோளை மனதில் கொள்ள வேண்டும். தண்டனைகள் மனிதன் தன்னுடைய தவறுகளை உணர்ந்து திருந்துவதற்காகவே வழங்கப்படுகின்றன. தண்டிக்கப்படல் ஒரு பழிவாங்களாக இருக்கக் கூடாது. ஆதாம் ஏவாள் அப்பிள் அருந்தியது தவறுகள் செய்யத் தூண்டியது எனனும் போது, அந்தத் தவறை நடக்கத் தூண்டும் சந்தர்ப்பததை வழங்கியதுடன் ஆதாம் ஏவாள் மனதை மாற்ற முனையாத கடவுளையே நான் கேள்வி கேட்பேன். இது வாதத்துக்குரிய விடயமானாலும், தவறுகள் செய்பவர்களே மனிதர்கள். 

  Alejandra Rueda வழங்கிய தீர்ப்பை பலர் எதிர்த்தாலும் கறுப்பினத்தவர்களுக்கு இவர் எதிரானவர். வெள்ளை இனப் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காகவே இவ்வாறான தீர்ப்பை வழங்கியிருக்கின்றார் என்று கறுப்பினத்தவர்கள் கொதித்தெழுந்தாலும், அப்பெண்மணியே உண்மையில் நீதிக்கு அரசி என்பதை அவருடைய தீர்ப்பானது வெளிக்கொண்டுவந்திருந்தது. ஓராண்டின் பின் இவ் ஐவரையும் அழைத்து அவர்களுடைய ஆய்வுகளை நீதிமன்றம் பெற்றுக் கொண்டது. அவற்றைப் பரீசீலனை செய்வதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. 

  இந்த ஐவரையும் பீ.பீ.சி தொலைக்காட்சி பேட்டி கண்டபோது ஒவ்வொருவரும் தமது அனுபவங்களைக் கூறியிருந்தார்கள். அவர்களின் பதில்களிலிருந்து தெரிய வந்தது. இந்நிகழ்ச்சியின் பின் 2 ஆண்டுகள் தாம் எந்தவித குற்றச் செயல்களுக்கும் உட்படவில்லை. அவர்கள் வாசித்த நூல்கள் அடிப்படைவாதம், இனவாதம், என்றால் என்ன? என்பதை அறிந்திருந்தார்கள். ஜேர்மனியில் நாஜிகள் யூதர்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைகள் பற்றிய தன்மைகள், பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெற்றிருந்தார்கள். தென்ஆபிரிக்காவின் இனவாதம் பற்றி  எதுவுமே தெரியாது. ஆனால், அலன்பட்டன் அவர்களின் நூல்களே அதுபற்றிய தெளிவை ஏற்படுத்தின. கறுப்பு, வெள்ளை இனம் என்ற பாகுபாட்டிற்கு மேலாக மனித இனம் என்ற ஒன்று உள்ளது என்பதைப் புரிந்து கொண்டோம். நாம் கற்ற கல்வி இது பற்றிய விளக்கத்தை எமக்குத் தரவில்லை. எப்படி எம்மால், நிறத்தையும் இனத்தையும் வைத்து சக மாணவர்களை ஒதுக்கி வைக்க முடிந்தது. லியோன் ஊரிஸ் எழுதிய எக்சோடஸ் என்னும் நூலை வாசிக்கும் வரை இஸ்ரேல் என்ற நாடு பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. இவ்வாறு ஒவ்வொருவரும் தாம் வாசித்த 12 புத்கங்களின் மூலம் தாம் பெற்ற அறிவை விளக்கியிருந்தார்கள். 

  நீதியரசர்  Alejandra Rueda வழங்கிய தீர்ப்பானது குற்றவாளிகளை நல்ல மனிதர்களாக மாற்றியது. தரமான படைப்புக்கள் மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். ஒரு நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் படைப்புக்களின் முக்கியத்துவமும், படைப்பாளிகளின் அவசியமும் அறியப்படும். வாசிப்பது மட்டுமல்லாமல் ஆழமாக அவற்றை உள்வாங்கி எம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வோம். 

  நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறிய மாட்டான் காட்டில் நன்மரம் என்றார் ஒளவாப்பிராட்டி.


  வெள்ளி, 21 ஜூன், 2019

  உயிரினில் பாதி, மனிதரில் எத்தனை நிறங்கள்

                     உயிரினில் பாதி, மனிதரில் எத்தனை நிறங்கள் 

  இரு நூல்கள் ஒரு மேடையில் ஜேர்மனி எழுத்தாளர் சங்க அனுசரணையுடன் வெளியீடு  16.06.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.30 மணியளவில் திரு.திருமதி.சிவராஜா தம்பதிகளின் உயிரினில் பாதி(கவிதை), மனிதரில் எத்தனை நிறங்கள் (சொல்லோவியம்) என்னும் இரண்டு நூல்கள் Internationales Zentrum, Flachsmarkt – 15, 47051 Duisburg என்னும் இடத்தில் மிகச் சிறப்பாக வெளியிடப்பட்டது. இந்நூலுக்கான வெளியீட்டு அனுசரணையை ஜேர்மனி தமிழ் எழுத்தாளர்  சங்கம் வழங்கியிருந்தது. 


            எழுத்தாளரும், மண்சஞ்சிகையின் ஆசிரியருமான திரு.வ.சிவராஜா மனிதரில் எத்தனை நிறங்கள் என்னும் சொல்லோவியத்தையும், திருமதி. இராஜேஸ்வரி சிவராஜா உயிரினில் பாதி என்னும் கவிதை நூலையும் எழுதியிருந்தார்கள். இந்நிகழ்ச்சி அனைத்தையும் அறிவிப்பாளரும், நடன ஆசிரியையும், ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினருமான திருமதி. சாந்தினி துரைரங்கம் தொகுத்து வழங்கியிருந்தார். 


          மங்கள விளக்கேற்றல், மௌனஅஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தமிழ்மொழி வாழ்த்துப்பாடலை சங்கீத ஆசிரியை கலைவாணி ஏகானந்தராஜாவும் அவர் மாணவியும் பாடினார்கள். வரவேற்பு நடனம் திருமதி.சாந்தினி துரைரங்கத்தின் மாணவிகள் வழங்கினார்கள். வரவேற்புரை திரு.திருமதி.சிவராசா தம்பதிகளின் மகளான திருமதி. சிவதர்சனி பிரங்ளினால் வழங்கப்பட்டது. 


          அதனைத் தொடர்ந்து எசன் தமிழ்மொழிச்சேவை கலாசார மன்ற மாணவிகள் வரவேற்பு நடனத்தை வழங்கினர். அதனைத் தொடர்ந்து ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் தலைமையுரை வழங்கினார்.   அதன்பின் நூல் வெளியீடு இடம்பெற்றது. திருமதி.இராஜேஸ்வரி சிவராசா எழுதிய உயிரினில் பாதி என்னும் கவிதை நூல் செல்வன் பிரணவன் யோகராசாவினால் வெளியீடு செய்து வைக்கப்பட அதன் முதல் பிரதியினை எசன் தமிழ்மொழிச் சேவை கலாசார மன்ற தலைவரும், தமிழார்வலரும், தொழிலதிபருமான திரு. சிவஅருள் பெற்றுக் கொண்டார். 

  வ.சிவராசா அவர்களால் எழுதப்பட்ட மனிதரில் எத்தனை நிறங்கள் என்னும் நூலை செல்வன் பிரணவன் யோகராசா வெளியீடு செய்து வைக்க முதல் பிரதியை மொழிபெயர்ப்பாளரும் கௌரவ விருந்தினருமாகக் கலந்து கொண்ட திரு.ஐ.இரகுநாதன் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரின்கௌரவ விருந்தினர் உரை இடம்பெற்றது. 


            உயிரினில் பாதி என்னும் கவிதை நூலைத் தமிழாசிரியர், கவிதாயினி நகுலா சிவநாதன் விமர்சனம் செய்தார். அடுத்த நிகழ்வாக எசன் தமிழ் கலாசார மன்ற மாணவியின் தனிநடனம் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து மனிதரில் எத்தனை நிறங்கள் என்னும் நூலை எழுத்தாளரும், தமிழார்வலருமான செல்வன் சி.சிவவிநோபன் விமர்சனம் செய்தார்.  விமர்சன உரைகளை அடுத்து நூல்களைப் பார்வையாளர்கள் பெற்றுக் கொண்டனர். அதனை அடுத்து ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை தலைவர் திரு.பொ.சிறிஜீவகன் சிறப்புரையாற்றினார். ஜேர்மனி தமிழ்கல்விச் சேவையினால், திருமதி. இராஜேஸ்வரி சிவராசா பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். 
  இந்நிகழ்வைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்த வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் கலாநிதி.மு.க.சு. சிவகுமாரன் அவர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து திருமதி. கலைநிதி சபேசனுடைய மாணவிகளின் நடனம் இடம்பெற்றது. 

  அதன்பின் பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பிக்க சுவிஸில் இருந்து வருகை தந்திருந்த கல்வியியல் முதுமாணிப்பட்டதாரியும், ஜெனீவா கலை இலக்கியப் பேரவைத் தலைவருமான க. அருந்தவராசா அவர்கள் பிரதம விருந்தினர் உரையை வழங்கினார்.  அதனை அடுத்து ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளரும், எழுத்தாளருமான திருமதி.சந்திரகௌரி சிவபாலன்(கௌசி), தமிழ் ஆர்வலரும், சமூக செயற்பாட்டாளருமான திரு.இ.இரமேஸ்வரன், ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.குகதாசன், சங்கீத ஆசிரியை திருமதி.கலைவாணி ஏகானந்தராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.                


  அதனை அடுத்து திருமதி.இராஜேஸ்வரி சிவராசா, திரு.வ.சிவராசா ஆகியோரின் ஏற்புரை இடம்பெற்றது. 

   


  பிற்பகல் 18.00 மணியளவில் நூல்வெளியீட்டு நிகழ்வுகள் சிறப்பாக முடிவுற்றது. வருகை தந்திருந்த அனைவருக்கும் திரு.திருமதி.சிவராசா தம்பதிகளினால் இராப்போசனம் அன்புடன் பகிர்ந்தளிக்கப்பட மனநிறைவுடன் அனைவரும் விடைபெற்றனர். 

  வெள்ளி, 14 ஜூன், 2019

  பல முதல்களின் முதல்வர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் வெற்றிமணிக்கு 25 வயது  பல முதல்களின் முதல்வராகிய வெற்றிமணியின் ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் B.F.A அவர்களின் வாழ்நாள் சேவைகளை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கும் நாள். 

  செய்யும் தொழிலும் செயலும் திறம்பட வேண்டுமானால், செய்பவர் திறமை திறம்பட இருக்க வேண்டியது அவசியம். கருவி அற்புதமானால், கருத்தா கருவிக்கு ஆற்றிய அர்ப்பணிப்பும் போற்றப்படவேண்டியதும் புரியப்பட வேண்டியதுமாகும். படைப்பாளியின் திறமை அறியப்பட்டாலேயே அந்தப் படைப்பின் வெற்றி புரியப்படும் வெற்றிமணியான விபரமும் புரியும். 

                     வெற்றிமணி பத்திரிகை தாயகத்தில் ஆரம்பித்து 69 வருடங்கள் ஆகின்றன. அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1950 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்த வெற்றிமணி அவர் மறைவின் பின் நின்று போக அவருடைய மகன் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் மீண்டும் தாயகத்தில் வெற்றிமணி மாணவர் காலாண்டு இதழாக இன்றும் வெளியீடு செய்து கொண்டு வருகின்றார். தாயகத்தில் ஏற்பட்ட சில பல  சூழ்நிலைகள் காரணமாக தாமதங்கள் அங்கு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

  ஆனால், ஐரோப்பாவில் இவர் புலம்பெயர்ந்து தன்னுடைய வாழ்க்கையைத் தளம் அமைத்த பின்  மீண்டும் வெற்றிமணி பத்திரிகையை யேர்மனியில் ஆரம்பித்து இம்மாதம் (ஆனிமாதம் 1994 - ஆனிமாதம் 2019) 25 வருட வெற்றி காண்கின்றார். தற்போது இலண்டன், சுவிஸ், யேர்மனி ஆகிய நாடுகளில் பலரும் தேடும் சிறப்புப் பெற்ற இலவச வண்ணப் பத்திரிகையாக இப்பத்திரிகை வெளிவருகின்றது. இப்பத்திரிகை எவ்வாறு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டது என்னும் வரலாற்றை இத்தருணத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம். 

  கணனியுகம் பிரபலமடையாத காலத்தில் வெற்றிமணி பத்திரிகைக்கு படைப்புக்கள் ஆசிரியரிடம் கையெழுத்துப் பிரதியாக வந்தடையும்.  அப்போது அத்தனை கட்டுரைகளையும் வாசித்து தமிழில் அச்சடித்து (அக்காலத்தில் venus fonts மாத்திரமே இருந்தது) அக்கட்டுரையை அளவாக வெட்டி வெட்டி ஒட்டி, அவற்றிற்குரிய படங்களுக்குரிய இடத்தை மட்டையில் நீல மையால் கோடு போட்டு நேராக ஒட்டி விளம்பரத்துக்கு சதுரப்பெட்டி போலப் போடுகின்ற வசதிகள் அக்காலத்தில் கணனியில் இல்லாத காரணத்தினால், சதுரம் கீறியே அச்சகத்திற்குக் கொடுக்க வேண்டும்.  படங்களை வெட்டி ஒட்டிப் பின் கழட்டியே அச்சகத்திற்குக் கொடுக்க வேண்டியது அவசியம். தனியே நம்பரிட்டுக் கொடுக்கப்பட்ட படங்களை அவ்வவ் இடங்களில் அச்சகத்தினர் சேர்ப்பார்கள். இவ்வாறு பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஆரம்பத்தில் ஒரு வருடகாலமாக கறுப்பு வெள்ளை வண்ணத்தில் வெற்றிமணி வெளிவந்தது. பின்னரே வெற்றிமணி வண்ணக்கலவையில் பிரகாசிக்கத் தொடங்கியது. 

  இத்தனை கடினத்தின் மத்தியில் ஆரம்ப காலத்தில் வெளியான வெற்றிமணியை வளர்த்தெடுத்து இன்றைய நவீன காலத்திற்குத் தன்னை இசைவாக்கம் அடைய வைத்து கண்ணையும் கருத்தையும் கவர வைக்கும் வெற்றிமணியாகத் திகழ்வதற்கு வழி செய்த வெற்றிமணியின் ஆசிரியர் கலாநிதி. மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் Number One சாதனைகளை சற்று சீர்தூக்கிப் பார்ப்போம்.

  1. நுண்கலை பட்டம் B.F.A

  இலங்கையில் முதன் முதலாக நுண்கலையில் கலைமாணி பட்டத்தை (Bachelor of Fine Arts) களனிப் பல்கலைக்கழகத்தில் 1979 ஆம் ஆண்டு பெற்ற முதல் மூன்று தமிழர்களில் மு.க.சு.சிவகுமாரன் அவர்களும் உள்ளார்.(சிவகுமாரன், கே.கே.ராஜா. பவானி) 

  2. சுதந்திரச்சிலை 

  யேர்மனியில் முதன் முதலாக நாம் ஒன்றும் பணத்திற்காகக் கைநீட்டி யேர்மனியில் தஞ்சம் புகுந்தவர்கள் இல்லை. எம் இனத்தின் சுதந்திரத்தை விரும்பிப் போராடி உயிர் பிழைக்கத் தஞ்சம் புகுந்தவர்களே நாம் என்பதை யேர்மனியர்களுக்குப் புரிய வைப்பதற்காகத் தமிழ் சுதந்திரச் சிலையை Ludwig Stadt என்னும் இடத்தில், தாம் வாழ்ந்த அகதிகள் விடுதியில் அமைத்துக் காட்டி மார்பு தட்டிக் கொண்ட முதல் தமிழன்.

  3.  Stadt  சிற்பம் 

  யேர்மனி Ludwigstadte என்னும் நகரத்தில் அந்த நகரத்துக்குரிய சின்னத்தை சிற்பமாக வடிவமைத்துக் கொடுத்து தமிழருக்குப் பெரும் புகழைச் சம்பாதித்துக் கொடுத்த முதல் தமிழன்.

  4. யேர்மனி ஓவிய சிற்பக் கண்காட்சி   (Art and Sclputure  Exibition )

  யேர்மனியிலுள்ள Dortmund என்னும் நகரத்தில் 1990 இல் முதன் முதலாக வண்ணக் கலவைகளுடன் சித்திர சிற்பக் கண்காட்சியை நடத்திய முதல் தமிழன்

  5. இளையவர் இசையில் வெளிவந்த மெல்லிசை இறுவெட்டு வெளியீடு

  யேர்மனியிலுள்ள Lüdenscheid  நகரத்தில் 2000 ஆம் ஆண்டு    முதன்முதலாக இளைஞனின் (20 வயது நிரம்பிய சஞ்ஜீவன் சிவகுமாரன்) இசையமைப்பில் (முறைப்படி சட்டவிதிகளுக்கு அமைந்தது) சிறந்த தொழில்நுட்பத்துடன் தமிழில் மெல்லிசை இறுவெட்டு தயாரித்து வெளியீடு செய்ததுடன், பால்குடி மறந்த கையோடு, கெட்டபையன், பைரவன், மாயவன், சிவமயம் போன்ற   10 க்கும் மேற்பட்ட இசை இறுவெட்டுக்கள் யேர்மனியில் வெளியீடு செய்த முதல் தமிழன்.  

  6.ஆன்மீக சஞ்சிகை

  யேர்மனியில் முதன்முதலாக சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் பெயர் சூட்டிய  சிவத்தமிழ் என்னும் ஆன்மீக சஞ்சிகையை 2004 ஆம் ஆண்டு Dielenberg  என்னும் இடத்தில் வெளியீடு செய்து வைத்தது மட்டுமல்லாமல் 15 ஆவது ஆண்டு சிறப்பு மலரையும் ஸ்வெற்றா நகரத்தில் வெளியீடு செய்து வைத்த முதல் தமிழன் 

  7. கனடிய தமிழர் தகவல் ஐரோப்பிய விருது.

  கனடா தமிழர் தகவல் நிறுவனத்தினரால் 1999 ம் ஆண்டு கனடிய தமிழர் தகவல் ஐரோப்பிய விருதை ஜேர்மனியிலிருந்து சென்று பெற்றுக்கொண்ட முதல் தமிழன். கனடாவிலே வெற்றிமணி பத்திரிகை 1995 முதல் 2000 ஆண்டுவரை வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  8. பரதக்கலை சஞ்சிகை

  இலங்கையிலே பரதக்கலையை முன்னிறுத்தி வந்த முதல் சஞ்சிகையாகிய அபிநயா என்னும் சஞ்சிகையை வெளியீடு செய்த முதல் தமிழன்.

  9. கோடைவிடுமுறை இதழ் ஓவியா 

  யேர்மனியில் 1995 ஆம் ஆண்டு வெற்றிமணியின் கோடைவிடுமுறை கால இதழாக ஓவியா என்னும் சஞ்சிகையை முதன் முதலாக தமிழில் வண்ணப் புத்தகமாக வெளியீடு செய்து வைத்த முதல் தமிழன்.

  10. யேர்மனியில் தமிழ் வெளியீட்டகம் 

  யேர்மனியிலே தன்னுடையதும் பிறருடையதுமான 30க்கும் மேற்பட்ட  புத்தகங்களை தானே வடிவமைத்து தன்னுடைய செலவில் அச்சடித்து வெற்றிமணி வெளியீடாக வெளியீடும் செய்து வைத்தும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்த முதல் தமிழன்.

  இந்நூல்களில் நான் தேடிப்பெற்ற சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன். அவ் அனைத்து புத்தகங்களும் 1000 பிரதிகள் வெளிவந்ததுடன் அத்தனையும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.  

  1. புதிய வடிவங்கள் - கண்ணா
  2. எழுத்தாளன் கவிஞர் வி.கந்தவனம்
  3. ஓவியா - வெற்றிமணி வெளியீடு
  4. இடைவெளி - மாதவி  
  5. காதல் கிராமத்தின் சாரளம் - மாதவி
  6. அது என்பது இதுவா – மாதவி
  7. மாறன் மணிக்கதைகள் - கனக்ஸ்
  8. யேர்மனியில் கவிஞர் வி.கந்தவனம்
  9. பல்கலைச் செல்வர்   சிவகுமாரன் சிறப்புமலர்
  10. வெற்றிமணிகள் கவிச்சித்திரா, சுகந்தினி, சுதர்சன்
  11. காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி - இந்துமகேஷ்
  12. பரதமாதேவி வானதி சிறப்புமலர்
  13. சிவத்தமிழ் முத்துவிழா – தங்கம்மா அப்பாக்குட்டி சிறப்புமலர்
  14. தமிழே காதல் - நிலாமகள் (வர்ணச்சித்திரங்களுடன் கவிதையும் 
         இணைந்து யேர்மனியில் வந்த முதல் நூல்)
  15. அதிசய உலா – சிவகுமாரன்
  16. காதோடு காதாக – கதிர் துரைசிங்கம் (நகைச்சுவைத் துணுக்குகள் 
          முதல் புத்தகவடிவம் பெற்றது) 
  17. திறவுகோல் - கனக்ஸ்- 
  18. யாழ்ப்பாணத்து நாட்டிய மரபு – வலன்ரீனா
  19. பொன்னும் மணியும் - சிவக்குமாரன்
  20. அபிநயா – வலன்ரீனா
  21. பிஞ்சுமனங்களின் தேடல் - பேராசிரியர் மனோன்மணி 
          சண்முகதாஸ்
  22. சிறுவர் பாடல்கள் - சி.நடராஜா
  23. கலைமகன் மணிவிழா – சிவகுமாரன் - மணிவிழா)
  24. யாழ் வெற்றிமணி – வலன்ரீனா

  இதில் இவர் தந்தை வெற்றிமணி வெளியீடாக வெளியீடு செய்த புத்தகங்களாகக் குறிப்பிடத்த தக்கவை

  1. தம்பிக்கு - டாக்டர்.நந்தி
  2. நாடகம் - கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை
  3. கீரிமலையினிலே நூல்நயம் (கவிஞர்.வி.கந்தவனம்) இரசிகமணி  
         கனகசெந்திநாதன்
  4. கணக்கியலுக்கோர் அறிமுகம் - வை.சிவஞானசுந்தரம்
  5. பரீட்சையில் சித்தியடைவது எப்படி - கவிஞர்.வி.கந்தவனம்
  6. ஒரே ஒருதெய்வம் குறுநாவல் - சிவகுமாரன்

  இவ்வாறு பல சாதனைகளை யேர்மனியில் செய்த இவர் பல முதல்களின் முதல்வராகினார். பல திறமைகளையும் அர்ப்பணிப்புக்களையும் செய்து பிறருக்காகத் தன் வாழ்நாள்களை செலவிட்டு தமிழுக்கும் தமிழர்களுக்கும் சேவையாற்றும் வெற்றிமணி ஆசிரியரின் தியாக மனப்பான்மையின்றி இந்த வெற்றிமணி 25 ஆண்டுகளை ஐரோப்பாவிலே கடந்திருக்காது என்பதை உறுதியாக இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவது அவசியமாகும். இதேவேளை அவரின் இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குகின்ற எழுத்தாளர்களும் வர்த்தக நிறுவனங்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

  பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
  நூலெல்லாம் வள்ளுவன் செய்நூலாமோ – பாரில் 
  தோன்றிய பத்திரிகையெல்லாம் வெற்றிமணி போலாமோ
  போற்றத் தகுதியெனத் தெளி 

  கை வந்தமரும் எதுவும் கருத்தைக் கவர வேண்டும் 
  கண் தோன்றும் எதுவும் மனத்தைக் கவர வேண்டும் 
  சொல் பெற்று உயரும் வடிவம் சொந்தமாக வேண்டும் 
  அதுவே விண்முட்டும் புகழை உவந்தளிக்கும்

  25 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் வெற்றிமணிக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
  ஞாயிறு, 12 மே, 2019

  அன்னையர் தினம்


                         தாய்  அன்புக்கு ஈடு சொல்ல வேறு  உண்டா உலகில் 
  • விரும்பினாலும் திரும்பவும் சென்றடைய முடியாததும் வாடகை இன்றி குடி இருந்த இடமும் தாயின் கருவறைதான் . 
  • எத்தனை செல்வங்கள் கொட்டிக் கிடந்தாலும் தாயின் கண்பார்வைக்கு அவை ஈடாகுமா! 
  • எத்தனை வலி மாத்திரைகள் இருந்தாலும் தாய் தடவிக் கொடுக்கும் சுகத்திற்கு ஈடாகுமா! 
  • தினமும் எம் முன்னே கற்றுத்தரும் பாடங்கள், எந்த ஆசிரியரும் கற்றுத் தருவதில்லை! 
  • தாயின் மடி தரும் சுகம் எந்தப் பஞ்சணையும் தருவதில்லை.  

  • தேடிச் சென்றாலும் கண்டு பிடிக்க முடியாத இடம் எமை விட்டுச் சென்ற இடம். நிம்மதியாய் கண் மூடல் என்பது இதுவே. இறந்த பின்பாவது நிம்மதி தேடியே உயிர்கள் செல்கின்றன. 
  • தாய் என்றால் தரணிக்கே  சிறப்பு  என்று உணர வேண்டும். 

  தாய்ப்  பாசம்  தரும் அரவணைப்பு அனைத்து உயிர்களிடமும் உண்டு என்பதுவே உண்மை .
  திங்கள், 6 மே, 2019

  இலங்கையில் மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கொழும்புப் பகுதிகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களும் நுனெபயஅந திரைப்படமும் ஒரு பார்வை  இலங்கையில் மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கொழும்புப் பகுதிகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களும் Endgame திரைப்படமும் ஒரு பார்வை


  நான், என்னுடைய மதம் தான், என்னுடைய நாடு தான், என்னுடைய மொழி தான், என்னுடைய கடவுள்தான், என்னுடைய தலைவர்தான், என்னுடைய கட்சிதான் பெரியது. அது மட்டுமே இருக்க வேண்டும். அடுத்தது எல்லாம் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்களாலேயே இந்த உலகம் சுக்குநூறாக்கப்படுகிறது. 

                   அனைத்தும் வாழுகின்ற பூமியிலே எமக்கு என்று தனியுரிமை தேடிப் போகும் போது அழிவுகளை எதிர்நோக்குகின்றோம். இலங்கையில் அண்மையில் 8 இடங்களில் நடைபெற்ற குண்டுத்தாக்கல்களினால், 350 பேர்களின் உயிர்கள் மதவாதிகளினால் மனிதாபிமானமே இல்லாமல் சூறையாடப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய அனுபவங்கள் நிறையவே எங்களுக்கு இருக்கின்றன. ஒரு மனிதனைக் கொன்று பல மனிதர்களை அழிக்கும் வழிமுறையே தற்கொலைக் குண்டுதாரிகள். அந்த ஒரு மனிதனைக் கொல்லும் உரிமையே இல்லாத மனிதனுக்கு எப்படிப் பல மனிதர்களைக் கொல்வதற்கு உரிமை இருக்கின்றது. தாமாகவேத் தம்முடைய உயிரை அழிக்க ஒரு மனிதன் முன் வருகின்றான் என்றால், அவனது மூளை எந்த அளவிற்குச் சலவை செய்யப்பட்டிருக்க வேண்டும். இலங்கைச் சம்பவத்தை உலகப் புகழ் பெற்ற End Game என்ற திரைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.

                 என்னுடைய 22 நாட்கள் தொடர் பயணம் 24.04.19 அன்று முடிவுற்றது. முதல் முதலாக முதல்நாள்  ஜேர்மனியில் மட்டும் வெளியீடு செய்யப்பட்டு  ஜேர்மனியில் மட்டும் 60 மில்லியன் டொலர்களைச் சம்பாதித்த  Marvel  Stanley  என்பவர் எழுதிய கொமிக்ஸ் என்னும்     புத்தகத்தை வைத்து ஹொலிவூட் சினிமா படமாக்கிய 22 படங்கள் EndGame  என்னும் இறுதிப்படத்துடன் Avengers உடைய கதை முடிவுற்றது. 

  அண்டவெளிகளும் பூமியும் இணைந்து உலகத்தையே அச்சுறுத்திய ஒரு சக்தியை அழித்த போராக End Game நடத்தப்பட்டது. தன்னுடைய கைகளில் ஒரு கவசத்தை உருவாக்கி அதில் 6 சக்தி வாய்ந்த கற்களைப் பொருத்தி அதி தீவிரமான சக்தியைப் பெறுகின்றார் Thanos.  ஒவ்வொரு கற்களையும் பல உயிர்களை அழித்தே பெறுகின்றார். இறுதிக் கல்லைப் பெறுவதற்கு தன்னுடைய அன்புக்குரிய மகளையே கொல்லுகின்றார். அவ்வாறு அவருக்கு மிகப்பிடித்த ஒன்றை இழந்தாலேயே அக்கல்லைப் பெறமுடியும் என்ற காரணத்தால் தன் மனதுக்குப் பிடித்த வளர்ப்பு மகளைக் கொல்லுகின்றார். உலகத்திலுள்ளவர்களின் தொகை அதிகரித்து விட்டதாகவும் அவர்களைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இக்கொடூரமான கொலைகளைச் செய்கின்றார். மிகப்பிரமாண்டமான சண்டைக்காட்சிகள் அண்டவெளியிலேயுள்ள கிரகங்களில் நடப்பதாகக் காட்டப்படுவது வியக்கத்தக்கதாக இருக்கின்றது. காந்தசக்திகளும், நெருப்பு, அதி கூடிய மின்னல், ஒளிக்கதிர்கள் இவ்வாறு பிரமிக்க வைக்கும் தன்மையில் 3 D யில் ஹொலிவூட் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

  இந்த Thanos ஐ அழிப்பதற்கு பூமியிலும் வேற்றுக் கிரகங்களிலும் இருந்து Hulk, Captain America, Iron Man, Black Widow, Haukeye, Thor, Spiderman, Guardians of the Galaxy(Rocket, Gamora, Groot, Quill, Drax, Nebula, Martis) Doktor Strange, Winter Solder (Bucky Barnes) Warmachine, Black Panther, Antman& Thae Wasp, Captain Marvel, Falcon, Vision, Scarlet Witch என்னும் Avengers ஒன்றாக இணைகின்றார்கள். இவர்களில் சிலருக்கு தனிப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. அனைத்தையும் பார்ப்பவர்களுக்கே End Game பூரணமாகப் புரிந்து கொள்ளும். இதில் infinity War  இல் பலர் மறைந்து விட முக்கிய கதாபாத்தரமான Iron Man எந்த யுத்தமும் தேவையில்லை. அன்புக்குரியவர்கள் பலரை இழந்துவிட்டோம் என்று ஒரு அமைதியான இடத்தில் மனைவி பிள்ளையுடன் வாழ்ந்து கொண்டிருக்க அந்த ஐந்து கற்களையும் அழித்துவிட வேண்டும் அதைக் கையிலே வைத்திருக்கும் Thanos உயிர்களை எல்லாம் அழித்து விடுவார் என்ற தவிப்பில் மீண்டும் Capton America, Black widow போன்றவர்கள் Thanos இருக்கும் இடத்திற்குப் போய் அதிரடித் தாக்குதல் செய்து Thanos  ஐ கொல்லுகின்றார்கள். ஆனால், அவர் அக்கற்களை செயலிழக்க வைத்துவிட்டதாகச் சொல்லுகின்றார். ஆனால், காணமல் போனவர்களை மீண்டும் வரவழைக்க வேண்டும் என்பதற்காக மீதமாக இருக்கும்  Avengers சிலர்  ஒன்று சேருமாறு இவர்கள் சென்று கேட்கின்றார்கள். ஆனால், Iron Man  முடியாது என்று மறுக்கின்றார். பின் தானாக சிந்தித்து நேரத்தைப் பின்நோக்கிச் செல்ல வைக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்து காலங்களின் பின்நோக்கிச் சென்று கற்கள் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து அக்கற்களை கைக்கவசத்தில் மாட்டுகின்றார்கள். இவ் ஒவ்வொரு கற்களைக் கண்டுபிடிப்பதற்கும் பல யுத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது. ஆனால், எந்த யுத்தத்திலும் நீங்கள் இரத்தத்தைக் இத் திரைப்படங்களில் காண மாட்டீர்கள். அந்தவகையில் இத்திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருந்தன. 

                கைக்கவசத்தை மாட்டுகின்ற கை அக்கற்களின் சக்தியைத் தாங்கக் கூடிய சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். மனித உடலுடையவர்களால் முடியாத காரியமாகும். Hulk, Thanos இருவரால் மட்டுமே இந்தக் கற்களின் சக்தியைத் தாங்க முடியும். ஏனென்றால், இவர்கள் இருவருமே மனிதத் தோல் அற்றவர்கள்.  Thanos ஒரு தடைவை  இக்கைக்கவசத்தைப் போட்டு சொடுக்கெடுக்கும் போது அவரால் அழிக்கப்பட்டவர்கள் திரும்பவும் வந்து விடுகின்றார்கள். வந்த நல்லவர்கள் கெட்டவர்கள் அனைவரும் இணைந்து போர் புரிந்த போது Thanos ஐ அழிக்க முடியாது போகின்றது. இந்த நேரத்திலே பந்தாடப்பட்ட கைக்கவசம் Iron Man கைகளுக்கு வர வேறு வழியில்லாமல் அக்கவசத்தை அவர் மாட்டுகின்றார். விரல்களைச் சொடுக்குகின்றார். தீயசக்திகள் அனைத்தும் தூளாகிப் போக இறுதியில் Thanos உம் தூளாக அழிந்து போகின்றார். தன்னுடைய உடலால் தாங்க முடியாது. தனக்கு அழிவு வரும் என்று தெரிந்தும் எம்மோடு 22 படங்களில் கூடவந்த Iron Man உயிரை விடுகின்றார். 

  அதி புத்திசாலியும், மனித இயந்திரங்களையும், நவீன சக்தி வாய்ந்த கருவிகளையும் செய்யக்கூடிய Iron Man உலகத்தைக் காப்பதற்காகத் தன்னுடைய உயிரை மாய்த்தது நெஞ்சம் நெகிழவைக்கும் காட்சியாக இருந்தது. அவருடைய நண்பர்கள் குடும்பத்தினருடன் நாமும் இணைந்து இறுதிக்கிரியையில் கலந்து கொண்டது போன்ற ஒரு உணர்வு எமக்கு ஏற்பட்டது. கண்களில் வடிந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்பவர்களாக இருவர் ஒன்று  Iron Man மற்றையவர் Black Widow ஒரு திரைப்படத்தைப் பார்த்த போதே இவ்வாறான ஒரு உணர்வு ஏற்படும்போது இலங்கையில் 350 உயிர்களைப் பலி எடுக்கத் துடிக்கும் மனிதர்களை நினைக்கும் போது உள்ளம் வேதனையில் கனக்கிறது. 

  குண்டுவெடிப்பில்  உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் 

  வெள்ளி, 3 மே, 2019

  ஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.
  ஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.

  இன்றைய சிறுவர்கள் நாளைய பெரிய மனிதர்கள். இன்றைய சிறுவர்களைச் சிறப்பான முறையில் வளர்த்து எடுக்கும் போதே நாளைய உலகம் சிறப்பான உலகமாகத் திகழும் என்னும் நோக்கத்துடனேயே கதைகளுக்கூடாகவும் பாடல்கள் மூலமும் அறிவுரை புகுத்தும் இலக்கியங்கள் தோன்றின. சிறுவர்களுக்காக எழுதப்பட்ட இவ் இலக்கியத்தின் கதாநாயகர்களாக பிள்ளைகள் விரும்புகின்ற பிராணிகளும் விலங்குகளும் அதிகமாக வந்து போவார்கள். குழந்தைகள் கற்பனாசக்தி மிக்கவர்கள் என்பதனால் இக்கதைகளில் மிருகங்கள் பேசும், பறவைகள் பாடும். வண்ணவண்ண நிறங்களிலும் அழகான கண்ணைக் கவரும் படங்களுடனும் கவர்ச்சியாக சிறுவர்களைக் கவரும் வகையில் இவ் இலக்கியத்தைப் படைப்பார்கள். 

  நிலா நிலா ஓடி வா
  நில்லாமல் ஓடி வா
  மலைமேலே ஏறி வா 
  மல்லிகைப் பூக்கொண்டு வா 

  என்று நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டிய தாயின் வாய்மொழி இலக்கியமாகத் தொடங்கியதே சிறுவர் இலக்கியம். பாட்டி வடை சுட்ட கதை போன்று குழந்தைகளை உறங்க வைக்கத் தாய் கூறிய கதையிலிருந்து சிறுவர் கதைகள் ஆரம்பமாகின. தாயின் ஆராரோ ஆரிவரோ என்ற தாலாட்டுப் பாடலுடன்  தொடங்கியது சிறுவர் பாடல்கள்

       குழந்தைகளுக்கான முதல் முதல் வெளிவந்த சிறுவர் மாத இதழாக வெற்றிமணி இடம்பெறுகின்றது. இவ்வெற்றிமணியாகிய சிறுவர் சஞ்சிகையை  வெளியீடு செய்து அதன் மூலம் சிறுவர் இலக்கியங்களுக்குப் பங்களித்த M.K.S என்று அழைக்கப்படும் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களும் பெருமைக்குரியவராகக் கருதப்படுகின்றார். 

   தொலைநோக்குச் சிந்தனை உள்ள ஒருவரால் மாத்திரமே இவ்வாறாக மாதம் ஒரு சஞ்சிகை அதுவும் முழுக்க முழுக்க சிறுவர்களுக்காக மட்டுமே வெளியிட முடியும். இதற்கு ஆசிரியப் பணியை அவர் மேற்கொண்டது மட்டுமல்லாமல் மாணவர்களுடன் உள்ளன்புடன் பழகியமையும் காரணமாக இருந்திருக்கின்றது.

                அத்துடன் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1980 இல் மறைந்துவிட்டாலும், இன்றும் பேசப்படும்  மனிதராக இருப்பதற்கும் ஆசிரியத்தொழிலில் மட்டுமே நின்றுவிடாது மாணவர்கள் நலன் கருதி அவர் ஆற்றிய சேவைகள் தான் காரணமாக இருந்திருக்கின்றன. 

  இவர் மே மாதம் 14 ஆம் திகதி 1919 ஆண்டு குரும்பசிட்டியில் ஒரு விவசாயக்குடும்பத்தில் திரு.திருமதி கந்தவனம் தம்பதியினருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஏழாவதாகப் பிறந்தார். கல்வியிலும் சமூகத்தொண்டிலும் நேரத்ததை அர்ப்பணித்தார். காங்கேசந்துறை வட்டாரக் கல்வி, விளையாட்டு, இவற்றின் அமைப்பாளராகவும் பரீட்சைக் காரியதரிசியாகவும் இருந்து அளப்பெரும் தொண்டுகள் ஆற்றி கல்விப்பணிப்பாளர், உதவி அரசாங்க அதிபர் போன்றோரின்  பாராட்டுதலைப் பெற்றார். அகில இலங்கை ஆசிரியர் கலாசாலையின் தமிழாசிரியர் சங்க உபதலைவராகவும். நுவரெலியா, முல்லைத்தீவு கிளைகளின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்து பெரும் தொண்டாற்றினார். காங்கேகன்துறை ஆசிரியர் சங்க கிளையை ஆரம்பத்தவர்களில், இவர் முக்கியமானவராகக் காணப்படுகின்றார்.

           இவர் 1964 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளம் குளத்தில் அரசினர் தமிழ் பாடசாலை தலைமை ஆசிரியராக இருந்த போது அங்கு பயின்ற மாணவர்களை இடையில் படிப்பை நிறுத்தி கமத்திற்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அறுவடை காலத்தில் பெற்றோருக்கு பிள்ளைகளின் உதவி தேவை என்பதனை அறிந்து அந்த நாட்களில் அரச அனுமதியுடன் விடுமுறை கொடுத்து பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் உதவினார். இதனால் மாணவர்களின் படிப்பை இடைநிறுத்தி கமத்திற்கு அழைத்துச் சென்று படிப்பை இடைநிறுத்தாது பாதுகாத்த பெருமை அமரர் சுப்பிரமணியம் அவர்களையே சாரும். பல ஆர்வம் மிகுந்த மாணவர்களை யாழ்ப்பாணம் அழைத்து வந்து மேற்படிப்பிற்கு வழிசமைத்துக் கொடுத்தார்.

  மலையகத்திற்கு இடமாற்றம் கிடைக்கும் ஆசிரியர்கள், அங்கு வசதிக்குறைவு என்ற காரணத்தால் யாராவது அரசியல்வாதிகளைப் பிடித்து தமது இடமாற்றத்தை நிறுத்திவிட்டு அங்கு கல்விப்பணி புரிய போகமாட்டார்கள் என்பது நான் அறிந்த உண்மை. ஆனால், மு.க.சுப்பிரமணியம் அவர்கள் நாவலப்பிட்டி, வெலம்பொட, பூண்டுலோயா போன்ற மலையகப் பகுதிகளில் பணியாற்றி அங்கு வாழ்ந்த சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உழைத்துள்ளார். தோட்டத்தொழிலாளர் பிள்ளைகள் 5 ஆம் வகுப்புக்கு மேல் கல்வி கற்பதில்லை. அக்காலத்தில் அவர்கள் கல்வி முன்னேற்றம் தடைசெய்யப்பட்டது. அப்போது தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்த மு.க.சுப்பிரமணியம் அவர்கள் மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்காகப் பொராடி அவர்களை 10 ஆம் வகுப்புவரைக் கல்வியைத் தொடர வைத்த பெருமைக்குhயிவராகத் திகழ்ந்தார். 

                   இவ்வாறான மாணவர்களுக்கான கற்றல் வளர்ச்சிக்கு தன் எண்ணம் முழுவதையும் ஈடுபடுத்திய வேளையே யாரும் அக்காலத்தில் நினைத்திருக்காத மாதாந்த சஞ்சிகை ஒன்று மாணவர்கள் முன்னேற்றம் கருதி வெளியிட வேண்டும் என்ற தன் கனவை நனவாக்கினார். மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்ப்படுத்தல், அவர்கள் அறிவைத் தூண்டும் விதமான அறிவியல் கல்வியை மேம்படுத்தக் கூடிய கட்டுரைகளை கற்றோரிடம் இருந்து பெற்றுச் சஞ்சிகையில் பிரசுரித்தல், மாணவர்களை எழுதத் தூண்டல் போன்ற நோக்கங்களைக் கொண்டு நாவலப்பிட்டியில் ஆசிரியராக இருந்த வேளை, தினகரன் சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் வந்த குறுக்கெழுத்துப் போட்டிகளின் சிறந்த விடை விமர்சனி என்னும் வெற்றி மணியை 1950 ஆண்டு வெளியிட்டார்.  

            1954 ஆண்டு முழுக்க முழுக்க மாணவர் பத்திரிகையாக உருவெடுத்த வெற்றிமணி மலையக மக்களின் கல்வி திட்டமிட்டு நசுக்கப்பட்ட வேளை அவர்களது கல்விக்கும் ஆற்றலுக்கும் முதற்களம் அமைத்துக் கொடுத்தது.
       
           போட்டிகளில் வெற்றி என்பதனைக் குறிக்க வெற்றி என்பதனையும் சுப்பிரமணியம் என்பதில் உள்ள மணியினையும் இணைத்து வெற்றிமணி எனப் பெயர் இட்டார். ஓசைவடிவம் பிள்ளைகளுக்குப் பிடிக்கும். அதனால், ஷஷவெற்றிமணி டாண் டாண் எனவே விண்முட்ட ஒலித்திடுவாய். நற்றமிழாம் எங்கள் மொழி  நலமுற ஒலித்திடுவாய்|| என்ற வாழ்த்து ஒலியுடன் ஒவ்வொரு இதழையும் வெளியீடு செய்திருந்தார்.

       08 பக்கங்களில் ஆரம்பித்துப் பின் 16, 32, 59 என பக்கங்கள் தேவைக் கேற்ப அதிகரித்த வண்ணம் இருந்தன. தான் ஆசிரியராக கடமை புரிந்த பாடசாலைகளில் எழுத்தாற்றமிக்க ஆசிரியர்களையும் மாணவர்களையும் வெற்றிமணியில் எழுதவைத்தார். 

  பிடிவாதம் பிடித்தழுது கொடுத்ததையும் விட்டெறிந்து
  படுக்கையையும் விட்டெறிந்து படுத்துருண்டு கூச்சலிட்டு
  கடிதான துன்பம் தந்து கண்டதெல்லாம் வேண்டுமென்றான்
  கனிவாக அவை கொடுத்தான் கடுங்கோபம் கொண்டெறிந்தான் 

  முடியாது இவன் கோபம் நாமடக்க முடியாதென்று
  முனிந்தெழுந்து நானடிக்க முற்றத்தில் வீழ்ந்தழுதான்
  கொடிதான சிங்கம் புலி குவலயத்தை அடக்கிடலாம்
  குலக்குழந்தை கோபமதை குணமாக்க யாருண்டிங்கே

  இக்கவிதை மழலையின் பிடிவாதம் என்னும் தலைப்பில் வெற்றிமணியில் வெளிவந்த சு.சு.N.ஜோர்ஜ் அவர்களுடைய கவிதை

       வெற்றமணியில் ஒரு சிறு மாணவன்  மாடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தான். அக்கட்டுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றிமணி வெளியிட்டு இருந்தது. மாடு பற்றி எழுதிய சிறுவனிடம் ஏன் மாடு வண்டி இழுக்கும் என்று எழுதவில்லை? எனக் கேட்டபோது, அவன் சொன்ன பதிலே ஆசிரியரை கவர்ந்தது. அவன் சொன் பதில் மாடு பாவம் வண்டி இழுக்கும் என்று சொல்ல தனக்கு கவலையாக இருக்கும் என்றானாம். ஜீவகாருண்யம் அச்;சிறுவனின் உள்ளத்தில் தெய்வீக ஒளிபாச்சியது. உடனே இக்கட்டுரையை சஞ்சிகையில் வெளியீடு செய்திருந்தார்.

            மாடு

  மாட்டிற்று 2 கொம்பு உண்டு.
  மாட்டிற்கு ஒரு வாலுண்டு.
  மாட்டிற்கு நான்கு கால்கள் உண்டு.

  இக்கட்டுரையைப் பார்த்த வாசகர்கள், 'ஏன் இப்படி தரமில்லாத கட்டுரையை பிரசுரித்தீர்கள்? என்று ஆசிரியரைக் கேட்டபோது 'இந்தக் கட்டுரை வந்தபின்பே வெற்றிமணியில் பல சிறப்பான கட்டுரைகள் வரத்தொடங்கின. வாசகர்கள் படைப்பாளிகள் எல்லோருக்கும் அட இதனைவிட எம்மால் நன்றாக எழுத முடியும் என்று எண்ணத் தோன்றியது. எனவே எப்போதும் சிறப்பான ஆக்கங்கள்தான் வெளியிடவேண்டும் என்பது அல்ல. எழுத்தாளரை கிளர்ந்து எழும்வண்ணம் இப்படி சிலவற்றையும் செய்யத்தான் வேண்டும்|| என்றார். இதன் மூலம் இவருடைய ஆழ்ந்த தொலைநோக்குச் சிந்தனை புலப்படுகின்றது. ஊக்கமுள்ள ஒருவருக்கு இடம் கொடுத்தால், எதிர்காலத்தில் அவர் உச்சத்தைத் தொடுவார் என்னும் உயரிய நோக்கம் அவரிடம் இருந்ததனால், அந்த மாடு என்னும் கட்டுரை எழுதிய சிறுவன் பிற்காலத்தில் சிறந்த எழுத்தாளனாகவும் உருவெடுத்தார் என்பது யாம் அறிந்த செய்தியாகும்.

           இதுமட்டுமன்றி வெற்றிமணியில் எழுதும் சிறுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் முகமாக சிலசமயம் அவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு நேரில் சென்று புத்தகங்களை வழங்கி அவர்களை மகிழ்ச்சியடையவும் வைத்துள்ளார். சிறுவர்களுக்காக இலக்கியம் படைப்பதிலும் பார்க்க சிறுவர்களே தமக்கான இலக்கியத்தைப் படைப்பது பாராட்டத்தக்கதே. மாணவர்களின் உயர்வே ஒரு நாட்டின் உயர்வு எனக் கருதி இத்தன்மையை ஊக்குவித்த அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் எல்லோராலும் போற்றப்படக்கூடியவர். 

  சிறுவர்களை வாசிக்கத் தூண்டி, அவர்களை அங்கத்தவர்களாக்கி, அவர்களுக்கு அங்கத்துவ இலக்கங்களைக் கொடுத்தார். அவர்களுக்கிடையில் போட்டிகள் நடத்தி பரிசில்கள் வழங்கியுள்ளார். மாணவர்களை அங்கத்தவர்களாகச் சேர்த்து இலக்கங்கள் கொடுக்கும் போது அவர்களிடையே ஆக்கத்திறனும், எழுத்துத்திறனும் அதற்கேற்ப ஈடுபாடும் மேம்படும் என்னும் எண்ணத்தை நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார். கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்குச் சிறந்த பரிசில்கள் வழங்கியுள்ளார். 

  சகாராக்கல்லூரி மாத்தளை 01.06.48 - 31.01.1949
  ளுவ.யுனெசநறள ஊழடடநபந நாவலப்பிட்டி 01.02.49-31.12.1949
  கதிரேசன் தமிழ் பாடசாலை நாவலப்பிட்டி 01.01.1950- 02.01.1955
  வெலம்பொட அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (புவுஆளு) பாடசாலை 03.01.1955-31.07.1957
  பூண்டுலோயா அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 01.08.1957-1961 
  ஓமந்தை தமிழ் மகாவித்தியாலம். 1961. - 28.02.1964
  ஓட்டுசுட்டான் காதலியார் சம்மளங்குளம் 01.03.1964 02.02.1968
  குரும்பசிட்டி பொன்.பரமாநந்தர் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை 03.02.1968-18.03.1978

  இவ்வாறு இலங்கையின் பல பாகங்களிலும் ஆசிரியத்தொழில் புரிந்து இறுதியில் அதிபராக தனது சொந்த ஊரான குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாலத்தில் அதிபராக இருந்து 1977 ஆண்டு ஓய்வு பெற்று வாழும் வரை மாணவர்கள் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் வாழ்ந்து மறைந்த மு.க.சுப்ரமணியம் அவர்களை மாணவர் உலகம் என்றும் மறவாது. 

           இவருடைய இந்த நூற்றாண்டு காலப்பகுதியில் படைப்புலகம் இவரை நினைத்துப் பார்ப்பதுடன் பாராட்ட வேண்டியதும் அவசியமாகின்றது. 

  சாதனையாளர்கள் என்றும் சாவதில்லை 
  சாதனைகள் என்றும் மாள்வதில்லை – மனிதன்
  வாழும்வரை மறக்கப்படுவதில்லை  வெள்ளி, 5 ஏப்ரல், 2019

  உதவிக்கு மட்டுமே உறவா?


  01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை 

  காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ஒப்பிட்டுப் பார்க்கும் முறையானது எம்முடைய தவறுகளையும் சிந்தனைப் போக்கையும் சீர் செய்ய உதவுகின்றது. 

  அல்ஸ்கைமர் என்னும் நோயாளிக்கு அளிக்கும் பயிற்சியில் ஒன்று அல்பம் பார்த்தலும் விளக்கம் அளித்தலும் ஆகும். அன்று ஒரு நோயாளியின் 50 ஆவது ஆண்டுத் திருமணவிழா அல்பத்தைப் பார்த்த போது ஆச்சரியமாகவும் ஆசையாகவும் இருந்தது. காரணம் இரத்த உறவினர்கள் அனைவரும் மொத்தமாக இணைந்திருந்து ஒரு புகைப்படம் எடுத்திருந்தார்கள். கைக்குழந்தைகள் உட்பட 103 பேர் நின்று எடுத்த புகைப்படமே எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. எம்முடைய குடும்ப அல்பத்தில் இவ்வாறு ஒற்றுமையுடன் அனைவரும் இணைந்திருந்தால் எத்தனை பேர் இணைந்து இருப்பார்கள் என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பாருங்கள்.

            வருடத்தில் ஒரு நாளாவது ஒன்றாக இணையும் முறை ஜேர்மனியருக்கு உள்ள பழக்கவழக்கங்களில் ஒன்று ஆகும். நத்தார் விழாவில் எங்கே இருந்தாலும் பெற்றோரைத் தேடி வந்து அவர்களுடன் இணைந்தே நத்தார் விழாவைக் கொண்டாடுவார்கள். ஞாயிற்றுக் கிழமை குடும்பநாள் என்று முடிவு கொண்டு அன்றைய தினம் எந்த நியமனங்களையும் அவர்கள் வைத்துக் கொள்வதில்லை. இவ்வாறு கிட்டே என்றும் இருந்து தொல்லை கொடுக்காது. தள்ளி இருந்து உறவை வளர்ப்பதே அவர்கள் பண்பாகப்படுகின்றது. 

           ஜேர்மனியர்கள் மத்தியில் அவர்கள் குடும்பப் பெயரானது தொடர்ந்து பிறக்கின்ற பிள்ளைகள் எல்லோருக்கும் கூடவே தொடர்ந்து வரும். தமிழர்கள் மத்தியில் ஒரு பெண் ஒருவரைத் திருமணம் செய்கின்ற போது அந்தப்பெண்ணின் பெயர் திருமதி என்று மாறி கணவன் பெயருடன் ஒட்டிவிடுகின்றது. இங்கே தந்தை பெயர் இடம் தெரியாமல் ஓடி மறைந்து விடுகின்றது. எம்முடைய பாட்டன் பூட்டன் பெயர் எத்தனை பேருக்குத் தெரியும். ஆனால், ஜேர்மனியரை பார்க்கின்ற போது தொடர்ந்து வரும் பெயர் அவர்கள் பரம்பரைப் பெயராகவே இருக்கும். அனைவரும் பாட்டன் பூட்டன் பெயர்களை ஞாபகத்தில் வைத்திருக்கின்றார்கள். 

              எமது உறவினர்கள் கூடுகின்ற குடும்ப விழாவை எடுத்துப் பார்த்தால் அனைவரும் கலந்து சிறப்பிப்பது அருமையாக இருக்கின்றது. உறவினர்கள் பணம் தரவில்லை என்று சிலரும், காணி விற்ற பணத்தில் ஒரு பகுதி தமக்குப் பகிரவில்லை என்ற கோபத்தில் சிலரும், தம்மைவிட உயர்ந்து நிற்கின்றார்களே என்ற பொறாமையில் சிலரும், தம்முடைய விருப்பத்தை மீறித் திருமணம் செய்து வாழுகின்றார்கள் என்று சிலரும், உள்வீட்டுப் பூசலைத் தூண்டிவிட்டு அழகு பார்த்துப் பிரிந்து நிற்கும் சிலரும், என சின்னச்சின்னக் காரணங்களைப் பெரிதாக நினைத்து ஒன்றிணைய விரும்புவதில்லை. இரத்த உறவினர்கள் இணைந்து எடுத்த புகைப்படத்தில் இருப்பவர்கள் தொகை தாயகத்தில் கூடக் குறைவாகவே இருக்கும்ஃ 

              எமது இனம் தாம் ஆதரவு தேடி வௌ;வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த போது கைகள் மட்டுமே துணை என்று துணிந்து புகுந்தார்கள். பெரும் கடினத்தின் மத்தியில் தம்மால் முடியாத வேலைகளைக் கூட வாழ வேண்டும் என்ற காரணத்தினால் துணிந்து செய்தார்கள். அந்த வேளையில் கையில் கிடைக்கும் பணத்தில் ஒரு தொலைபேசி அட்டையை காசு கொடுத்து வாங்கி தாயகத்திலுள்ள உறவினர்களுடன் பேசி உறவாடி மகிழ்ந்தார்கள். தொலைபேசிக் கட்டணத்திற்காக பணத்தை யன்னலைத் திறந்து எறிகின்றீர்களே என்று ஒரு ஜேர்மனிய நண்பன் கூறியதை இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன். இவ்வாறு ஒருநாள் தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால், ஏன் தொலைபேசி எடுக்கவில்லை என்று கலங்கிவிடுவார்களே என்று பணத்தைவிட உறவுதான் உத்தமம் என்று நினைத்தவர்கள் அதிகம். ஆனால், இன்றோ உலகநாடுகளிலுள்ள உறவினர்களுடன் நினைத்தவுடன் பேச கையில் ஏiடிநசஇ றூயவளயிpஇ ஆநளளநபெநசஇ ளுமலிந போன்ற எத்தனையோ வசதிகள் இருந்தும் தொடர்புகள் இல்லை. தாயகத்து உறவுகளுக்கு புலம்பெயர் உறவுகளின் அவசியம் குறைந்துவிட்டது. தாயகத்தில் பணவீக்கம் கட்டுக்கடங்காது அதிகரித்துவிட்டது. அதனால், புலம்பெயர்ந்தோரைத் தேட வேண்டிய அவசியம் உறவினர்களுக்குக் கிடையாது. 

  ஆனால், இன்று உதவி தேவைப்படுவோருக்கு மாத்திரமே அநளளநபெநச  தேவைப்படுகின்றது. அப்படியென்றால், உதவிக்கு மட்டுமே உறவா என்ற கேள்வி தலைநிமிர்ந்து நிற்கின்றது. 

  உறவினர்கள் என்பவர் யார்? என்று புலம்பெயர் மனித மனங்களில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணத்தை அகல விரித்துச் சிந்தித்துப் பார்த்தால், இன்று அருகே இருப்பவர் உலகநாடுகளில் எந்த எல்லையில் பிறந்தாரோ! அந்த மனிதரே இன்று ஆபத்துக்குப் பக்கபலமாகின்றார். கையிலே பனம் பழத்தை வைத்துக் கொண்டு நெய்யுக்கு ஏன் அலைய வேண்டும். தூரத்துத் தண்ணி ஆபத்துக்குதவாது. ஓடி வந்து ஏற்றிச் செல்ல அம்புலன்ஸ் வண்டியைக் கொடுப்பவர் இந்த நாட்டவரே. கைபிடித்துக் கூட்டிச்செல்ல உதவிக்கு வருபவர் எந்த போலந்து அல்லது துருக்கி நாட்டவரோ அவரே. உற்றார் உறவினர்கள் அல்ல. இனமத பேதமற்ற அன்பே அவசியமாகின்றது.

  இதனையே மூதுரையிலே ஒளவையார் கூறினார். 

  "உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
  உடன் பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா
  மாமலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்கும்
  அம் மருந்து போல் வாரும் உண்டு"  

  இப்பாடலிலே நோய் எங்கள் உடலுக்குள்ளேயே இருந்து எங்களைக் கொல்லுகின்றது. அதேபோல உடன் பிறந்தவர்கள் சுற்றம் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதில்லை. மலையிலுள்ள மூலிகைகள் தானே நோயைத் தீர்க்கின்றன. எங்கோ இருந்துதானே எமது நோய்க்கு மருந்து கிடைக்கின்றது. என்று அனுபவித்துத்தானோ எழுதினார். 

  இப்பாடலைக் கேட்கும் போது 

  தலையிடி காய்ச்சல் வந்தால் தயவுடன் மருந்தைக் கேளாய்
  மலையிலுள்ள கல்லைத் தூக்கித் தலையில் போட்டால்
  தலையிடி நின்றிவிடும்.

  என்று மட்டக்களப்பு மண்ணிலே நகைச்சுவையாகப் பாடப்படும் ஒரு நாட்டுப் பாடல் என் எண்ணத்தில் வந்து விழுகின்றது.

  எனவே அருகே யார் இருக்கின்றார்களோ, அவர்களுடன் ஒட்டி உறவாடி உறவினர்களாகக் கைகோர்த்துப் பழகுவோம். கிடைக்காத உறவை நினைத்து ஏங்குவதை விட்டு கிடைக்கின்ற உறவைப் பலப்படுத்திக் கொள்ளுவோம்.


  அட நல்ல தலையிடி

  தலை என்ற ஒன்று இருந்தால் அதில் தலைவலி என்ற ஒன்றும் அவ்வப்போது வந்து போகும். எப்படி சுகம் என்று கேட்டால், அட நல்ல தலையிடி என்பார்கள்....